Friday, April 30, 2004

பெருகிப் பாய்ந்தோடும் நகைச்சுவை தீட்சண்யம்

ஆபிதின் எழுத்துகளை அறிவதற்கு முன் அவர் பெயர் தெரியவந்து மனதில் தங்கிப் போனதுக்கு சாரு நிவேதிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எழுத்துகளைச் சாரு அவர் அனுமதியின்றித் தன் பெயரில் வெளியிட்டுக் கொண்டார் என்கிற விஷயம் புகைந்து கொண்டிருந்தபோது - அதன் மூலம் - ஆபிதின் அறிமுகமானார். அது தொடர்பான ஆவணங்களிலும், கடிதங்களிலும் ஆபிதினைப் படித்ததே அவர் எழுத்துகளுடனான என் முதல் அறிமுகம். தன் எழுத்துகள் திருடப்பட்டுவிட்ட வேதனையில் இருக்கிற ஒருவரிடம்கூட நகைச்சுவை இயல்பாகவும் கட்டற்றும் பிரவகிக்க முடியும் என்று அவர் கடிதங்களும் அதில் தென்பட்ட சுய எள்ளலும் உணர்த்தின.

அதற்கப்புறம் ஆபிதின் எழுத்துகளைப் படிக்கவும் நண்பராகச் சிலகாலமாக அறியவும் திண்ணை உதவியது. ஆபிதினின் நகைச்சுவை ரெடிமேட் ஜோக்குகள் நகைச்சுவையோ, வார்த்தை விளையாட்டு நகைச்சுவையோ, எல்லைகள் பார்த்துப் பார்த்துப் பிரிக்கப்பட்டு நேரம் எடுத்துக் கொண்டு அழகாகத் தைக்கப்பட்ட வண்ணத்துணி போன்ற நகாசு வேலை நகைச்சுவையோ இல்லை. இவர் நகைச்சுவை எந்த வரையறைகளூக்கும் உட்படாத ஓர் ஒரிஜினல் நகைச்சுவை. பெருகிப் பாயும் காட்டாற்று வெள்ளம் போன்ற தன்னிச்சையான நகைச்சுவை அது. எந்த விருப்புக்கும் வெறுப்புக்கும் அது கட்டுப்பட்டு நிற்பதில்லை. அந்த வெள்ளத்தில் தன்னையே கூட மூழ்கடித்துக் கொண்டு - சுய எள்ளல் - செய்து கொள்ள ஆபிதின் தவறுவதில்லை. இப்படி யார் மீதும் கருணை காட்டாமல், உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசாமல் - வந்ததைப் போட்டுத் தாக்குவதாலேயே அவர் நகைச்சுவை வீரியம் பெற்று வித்தியாசமாக எழுந்து நிற்கிறது. ஆனால் - தமிழில் பெரும்பாலான வாசகர்களுக்கு ஆபிதின் யாரென்று தெரியாமல் இருக்கக் கூடும். அதுதான் இங்கே நிதர்சனம் என்பதால் அதைப் பற்றிப் புலம்பி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

சமீபத்தில் எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். "சிவகுமார், எங்கே நீங்கள் எழுதுவதேயில்லை. மரத்தடியில் பிசியாகி விட்டீர்களா? வேறு பெயரில் எழுதுகிறீர்களா? பெயர் ஆபிதின் இல்லையே" என்று. தன் வாழ்வின் சோக நிகழ்ச்சியொன்றோடு இப்படி இயல்பாய் நகைச்சுவையைப் பிணைத்து எழுதுகிற ஆற்றல் எல்லாருக்கும் வந்துவிடாது. சுய எள்ளல் என்கிற பெயரில் தன்னையோ தான் சார்ந்தவர்களையோ தாழ்த்திக் கொள்ளாத ஆனால் அறிவுக் கூர்மையும் நையாண்டியும் மிகுந்த ஸ்டைல் ஆபிதினுடையது.

இந்தியாவில் - முக்கியமாகத் தமிழில் - தம் மதம் குறித்த கடுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தவறாத இந்துக்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். பெரும்பான்மையான சமூகத்தைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருப்பதால் - அத்தகைய விமர்சனங்களையும் யாரும் எதிர்மறையாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், சிறுபான்மை சமூகத்தினரிடையே தம் மதத்தின் மூடப் பழக்கங்கள், குறைகள் குறித்துப் பெரிதாக விமர்சனங்கள் வருவதில்லை. வந்தாலும் அவற்றை இந்து மதத்தை இந்துக்கள் விமர்சிப்பது போல் பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை அதிக எண்ணிக்கையில் விமர்சிப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முக்கியக் காரணம் - சிறுபான்மை சமூகத்தினராய் அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பற்று உணரக் கூடும். இச்சூழ்நிலையில் தம் மதத்தின் குறைகளைத் தானே பட்டியலிட்டால் மற்றவர்களுக்கு அது வாய்க்கரிசி போட்டதாக ஆகிவிடக் கூடும் என்று அமைதி காக்கலாம். அல்லது பிற காரணங்களும் இருக்கக் கூடும். அவற்றுள் போவதோ அவற்றை ஆராய்வதோ அப்படி இருப்பது சரியா தவறா என்று சொல்வதோ என் நோக்கமில்லை. ஆனால், அப்படி சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாட்சண்யம் காட்டாமல் தம் மதத்தின், தன் சமூகத்தின் குறைகளைச் சொல்பவர்களும் ஒத்துக் கொள்பவர்களும் பாராட்டத் தக்கவர்கள். அவர்களின் அறிவொழுக்கம் (Intellectual Honesty) தலை வணங்கத் தக்கது. அத்தகைய அறிவொழுக்கம் நிரம்பியவர் ஆபிதின் என்பதை அவர் எழுத்துகளின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.

