தினம் சில வரிகள் - 18
மரபின் மைந்தன் முத்தையாவும் நானும் ஒரே கல்லூரியில் அதே வருடங்களில் இருவேறு முக்கியப் பாடங்களில் (மேஜர்) இளங்கலை பட்டப்படிப்புப் படித்தவர்கள். அவர் தின்ம் வீட்டிலிருந்து கல்லூரி வருபவர் (டே ஸ்காலர்). நான் விடுதியில் வாழ்ந்தவன் (ஹாஸ்டலர்). அவருடைய வகுப்பில் படித்த நண்பர் இரண்டாம் ஆண்டில் விடுதியில் என் அறைத் தோழர். ஆனால், அப்போதும் முத்தையாவை எனக்குத் தெரியாது. மூன்றாம் ஆண்டில் முத்தையா வகுப்பிலிருந்து கல்லூரி மாணவர் தலைவர் (சேர்மன்) பதவிக்கு ஒருவர் போட்டியிட்டார். அவரை என் நண்பர்களும் நானும் ஆதரித்தோம். அப்போது அந்த வேட்பாள நண்பருக்கு “ராஜகுரு” ரோலில் ஒருவரைப் பார்த்தேன். அவர்தான் முத்தையா. வாக்களிப்புக்கு முன் வேட்பாளர்கள் பேசவேண்டிய முக்கியமான பேச்சை முத்தையா எழுதித் தந்தார். “நீங்கள் நடக்கும் பாதையில் ரோஜா இதழ்களைத் தூவாவிட்டாலும், அங்கிருக்கும் முட்களை நீக்குவேன் என உறுதியளிக்கிறேன்” என்ற மாதிரியான கல்லூரி மாணவ,மாணவிகளைக் கவரும் பஞ்ச், கவிதை வரிகள் ஆகியன கொண்டிருந்தது அந்தப் பேச்சு. இப்படியாக,அத்தேர்தலில் முத்தையா எனக்கு அறிமுகமானார். நான் கல்லூரி சார்பாகப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதுண்டு. அதையறிந்த முத்தையா கோவை கம்பன் கழகம் நடத்திய ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். தலைப்பைப் போட்டிக்கு ஐந்து நிமிடம் முன்னர்தான் தருவார்கள். உடனடியாகப் பேச்சைத் தயார் செய்து, உடனடியாகப் பேச வேண்டும். “கம்பனில் தெரிவது சமூக உணர்வா,...” என்ற மாதிரி இன்னும் இரண்டு உணர்வுகளைச் சேர்த்துக் கொடுத்து, பேசுபவர் ஏதேனும் ஓர் உணர்வை ஆதரித்துப் பேசவேண்டும் என்று தலைப்பு கொடுத்தார்கள். கம்பனில் தெரிவது சமூக உணர்வு என்று எதையோ பேசி மூன்றாம் பரிசு வாங்கினேன். நன்றாகப் பேசுகிறீர்கள், கம்பன் கழகக் குழுவினருடன் அறிமுகம் செய்கிறேன், மேடைகளில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்றார் முத்தையா. சரி என்று தலையாட்டிவிட்டு அப்புறம் அதைக் கல்லூரி வாழ்க்கை தரும் பிற சந்தோஷங்களில் மறந்துபோனேன். அந்த ஆண்டு மாணவர் தேர்தலில் நாங்கள் ஆதரித்த நண்பர் வென்றதால், கல்லூரி ஆண்டுமலருக்கு முத்தையா பொறுப்பாளராக இருந்தார். அவர் என்னிடம் கேட்டு வாங்கி என்னுடைய புகைப்படத்தைக் கல்லூரி சார்பாகப் போட்டிகளில் பங்கெடுப்போர் புகைப்படங்களுடன் இணைத்துப் போட்டார். அப்போது கல்லூரியில் விடுதி மாணவர்களுக்கு என்று சிந்தனை மன்றம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அதில் தட்ட்சச்சு செய்து பின்னர் அதில் சைக்ளோஸ்டைல் செய்து பிரதியெடுக்கும் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தோம். குயிலிசையோ என்னவோ பெயர். தட்டச்சு உதவிகள் செய்கிற நண்பர் இந்தப் பெயர் வைத்தால்தான் உதவி செய்வேன் என்று சொன்னதால் அவர் சொன்ன பெயரை வைத்துவிட்டோம். அதற்காக உள்ளுக்கு வெளியே என்று ஒரு சிறுகதை எழுதினேன். அதில் பெண் கதாபாத்திரத்தை அது, இது என்று விளிக்கிற மாதிரி வாக்கியங்கள் வந்தன. பொறுப்பாளராக இருந்த தமிழாசிரியர் உயர்திணைக்கு அஃறிணைச் சொல் போடக்கூடாது. திருத்திக் கொடு, பிரசுரிக்கலாம் என்றார். ஐயா, அது உறவின் நெருக்கத்தில் சொல்வதாக எழுதியது. இப்படி எழுதினால்தான் இயல்பாக இருக்கிறது என்று சொன்னதைக் கேட்கவில்லை. அதனால் அந்தக் கதையை அப்படியே வைத்திருந்தேன். இதைக் கேள்விப்ப்ட்ட முத்தையா, அவர் பிரசுரிக்க மறுத்தால் என்ன, கொடுங்கள், கல்லூரி மலரிலேயே போட்டுவிடலாம் என்று அந்தக் கதையையும், அந்தக் காலத்தில் அச்சுபிச்சென்று எழுதிய காதல் கவிதையொன்றையும் கல்லூரி மலரில் பிரசுரித்தார். காலப்போக்கில் இடப்பெயர்ச்சிகளில் அக்கல்லூரி மலர் எங்கே போனது என்று தெரியவில்லை. இப்போது இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. இளங்கலைப் படிப்பை முடித்தபிறகு முத்தையாவிடம் தொடர்பு விட்டுப் போனது. அவ்வப்போது பத்திரிகைகளில் மரபின் மைந்தன் முத்தையா என்று படித்தபோது, இவர் நம்முடன் படித்தவராயிற்றே என்று நினைத்துக் கொள்வேன். ஜெயமோகன் மூலம் இயக்குநர் சுகா அறிமுகமாகி நல்ல நண்பரானபோது, ”எனக்குக் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் வைத்தது மரபின் மைந்தன் முத்தையாதான், அவர் எனக்கு உறவுமுறை” என்றாரே பார்க்கலாம். அடடே, அவரை எனக்கு நன்றாகத் தெரியுமே என்றேன். முத்தையாவுக்கு கவிதை, பேச்சு, இலக்கியம், நடிப்பு ஆகியவற்றோடு கல்யாண புரோக்கர் என்ற முகமும் இருப்பது அப்போது தெரிய வந்தது. எதில் நுழைந்தாலும் பேரை நாட்டிவிடும் திறமையும் மிக்கவர் அவர். 2008-ல் இந்தியா சென்றபோது பலவருடங்களுக்குப் பின் அவரை நேரில் சந்தித்தேன்.
முத்தையாவுக்கு கண்ணதாசனும் வைரமுத்துவும் மிகவும் பிடித்தமான கவிஞர்கள். அவர் வலைப்பதிவில் “இப்படித்தான் ஆரம்பம்” என்ற தலைப்பில் கண்ணதாசன் குறித்த தன் மனப்பதிவுகளைத் தொடராக எழுதி வருகிறார். பலரும் பாராட்டுகிற, விரும்பிப் படிக்கிற தொடர் அது. அத்தொடரைப் பாராட்டி “எழுத்தும் எண்ணமும்” குழுமத்தில் முத்தையாவுக்கு எழுதிய மடலில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் பின்வருமாறு குறிப்பிட்டார். “இன்றைய தமிழ் சினிமா கலைஞரின் வசனத்தைத் தாண்டி வந்து விட்டது. சிவாஜி
கணேசனின் நடிப்புப் பாணியைத் தாண்டி வந்து விட்டது. பீம்சிங்,பாலசந்தரின் இயக்கமுறைகளைத் தாண்டி வந்து விட்டது ஆனால், தமிழ்சினிமாப்பாடல்கள் கண்ணதாசனுக்கு எழுதப்பட்ட அடிக் குறிப்புகளாகவே உள்ளன என்பது கண்ணதாசனின் மேதைமைக்கு ஒரு சான்று.”
கண்ணதாசனிடம் மரபின் நீட்சி இருந்தது. அவர் நவீனம் மரபின் மீது ஏறி நின்று வளர்ந்த நவீனம். உதாரணத்துக்கு, ஜெயகாந்தன் மாதிரி. 90க்கு அப்புறம் திரைப்பாடல்களில் நவீனம் இருக்கிறது. ஆனால் அவற்றில் மரபின் நீட்சி இல்லை. இருக்கிறதெனில் தெரிந்தவர்கள் சொல்லலாம். 90க்கு அப்புறமான திரைப்பாடல்கள் உதாரணத்துக்கு சுந்தர ராமசாமி எழுத்துகள் போன்றவை. நவீனமானவை. அவற்றில் மரபின் அடையாளமே இருக்காது. அந்தவகையில், அப்பாடல்கள், கண்ணதாசனின் நீட்சி இல்லை. அதனால், தமிழ் சினிமாப்பாடல்கள் இன்னும் கண்ணதாசனுக்கு எழுதப்பட்ட அடிக்குறிப்புகளாகவே உள்ளன என்பது சரியா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.
இரண்டாவதாக, எம்.எஸ்.வி, இளையராஜா இசைக்கு எழுதிய கண்ணதாசன் இன்று இருந்திருந்தால் இசைக்கருவிகளும் வாத்தியங்களும் ஆட்சிபுரிந்து வார்த்தைகள் பின் தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா போன்றோர் இசைக்கு எவ்விதமான பாடல்கள் எழுதியிருப்பார் என்ற கற்பனையும் ஓடுகிறது. அப்படிப்பட்ட இசை அவருக்கு இசைந்ததாக இருந்திருக்குமா என்ற கேள்வியும் பிறக்கிறது.