நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 43வது இதழில் வெளியான கவிதைகள் இவை. நன்றி சிபிச்செல்வன்.
*****
வானத்தைக் கூண்டுக்குள்
வரவழைக்கத் தெரிந்த கணம்
விடுதலையானது பறவை.
*****
அசைவத்தின் பிரச்னை
உண்பதல்ல
உண்பதற்காக வளர்ப்பது.
இல்லாமலானது
ஜீவகாருண்யமல்ல
வேட்டையின் அறம்.
*****
பனிப்புதையலில் இரைதேடும்
பறவையின் இலக்கு
பனியின் ரகசியங்கள்
*****
அந்தரங்கத் தருணங்களை
அதன்பொருட்டான வார்த்தைகளை
சண்டைகளில் மீட்டெடுத்து
சந்தியில் உலர்த்துகையில்
காய்ந்துபோவது காதலென்று
இவர்களுக்கேன் தெரிவதில்லை?
*****
இலையுதிர்வின் சோகத்தை
மரம் அறியக்கூடும்
பறவை அறியும்
இலையுதிர்த்துப் பருவம் வாழும்
சுயநலம் மரத்துக்குண்டு
இலையில்லாமல் போனால்
இடம்பெயர்வது பறவைதானே.
*****
என் வீட்டில் ஒரு பறவை
இருக்கிறது,
நான்கு சுவர்களுக்குள்
பாதுகாப்பாய் பறக்கிறது
வெயில் மழை பனிப்பொழிவு
பிரச்னைகள் அதற்கில்லை
பதப்படுத்தப்பட்ட விதைகள்
பறவைக்கான பிரத்யேக உணவு
பாதாம் பிஸ்தா இட்லி தோசை
பிட்ஸா பாஸ்தாவென உண்கிறது
தானாய்க் கற்றுக் கொண்டு பேசுகிறது
பெயர்ச்சொல்லி எங்களையழைக்கிறது
தோள்களில் அமர்ந்தபடி சிறகுகள் கோதுகிறது
தடவிக்கொடுக்க கண் கிறங்குகிறது
ஆளில்லாமல் போனால் தவிக்கிறது
ஆள் நுழையக்கண்டு ஆனந்தக்கூச்சலிடுகிறது
குழந்தையாய் எங்களிடம் உரிமையெடுக்கிறது
சொல்வதைப் பலநேரம் கேட்பதில்லை
என் வீட்டில் ஒரு பறவை
இருக்கிறது
வாழ்கிறது என்றெழுத
ஏனோ தயக்கமாய் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment