Tuesday, May 18, 2010

ஆர்லேண்டோ மேஜிக் Vs பாஸ்டன் செல்டிக்ஸ்


தினம் சில வரிகள் - 17

இத்தொடரின் இரண்டாம் ஆட்டத்தின் மூன்றாம் கால்பகுதி நடந்து கொண்டிருக்கும்போது இதை எழுதுகிறேன்.

மேஜிக் அணி ஆறு ஆட்டங்களில் செல்டிக்ஸை வெல்லும் என தொடர் தொடங்கும்முன் நினைத்தேன். செல்டிக்ஸ் அணி ஆடுகிறவிதத்தைப் பார்த்தால் அதற்கு எதிர்மாறாக அது ஆறு ஆட்டங்களில் வெல்லலாம் எனத் தோன்றுகிறது. க்ளீவ்லாண்ட் கவாலியர்ஸ் அணியை வென்றதில் இருந்து செல்டிக்ஸ் அணியின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. மேஜிக்குடனான இப்போது நடந்து கொண்டிருக்கும் இரண்டாம் ஆட்டம் வரை செல்டிக்ஸ்ஸின் கையே மேலோங்கியுள்ளது. முதல் ஆட்டத்தைவிட மேஜிக் அணி இரண்டாம் ஆட்டத்தில் முன்னேற்றம் காட்டுகிறது என்றாலும் வெல்வதற்கு இது போதுமா எனத் தெரியவில்லை. மேஜிக் அணியின் கோச் ஸ்டேன் வான் கண்டி திறமையான கோச் என்று பெயரெடுத்தவர். அவருடைய இளைய சகோதரரும், நெடுங்காலம் நியூயார்க் நிக்ஸ் அணியின் கோச்சாக இருந்தவரும், பின்னர் ஹூஸ்டன் ராக்கெட்ஸ் கோச்சாக இருந்து இப்போது NBA கூடைப்பந்து ஆட்டங்களின் வர்ணனையாளராக இருக்கிற ஜெப் வான் கண்டி தன்னைவிட தன் சகோதரர் திறமையானவர் என்று சொல்லி அவருக்கு தன் முந்தைய ஹெட்கோச் பேட் ரெய்லியிடம் அஸிஸ்டெண்ட் கோச் வேலை வாங்கித் தந்தார். பின்னர் ஸ்டேன் ஹீட் அணிக்குக் கோச்சாக இருந்து இப்போது மேஜிக் அணிக்குக் கோச்சாக இருக்கிறார். ஸ்டேன் கோச் செய்யும் அணிகளில் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவருபவர். இவர் ஒரு பர்பக்‌ஷனிஸ்டும் கூட. எப்போதும் கொஞ்சம் டென்ஷனுடன் இருப்பவர். தன்னுடைய அணி மிகவும் சுலபமாக ஜெயித்த ஆட்டங்களில்கூட ”இன்னும் நன்றாக ஆட வேண்டும், இந்தத் தவறுகளைக் களைய வேண்டும்” என்று சொல்கிறவர். ஆகையால் ஸ்டேன் வான் கண்டி மேஜிக் அணி சார்பாக ஆட்டமுறையில் நிறைய சிறுசிறு மாறுதல்களை (அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ்) கொண்டுவருவார். செல்டிக்ஸ் அணியின் கோச் டாக் ரிவர்ஸ்-ஐ விட இவர் திறமையான கோச்தான். ஆனாலும் வின்ஸ் கார்ட்டரும், ரஷார்ட் லுயிஸும் இதுவரை இத்தொடரில் சரியாக ஆடவில்லை. அவர்கள் டிவைட் ஹொவர்டுக்குக் கைகொடுக்காமல் மேஜிக் அணி இத்தொடரில் வெல்ல வாய்ப்பில்லை. மேஜிக் அணி இதுவரை த்ரீ பாயிண்டர்களும் சரியாகப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், செல்டிக்ஸ் அணியில் ராண்டொ, கார்னெட்,பியர்ஸ், ரே ஆலன் என்ற நான்கு முக்கிய ஆட்டக்காரர்கள் மட்டுமில்லாமல் உதவி ஆட்டக்காரர்களும் (ரோல் ப்ளேயர்ஸ்) இத்தொடரில் இதுவரை நன்றாக ஆடுகிறார்கள். இவர்களில் யார் ஜெயித்தாலும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்க்கு ஈடுகொடுப்பார்களா என்பது இன்னொரு நாளுக்கான பதிவாக வேண்டிய விஷயம்.