ஜனவரி 2018-ல் பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்ட தி. பரமேசுவரியின் “தனியள்” கவிதைத் தொகுப்பு (இரண்டாம் பதிப்பு) மற்றும் பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” (முதல் பதிப்பு) ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி, தற்போது நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ஜனவரி 12 - 2018 (வெள்ளி) மாலை, சிக்ஸ்த் சென்ஸ் (புத்தகக் கடை எண்: 700-ல்) சிறப்பாக நடந்தேறியது.
தி. பரமேசுவரியின் தனியள் கவிதைத் தொகுப்பைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, கிருத்திகா பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.
பி.கே. சிவகுமாரின் உள்ளுருகும் பனிச்சாலை கவிதைத் தொகுப்பின் முதல் பிரதியைக் கவிஞர் சல்மா வெளியிட்டு, தேர்ந்த இலக்கிய வாசகரும், இலக்கிய ஆர்வலரும், நண்பருமான அ. வெற்றிவேல் பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.
பி.கே. சிவகுமாரின் உள்ளுருகும் பனிச்சாலை கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பிரதியைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, அமெரிக்க வாழ் தமிழ் அன்பரும், வாஷிங்டன் டி.சி. வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (ஃபெட்னா) முன்னாள் தகவல்-தொடர்பு இயக்குநருமான மயிலாடுதுறை பரமசிவம் சிவகுமார் (எம்.பி. சிவா) பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.
பிரக்ஞை பதிப்பகத்தின் உரிமையாளர் விலாசினி ரமணியுடன் தமிழின் பல நிகழ்காலக் கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. புகைப்படம் எடுத்து உதவிய நண்பர்களுக்கு நன்றி.)
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பி.கே. சிவகுமாரின் கவிதைத் தொகுதி உள்ளிட்ட பிரக்ஞை பதிப்பகத்தின் புத்தகங்கள், புத்தகக் கடை எண்கள், 661, 662, 663, 664, 699 மற்றும் 700 புத்தகக் கடைகளில் கிடைக்கும்.
பிரக்ஞை பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் https://www.commonfolks.in/ ஆன்லைனில் கிடைக்கும்.
பி.கே. சிவகுமாரின் கவிதைத் தொகுப்பை ஆன்லைனில் வாங்குவதற்கான நேரிடையான சுட்டி https://www.commonfolks.in/books/d/ullurugum-panichchaalai
உள்ளுருகும் பனிச்சாலை - ஒரு குறிப்பு
தமிழ் இணைய இலக்கிய வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயர் பி.கே. சிவகுமார். 2000-களின் ஆரம்பத்தில் இணைய பத்திரிகைகள், குழுமங்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகர்களின் கவனம் ஈர்த்தவர். சென்னையில் பிறந்த பி.கே. சிவகுமாரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறார்.
நண்பர்களுடன் இணைந்து - தமிழ்ப் புத்தகங்களை இணையத்தில் விற்கத் தொடங்கப்பட்ட முன்னோடி இணையதளமான எனி இந்தியன்.காம் தளத்தையும், எனி இந்தியன் பதிப்பகத்தையும், வார்த்தை மாத இதழையும் நடத்தியவர். வார்த்தை இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து, அவர் எழுதிய தலையங்கங்கள் கவனம் பெற்றவை.
2006-ல் ஜெயகாந்தன் அணிந்துரையோடும், ஜெயமோகன் முன்னுரையோடும் இவர் எழுதிய இணையக் கட்டுரைகளின் தொகுப்பு, “அட்லாண்டிக்குக்கு அப்பால்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. தன் கருத்துகளை உறுதியாக முன்வைக்கத் தயங்காத தன்மை, தன் ரசனையை எப்போதும் செழுமைப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் திறந்த மனம், கோஷங்களையும் வெற்று வாதங்களையும் தாண்டிய தெளிவு, பழம் இலக்கியங்கள் புத்திலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான ரசனை சமநிலை, பாசாங்கு அற்ற தெளிவான நடை ஆகியன சிவகுமார் எழுத்தின் சிறப்பம்சங்களாகச் சுட்டப்படுகின்றன. கோபால் ராஜாராம், ஜெயகாந்தன், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணதாசன் உள்ளிட்டப் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர்.
பதினான்கு ஆண்டுகளாக பி.கே. சிவகுமார் எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு - உள்ளுருகும் பனிச்சாலை.
”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்றும் ”சிவகுமாரின் கவிதைளில் வேறு பல தமிழ்க் கவிதைகளில் காணாத ஒரு பதிவு குழந்தைகள் பற்றியது. குழந்தைகளின் மனோபாவங்களை, சந்தோஷங்களை, அச்சங்களை தமிழ்க் கவிதைகளில் வெகு அரிதாகவே நாம் காண்கிறோம்.குழந்தைகளின் உலகில், அவர்களை அங்கிகரித்து, , நுழைவதும் அவர்களை வியப்பதும் இயல்பான கவிதைக் கணங்களாக சிவகுமாரிடம் ஆக்கம் கொள்கின்றது.” என்றும் ”சிவகுமாரின் கவிதைக் குரல் ஒரு தனித்த குரல். புதுக் கவிதையின் வீரியமான மரபுகளை சுவீகரித்துக் கொண்டு, தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தன் இயல்புகளை கவிநயங்களாக்கி, இயல்புக்கு மாறானவற்றை அவற்றின் விமர்சனத்தோடு, ஆனால் கவிதைத் தன்மை மாறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். பதினான்கு வருடங்கள் எழுதி வந்த கவிதைகளை தேர்வு செய்து காத்திரமான தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே ஆங்காங்கே படித்தவை என்றாலும், தொகுப்பாக படிக்கும் போது ஒரு நிறைவான கவிதானுபவம் கிடைக்கிறது. வெற்று ஓசைகளையும், கூறியது கூறலையும் தவிர்த்து சொல் புதிது , பொருள் புதிது என்று வாசகர்கள் உணரும் வகையில் பதிவு செய்திருக்கிறார். வரவேற்போம்.” என்றும் தொகுப்புக்கு எழுதியுள்ள முன்னுரையில் கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார்.
கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) “உள் உருகுதல்” என்ற தலைப்பில் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். ”முதல் வரிதான் எப்போதும் எழுத்தில் நுழைய அனுமதி தரத் தயங்குவது. தொகுப்புக் கவிதைகளின் முதல் வாசிப்பு முடிந்த கையோடு இதை எழுதியிருக்க வேண்டும். நிறைய முறைகள் வாசித்தாகிவிட்டது. ஒவ்வொரு வாசிப்புக்குப் பிந்தியும் ஒவ்வொரு முதல் வரி தோன்றினால், நான் என்ன செய்வேன்?” என்று ஆரம்பிக்கிற கல்யாண்ஜி, சிவகுமார் கவிதைகளின் வரிகளை வைத்தே ஒரு கவித்துவமான அணிந்துரையை எழுதியிருக்கிறார். ”குடியிருப்பில் ஒரு பெண் குழந்தை சைக்கிள் பழகுகிறது. தந்தையிடம் சைக்கிள்,’பதறாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறது. அந்தப் பெண் ஞானக்கூத்தனின் ’சைக்கிள் கமலம்’ ஆக இருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ ஆக இருக்கலாம்” என்று சிவகுமாரின் கவிதையை ஞானக்கூத்தனுடனும் எஸ். ராமகிருஷ்ணனுடனும் இணைத்து அன்புடன் அழகு பார்க்கிறது கல்யாண்ஜியின் ரசனை. ”இன்று நான் சிரிக்கிறேன். நானும் ‘மனம் லேசாகிற நாட்களில்’ சிரிப்பவன் தான்.” என்று முடிகிற அந்த அணிந்துரை, இளைய தலைமுறைக்கு மூத்த தலைமுறை அளிக்கும் ஆசிர்வாதம் என வாசகர் உணரமுடியும்.
நன்றி!