Monday, June 07, 2010

தினம் சில வரிகள் - 33

நேற்று இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் பார்த்தேன். இரண்டும் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்கள். நாயகி, குணச்சித்திர நடிக நடிகையர் என்று பல தமிழ் முகங்கள். உருவாக்கத்தில் உழைத்தவர்களிலும் தமிழர்கள் இருந்திருக்கலாம். உதவி எழுத்துடன் (சப்-டைட்டில்) தமிழ்ப்படம் பார்த்தது மாதிரியே இருந்தது. இதில் ஒருபடம் பின்னர் தமிழ் நாயகனை வைத்துத் தமிழிலும் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஒரே கதையும் ஒரே நடிகர்களும் தென்னிந்திய மொழிகளில் வலம் வருவது கலாசாரப் பரிவர்த்தனையும் ஒருமைப்பாடுமென்று சொல்லுவதா? கதைப் பஞ்சத்திலும், கலைஞர்கள் பஞ்சத்திலும், அதைமீறி ஒரே மாதிரியான ரசனைகொண்ட ரசனை பஞ்சத்திலும் இருக்கிறோமென்று சொல்லுவதா? இவை எதுவுமில்லை. எது வெற்றி பெறுகிறதோ எது அந்த நேரத்தில் புகழில் இருக்கிறதோ அதை வைத்து வேகமாகப் பணம் பண்ண முடியுமா என்று பார்க்கும் உத்தி என்றே தோன்றுகிறது. வாயசைவு (டப்பிங்) உதவியுடன் தெலுங்கு பேசுகிற தமிழ்நாயகிகள் தமிழ்ப்படங்களில் தெரிவதைவிட கவர்ச்சிகரமாக தெரிகிறார்கள். இது நமக்குத் தெரியாத ஒன்றைப் பேசுகிறவர் (செய்கிறவர்) மீது வரும் இயல்பான கவர்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும், சுந்தரத் தெலுங்கை சுந்தரிகள் பேசக் கேட்பது சுகமே.