Friday, May 21, 2004

பின்னோக்கி 1986க்குப் போகிறேன்

நான் பன்னிரண்டாம் வகுப்புவரை நகரத்தில் படித்தேன். திருப்பத்தூர். பேருக்குத்தான் நகரம். வடாற்காடு மாவட்டத்தில் வேலூரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் சேலம், தருமபுரி செல்லும் வழியில் இருக்கிறது. வானாதி பூதங்கள் வரையாது பொழிவதில்லை என்று வடாற்காட்டைப் பற்றிச் சொல்வார்கள். திருப்பத்தூருக்கும் அது பொருந்தும். அது நாகரீகத்தின் நவீனங்களை உடனுக்குடன் எட்டிப் பிடித்துவிடுகிற நகரம் இல்லை. தொழிற்சாலைகள் நிறைந்த நகரமும் இல்லை. நதிகளும் எதுவும் அருகில் இல்லை. ஒரு 25 கிலோமீட்டர்கள் தள்ளிப் போனால் மணல் தெரிய விரிந்து கிடந்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கிற பாலாற்றைப் பார்க்கலாம். எட்டு கிலோமீட்டர் தொலைவில் ஜோலார்பேட்டை என்னும் ரயில்வே சந்திப்பு நிலையம் உண்டு. எனவே, உள்ளூர் ரயில் நிலையமும் சோபித்துச் சொல்லக் கூடியதாய் இல்லை. உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போதும், கல்லூரி விடுமுறைகளின்போது மாலைப் பொழுதுகளில் நண்பர்களுடன் சென்று அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கவே எங்களூர் ரயில் நிலையம் பிறரைப் போல எனக்கும் உதவியது. பத்து கிலோமீட்டர்கள் தள்ளி ஏலகிரி மலையையும், மறுபுறம் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் ஜவ்வாது மலைத் தொடரையும் எட்டிப் பிடித்து விடலாம். தேர்தல்கால அரசியல்வாதியின் அன்பைப் போல, மழைகாலங்களில் பெருக்கெடுத்துக் கொட்டிப் பின் பாறைகளின் அனல் பறக்கிற ஜலகாம்பாறை என்கிற நீர்வீழ்ச்சி பத்துகிலோ மீட்டர் தொலைவில் ஏலகிரி மலையையும் ஜவ்வாது மலைத் தொடரையும் இணைத்து நின்றிருக்கும்.

இவை யாவுமே காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற ரீதியில் சிலாகிக்கத் தக்கவையே தவிர, நகரின் புகழ் சொல்லுகிற அடையாளங்கள் இல்லை. பள்ளியில் படிக்கிற காலங்களில் ஜலகாம்பாறையைச் சுற்றியிருக்கிற காடு மலைகளில் அலைந்து திரிந்திருக்கிறோம். வீட்டுக்குச் சொல்லாமல் - சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று - டிரெக்கிங் போயிருக்கிறோம். சைக்கிளில் ஊரிலிருந்து ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஏலகிரிமலை அடிவாரம், ஜலகாம்பாறை என்று பல இடங்களில் நண்பர்களுடன் உற்சாகமாகச் சுற்றியிருக்கிறோம். அந்தக் காலத்தில் - ரிலீசான புதிய திரைப்படங்கள்கூட தாமதமாகவே எங்கள் ஊர் தியேட்டர்கள் எனப்படும் நவீனக் கொட்டகைகளுக்கு வரும். ஆடிக்கொருமுறை எப்போதாவது ஒரு புதுப்படத்தை எங்கள் ஊரிலும் ரிலீஸ் செய்வார்கள். "புதிய ரிலீஸ்" என்கிற பெயரில் ஒற்றை மாட்டுவண்டியில் இருபக்கமும் போஸ்டர் ஒட்டி மைக்கில் அறிவித்துச் செல்வார்கள். வண்டிக்குப் பின்னே ஓடி சினிமா நோட்டீஸ் வாங்குகிற சிறுவனாக இருந்திருக்கிறேன்.

என் நகரத்துக்குப் பெருமைகளே இல்லையா என்றால் பின்வருவனவற்றைச் சொல்லலாம். தூயநெஞ்சக் கல்லூரி என்கிற ஒரு புகழ்பெற்றக் கல்லூரி இருக்கிறது. சென்னை எம்.ஐ.டி.யில் பயின்ற மாணவர்களிடம் கேட்டீர்களேயானால் அதை "வண்டி காலேஜ்" என்று சொல்வார்கள். வண்டி வண்டியாக மாணவர்களை சென்னை எம்.ஐ.டி.க்கு அனுப்பியதால் அந்தப் பெயராம். கிறித்துவ நிர்வாகம் நடத்துகிற அந்தக் கல்லூரி கட்டுப்பாட்டுக்கும் கல்விக்கும் பெயர் போனது. கடின உழைப்புடன் மனப்பாடம் செய்கிற முறையில் மாணவர்களுக்கு அங்கே போதிக்கப்படுகிறது என்று அந்தக் கல்லூரி பற்றியும அந்தக் காலத்தில் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், தேர்வுகளில் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள், கல்லூரியின் தேர்ச்சி விகிதம், அக்கல்லூரியிலிருந்து மேற்படிப்புக்குச் செல்கிற மாணவர்கள் என்று பல காரணங்களால் அக்கல்லூரி மிகவும் புகழ்பெற்றது. அக்கல்லூரியின் வாலிபால் அணி தமிழகக் கல்லூரி அணிகளுள் மிகச் சிறந்த ஒன்றாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தூய நெஞ்சக் கல்லூரிக்கு அடுத்தபடியாக டான் பாஸ்கோ என்கிற பள்ளியும், மேரி இம்மாகுலேட் கான்வெண்ட் என்கிற பெண்கள் பள்ளியும் எங்கள் ