மரத்தடி நண்பர்களின் கேள்விகளுக்கு மனுஷ்ய புத்திரன் பதிலளித்து வருகிறார். அவர் பதில்களில் ஒருவரியைக் குறிப்பிட்டு இக்கட்டுரையைத் தொடங்குவது பேசுகிற விஷயத்தின் நடுப்புள்ளிக்கு நேரடியாக வர உதவக் கூடும். தமிழில் "ஜெயகாந்தனின் கட்டுரைகள் பயமற்ற குரலை" வெளிப்படுத்தின என்கிறார் மனுஷ்ய புத்திரன். இதில் உண்மையிருக்கிறது. [மேலும், இலக்கியத் தரமான non-fictionsஐத் தமிழில் தொடங்கி வைத்தவர் ஜெயகாந்தன் என்றும் நான் நம்புகிறேன்.]
ஜெயகாந்தனின் கட்டுரைகள் பயமற்ற குரலை தமிழில் வெளிப்படுத்தியது என்றால், பயமற்ற சிந்தனைகளை இணையத்தில் வெளிப்படுத்தக் காரணமாய் இருந்ததும் இருந்து வருவதும் திண்ணை இணையதளம் என்று நான் சொல்லுவேன்.
"தமிழின் மிக முக்கியமான விவாதங்களுக்குத் திண்ணை களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சிறு பத்திரிகைகளும் சரி, பெரும்பத்திரிகைகளும் சரி தொடத் தயங்குகிற விவாதப் பொருட்கள் திண்ணையில் விவாதிக்கப் பட்டுள்ளன. இப்படி விவாதத்தளத்தை விரிவு படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதில் பங்குபெறுவோரின் விரிவாழத்தினைப் பொறுத்தது. இப்படிப் பட்ட விவாதங்களின் தீவிரம் சிலருக்குச் சங்கடம் அளிக்கிறது என்றால் அதுவும் கூட விவாதத்தின் எதிர்பார்க்கப் பட்ட ஒரு விளைவு தான். விவாதங்களின் உண்மையை மனதில் இருத்தி புதிய சிந்தனைகளுக்குத் தடையற்ற ஒரு மனப் பாங்கை உருவாக்குவது தான் நம்மைச் செழுமைப்படுத்திக் கொள்ள உதவுமே அல்லாமல், முன்செல்ல இயலாத இறுகிய சிந்தனைகள் தேக்கத்திற்கே வழிவகுக்கும்." என்று திண்ணை ஆசிரியர் குழு எழுதியிருப்பது மிகைப்படுத்தலோ சுயதம்பட்டமோ இல்லையென்றே நான் நம்புகிறேன்.
விவாதக்களத்தை விரிவுப் படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதில் பங்கு பெறுவோரின் விரிவாழத்தினைப் பொறுத்தது என்பதை உணர்ந்து கொண்டால் திண்ணை வம்புப் பத்திரிகையாகத் தோன்றாது. திண்ணை விவாதங்களில் நான் கூட "ஜாதி வெறியன்" என்று விளிக்கப்பட்டிருக்கிறேன். பொதுவில் எழுதத் தொடங்கிய பின் அவப்பெயர்களுக்கு அஞ்சக் கூடாது. வசைகளை ஒதுக்கிவிட்டு விருப்பம் இருக்குமானால் கருத்துகளுக்கு பதில் சொல்ல முயல்வது விவாதங்களில் சரியான வழியாக இருக்கும். அதனால் வசை பாடுபவர்பாலும், வசையைப் பிரசுரித்து விட்டது என்று திண்ணையின் பாலும் எனக்கு வருத்தம் உண்டாகவில்லை.
பன்னிரண்டு இதழ்களை நடத்திவிட்டு சாதனைப் பட்டியல் வெளியிட்டுக் கொள்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். இதிலே நான்கு வருடங்களுக்கும் மேலாக எவருக்கும் விசேட சலுகைகள் தராமல் எல்லாரையும் சமமாக பாவிக்க முயன்று வந்திருக்கிற திண்ணை தன் சாதனைகளைச் சுயதம்பட்டம் செய்து கொள்வதில் தவறில்லை. தகுதியற்றவை ஊர்வலம் வந்து கொண்டிருக்கிற வாழ்வில், தகுதியானவை சிலநேரம் தம்பட்டம் அடித்துக் கொண்டுதான் இருப்பைச் சொல்லவும் செய்ததை நிலைநாட்டவும் நேரிடுகிறது. அதற்காக வருத்தப்பட வேண்டியது, தகுதியற்றவற்றைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்களே.
கதை, கவிதைகள் அல்லாமல் அறிவியல், மானுடவியல், மொழிபெயர்ப்பு, நடப்புச் செய்திகள், விமர்சனங்கள் என்று திண்ணை அளவுக்கு ஆழமாகவும் அறியாப் பிரதேசங்களைத் தொட்டும் எழுதப்பட்ட கட்டுரைகளை வெளியிட்ட இன்னொரு தமிழ் இணைய இதழைத் தேடவேண்டும் என்பது திண்ணையின் சிறப்புகளில் ஒன்று.
எவ்வளவு பிழையாக எழுதினாலும் திண்ணை பிரசுரித்து விடுகிறது என்று ஒருவர் எழுதியிருந்ததைப் படித்த ஞாபகம். சொன்னவர் எழுத்துப் பிழையைச் சொல்கிறாரா கருத்துப் பிழையைச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. மாற்றுக் கருத்துகளைப் பிழையென்று அழைக்கிற வழக்கம் நம்மில் சிலரிடம் வேரூன்றியிருக்கிறது. எழுத்துப் பிழையென்று வைத்துக் கொண்டால், எழுதுபவர்க்கே அது குறித்த பிரக்ஞை இல்லையென்றால், பிரசுரிப்பவர் ஏன் அதைக் குறித்து முயற்சி எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை லென்ஸ் வைத்துத் தேடுவது மலையேறி விட்டது. சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், தலித்துகள் ஆகியோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள், மேட்டுக்குடிகள் ஆகியோர் எழுதுவதை மட்டுமே ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டி வரும்.
கவிதை என்று வருகிற அனைத்தையும் திண்ணை பிரசுரித்து விடுகிறது என்றும் படித்த ஞாபகம். "சிறியோரை இகழ்தலும் இலமே" என்கிற வரிக்கேற்ப அனைவரின் எழுத்துக்கும் திண்ணை சம-மரியாதை தருவதாக நான் எடுத்துக் கொண்டேன். புகழ் பெற்றவர்கள், நன்றாக எழுதுபவர்கள் ஆகியோர் மட்டுமே எழுதுபவற்றைப் பிரசுரிக்க எண்ணிக்கையிலடங்காதப் பத்திரிகைகள் இருக்கின்றன. புதிதாக எழுதுபவர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்து உற்சாகப்படுத்த இணையத்தில் தோன்றிய முதல் இதழ் திண்ணை. கடைந்தெடுத்த கடை மனிதனுக்கும் அவன் கருத்துகள் அவனளவில் முக்கியமானவை என்பதை உணர்ந்து அவற்றுக்கு முடிந்த அளவு இடம் கொடுத்து வருகிற பத்திரிகையாகவே திண்ணையை நான் பார்க்கிறேன்.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு சித்தாந்தமும் குழுவும் இருக்கிறது. இது தமிழனின் துரதிர்ஷ்டம். அந்தப் பத்திரிகையில் அவர்கள் விரும்புவதை மட்டுமே விளக்கமாகப் போடுவார்கள். மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற Level Playing Field ஆகத் திண்ணை இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அறிதலின் மூன்று முறைகளாக தியானம், கற்பனை, தர்க்கம் ஆகியவற்றை ஜெயமோகன் "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்களில்" குறிப்பிட்டிருந்தார். விவாதங்களினால் பயனில்லை; பாயிண்ட் பாயிண்டாகப் பேசி எதைச் சாதிக்கப் போகிறோம் என்றும் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்திய ஞான மரபின் வழிவழி வந்த முறையே தர்க்கங்களின் மூலம் கற்றுக் கொள்வது என்றும் ஜெயமோகன் சுட்டியிருந்தார். ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கிடையே நடந்த அறிவுபூர்வமான உரையாடல்களும் விவாதங்களே என்று விரிவாக தர்க்கத்தின் நன்மைகளை ஜெயமோகன் எழுதியிருந்தார். அதை வைத்துப் பார்க்கும்போது, விவாதங்களை வேண்டாம் என்று சொல்பவர்களூம், வம்புக்கும் வாசக சுவாரஸ்யத்துக்கும் சண்டைகளை வளர்ப்பது விவாதம் என்று நினைப்பவர்களூம் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
திண்ணையில் பிரசுரமாகும் கருத்துகளில் பலவும் எனக்கு உடன்பாடு இல்லாதவை; விவாதங்களில் வெளிப்படும் தொனியும் மொழியும் எனக்குச் சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. என்னைப் போலவே பிறரும் நினைக்கக் கூடும். ஆனால், மாற்றுக் கருத்துகளை விரிவாக அறிந்து கொள்ளவும், விவாதங்களில் எவ்வாறெல்லாம் சறுக்காமல் இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளவும் எனக்கு அவை உதவியிருக்கின்றன. இதனாலெல்லாம் திண்ணையை வம்புப் பத்திரிகை என்று யாரேனும் சொல்வோமேயானால், அது உணர்ச்சி வசப்பட்ட அகவயமான அபிப்பிராயமாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரவர்க்குப் பிடித்தமானதைப் பிரசுரித்தால் மட்டுமே இலக்கியப் பத்திரிகை என்கிற பெயர் திண்ணைக்குக் கிடைக்குமானால், வாசக சுவாரஸ்யத்துக்காக வம்புச் சண்டைகளை வளர்ப்பதை இயல்பாகக் கொண்ட இணைய இதழ் என்ற பெயரைத் திண்ணை வாங்குவதையே என்னைப் போன்ற வாசகர்கள் விரும்புவர்.
ஒரு முரண்-நகையைக் கவனித்திருக்கிறேன். திண்ணையைக் காரமாக விமர்சிப்பவர்கள் தேவை ஏற்படும்போது தம் படைப்புகளைப் பிரசுரிக்கவோ, புத்தக விளம்பரத்துக்காகவோ, அறிவிப்புகளை வெளியிடவோ திண்ணையைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. எனவே, அடுத்தவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் புறக்கணிக்க இயலாத சக்தியாக திண்ணை விளங்குகிறது என்பதை வாசகர் இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பின்நவீனத்துவம் சொல்கிற கலகக் குரலையும் கட்டுடைத்தலையும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். திண்ணை அதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறதோ என்று அதில் வெளிவரும் பல படைப்புகளை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியிருக்கிறது.
இணைய இதழ்கள் பெரும்பாலும் பத்திரிகைத் துறையில் அனுபவமற்றவர்களால் நடத்தப்படுகின்றன. அதனால் அவற்றில் குறைகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள். பிற இணைய இதழ்களைப் பற்றி விரிவாக நான் அறியேன். ஆனால், தொடர்ந்து திண்ணையைப் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். திண்ணையின் சிறப்பே அது பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களால் நடத்தப்படாததுதான் என்று தோன்றுகிறது. அதனாலேயே, வழக்கமான பத்திரிகைகள் செய்கிற சமரசங்கள், தகிடுதத்தங்கள், எடிட்டிங் ஆகியவற்றைச் செய்யாமல் விமர்சனத்துக்கு ஆளாகிறது என்று தோன்றுகிறது. பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர்கள் நடத்தியிருந்தால் திண்ணை பத்தோடு பதினொன்றாக அறியப்பட்டிருக்கும். அதன் சாதனைகள் ஈட்டப்பட்டிருக்கா என்று நான் நினைக்கிறேன்.
திண்ணையிடம் குறைகள் உள்ளன. வடிவமைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும். தேடுதல் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். சிலநேரங்களில் சில கட்டுரைகளின் வரம்பு மீறியச் சொற்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டுப் பின்னர் வருத்தம் தெரிவிக்கிறார்கள். நியாயப்படுத்தாமல் வருத்தம் தெரிவிப்பதற்குப் பாராட்டலாம். ஆனாலும், சும்மாக் கிடைத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாது என்பதுமாதிரி, இச்சிறுசிறு குறைகள் திண்ணையின் சாதனைகளுடன் ஒப்பிடும்போது பொறுத்துக் கொள்ளத் தக்கவையே. திண்ணையில் வாசகனாய் நான் கற்றதும் பெற்றதும் அதிகம் என்பதை என் அனுபவத்தினூடே நான் சொல்ல முடியும். அது திண்ணையின்பால் உண்டாகிற எந்த எரிச்சலையும் வருத்தத்தையும் புறந்தள்ளி திண்ணையை வாழ்த்தச் சொல்கிறது.
எனவே, திண்ணை தன் பயணத்தைத் தொடர வேண்டும். தமிழில் திண்ணை போன்ற பத்திரிகைகளின் இருப்பும் இடமும் போலிகள் நிஜவேடம் போடும் நவீன வாழ்வில் அவசியமானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment