என்னைப் பொறுத்தவரை தீண்டத்தகாத மனிதர் என்று எவரும் இல்லை. தீண்டத்தகாத கருத்து என்றும் எதுவும் இல்லை. தீண்டத்தகாத கட்சிகள் என்றும் எதுவும் இல்லை. திராவிட இயக்கங்கள் தலையெடுக்கத் தொடங்கிய காலத்தில் அவை பொருட்படுத்தத் தகாதவை, அவற்றின் கொள்கைகளின் பலவீனத்தில் அவை வீழ்ந்துவிடும் என்று காங்கிரஸீம் கம்யூனிஸ்ட்டுகளும் காட்டிய அலட்சியத்தின் பலனை இன்றளவும் அனுபவித்து வருகிறோம். திராவிட இயக்கங்களின் கருத்துகளுக்கு உடனுக்கு உடன், பதிலுக்கு பதில் காங்கிரஸீம் கம்யூனிஸ்ட்டுகளும் பதில் சொல்லியிருப்பார்களேயானால், தமிழின் நிஜமான தொன்மையும் சிறப்பும் உணராது அடுக்கு மொழி போதுமென்று திராவிட இயக்கங்கள் ஆட்சியைப் பிடித்திருக்காது.
இதே தவறைத்தான் பாரதிய ஜனதா கட்சி விஷயத்திலும் பல கட்சிகள் செய்தன. அதை மதவாதக் கட்சியென்றும் தீண்டத்தகாத கட்சியென்றும் ஒதுக்கி வைத்தன. மனித நாகரீகத்தை எடுத்துக் கொண்டால், கிரேக்க நாகரீகத்தில் இருந்து சிந்து சமவெளி நாகரீகம் வரை மக்கள் மதங்களால் பிணைக்கப்பட்டும் ஆளுமைக்குள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். அந்த மதத்தை மக்களின் வாழ்வில் இருந்து தூர எறிந்து விடுவது இயலாத காரியம். ஆனால், அந்த மதம் குறித்துத் தெளிவான புரிதலையும் சிந்தனையையும் மக்கள் மனதில் விதைக்க முடியும். ஆனால், மதவாதத்தை எதிர்க்கிற எந்தக் கட்சியும் இந்தியாவில் இதை சிரத்தையுடன் செய்யவில்லை. அந்த மதத்தை - உணர்வுபூர்வமாக அற்ப லாபங்களுக்குப் பாரதிய ஜனதா கட்சியும் அதன் தோழமை இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்வதை - எட்ட நின்று வேடிக்கை பார்த்ததாலேயே அவ்வியக்கங்கள் இன்று செழித்து வளர்ந்திருக்கின்றன. மதத்தின் பெருமை என்று இக்கட்சிகள் சிறுமை பேசித் திரிந்தபோது காங்கிரஸீம் கம்யூனிஸ்ட்டுகளும் இன்னபிற கட்சிகளும் "உண்மையான இந்து மதம் என்பது என்ன? அம்மதத்தின் சிறப்புகளும் பலவீனங்களும் என்ன? இந்து மதம் என்பது ஒரு வழிபாட்டு முறையா அல்லது வாழ்க்கை முறையா?" என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றை விளக்கி, பா.ஜ.க.வுக்கு உடனுக்கு உடன் பதிலளித்து வந்திருந்தால், பா.ஜ.க இந்த அளவு வென்றிருக்காது. ஆனால், இந்து என்ற சொல்லைக் கேட்டதுமே மதவாதம் என்கிற அலர்ஜி கொண்டு ஒதுக்குபவர்களாகப் பிற கட்சிகள் இருந்ததாலேயே, பா.ஜ.க இரண்டு எம்.பி. சீட்டிலிருந்து அடுத்த தேர்தலில் எண்பதுக்கும் மேலான சீட்டுகளை வெல்கிற கட்சியாக வளர முடிந்தது. பின்னர் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. பா.ஜ.க.வுக்குப் பதிலாக கீதையின் உண்மையான சாரத்தையும், இந்து மதத்தின் பல்வேறு தரிசன மரபுகளையும், பௌத்தம், சமணம் ஆகியவற்றை எவ்வாறு இந்து மதம் வரவேற்று தன் பிரிவாக உள்வாங்கிக் கொண்டது என்பதையும் பிற கட்சி அரசியல்வாதிகள் விளக்கியிருந்தால், நாட்டில் பிற மதங்களால் இந்து மதத்துக்கு ஆபத்து என்கிற குறுகியவாதம் தலைதூக்கி இருக்காது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், சிவவாக்கியர், நாராயண குரு என்று எத்தனையோ மகான்களின் மொழிகளின் மூலம் மதம் குறித்து மக்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தி இருந்தாலே, இன்றைக்கு இந்துத்துவாவுக்கு எதிராக அணி சேருங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம். இப்போதும்கூட, யாரும் பா.ஜ.க.வுக்கு அதன் மதரீதியான கொள்கைகளுக்கு மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தியே அளிக்கக் கூடிய பதிலை அளிப்பதில்லை என்பது நிஜம்.
