கேபிள் சங்கரின் கொத்துப் பரோட்டா தொடரைப் பார்க்கும் போதெல்லாம் படிக்கிறேன். அவர் சொல்கிற குறும்படம் எதையும் பார்த்ததில்லை. அவர் பதிவைப் படிக்கும்போது குறும்படம் பார்க்கிற சூழலில் நான் இருப்பதில்லை. அதனால்தான். அத்தொடரில் சென்னையில் எங்கே சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சாப்பிட்டுப் பார்த்துவிட்டு அவர் எழுதுகிறார். அத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது. அதைப் படிக்கும்போது ஒருவகையான ஏக்கம் பிறக்கிறது. சென்னை செல்லும்போது அங்கெல்லாம் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இந்தச் சாப்பாட்டு இடம் பற்றிய பத்திகளை மட்டும் மொத்தமாகத் தொகுத்து அவர் தனிப் பதிவாக இடலாம். என்னைப் போன்ற வெளியூர்க்காரர்களுக்கு உதவியாக இருக்கும். அவ்விடங்களில் ஒன்றிரண்டையாவது அடுத்த சென்னை விஜயத்தில் பார்க்க உதவும். வலைப்பதிவாளர்கள் சந்திப்பை இப்படிப்பட்ட இடங்களில் நடத்தினால், நல்ல சாப்பாடும் ஆச்சு. எல்லாரும் சாப்பிட்டில் பிஸியாக இருப்பதால் அநாவசிய சச்சரவுகளும் வராது. அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர் காசு என்று முன்கூட்டியே சொல்லிவிடுகிற வலைப்பதிவர்களும் வருவார்கள். பில்லிலும் பிரச்னை வராது.
சாப்பாட்டுக்கு அடுத்தபடி கேபிள் சங்கரின் கொத்துப் பரோட்டாவில் படிப்பது அவருடைய அடல்ட்ஸ் ஒன்லி ஜோக். ஒன்றிரண்டு நன்றாக இருந்தன. பெரும்பாலும் சுமார் ரகம்தான். கூகிலிட்டாலே முத்துகள் கொட்டும் கரு இது. கேபிள் சங்கர் இன்னும் கவனம் செலுத்தலாம்.
கேபிள் சங்கர் பதிவு அளவுக்கு இவர் பதிவுகளுக்குப் பின்னூட்டம் வருவதில்லை. அழகியசிங்கர் அதற்கெல்லாம் கவலைப்படுபவரும் இல்லை. ஆனாலும் அழகியசிங்கரின், எதையாவது சொல்லட்டுமா தொடர் எனக்குப் பிடித்திருக்கிறது. நடையின் போக்கில் அசோகமித்திரனை நினைவுபடுத்தும் எளிய நடை. ஆனால் அசோகமித்திரனுக்கே உரித்தான நுணுக்கமான நகைச்சுவை இல்லை. ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அழகியசிங்கர் நினைப்பதை அப்படியே எழுதுகிறார். அந்த வெளிப்ப்டைத்தன்மையால் இத்தொடர் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. பெரும்பாலும் அவர் தொடர்பான விஷயங்களை எழுதுகிறார். அதில் மிகையோ அலட்டலோ தென்படாத தொனி அவர் எழுத்துக்குப் பலம். அவர் பதிவில் அவர் இடுகிற கவிதைகள் பக்கம் சிலமுறை சென்று பார்த்தேன். என் தலைக்குமேல் போகிற விஷயம் என்று தோன்றியது. அதற்கப்புறம், அந்த ரிஸ்க்கை எடுப்பதில்லை. ஒருவிதமான பிடிவாதத்துடன் எவ்வளவு கஷ்டம் வந்தபோதும் நவீன விருட்சம் இதழைத் தொடர்ந்து நடத்திவருகிறார் அழகியசிங்கர். அவர்மீது மரியாதையும் அனுதாபமும் ஒருசேரப் பிறக்கின்றன.