Monday, May 31, 2010

It's complicated

தினம் சில வரிகள் - 30

2000-களின் தொடக்கத்தில், Bridges of Madison County என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதன் குழந்தைகள் வழியேயான ஃபாளாஸ்பேக் கதைசொல்லலை மட்டும் வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என அப்போதே நினைத்தேன். இப்போது மீண்டும் பார்த்தால் அப்படம் அதே அளவுக்குப் பிடிக்குமா என்றொரு கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்து கொள்ளவாவது அப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும். ஆனால், அப்படத்தைப் பார்தத் நாள் முதலாக மெரில் ஸ்ட்ரீப் எனக்குப் பிடித்தமான நடிகைகளுள் ஒருவராக ஆகிப்போனார். அவருடைய வசன உச்சரிப்பும், உடல் மொழியும், அலட்டிக்கொள்ளாத நடிப்பும் எனக்குப் பிடித்துப் போயின. ஹாலிவுட்டில் ஜாக் நிக்கசன், மெரில் ஸ்ட்ரீப் என்று நடிக/நடிகைகளில் ஒரு புனிதப் பட்டியல் (revered list) இருக்கிறது என்று பின்னர் தெரிந்தது. அந்தப் பட்டியலுக்கு மெரில் தகுதியானவர்தான் என நினைத்துக் கொண்டேன்.

மெரிலுக்காகப் பார்க்க வேண்டுமென்று எடுத்து வைத்த It's complicated படத்தை இந்த நான்கு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து முடித்தேன். தியேட்டரைத் தவிர வீட்டில் ஒரே அமர்வில் என்னால் ஒரு படத்தை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆகையால் அதை இப்படத்தின் குறையாகச் சொல்ல முடியாது. மெரிலுக்கு வயதாகிவிட்டது என்பது படத்தில் தெரிகிறது. நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. விவாகரத்து பெற்ற தம்பதியினருக்கிடையே மீண்டும் உறவு மலர்வதை நிஜவாழ்வில் கேட்டிருக்கிறேன். அதனால் மெரிலுக்கும் அவர் முன்னாள் கணவருக்குமான மீள்உறவு படத்தில் ஆச்சரியம் தரவில்லை. அதேநேரத்தில் மெரில் ஸ்டீவ் மார்ட்டினுடனான புது உறவையும் விரும்புகிறார். இந்தக் குழப்பத்தை மெரில் பாத்திரம் வெளிப்படுத்துகிற உடல்மொழி, சிரிப்பு, குறைவான வசனங்கள் ஆகியன பிடித்திருந்தன. உறவுச் சிக்கலும், குழப்பமும், சீரியசுமான ஒரு கதைக் கருவை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய கதைகளைச் சீரியஸாகச் சொல்லப்போனால் அபத்தத்திலும், தோல்வியிலும் முடியும் என்பது என் தனி எண்ணம். இத்தகைய படங்களை நகைச்சுவையே சிறப்பாக ஆக்குகின்றன. அலெக் பால்ட்வினுக்கும் ஸ்டீவ் மார்டினுக்கும் நகைச்சுவையில் சோபிக்க மெரில் முன்னாலும் கதையிலும் அதிக இடமில்லை. வயதுக்கு வந்த குழந்தைகள் உடையவர்களின் பிரச்னைகள், உறவுமுறை, காதல் ஆகியவற்றைச் சொல்லும்படியான படங்கள் அதிகம் இல்லை. அதிலும் இந்த வயதுடைய பெண்களின் பிரச்னைகளை அணுகும் படங்கள் அதிகம் இல்லை. அதனால் இயக்குநரின் மிகவும் தைரியமான முயற்சி இப்படமெனச் சிலர் பாராட்டுகிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்படத்தில் மெரில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று படம் முடிந்தவுடன் தோன்றுகிறது. அதுவே அவர் சிறப்பு.அவரில்லாமல் வேறு ஒருத்தர் அவ்வேடத்தில் நடித்திருந்தால் மட்டுமே மெரிலின் சிறப்பை நம்மால் உணர முடியும். 6/10.