கம்யூனிஸ்ட்டுகளும் செக்குலர் நண்பர்களும் இந்தத் தவறை மட்டுமா செய்தார்கள்? இந்து மதத்தின் தொன்மையான சிறப்புகளையும் அது எப்படி பா.ஜ.க. சொல்கிற இந்து மதமில்லை என்று விளக்க முயன்றவர்களையும், இந்துத்துவா முத்திரை குத்தியும், மதவாதி என்று அழைத்தும் மகிழ்ந்தார்கள். இவர்கள் செய்ய மறந்த காரியத்தை இன்னொருவர் செய்வதும் இவர்களுக்குப் பொறுக்கவில்லை.
திராவிட இயக்கங்களின் முரட்டுத்தனமான பகுத்தறிவற்ற கடவுள் மறுப்பை எதிர்க்கிறாரா? அவர் இந்துத்துவா. பா.ஜ.க. சொல்கிற மதமில்லை இந்துமதம் என்று அதன் தொன்மையான வரலாற்றையோ சிறப்பையோ மதநல்லிணக்க மரபையோ சொல்ல விழைகிறாரா? அவர் இந்துத்துவா. இப்படிச் சொல்பவர்கள் யாரும் திரும்பி தன் முதுகையும் அதிலே தாங்கள் சுமந்து நிற்கிற மொழிவாதம், இனவாதம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பலக் கறைகளையும் பார்த்துக் கொள்ள விரும்புவதில்லை. மதம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டுக் கவலைப்பட வேண்டிய விஷயம் மனிதம் என்பதை மதம், மொழி, இனம் ஆகியவற்றின் வரலாற்றைக் கொண்டே சிறப்பாக விளக்க முடியும் என்பதை அறியாதவர்கள் இவர்கள்.
என் கேள்வி அடிப்படையானது. சரி, அவர் இந்துத்துவாவா? இருக்கட்டுமே. பிறர் பயங்கரவாதத்தையே துணிந்து ஆதரிக்கும்போது, பின்னர் பயங்கரவாதமாக பரிணமளிக்கப் போகிற மதவாதத்தை அவர் ஆதரிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமே. இந்துத்துவாவா பயங்கரவாதியா என்று முடிவு செய்ய வேண்டியது அவர்தானே. நாம் இல்லையே. எனவே, அவர் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். அவர் எதுவாக இருந்தாலும் நமக்கு இருப்பதைப் போலவே விஷயங்களில் மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்கிற உரிமை அவருக்கும் இருக்கிறதல்லவா? ஒருவரின் விருப்பு வெறுப்புக்காக அவர் சொல்கிற கருத்தைப் புறந்தள்ளுவது அறியாமை அல்லவா? அதனால், அவர் சொல்கிற கருத்தைக் கேட்போம். பின்னர், அவர் கருத்து எவ்வளவு தவறானது என்கிற வாதத்தை எடுத்து வைப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. எனக்குப் பிடிக்காததைப் பேசுகிறாயா, நீ இந்துத்துவா, நீ தமிழ்த் துரோகி. இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதனால் என்ன ஆகிறது என்றால் எதை எதிர்ப்பதாக நினைத்து அந்த நபரை நாம் தாக்குகிறோமோ, அது வளரத் துணைபோய் விடுகிறோம். பாரதிய ஜனதா விஷயத்தில் இதுதான் நடந்தது.
