Sunday, May 16, 2010

விசிலடிச்சான் குஞ்சுவாக இருக்க விருப்பம்


தினம் சில வரிகள் - 16

நான் வருடத்துக்குக் குறைந்த பட்சம் 30லிருந்து அதிகபட்சம் 60 ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்கிறேன். இவற்றுள் பிறமொழிப் படங்களாக இருந்து ஆங்கில உதவிஎழுத்துடன் (சப்-டைட்டில்) ஓடுகிற படங்களும் அடங்கும். ப்ளாக்பஸ்டர் புண்ணியத்தில் வீட்டில் இருந்தபடி பார்க்கிற படங்களே பெரும்பாலும். என்னைத் தியேட்டருக்கு இழுத்துச் செல்ல அவதார் போன்ற படங்கள் வரவேண்டும், குழந்தைகள் படமாக இருக்க வேண்டும், அல்லது குடும்பத்தினர் ஊருக்குப் போயிருக்க வேண்டும்.

பார்த்தவுடன் அவற்றுக்கு IMDB இணையதளத்தில் மதிப்பெண் கொடுத்து விடுவேன். நான் பார்த்த படங்களின் பட்டியலை வைத்திருக்கவும் இது உதவுகிறது. என்னுடைய voting history எடுத்துப் பார்க்கும்போது அந்தந்த நேரத்து மனநிலைக்கு ஏற்ப மதிப்பெண்களைச் சிறிது கூட்டியோ குறைத்தோ இருக்கிறேன் என்று தெரிகிறது. மேலும் IMDB இணையதளத்தில் வாக்களிக்கும்போது முழு எண்களாக மட்டுமே வாக்களிக்க முடியும். 6, 7, 8 என்று. தசம எண்களாக 6.5, 7.75 என்பதுபோல வாக்களிக்க இயலாது. ஆதலால் பெரும்பாலும் என் மதிப்பெண்ணை அடுத்த முழுஎண்ணுக்குத் தாராளமாக round off செய்துவிடுவேன். கலைப்படம், வணிகப்படம் என்ற பாரபட்சமும் எனக்குக் கிடைக்காது. படம் எனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்ற ரசனையின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடுகிறேன்.

சிலவருடங்கள் முன்பு “எழுத்தும் எண்ணமும்” இணையதளத்தில் இப்படிப் பார்க்கிற படங்கள் பற்றிச் சிலவரிகள் எழுதுவேன். அப்புறம் அதுவும் விட்டுப் போயிற்று. நண்பர்கள் பார்க்கிற படங்களைப் பற்றியும், படிக்கிற புத்தகங்களைப் பற்றியும் எழுதுங்கள் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அலுவல் தொடர்பான புத்தகங்களையே இப்போது அதிகம் படிக்கிறேன். என்னைவிட நன்றாக எழுதுகிறவர்கள் எழுதி, அவை அமேசான்.காமில் அமோகமாக விற்கின்றன. அதனால் அந்தச் சக்கரத்தைத் திரும்பக் கண்டுபிடிப்பதில் நிபுணத்துவமும் இல்லை, விருப்பமும் இல்லை.

திரைப்படங்கள் பற்றி எழுதுவதற்குக் கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

1. திரைப்படங்கள் பற்றித் தொடர்ந்து நிஜமான ஆர்வத்துடன் எழுதுகிறவர்கள் இங்கே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன், பிச்சைப்பாத்திரம் பதிவு சுரேஷ் கண்ணன் ஆகியோர் உடனே நினைவுக்கு வருகிறார்கள். இதில் சுரேஷ் கண்ணன் விமர்சனங்களைச் சிலர் டெம்ப்ளேட் விமர்சனங்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை வாசிப்பதிலும், திரைப்படம் பார்ப்பதிலும், விமர்சனம் குறித்துக் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதிலும் அவர் காட்டுகிற ஊக்கம் பாராட்டுக்குரியது. எழுதிப் பார்த்தால்தான் டெம்ப்ளேட் விமர்சனம்கூட பலருக்கு எழுத வரவில்லை என்பது தெரியும்.

2. அடிப்படையில் பொழுதுபோகவும்,ரசனை சார்ந்தும் நான் படம் பார்க்கிறேன். அவற்றைக் கட்டுரையாக விரிப்பது படம் குறித்த சார்பற்ற பார்வையைத் தருமா என்ற கேள்வி இருக்கிறது.

3. நான் உலக திரைப்படங்களில் நிபுணன் இல்லை. நண்பர்கள் இங்கே குறும்பட விழாக்களை நடத்தியபோது, அதில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் மட்டுமே உண்டு.

4. இரண்டு மூன்று உலகத் திரைப்படங்களைத் திருட்டு டிவிடியிலோ இணையத்திலோ பார்த்துவிட்டு அதில் நிபுணர்கள் மாதிரி எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். வலைப்பதிவில் வாசகர்கள் இப்படி எழுதுகிறவர்களைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் சரியாக அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். அதனால், எனக்கு இப்படங்களில் உண்மையான ஆர்வம் உண்டு என்பதைச் சொல்வதற்கும்கூட கூச்சமாக இருக்கிறது. நாமும் அந்தப் பட்டியலில் அடங்கிவிடுவோமா என்று. இமேஜ் பார்க்கிறாயா என்று கேட்கிறீர்களா? இது இமேஜ் தொடர்பான விஷயம் இல்லை. ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகத்தில் என்று நினைக்கிறேன். சு.ரா.வின் சில உண்மையான உணர்வுகளை - அவ்வுணர்வுகள் சமூகத்தில் பிறரால் கோஷமாக முன்னெடுக்கப்பட்டபின் - அவர் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கினார் என்று எழுதியிருப்பார். அந்த மாதிரி விஷயம் இது.

5. புத்தகங்களுக்கு வாசக அனுபவத்தை எழுதுவதைவிட, திரைப்படத்துக்கு எழுதுவது சவாலான விஷயம். புத்தகம் எனில் உள்ளடக்கம் ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால் போதும். திரைப்படத்தில், முதலில், கதையையும் சொல்லவேண்டும், spoilerம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்புறம் திரைக்கதை,ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்ப உள்ளிட்ட திரைப்படத்தின் முக்கிய பகுதிகள் குறித்து நிபுணத்துவம் இல்லையென்றாலும் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், ஒரு படத்தில் அவை எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற் ஓரிரு வரிகளாவது எழுத முடியும். இவற்றில் பலவற்றின் அடிப்படை அறிவுகூட எனக்கு இல்லை.

6. திரைப்படம் குறித்து எழுதி, அறிவை வளர்த்துக் கொண்டு, திரைத்துறையில் இறங்கும் ஆசை எதுவும் எனக்கு இதுவரை இல்லை. திரைத்துறையில் இருக்கிற என் நண்பர்கள் பிரபலம் ஆக ஆக, அவர்களுடனான நெருக்கத்தை நான் விரும்பியே குறைத்துக் கொண்டு, தூர நின்று அவர்களின் வளர்ச்சியையும் வெற்றியையும் வேடிக்கை பார்த்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஆனாலும், திரைப்படம் பார்த்து முடித்தபின் என்னுடைய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நான் அதற்குக் கொடுக்கிற் மதிப்பெண்ணைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். அதோடு ஒரு சிறு பத்தியாவது சேர்த்து எழுதி இனி வலைப்பதிவில் இடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இயன்றவரை இதைச் செய்யப் பார்க்கிறேன்.