தினம் சில வரிகள் - 24
ஆர்லாண்டோ மேஜிக் கூடைப்பந்து அணியின் டிவைட் ஹொவர்ட் இன்றைய NBA-வில் Center ஆக ஆடுகிறவர்களில் மிகச் சிறந்தவர். இவ்வருடம் ஆர்லாண்டோ மேஜிக்கின் ப்ளேஆஃப்ஸ் முதல் ரவுண்டில் ஹொவர்ட் நிறைய foul trouble-களில் அவதிப்பட்டார். அதைவிட்டு வெளியே வர இப்படத்தைப் பார்த்ததாக அவர் சொல்லியிருந்தார். இப்படம் அவர் உள்ளமைதியை மீட்க உதவியதாக ஹொவர்ட் சொல்லியிருந்தார். அதனால் இப்படம் என் கவனம் பெற்றது. இணையத்தில் தேடியபோது டான் மில்மேன் எழுதிய அவரின் நிஜவாழ்க்கை குறித்த புத்தகத்திலிருந்து சினிமா வடிவம் பெற்றது என அறிந்தேன். நான் புத்தகத்தைப் படிக்கவில்லை. ஆதலால் புத்தக வடிவம் சரியாக திரைபப்டமாக்கப் பட்டிருக்கிறதா என்று தெரியாது.
என் வீட்டில் ஒரு வளரும் விளையாட்டு வீரர் இருக்கிறார். அதனால் அவருக்கு இப்படம் உதவுமோ எனத் தோன்றியது. அவர் பார்ப்பதற்கு முன் நான் ஒருமுறை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் பரிந்துரைக்கலாம் என்று முதலில் பார்த்தேன்.
திரைப்படமாக இப்படம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக, காட்சிகள் தாவித் தாவிச் செல்வது, நேரடியான அறிவுரைகள், சொல்லப்படுகிற அறிவுரைகளில் தென்படும் ஸ்டீரியோத்தன்மை, அறிவுரையைப் பெற்றுத் தருவதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் போதாமை, குருவின் வேடத்தில் நடித்தவர் சிறப்பாகச் செய்யாமை, மெசேஜ் சொல்லும் படங்களின் அப்பட்டமான யதார்த்தமின்மை என்று அடுக்கலாம்.
ஆனாலும், உங்கள் வீட்டில் பதின்ம வயதில் விளையாட்டில் ஆர்வமுடைய, ஈடுபடுவதில் வெல்ல நினைக்கிற குழந்தைகள் இருக்குமானால், அவர்கள் ஒருமுறை இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். படுக்கையறை காட்சிகளும், குடிக்கும் காட்சிகளும் சில இடங்களில் வருகின்றன. படம் PG-13. ஆனால், அவை அப்பட்டமானவை எனச் சொல்ல இயலாது.இக்காட்சிகளை உங்கள் குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள் என்றால், அக்காட்சிகள் வரும்போது அவற்றைத் தாண்டிச் செல்லும்படி பார்த்துக் கொள்ளவும்.
இப்படத்தில் வரும் வசன மேற்கோள்களை http://www.imdb.com/title/tt0438315/quotes> என்ற முகவரியில் தொகுத்திருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை நம் குழந்தைகள் ஏற்கனவே நம் மூலமோ, பள்ளியிலோ அறிந்தவைதான். இவற்றை நாம் சொல்லும்போது குழந்தைகளுக்கு அவற்றைக் கேட்பதில் ஓர் அலுப்பும்கூட வரலாம். ஆனால், திரைப்படமாகப் பார்க்கும்போது அவர்கள் மனதில் பதியும் வாய்ப்பு உருவாகலாம்.
என் குழந்தைகள் இனிமேல்தான் பார்க்கப் போகிறார்கள். பார்த்துவிட்டு ஏதும் சுவாரஸ்மாகச் சொன்னால் எழுதுகிறேன்.