ஆபிதின் நாத்திகவாதி இல்லை. இறை நம்பிக்கை உடையவர். பிரார்த்தனைகளுடன் - அன்பு செலுத்துதலும் சுயவிமர்சனங்களுமே நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலும் என்று உணர்ந்தவர். எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் வாசகங்கள் இன்னும் மனதில் நிற்கின்றன. "இறைநம்பிக்கைக் கொண்ட என்னைப் பொறுத்தவரை மனிதன்தான் முக்கியமானவன். இறைநம்பிக்கையும் எப்படி என்றால் அது ஒரு நல்ல குட்டிச்சுவர்; விடைதெரியாத ஆயிரம் கேள்விகளுக்கு நாம் தயாரித்த மாயாஜால பதில்கள். அவ்வளவுதான். அத்தனையும் கைவிட்டுப் போனபிறகு நாம் சாய்ந்து கொள்ள உதவுகிற இந்தத் தூண்களில் அவனவன் மாறிமாறி காறித்துப்பும்போது கவலை வருவதில் ஏதோ எழுதுகிறேன். இதில் என் சமூகத்தை விமர்சிக்கிறேன் என்றால் மற்ற சமூகத்தவர்களை விமர்சிக்க எனக்கு அருகதையில்லை என்றுதான்." இது, இதுதான் ஆபீதின்.

ஆபிதின் கதைகள் கரடுமுரடானவை போலத் தோன்றினாலும் அதனுள் ஊடுருவும் மனிதநேயத்தையும் வாழ்வின் நிதர்சனத்தையும் ஒருவர் அறிந்து கொள்ள முடியும். அவர் நகைச்சுவையின் அடியாழத்தில் விமர்சனங்கள் இருக்கும். ஆனால், எவர் மீதும் வெறுப்பு இருக்காது. எந்த நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வெடித்து நம்மை திடுக்குறச் செய்துப் பின் மகிழ வைக்கும் நகைச்சுவை அவருடையது. சூபியிஸத்தை சூப் குடிப்பதுடன் முடிச்சுப் போட்டி சிரிக்கவைக்க அவரைத் தவிர யாரால் முடியும். அவர் கதைகள் பெரும்பாலும் சுயசரிதை பாணியிலும், தன்மையிலும் (First Person narration) அமைந்துள்ளன. இது தேர்ந்த வாசகருக்குக் குறையாகத் தெரியாவண்ணம் உள்ளடக்கம் மூலமும் வரிக்கு வரி நகைச்சுவை மூலமும் ஈடு செய்துவிடுபவர் ஆபிதின். அவர் எழுத்துகளில் வலிந்து திணிக்கப்பட்டவை என்றும் எதையும் சுலபமாகக் காட்டிவிட முடியாது. அவ்வளவு வேகமும் இயல்புமானது அது.

அவர் எழுத்துகளில் வெகுளித்தனம் நிறைந்த உண்மைகள் விரியும். ஆனால், அது முற்றும் உணர்ந்த ஞானிகளின் வெகுளித்தனம் போன்றது. தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிற பாசாங்கில்லை அது. மனிதர்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்த சூட்சுமம் அது. இன்றைக்கு எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட ஓர் எழுத்தாளன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆபிதின் அறிந்து வைத்திருக்கிறார். ஆனால், அவற்றையெல்லாம் செய்து கிடைக்கிற அங்கீகாரம் வேண்டாமென்று சும்மா இருப்பதாலேயே அவர் என் மதிப்பில் இன்னும் உயர்ந்து நிற்கிறார்.

அவர் நகைச்சுவையினூடே தெரிந்த கலகக்குரல் என்னை முதலில் கவர்ந்தது. அதைப் பாராட்டி எழுதியபோது - தன் கலகம் செத்துவிட்டதாகவும் வல்லூறுகள் வட்டமிடும் வாழ்க்கையாக ஊர் ஆகிவிட்டதாகவும் அவர் எழுதியிருந்த நேர்மை எனக்குப் பிடித்துப் போனது.

ஆபிதின் போன்ற குரல்கள் எல்லா மொழியிலும், எல்லா சமூகத்திலும், எல்லா மதத்திலும் தேவை. அந்தக் குரல்கள் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உதவும். ஆபிதினை இன்ன சமூகத்தைச் சார்ந்தவர் என்று கொள்வதும்கூட ஓர் அடையாளத்துக்குத்தான். அவர் மனித குலத்துக்கான எழுத்தாளர். ஆபிதின் போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். பயமற்ற குரல்கள் எழவும் தொடரவும் அவை உதவும்.

No comments: