Sunday, May 23, 2010

பரிசோதனை முயற்சிகள்


தினம் சில வரிகள் - 23

1. மரத்தடி இணையக் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். ஒருநாள் பிற்பகல் ஓர் இணைய நண்பருடன் இணைய அரட்டை. அவர் நகைச்சுவையாக எழுதுவது கடினம் என்றார். பொதுவாக அவர் அதைச் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். நான் பெரிய அபிப்பிராயம் வைத்திராத ஓர் எழுத்தாளரைச் சொல்லி, அவரைப்போல நகைச்சுவையாக எழுதுவது கடினம் என்றார். அதனால், உந்தப்பட்டு, அது ஒன்றும் கடினமில்லை. தேர்ந்த நகைச்சுவையாக எழுதுவதுதான் கடினம் என்றேன். ஜாலியாக என்னைச் சீண்டும்விதமாய் எழுதிப் பார்த்தால்தான் தெரியும் என்றார் நண்பர் . அவருடன் அரட்டையை முடித்துவிட்டு, ஒருமணி நேரத்தில் ஒரு பகடியை எழுதினேன். மரத்தடி உறுப்பினர்களை மையமாக வைத்த பகடி. மூன்று பிரிவுகளாக எழுதிய அதைப் பெரும்பாலோர் ரசித்தார்கள். சிலர் வருந்தினார்கள்.

2. அப்புறம் டிவிட்டரில் வந்ததும் வெண்பாம். பா.ராகவன் புண்ணியத்தில் எழுதலானேன். இலவசம் உள்ளிட்ட நண்பர்கள் எதிர்ப்பா எழுதினார்கள். அப்படி எழுதிய பல வெண்பாம்களை எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் பகிர்ந்து கொண்டபோது வ.ஸ்ரீநிவாசன், பாரதிமணி உள்ளிட்ட நண்பர்களுக்கு அவற்றில் பிடித்தவை இருந்தன என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. வெண்பாமுக்கு முன்னோடி பா.ராகவன். அதனாலேயே வெண்பாம் எழுதுகிறவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.

3. டிவிட்டரில் ரைட்டர்பேயோன் என்ற பெயரில் ஓர் அன்பர் எழுதுகிறார். அவர் டிவிட்களைப் பலரும் பாராட்டுகின்றனர். எனக்கும் அவரின் பல டிவிட்கள் கவனத்தைக் கவரும் வண்னம் இருக்கின்றன. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவரும் ரைட்டர்பேயோனைப் பாராட்டினார். இப்படி எழுதுவது சிரமமில்லை என்றேன். சிரமமும் சிரமமற்ற தன்மையும் ஒவ்வொருவரைப் பொருத்தும் வேறுபடக் கூடியது. ஆகையால் ஒருவருக்குச் சிரமமற்றதாகத் தோன்றக்கூடியது இன்னொருவருக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஒருவருக்கு சிரமமாகத் தோன்றக் கூடியது இன்னொருவருக்குச் சிரமமற்றதாகத் தோன்றலாம். மேலும், என் தன்னம்பிக்கை என் பலமும் பலவீனமும். என்னால் முடியாதவற்றையும் சிலநேரங்களில் முடியும் என்று நினைக்கக் கூடியவன். நண்பர் முய்ற்சியுங்களேன் பார்க்கலாம் என்று தூண்டிவிட்டார். அதனடிப்படையில் சிலவற்றைச் சிலநாட்களாக எழுதி வருகிறேன். இந்த மாதிரி எழுதுவதற்கு ரைட்டர்பேயோன் ஒரு முன்மாதிரி. அந்தப் பெருமை கண்டிப்பாக அவருக்கு உண்டு. ஆனாலும், அவர் காட்டிய வடிவ அடிப்படையில் என் சிந்தனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நான் தான் ரைட்டர்பேயோனா என்று டிவிட்டரில் நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவர் இல்லை. என் தனிவட்டார நண்பர்கள் இப்படி நான் எழுதுவதில் பல டிவிட்கள் பிடித்திருக்கின்றன என்கிறார்கள். எனக்கும்கூட ஒரு கட்டுரையோ சிறுகதையோ ஆகக் கூடிய விஷயத்தை இப்படிச் சீக்கிரம் சுருக்கமாக 140 எழுத்துகளில் எழுதிவிடுவது 1. எழுதிவிட்ட திருப்தியைத் தருகிறது, 2. நேர நெருக்கடியில் உதவுகிறது. அதனால் எனக்கே சலிப்படிக்கும் வரையில் தொடர்ந்து எழுதலாம் என்றே நினைக்கிறேன். டிவிட்டரில் நானறியாத சிலர் கொஞ்சம் மேலேபோய் நான் ரைட்டர்பேயோனைக் காப்பியடிக்கிறேன் என்கிறார்கள். சுஜாதா போன பின்னும் அவர் நடையை விடாமல் தொடர்ந்து பிடித்து எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கு மாங்கு மாங்கென்று பாராட்டிப் பின்னூட்டம் விழும் வலையுலகிலிருந்து இந்த மாதிரி கருத்துகளைக் கேட்பதில் எனக்கு வருத்தமில்லை. மேலும் இதையே நான் ரைட்டர்பிசாசோன் என்ற பெயரில் எழுதியிருந்தால் இப்படிப் சொல்கிறவர்களேகூட பாராட்டக்கூடும். முகம் மறைத்துக் கொண்டு எழுதுகிறவர்களையும், பிரபலங்கள் பாராட்டுகிறவர்களையும் பாராட்டும் உளவியல் தமிழ் வலையுலகில் உண்டு என அறிவேன். ரைட்டர்பேயோனே மேற்குலகில் டிவிட்டரில் செய்வதைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். அதற்காக அவரைக் காப்பி என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் கவிதை எழுதுகிற ஒருவரால் உந்தப்பட்டு கவிதை எழுதுகிற இன்னொருவரைக் காப்பியடிக்கிறார் என்று சொல்வதும்.

நான் மேற்சொன்ன மூன்றுமெ, நேரம் இருப்பின் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில் எனக்கிருக்கும் ஆர்வத்தை மட்டுமே காட்டுகின்றன. அந்தப் பரிசோதனை முயற்சிகளுக்கு என்னைத் தூண்டுகிறவர்களுக்கு நன்றிகள். எந்த எழுத்தாளரை முந்தியும் நகைச்சுவையோ, வெண்பாமோ, டிவிட்டோ எழுதிவிட வேண்டும் என்ற அணையாநெருப்பு எதுவும் என்னுள் எரிவதில்லை. ஒரு புத்தகம் போட்டதுமே எழுத்தாள ஆசை போய்விட்டது. அது என்னளவில் நான் நினைப்பதை மிகவும் வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் அணுகவும் சொல்லவும் உதவுகிறது.

இந்த மாதிரி பரிசோதனைகளில் ஈடுபடும்போது அதுகுறித்துப் பிறர் சொல்லக் கேட்கும் கருத்துகள் தமிழ் இணையச் சூழலின் உளவியலைப் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் உதவுகின்றன என்பது கூடுதல் பலனும்கூட.