Tuesday, May 04, 2004

ரவி ஸ்ரீனிவாஸீக்கு...

ரவி ஸ்ரீனிவாஸ், என் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி - அவற்றுடன் நான் முரண்படுகிறேன் என்றபோதினும். ஆனாலும், உங்கள் கமெண்ட்டில் ஒரு பிழை இருக்கிறது. காடு நாவலைப் படிக்காமலேயே அதை விமர்சித்துக் காட்டமாகத் தாங்கள் எழுதியதுபோல (இதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்று சொல்கிறீர்களா என்று தெரியவில்லை!), உண்மை தெரியாமல் என் மீது குற்றம் சுமத்தியிருக்கிறீர்கள். நான் என்றைக்கும் மரத்தடி யாஹீ குழுமத்தில் மாடரேட்டராகவோ ஓனராகவோ இருந்ததில்லை. இன்றுவரை உறுப்பினர்தான். எனவே, உண்மைகளைச் சரிபார்த்த பின் குற்றச்சாட்டுகளை வீசுங்கள். இல்லையென்றால், நீங்கள் மற்றவர்களை காமெடியன் என்று எழுதுவது போய், மற்றவர்கள் உங்களை எழுதிவிடக் கூடும்.

கருத்துச் சுதந்திரத்துக்கு என் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் நான் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன் என்பதற்கு என் எழுத்தும் செயல்களூமே சாட்சி. ஓர் எழுத்தாளரைப் பிடிக்கவில்லை என்பதற்காக, அவர் எழுதுவதையெல்லாம் துரத்தி துரத்தி அடித்து என் தனிப்பட்ட வெறுப்பை நான் காட்டிக் கொள்வதில்லை. மரத்தடி யாஹீ குழுமத்தில் நானும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற Ask the Author நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஜெயமோகனை விட்டுவிடுவோம். அவர் சொல்வதையே நான் சொல்கிறேன் என்று நீங்கள் கண்டுபிடித்திருக்கிறபடியால். மற்றபடிக்கு மனுஷ்ய புத்திரன் மற்றும் ஞாநி ஆகியோரின் இலக்கிய அரசியல் கோட்பாடுகளுடன் நான் கடுமையாக முரண்படும் இடங்கள் உண்டு. பெரியார் பற்றிய உயர்ந்த மதிப்பீடு வைத்திருப்பவர் ஞாநி. பெரியார் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. சுந்தர ராமசாமியின் இலக்கியக் கொள்கையின் பெரும்பகுதியை மனுஷ்ய புத்திரன் ஏற்றுக் கொள்கிறார். அதிலே எனக்குக் கேள்விகளும் உடன்படாத இடங்களும் நிறைய இருக்கின்றன. ஆனாலும், அவர்களை மரத்தடிக்கு விருந்தினர்களாக அழைத்து வந்து தங்கள் கருத்துகளைச் சொல்ல வைத்திருக்கிறேன். மரத்தடியிலும் உறுப்பினர் யாரும் எதைப் பற்றியும் பேசக் கூடாது என்று நான் சொன்னதில்லை. எனக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்கள் நான் உறுப்பினராக இருக்கிற குழுக்களிலும், வாசிக்கிற பத்திரிகைகளிலும் நடக்கின்றன. அதற்காக யாரையும் கருத்துச் சுதந்திரத்தை நிரூபி என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

எனக்குப் பிடித்தவர்கள் என்றால் ஜெயகாந்தன் எழுத்துகளை மட்டுமே இணையத்தில் தட்டச்சு செய்து போட்டிருக்க வேண்டும். ஆனால், உங்கள் நண்பரும் நான் முழுதும் உடன்படாவிட்டாலும் பெரிதும் மதிக்கிற - தத்துவக் கோட்பாடுகள் குறித்து எனதுப் புரிதலுக்குத் தன் நூல்கள் மூலம் உதவிய கோவை ஞானியிலிருந்து, கனிமொழி கருணாநிதி படைப்புகள் வரைச் சொந்தமாகத் தட்டச்சு செய்து இணையத்தில் பிறர் பார்வைக்கு வைத்திருக்கிறேன். திண்ணை நண்பர் ராஜாராம் கூட பெரியாரைத் தமிழ்நாட்டின் தாமஸ் பெய்ன் என்று நினைப்பவர். அவருடனும் எனக்கு அது குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயினும், அவற்றைமீறி அவரும் நண்பரே.

ஒரு கொள்கைமீதோ தனிமனிதர்மீதோ ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வைப்பதை நான் விரும்புகிறேன். ஒரு வறட்டுத் தத்துவவாதியாகப், புத்தகப் புழுவாக என் அறிவையும் வாசிப்பையும் பிறர் மீது ஏற்றிப் பார்த்து எவரையும் எள்ளி நகையாடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதுதான் கருத்துச் சுதந்திரம் என்று தாங்கள் நினைப்பீர்களேயானால், உங்களுக்கு மேன்மைகள் உண்டாகப் பிரார்த்திக்கிறேன்.

நீங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர் என்று உங்களைப் பற்றி ஒன்றும் அறியாமல் என்னால் உங்களைப் போல் குற்றம் சாட்டிவிடமுடியாது. ஆனால், கருத்துச் சுதந்திரத்தை மதிக்கவும் போற்றவும் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன். தெரிந்து கொள்கிறேன். உங்கள் திண்ணை கட்டுரைகளும், ஜெயமோகன் மீது நீங்கள் காட்டுகிற தனிப்பட்ட துவேஷமும், கருத்துச் சுதந்திரம் பற்றி நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்பதை அறியத் தூண்டுகிறது.

அப்புறம் - பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியில்லை என்று ஜெயமோகனுக்கு முன் கம்யூனிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்த நண்பர் ரங்கராஜன் குமாரமங்கலம்தான் முதலில் சொன்னார். மேலும் - பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று ஜெயலலிதாவுக்கு முதலில் ஆலோசனை சொன்னவர் வை.கோபால்சாமி. பின்னர் கருணாநிதியும் கூட்டு வைத்துக் கொண்டார் என்பதும் உண்மை. ஜெயமோகன் மீது இருக்கிற வெறுப்பில், மற்றவர்க்குச் சேர வேண்டிய பெயரை எல்லாம் அவர்க்குக் கொடுத்து வருகிறீர்களோ என்று தோன்றுகிறது.

நன்றி!.

பி.கு: கமெண்ட்டில் இதை முழுமையாகப் போடும் வசதி இல்லாததால், இங்கே கட்டுரையாக இடுகிறேன்.

No comments: