Tuesday, May 04, 2004

பாரதியின் வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு

நண்பர் சுந்தரவடிவேல் பாரதியார் "வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு" பாடியது ஏன் என்று சில நாள்களுக்கு முன் என் பதிவு ஒன்றின் கருத்துகள் பகுதியில் கேட்டிருந்தார். தேடிப் பார்த்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

சீனி.விசுவநாதன் பதிப்பித்த காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - முதல் தொகுப்பிலே விவரங்கள் உள்ளன. அவையாவன:

நவம்பர் 1905-ல் "சக்ரவர்த்தினி" இதழில் பாரதியார் "வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும்" என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே இவ்வாறு கூறுகிறார்: "எதிர்காலத்தில் இந்தியாவின் சக்ரவர்த்தியாகப் பட்டம் வகிக்கப் போகின்ற இந்த இளவரசர் இந்த தேச முழுவதிலும் யாத்திரை புரிந்து, இத்தேசத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற சிறந்த எண்ணத்துடன் வந்திருக்கின்றா ராதலால், அன்றைய தினம் எமது பாரத மாதா (இந்திய நாடு) தனக்கேற்பட்டிருக்கும் பல துன்பங்களையும் சிறிது மறந்து, மந்தஹாஸம் பூண்டு, இளவரசருக்கும் அவர் மனைவிக்கும் நல்வரவு கூறினாள்."

பதிப்பாசிரியர் குறிப்பாக இக்கட்டுரைக்குப் பின்னர் சீனி.விசுவநாதன் பின்வருமாறு எழுதுகிறார்:

"வேல்ஸ் இளவரசர் வருகையால் இந்தியாவிற்கு ஏதேனும் ஒருவகையில் நல்லது நடக்கும் என்று, இந்திய நாட்டுத் தலைவர்களில் ஒருசிலரும், காங்கிரஸ் ஜன சபையாரும் கருதினர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அதுபோது செல்வாக்குள்ள பத்திரிகையாளராகவும், சுதேசியச் சிந்தனைகளில் ஊறித் திளைத்தவராகவும் திகழ்ந்தவர் திரு.ஜி.சுப்பிரமணிய ஐயர்தாம்.

ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவர்தம் 'சுதேச மித்திரன்' பத்திரிகையும் வேல்ஸ் இளவரசரின் இந்திய விஜயம் பயன்தரும் என நம்பியதால், இளவரசருக்கு உபசரணை செய்ய முன்வந்ததில் யாரும் குற்றம் காணவில்லை.

பாரதியும் அச்சமயம் 'சுதேச மித்திரன்' தினப்பத்திரிகையில் துணை ஆசிரியராகவும், 'சக்ரவர்த்தினி' மாதப் பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

மற்ற தேசியத் தலைவர்களைப் போலவே பாரதியும் இந்தியர் தம் மன வருத்தங்களை மறந்து வேல்ஸ் இளவரசரை வரவேற்பதிலே தவறேதும் கிடையாது என்றே கருதினார்.

கருதிய அளவில் பாரதி வேல்ஸ் தம்பதியருக்கு நல்வரவு கூறினார்; அதுவும் பாரதமாதாவே தனக்கு ஏற்பட்டிருக்கும் பல துன்பங்களைச் சிறிது மறந்து மகிழ்ச்சியுடன் நல்வரவு கூறினாள் என்று எழுதியது பாரதியின் எழுதுகோல்.

வரவேற்பு உபசரணைகளையும், வாண வேடிக்கை வீண்செலவுகளையும் குறைத்துக் கொண்டு நிரந்தரமாகப் பெண்களுக்கென ஓர் பள்ளி சென்னை நகரிலே ஏற்படவேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார் பாரதி என்பதைக் இக்கட்டுரை மூலம் அறியலாம்."

1906 ஜனவரி 'சக்ரவர்த்தினி' இதழிலும் "சென்னையில் ராஜ தம்பதிகள் வரவு" என்ற தலைப்பில் பாரதியார் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நவம்பர் 1905-ல் இதழில் பாரதி எழுதியக் கட்டுரையுடன் தொடர்புப் படுத்தியே இக்கட்டுரையையும் அணுக வேண்டும் என்று பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன் எழுதியிருக்கிறார்.

பின்னர் 29-01-1906 அன்று "சுதேச மித்திரனில்" - "வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்" என்கிற பாரதியின் கவிதை பிரசுரமாயிற்று.

இது குறித்து சீனி.விசுவநாதன் பின்வருமாறு எழுதுகிறார்:

"வேல்ஸ் இளவரசர் வருகையை யொட்டிப் பற்பலர் இனிய பாடல்களை இயற்றி மகிழ்ந்தனர். 'சக்ரவர்த்தினி' பத்திரிகையில் வெளியிடப் பூவை கலியாண சுந்தர முதலியார், பண்டித வெங்கட்ட ராமையங்கார், பண்டித அசலாம்பிகை அம்மையார் போன்றோர் செய்யுள்களை எழுதி அனுப்பியும் வைத்திருந்தனர்.

ஆனால், பெண்மணி ஒருவர் எழுதிய பாடலை பெண்பாலாருக்கான பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்கிற காரணத்தால், பண்டித அசலாம்பிகை அம்மையின் பாடலைச் சக்ரவர்த்தினியில் பிரசுரம் செய்தார் பாரதி.

தம்மால் எழுதப்பட்ட பாடலைப் பாரதி "சுதேச மித்திரன்" பத்திரிகையில் பதிப்பிக்கச் செய்தார்."

மேற்கண்டவற்றிலிருந்து "தனக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் மறந்து, ராஜ தம்பதிகளை வரவேற்கும் பான்மையில் தன் பாடலை பாரதி எழுதியதையும், பாரத மாதாவே தமக்கிட்ட ஆணையாகக் கொண்டு பாடலைப் புனைந்து, பத்திரிகையிலே பாரதி பதிப்பித்து மகிழ்ந்ததையும் அறிய முடியும்" என்று சீனி.விசுவநாதன் நிறுவுகிறார்.

நன்றி: கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - முதல் தொகுதி - பதிப்பாசிரியர்: சீனி. விசுவநாதன் - 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035.

No comments: