Sunday, June 13, 2010

23 மணிநேரம் அடர்த்தியுடனும் ஆழத்துடனும் சிந்தித்து 1 மணி நேரத்தில் எழுதியவை

தினம் சில வரிகள் - 36

தமிழ்சினிமாவில் வெற்றிபெற என்னவழியென்று நண்பரைக் கேட்டேன்.யோசனைக்குப் பின்சொன்னார்.ஆணென்றால் சாரும்,பெண்ணென்றால் மேடமும் போடத்தெரியணும்.

தமிழ் எழுத்தாளனாய் வெற்றிபெற என்னவழியென்று கேட்டேன். உடனடியாக நண்பர் சொன்னார். நல்ல பதிப்பாளர் கிடைக்க வேண்டும்.

உலகஉதைபந்தாட்டம் முடியும்வரை அலுவல் விடுப்பு எடுக்க இயலாதென்ற வருத்தத்தில் விடுமுறை நாட்களிலும் ரெகார்டட் வர்ஷன் பார்க்கலாமென இருக்கிறேன்.

ரெஸ்யூமைமாற்றித் தருகிறேனெனச் சொன்னேன். செய்யலை.என்னை நானே புகழ்ந்தெழுத கூச்சமாக இருக்கிறது.காசுகொடுத்தால் சிறப்பாகச் செய்துதருகிறார்களாம்.

இந்த உலக உதைபந்தாட்டத்தில் அணிகள்,வெற்றி தோல்விக்கு இணையாக பத்திரிகைகளுக்கு வழக்கம்போல மாரடோனாவும் செய்தியாவார்.

நள்ளிரவில் மைக்ரோவேவில் தேநீர் தயாரிக்கும்போது அன்று இரண்டாம் ஆட்டத்துக்குப் பின் குடித்த தேநீர்க் கடைகளும் மனிதர்களும் உடனிருக்கிறார்கள்.

விளையாட்டுவீரர்கள் ரிடையர் ஆனபின் கோச்சுகளாகிறார்கள். எழுத்தாளர்கள் ரிடையர் ஆனபின் என்னவாகிறார்கள்?

ஆயில் ஸ்பில்லில் இருந்து சாரா பாலின் மார்பக உருமாற்று சிகிச்சை செய்துகொண்டாரா என்பதுவரை அமெரிக்கர்களுக்குத்தான் எத்தனை கவலை.

எனக்குத் தெரிந்த ஓர் எழுத்தாளர் எழுத்திலிருந்து ரிடையர் ஆனதும் எழுத ஆரம்பித்தார்.

இந்த வருடம் புல்வெட்டுகிறவரை மாற்றிப் பார்த்தேன். ஆனாலும் புற்கள் வளர்ந்தபடியேதான் இருக்கின்றன.

நடைபாதைக்குள் கிளைநீட்டிப் பூக்கும் தோட்டத்து ரோஜாவின் முட்கள் கிழித்துவிடுமோவென்று தள்ளி நடக்கின்றேன்.

டிவிட்டருக்குத் தமிழர்கள் நன்றி சொல்லவேண்டும். பல எழுத்தாளர்களை அது விழுங்கி, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

பதிவில் பின்னூட்டவசதியை எடுத்தபின், இயல்பாக எழுத முடிவதாக உணர்கிறேன். பிறர் படிக்கும் வசதியையும் எடுத்துவிட்டால் இன்னும் இயல்பாக எழுதவருமோ.

ஜெயமோகனின் இணைய இடைவெளியைப் பார்த்தால், எத்தனை புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

ஒருவாரமுழைத்து அலுவலில் பங்குதாரர்க்கு அறிக்கை தயாரித்தேன்.அதிலுள்ள புள்ளிவிவரத்துக்கு ஆதாரம் கேட்டார்கள். தரமுடியாது.தொழில்தர்மம் என்றேன்.

தமிழுக்கு உழைக்க வேண்டுமென்ற உந்துதலில் இப்போதெல்லாம் கனவிலும்கூட எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எஸ்.ரா.விடம் பிடித்தது. அமைதியாக எழுதிக் கொண்டு மட்டும் இருக்கிறார்.முக்கியமாக பின்னூட்டம்,வாசகர் கடிதம் வெளியிடுவதில்லை.

எனனைப் பதின்மவயதுக்குத் திரும்ப அழைத்துச் செல்கிறார். விளையாட்டுகளின்போது தொலைகாட்சியே பழியென்று கிடக்கும் மகன்.

நேற்று லாக்-அவுட் செய்தபின் ஒரு கவித்துவமான டிவிட் மனதில் தோன்றியது. காலை எழும்போது கவனித்தேன்.அது நாவலாக வளர்ந்திருப்பதை.

மனைவி,குழந்தைகள்,குடும்பம் பற்றி எழுதி விட்டேன்.பெரிய எழுத்தாளனாக ஒன்றே ஒன்றுதான் தடுக்கிறது. ஒருநாய் வாங்கி பின் அதைப்பற்றி எழுதவேண்டும்.