இதில் சமீபகாலமாக வேடிக்கை என்னவென்றால், பத்திரிகைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒவ்வொருவரும் "எதிர்பார்ப்புகள்" பட்டியல் வைத்திருக்கிறோம். நம் விருப்பத்திற்கிணங்கவும், நாம் எதிர்பார்க்கும்படியும் பத்திரிகைகளும் மனிதர்களும் இயங்கவில்லை என்றால் போட்டுத் தாக்க வேண்டியது. எதை எழுதுவது, எதை எழுதாமல் இருப்பது என்பது ஒவ்வொருவரின் சுதந்திரமும் ஆகும். அவரவர்க்கு அரித்தால் அவரவர்தான் சொறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சார்பாக நாம் சொறிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றது பிறர் விருப்பப்படுகிற விஷயங்களை மட்டும் எழுதினால்தான் நேர்மை என்று சொல்வது.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். நல்ல எழுத்தாளர் என்று அவரைச் சொல்கிறார்கள். தான் எடுத்துக் கொண்ட விஷயத்தைப் பற்றி நான்கு வாக்கியங்களாவது, தடம் புரளாது, அடுத்தவர் பற்றிய தன் வெறுப்புகளைக் கொட்டாது எழுதுவாரா என்று நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். ஊஹீம். அவ்வளவு சீக்கிரம் பிறப்புரிமையை விட்டுவிட முடியுமா என்று ஆப்பிளைப் பற்றிப் பேசப் போனால் ஆரஞ்சைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பார். ஆரஞ்சைப் பற்றிப் பேசப் போனால், திராட்சை பற்றி எழுதிக் கொண்டிருப்பார். அதனால்தான், இவரை நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை. விவாதத்தில் வைக்கப்படும் கருத்துகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சொல்பவரின் குலம், கோத்திரம் என்று பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு விஷயத்தை இவரை விடத் தவறாகவும் காரணமற்ற எதிர்மறை உணர்வோடும் யாரும் அணுகிவிட முடியாது என்று என்னை இன்றளவும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் கூட Twisted ஆக மனிதர்கள் சிந்திக்கக் கூடும் என்று எனக்குக் கற்றுத் தந்தவர் அவர்.
அடுத்தப் பெரிய நகைச்சுவை. நீங்கள் உங்கள் கருத்துக்கு ஒவ்வாத அல்லது மற்றவர் கருத்துக்கு ஒவ்வாத ஒருவருடன் நட்பு பாராட்டி விடக் கூடாது. அப்படி இருந்து விட்டால் அவ்வளவுதான். மற்றவர் கருத்துதான் உங்கள் கருத்தும் என்று தீர்க்க தரிசனமாய்ச் சொல்ல சிலர் தயாராய் இருக்கிறார்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி வருந்துவார். அவர் நாட்டைக் கேட்டதுமே ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் நினைத்து விடுகிறார்களே என்று. அதைப் போல்தான் இருக்கிறது. கருத்து வேறுபாடுகளை மீறி நட்புப் பாராட்டுவதையும் பார்த்து மனம் பொறுக்காமல் முத்திரை குத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதும். ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட தமிழருக்கு எதிரானவர் என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுவதையும் இதிலே சேர்த்துக் கொள்ளலாம்.
"... அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கையிலே நான் இந்த ஜாதீய முறைப்படி நான் தாக்கப்படவில்லை. நான் தாக்கப்படாமல் இருக்கக் கூடிய ஒரு நிலையில் நான் தாக்கப்படுகிறேன் என்று சொல்லிக் குரலிடுவது சரியில்லை."
"... என்னுடைய அம்மா அப்பா அனுபவித்தத் துயர்களையாவது நீ எழுதியிருக்கலாம்; ஆனால் நீ அதைக் கூட மறந்துவிட்டாய் என்று சொல்கிறீர்கள்? ஏன் என்மீது அதைத் திணிக்கிறீர்கள்? ஒரு படைப்பாளி என்ற அளவில், will your not give me the freedom to choose what I want to write?"
"... வன்னியிலே நடக்கிற போராட்டத்தை நான் என் படைப்பிலே கொண்டுவரவில்லை. அதிலிருந்து விலகி ஓடிய மனிதன் என்று கூட இப்போது வன்னியில் வாழ்கிற போராளிகளும் எழுத்தாளர்களும் சொல்லலாம். சொல்வது நியாயம். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் அனுபவத்திற்கு அன்னியமானதை நான் எப்போதும் எழுத மாட்டேன். இதை நான் நெடுகச் சொல்லி வந்திருக்கிறேன்."
மேற்கண்ட வாசகங்கள், பிரபல இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுதுரை, திசைகள் இணைய இதழுக்கு அளித்த நேர்முகத்தில் சொல்லியவை. வேறு யாரேனும் இதையே சொல்லியிருந்தால் அவர்க்கு இந்துத்துவா பட்டமும், தமிழ்த் துரோகி பட்டமும் கொடுக்கத் தயாராய் ஒரு கூட்டம் நிற்கலாம். எஸ்.பொ. சொல்லியிருப்பதால் அவர் கருத்தின் நியாயத்தை உணர்பவர்கள், அதே நியாயத்தை மற்றவர்களுக்கும் தருவார்கள் என்று நம்புவோம்.
மாற்றுக் கருத்துகளை மதிக்காமல் மற்றவர்கள் பால் வெறுப்பை வளர்ப்போர் ஒரு சூழலின் சுமூகத்திற்கு எதிரானவர்கள். யாரும் யாரையும் திருத்திவிட முடியாது. கருத்துகளை எவ்வளவு உணர்வுபூர்வமாகவும் ஆவேசமாகவும் வைக்கிறோமோ அந்த அளவுக்கு முக்கியமானது, கருத்து மோதல்களைத் தனிப்பட்ட விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. அப்படிப்பட்ட இடத்தில், அடுத்தவர் சொல்கிற கருத்தைக் கூட பொறுமையாக கருத்து ரீதியாக மறுத்து சொல்ல முடியும். அப்படிச் செய்யாதவர்கள், மாற்றுக் கருத்தை விட வார்த்தை வன்முறையில் நம்பிக்கை உடையவர்கள். தர்க்கத்தின் மூலமும் வரலாற்றை மேற்கோள் காட்டுவதன் மூலமோ நாம் அபிமானம் கொண்டுள்ள கருத்தாக்கம் வெல்ல இயலாது என்று உணர்ந்தவர்கள். அதை மறைக்க வார்த்தைகளை வாரி இறைப்பவர்கள். இவர்களுக்கும் மதவாதம் பேசுபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஏனெனில் இருவருமே பொறுமையற்றவர்கள், அடுத்தவர் கருத்தை மதிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் ஜனநாயகம் என்று வாய்கிழியப் பேசினாலும், ஜனநாயகத்தின் எதிரிகள். தம் வீட்டில் தன் குடும்பத்தினரிடமும் உறவினரிடமும்கூட இவர்கள் இப்படிப்பட்ட வெறுப்பை தேவைப்பட்டால் வளர்த்துக் கொள்வார்கள். நமக்கு இன்றைய தேவை, பல்வேறு கருத்தாக்கங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து, ஆரோக்கியமாக விவாதித்து, அறம் சார்ந்தும் வாழ்வின் சிறப்பியல் நோக்கு சார்ந்தும் விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான சுற்றமும் நட்புமே தவிர, வெறுப்பை வளர்க்கிற வெட்டிப் பேச்சுகள் இல்லை. எனவே, இத்தகைய சூழலைக் கெடுப்பவரைக் எதிர்கொண்டு அவர்களின் முகத்திரையைக் கிழிப்பது மட்டுமே நமது கடமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், திராவிட இயக்கங்கள், பா.ஜ.க ஆகியவற்றின் விஷயத்தில் செய்யப்பட்ட தவறுகளே திரும்பவும் நிகழும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment