Sunday, May 23, 2010

கருத்துக்கே எதிரி


தினம் சில வரிகள் - 25

வலைப்பதிவில் பின்னூட்டப் பெட்டியை ஏன் மூடிவிட்டீர்கள் என்று சிலர் கேட்டார்கள். நான் நிம்மதியாக எழுதிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லையா சிரித்தபடி கேட்டேன். யோசிக்கும்போது பின்வரும் காரணங்கள் சொல்லலாம்.

1. முதலில் எனக்குப் பின்னூட்ட மழை பொதுவாகப் பெய்வதில்லை.வருகிற பின்னூட்டங்கள் சொற்பம்தான்.
2. அப்படியே பின்னூட்டத்தைத் திறந்து வைத்தாலும், கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட சில நேரங்களில் நேரமில்லாத என் சூழ்நிலையில் நிறைய உழைக்க வேண்டியிருக்கும்.
3. பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டதால் என்னைக் கருத்துச் சுதந்திரத்தின் எதிரி என்று சொல்லமாட்டார்களா? இணைய அகராதிப்படி பின்னூட்டத்தை மட்டுறுத்தினால் அல்லது வெளியிட மறுத்தால் மட்டுமே கருத்துச் சுதந்திரத்தின் எதிரி. பின்னூட்ட வாய்ப்பே தரவில்லை எனில் கருத்துக்கே எதிரி என்று புதியதாக வேண்டுமானால் சொல்லலாம். அப்படி என்னைப் பற்றிச் சொல்கிறவர்களை வரவேற்கிறேன்.
4. இணையதளங்களில் தான் தடை செய்யப்பட்டபோது வானத்துக்கும் பூமிக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகக் குதித்த மகானுபவர்கள், தாங்கள் வலைப்பதிவு ஆரம்பித்துப் பார்த்துப் பின்னூட்டங்களில் வரும் கருத்துகளை மட்டுறுத்த வேண்டி வந்தபோது, ”என் கருத்தை எழுத வலைப்பதிவு வைத்திருக்கிறேன். உங்கள் கருத்தை உங்கள் இடங்களில் சொல்லுங்கள்” என்று அருளிய நியாயவானாக மாறிய கதைகள் இங்குண்டு. அந்த மாதிரி தேவைக்கெற்ப வந்த திடீர் ஞானோதயமா என்று கேட்பவர்களுக்கு வலைப்பதிவின் என் சென்ற இன்னிங்க்ஸில் பின்னூட்டமிடும் வசதி இருந்ததை நினைவுபடுத்துகிறேன்.இந்த முறை சண்டைபோட நிஜமாகவே நேரம் இல்லை. மற்றபடி பதில் சொல்ல விரும்புபவைக்குப் பதிவிலேயே பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.
5. பின்னூட்டங்கள் உற்சாகப்படுத்தும் வழியல்லவா? பின்னூட்டம் இல்லாமல் எப்படித் தொடர்ந்து எழுதுவது? பாராட்டுகிற பின்னூட்டங்கள் தற்காலிக மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் தொடர்ந்து எழுத உத்வேகம் எனக்கு உள்ளிருந்துதான் வரவேண்டும். வெளியிருந்து இல்லை.
6. பெரிய எழுத்தாளர்கள் பலர் பின்னூட்டப் பெட்டி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு வாசகர்கள் கடிதங்கள்தான் எழுத வேண்டும். அப்படி வருகிறவற்றில் பாராட்டாய் வருகிற கடிதங்களை மட்டும் தேவைக்கேற்ப மாற்றி எழுத்தாளர்கள் தங்கள் தளத்தில் பிரசுரித்துக் கொள்வது சில சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் இணையத்துக்குக் அளித்த கொடை. அந்த மாதிரி தாங்களும் என்னைப் பாராட்ட விரும்பினால்... :-)