Tuesday, May 11, 2010

தினம் சில வரிகள் - 9


நேற்று ஜார்ஜ் க்ளூனியின் Up in the air பார்த்தேன். இந்தப் படம் டிவிடியில் வந்த புதிதில் சிலநாட்களுக்கு ப்ளாக்பஸ்டரில் கிடைக்கவே இல்லை. இருக்கிற பிரதிகளை எல்லாம் யாரும் எடுத்துச் சென்று விட்டிருப்பார்கள். க்ளூனிக்குப் பெண்களிடம் இருக்கிற கிராக்கி ஆஸ்கார் வரை நகைச்சுவையாகப் பேசப்படுகிற விஷயம். க்ளூனியை எனக்கும் பிடிக்கும். அவருடைய சிரியானா, பர்பெக்ட் ஸ்ட்ராம் வகை சீரியஸ் படங்களுக்காகவும், அவருடைய ஓஷன் லெவன் வரிசை ஜாலி படங்களுக்காகவும். பிராட் பிட்,டாம் க்ரூஸ், லியோனார்டொ டிகாப்ரியோ போன்றவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களைப் பெண்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று சொல்லிவிடலாம். ஒரு ஸ்வீட் பாயிஷ் இமேஜ் அவர்களுக்க் உண்டு. எந்தவகையில் பெண்களைக் கவரும் வகையில் க்ளூனியின் தோற்றம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்ததில் விடை தெரிய மாட்டேன் என்கிறது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த முதன்மை நடிகர், சிறந்த துணை நடிகைக்காக இரண்டு முறை, சிறந்த திரைக்கதை என்று இப்படம் ஆறுபிரிவுகளில் இவ்வருட ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப் பட்டது. அதிக எதிர்பார்ப்புகளுடன் பார்த்ததாலோ என்னவோ ஆறுபிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது என்று யோசித்தேன். படம் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாகப் போனது. என்னைப் பொருத்தவரை தொய்வில்லாமல் நேரம் போக்க உதவுகிற படங்களுக்கு தாராளமாக மதிப்பெண்கள் தருவேன். அதன் அடிப்படையில் பத்துக்கு ஏழு கொடுத்தேன்.

அமெரிக்காவில் வேலையை விட்டு அனுப்புவதைக் கூட அவுட்சோர்ஸிங் செய்கிறார்கள் என்றும், அதில் உணர்வுகளற்ற தொழில்முறையே மேலோங்கி இருக்கிறது என்பதையும் படம் நன்றாக அறிமுகப்படுத்துகிறது. வேலையின் பொருட்டு, தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்து நவீன நாடோடியாக வாழ்கிற, அதில் சுகம் காணுகிற கதாநாயகனைச் சுற்றிய கதை. இது படத்துக்கு ஒரு புதுமையைத் தருகிறது. நடாலி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டதாக தோன்றுகிறது. சப்பென்று முடிந்துவிடுகிற கதாபாத்திரம். அலெக்ஸ் பாத்திரம் இறுதியில் வருகிற திருப்பத்தால் உயிர் பெறுகிறது.ஆஸ்காருக்குப் பரிந்துரை செய்கிறவர்களில் ஜார்ஜ் க்ளூனி ரசிகைகள் நிறைய இருப்பார்கள் என்று தெரிகிறது.