Sunday, April 25, 2004

பார்ன்ஸ் & நோபள் பரவசம்

என் குழந்தைகளின் ஆர்வத்திற்கிணங்க நான் இப்போது அடிக்கடி செல்கிற இடம் பார்ன்ஸ் & நோபள் (Barnes & Noble) புத்தகக் கடை. இங்கே புத்தகக் கடைகள் இன்னுமோர் நூல் நிலையமாக (library) செயல்பட்டு உதவி புரிகின்றன. கடைக்குள் சென்று உங்களுக்குப் பிடித்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து -எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் தேடி எடுத்துத் தந்து உதவுகிறார்கள் - எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கேயே படித்துவிட்டு வரலாம். நேற்றுப் புதிதாய் வந்த புத்தகத்திலிருந்து எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் இப்படிப் படிக்கலாம். குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களும் ஆய்வாளர்களும் நோட்டுப் புத்தகத்துடனும் லாப் டாப் கம்ப்யூட்டர்களுடனும் உட்கார்ந்து மும்முரமாய்ப் படித்துக் கொண்டிருப்பதை எந்நேரமும் காணலாம். எந்தத் துறையிலும் புதிதாக வந்திருக்கிற புத்தகங்கள் பொது நூல் நிலையங்களுக்கு வர சில நாள்கள், வாரங்கள் ஆகும். ஆனால், அத்தகைய புத்தகங்களைக் கூட இங்கே அமர்ந்து இலவசமாகப் படிக்க இயலும் என்பதால் இது நூல் நிலையத்தைவிட சிறந்தது.

உள்ளேயே காபி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் பிரபலமான Starbucks காபிக் கடை இருக்கிறது. காபியையும் ஸ்நாக்ஸையும் படிக்கிற இடத்திற்கே எடுத்துச் சென்றும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவும் இருக்கிறது. அங்கே குழந்தைகள் அமர்ந்து படிக்கலாம். பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டலாம். இந்தப் புத்தகக் கடையில் உறுப்பினர் ஆனால், வாங்குகிற புத்தகங்களில் பத்து சதவீதம் கழிவும், காபி கடையில் வாங்குகிற பதார்த்தங்களுக்குப் பத்து சதவீதம் கழிவும் உண்டு. மேலும் அவ்வப்போது சிறப்புச் சலுகைகளும் உண்டு. உறுப்பினர் கட்டணம் என்று வருடத்திற்கு 25 டாலர்கள் வசூலிக்கிறார்கள். உறுப்பினர் அல்லாதவரும் தாராளமாக எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். அதிலே பேதங்கள் ஏதுமில்லை. வசந்த கோடைக்காலங்களில் ஏழுநாள்களும் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் சற்று சீக்கிரம் மூடிவிடுகிறார்கள். எவ்வளவு நேரம் கடை திறந்திருக்கும் என்கிற விவரம் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று நம்புகிறேன். தேவையானப் புத்தகங்களைத் தேடி எடுத்துத் தரவும், படித்துவிட்டு வைத்துவிடுகிற புத்தகங்களை எடுத்து மீண்டும் அடுக்கவும் முகம் சுளிக்காத பணியாளர்கள் இருக்கிறார்கள். நடக்க ஆரம்பித்திருக்கிற கைக்குழந்தைக்குப் படித்துக் காட்டுகிற புத்தகத்திலிருந்து எல்லா வயதினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும், எல்லாத் துறையினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் துறைவாரியாகப் பெயர் போட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள் மட்டுமில்லாமல் ஆடியோ கேசட்டுகள், சிடிக்கள் முதலியவையும் கிடைக்கும்.

அடிக்கடி குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த வெள்ளியன்று இரவு கூட "Indo American Poetic Society" சார்பில் தேசியக் கவிதை மாதம் எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பார்ன்ஸ் & நோபள் புத்தகக் கடையில் கொண்டாடப்பட்டது. "சர்வபாஷா சரஸ்வதி" என்று ஹிந்தியில் எழுதிய வாசகத்தினை மேடையில் வைத்து, சரஸ்வதி தேவியும் நியூயார்க் சுதந்திரத் தேவி சிலையும் இருக்கிற புகைப்படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்து அவரவர் மொழியில் கவிதை வாசித்தார்கள். குஜராத்தில் இருந்து வந்திருந்த ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சிறப்புரையாற்றினார்; அவர் கவிதையை வாசித்தும் காட்டினார். கவிஞர்கள் தம் கவிதைகளை எந்த இந்திய மொழியில் அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்று சொன்னார்கள். வந்தவர்கள் பெரும்பாலும் குஜராத்திக் கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் வாசித்தார்கள். நானும் ஆசாரகீனனும் அடுத்தமுறை வரும்போது தமிழை அறிமுகப்படுத்தி AK ராமானுஜத்தின் Hyms for the Drowning-ல் இருந்து சில கவிதைகளையோ அல்லது ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களின் சில கவிதைகளை மொழிபெயர்த்தோ, வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகக் கடையினுள் நுழைந்து அங்கிருக்கிறப் புத்தகங்களைப் பார்க்கிற பரவசத்துக்கும் ஆனந்தத்துக்கும் எல்லையில்லை. பரவசத்துடன் நமக்குள் இனம்புரியாத எளிமையும் ஊடுருவும். நயாகரா நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும் சத்தத்தையும் அருகில் நின்றுப் பார்த்துக் கேட்ட போதும், அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் நடுவில் கையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு நின்று ஆழ்கடலின் அமைதியை உள்வாங்கிக் கொண்ட போதும் என்னுள் நான் கண்டுகொண்ட பரவசமும் எளிமையும் அவை. எத்தனை வகைகள், எவ்வளவு புத்தகங்கள். இன்னும் படிக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் எவ்வளவு எவ்வளவு!

வாரவிடுமுறை வந்துவிட்டாலே இப்போதெல்லாம் குழந்தைகள் பார்ன்ஸ் & நோபள் என்று ராகமாகப் பாடிக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் பெரும்பாலும் வார விடுமுறையின் ஒரு நாளில் பாதியையாவது இங்கே பயனுள்ள முறையில் செலவிடுகிறோம். குடும்பமே சேர்ந்து படிப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.

அமெரிக்காவை முதலாளித்துவ நாடு என்றும் மோசமான நாடு என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனாலும், இங்கேயும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. இந்தப் புத்தகக் கடை நடத்துபவர்கள் இலவசமாக அனைவரையும் படிக்க அனுமதிப்பதால், புத்தகம் வியாபாரமாகாமல் தேங்கி விடும் என்று நினைக்காமல், யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் எடுத்து எவ்வளவு நேரமானாலும் படிக்கலாம் என்று அனுமதித்திருப்பது முதலாளித்துவ தொழில்முனைவோரின் சிறப்பே.

உதாரணமாக, என்னையே எடுத்துக் கொண்டால் - நான் இங்கே ஆண்டு உறுப்பினன். இங்கே இலவசமாகப் படிக்கக் கிடைப்பதனால் உண்டாகியிருக்கிற அபிமானத்தால் என் புத்தகங்களை முடிந்தவரை இங்கேயே வாங்குகிறேன் - சில நேரங்களில் ஓரிரு டாலர்கள் போட்டியாளர்களை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று உவந்து தருகிறேன். கெண்டையைப் போட்டு விறால் மீன் (நண்பர் ராஜா, அவர்கள் ஊர்ப் பக்கம் கொடுவா மீன் என்று சொல்வார்கள் என்கிறார்) பிடிப்பது என்று எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அந்த மாதிரி, தன் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் அனைவரையும் இலவசமாகப் படிக்க அழைத்து இத்தகைய வியாபாரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.

இந்த வாசிப்பு அனுபவத்தை நண்பர்களுடனும் செய்யலாம். என்ன படிக்கிறோம் என்று நமக்குள் விவாதித்துக் கொள்ள இயலும். பெரும்பாலான நேரங்களில் நண்பர் ஆசாரகீனனும் நானும் அருகருகே அமர்ந்து படித்தும் பேசியும் கொண்டிருப்பது நல்ல அனுபவம். எந்தப் புத்தகம் எப்படி என்று பரஸ்பரம் உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. ஆசாரகீனன் அவர் தொழில் சார்ந்த ஒரு புத்தகம், அவர் ஆர்வம் சார்ந்த ஒரு புத்தகம் என்று மாற்றி மாற்றிப் படிப்பார். எனக்குத் தொழில் புரியும் இடத்தை விட்டு நீங்கியதுமே தொழில் மறந்துவிடும். அடுத்த முறை வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குத் தேவையென்றால் மட்டுமே தொழில் சார்ந்த புத்தகங்கள் பக்கம் பார்வை செலுத்துவேன். மற்ற நேரங்களில் ஆர்வம் சார்ந்த புத்தகங்கள்தான். ஒவ்வொரு முறையும் அந்தக் கடையை விட்டு வெளியே வரும்போதும் குழந்தைகள் தாங்கள் படித்தப் புத்தகங்கள் அல்லது பக்கங்களின் எண்ணிக்கையை உற்சாகமாகச் சொல்லும்போது என் மனமும் எவ்வளவு படித்தோம் என்று அசைபோட்டுக் கொள்ளும். அப்போது கிடைக்கிற மனதிருப்தி அபரிதமானது.

தற்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் Dan Brown எழுதிய The Da Vinci Code. ஏறக்குறைய 450 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் வரலாற்றுப் பின்புலம் எனக்கு மிகவும் ஆர்வமளிக்கிறது. கத்தோலிக்கர்களைப் பற்றியும், போப்பைப் பற்றியுமான எதிர்மறையான வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது. அடிப்படையில் வரலாற்றுப் புன்புலத்துடன் கூடிய திரில்லர்தான். இரண்டு முறை சென்று அங்கேயே படித்தும் 150 பக்கங்கள் வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான் மிகவும் மெதுவாகப் படிப்பவன். எனவே, புத்தகத்தை வாங்கி விட்டேன். படித்து முடித்ததும் எழுதுகிறேன். இந்த மாதிரி ஒரு புத்தகத்தை இந்து மதம் குறித்தோ, தமிழ்ச் சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றியது குறித்தோ எழுத இயலுமா என்பது படிக்கும்போதே என் மனதுள் ஓடிக் கொண்டிருக்கிற கேள்வி. சுஜாதாவின் கதை மாந்தர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர் என்கிற பொருள்பட்டதுமே, எதிர்ப்புகள் தெரிவித்து அந்தக் கதையை மேலும் தொடர விடாமல் நிறுத்திய சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதும் நினைவுக்கு வருகிறது. உணர்வுவயப்படாமல் விஷயங்களை எதிர்கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இந்தியர்களும் தமிழர்களும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம்தான்.

No comments: