Saturday, June 12, 2010

மீண்டும் டிவிட்டுவம்

தினம் சில வரிகள் - 34

அந்த எழுத்தாளரைப் பிடிக்குமென்றார் நண்பர்.எப்படி என்றேன்.வம்புகளை வாய்ப்பேச்சில் வைத்துக்கொள்கிறார்.எழுத்தில் கொணர்வதில்லை என்றார்.

புரியாவிடினும் ஸ்பானியமொழி உதைபந்து நேர்முகவர்ணனையாளர்கள், ஆட்டத்தின்மீதான உயிர்ப்பையும் உச்சத்தையும் ஆர்வத்தையும் உணரவைக்கிறார்கள்.

என் குடைக்கு வெளியே பெய்யும் மழையில் என் எழுத்துகள் நனைகின்றன.

படிச்சா புத்தி வரும். நல்லவனா இருக்கவும் வாழவும் படிப்பு அவசியமில்லை என்று இன்று வாழ்க்கை மீண்டும் சொல்லித் தந்தது.

கோடையின் கொடுமையை டிவிட்டரிலும் உணருகிறேன்.

சனி காலை மசாலோதோசை கிடைத்தும் சந்தோஷப்படாமல் வேர்க்கடலை சட்னி இருந்தால் நல்லா இருக்குமே என நினைக்கிற நான் நிச்சயம் ஆணாதிக்கவாதிதான்.

ஒருவாரமாக வலைப்பதிவுகளைப் படித்த அலுப்பு நேற்று மாலை அலுவலிலிருந்து வந்ததும் இரவு உணவைக்கூட அருந்தவிடாமல் தூக்கம் கண்களைத் தழுவிக்கொண்டது.

சனி காலை 5:45க்கே எழுந்துவிட்டேன்.நான் தேர்வெழுதுகிற பருவங்களில்கூட இப்படிச் செய்ததில்லை. மகன் தேர்வெழுதுகிறார்.

எனக்குப் பிடித்த சைனீஸ் உணவைச் சாப்பிடும் ஒவ்வொரு கணமும் மா சே துங்குக்கு என்னை நிச்சயம் பிடித்திருக்கும் என நினைத்துக் கொள்கிறேன்.

குடிக்கலாமா கூடாதா என்ற குழப்பத்தில் முடிவெடுக்கும்முன் வெள்ளியிரவு பல நேரங்களில் வீணாகிவிடுகிறது.

வெற்றுத்தாளில் இருந்தும் கதையோ கவிதையோ கண்டெடுக்க முடிந்தால் நீங்கள் நுட்பமான வாசகர் ஆகிவிட்டீர்கள்.

நள்ளிரவில் கேட்கும் தொலைதூர மின்வண்டி ஓட்ட சத்தத்தில் என் சிறுவயது ஊரின் புகைவண்டி நிலைய சித்திரம் நினைவுக்கு வருகிறது.

மின்விசிறியா குளிரூட்டப்பட்ட அறையா என்றுதான் கேள்வியெழுகிறது. ஜன்னலைத் திறக்கலாமென்பதை மறைக்கிறது திரைசீலை.

கொடுத்த வேலையை மட்டும் செய்யவேண்டுமென்ற ஞானோதயம் கூடுதலாய்ச் செய்த வேலை கவனிக்கப்படாமல் போகும்போதெல்லாம் வருகிறது.

கடைசி நிறுத்தத்தில் மின்வண்டியைத் தனியே விட்டுவிட்டு நடக்கும்போது பிரிவுத்துயரை தற்காலிகமாக உணர்ந்திருக்கிறீர்களா?

அறிவியல் இல்லாமல் அறிவியல் கதை எழுத முடியும். கதையே இல்லாமல் கதை எழுதுவதில்லையா. அப்படித்தான்.

கால்பந்தா செக்ஸா என்று கேட்டதற்குப் பலர் கால்பந்து என்றார்களாம். புரிகிறது.கால்பந்தை 90 நிமிடங்கள் அனுபவிக்கலாம்.