Sunday, April 25, 2004

தொல்லைகாட்சித் தொடர்கள்

தமிழ்த் தொலைகாட்சிகளின் மெகாசீரியல்கள் தமிழர்களின் ஆயுளை விழுங்கிக் கொண்டிருக்கின்றன எனலாம். சன் டிவியில் சீரியல்கள் பக்கமே எங்கள் வீட்டில் யாரும் போவதில்லை. வேறு சில நிகழ்ச்சிகளை என் குடும்பத்தினரும் நானும் தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஆனாலும், தமிழ் தொலைகாட்சித் தொடர்கள் இங்கும் பிரபலம்தான். அதைப் பார்த்துவிட்டுத் தூங்கப் போகிறவர்களையும், பார்க்க முடியாவிட்டால் ரெகார்ட் செய்து பின்னர் பார்ப்பவர்களையும் நான் அறிவேன். தமிழர்கள் சந்திக்கிற இடங்களில் பேசப்படுகிற விஷயங்களில் தமிழ்த் தொலைகாட்சித் தொடர்களும் ஒன்று. பீட்ஸாவும் அமெரிக்க கலாசாரமும் தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்குப் பதிலாக தமிழ்த் தொலைகாட்சி அமெரிக்காவில் மெகாசீரியல்களைப் பரப்பிப் பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். எப்போதாவது சேனல்களை மாற்றும்போதோ என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று சில நிமிடங்கள் பார்க்கும்போதோ கிடைக்கிற தொலைகாட்சித் தொடர்கள் படு திராபையாக உள்ளன. நடிப்பு, செட், கதை, வசனம், இயக்கம் அனைத்தும் மேடை நாடகங்களின் தொனியிலும், அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கின்றன. பக்தி மணம் கமழவிட்டு பார்ப்பவரை சாமியாட வைக்கிற சீரியல்கள் இன்னமும் வருகின்றன. மணல் பரப்பில் தொலைந்துபோன குண்டுமணி போல ஓரிரண்டு நல்ல அல்லது சுமாரான தொடர்களும் இருக்கக் கூடும். என்னுடைய அதிர்ஷ்டம் என் பார்வையில் அவை இதுவரை சிக்கவில்லை.

சில பிற இந்திய மொழித் தொலைகாட்சிகள் அமெரிக்காவில் வாழ்கிற அம்மொழி பேசுபவர்க்கென்று தனியே நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புகின்றன. சன் டிவி இதுவரை தமிழ்நாட்டில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளையே அப்படியே தருகிறது. இது இங்கே இருக்கிற தமிழர்களுக்குப் பெரிய குறையாக இன்னும் தெரியவில்லை எனலாம். சினிமா தொடர்பான ஒளிபரப்புகள் அல்லது மெகாசீரியல்கள் இரண்டும் இருக்கும் போது வேறு என்ன வித்தியாசமாக வேண்டும் தமிழர்களுக்கு. இடையிடையே சில நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. எல்லாமே மோசமாக எங்கும் இருந்துவிட முடியாது அல்லவா?

தொலைகாட்சித் தொடர்களைப் பார்க்கும்போது - அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் இருந்து நம்மவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறையவே இருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மாந்தரை அமெரிக்காவில் படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் என்று காட்டுவதில் மட்டுமே திருப்தியடைந்து விடுகிறார்கள் நம் திரைப்பட மற்றும் தொடர் இயக்குனர்கள். பீட்ஸா, ஷாப்பிங் மால், அமெரிக்க பிராண்ட் உடைகள், இன்னபிற அமெரிக்க நவநாகரீகங்கள் என்று அமெரிக்கர்களாய் வாழ விரும்புகிற தமிழ்ச் சமூகம் (இதில் என்னைப் பொருத்தவரை தவறேதுமில்லை!) இங்கே இருக்கிற sitcom-களிலிருந்து உருப்படியாகக் கற்றுக் கொண்டு தொலைகாட்சித் தொடர்களின் தரத்தை உயர்த்தலாம்.

1970க்குப் பிறகு அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுவன என்று ஒரு பட்டியலைப் படித்தேன். அவை, 1. தொடர்கள் நகைச்சுவை நிரம்பியவாக மட்டும் இல்லாமல், கருத்தளவில் முக்கியமானவையாகவும் இருக்க வேண்டும். 2. சர்ச்சைக்குரிய பொருளைப் பற்றிப் பேச வேண்டும். 3. சமூக முன்னேற்றத்தை - வாழ்க்கையில், கலாசாரத்தில், நாகரீகத்தில், மதிப்பீடுகளில், பொருளாதாரத்தில், அரசியலில் என்று பலவகையான நடைமுறை சமூகப் போக்குகளை - ஆவணப்படுத்துவதாக இருக்க வேண்டும். 4. அவற்றில் அங்கதம் (sattire) இருக்க வேண்டும். 5. அவற்றிற்கு ஒரு நோக்கம் (mission) இருக்க வேண்டும் - எதைப் பற்றியாவது அவை பேச வேண்டும் - அல்லது எதைப்பற்றியும் பேசப்போவதில்லை என்கிற ஒன்றைப் பற்றியாவது பேச வேண்டும் - Seinfeld போல.

அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுகிற விஷயங்களை தொலைகாட்சிகளும் அவற்றின் தொடர் இயக்குனர்களும் இந்த அளவிற்கு அறிந்து வைத்திருந்தது படிக்கும்போது ஆச்சரியமளிக்கவில்லை. பார்ப்பவர்களை ஓ போட்டு ரசிக்க வைத்து பணம் பண்ணுகிற நேர்த்தியான வழிகளை அமெரிக்கத் தொழில்முனைவோர்க்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. தமிழ் தொலைகாட்சித் தொடர்களுக்கு இந்த மாதிரி ஏதும் பொதுவான கூறுகள் இருக்கின்றனவா அல்லது இருக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டும். இல்லையென்றால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு "உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக" என்று கத்திக் கொண்டு, நம்மை நாமே தட்டிப் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

No comments: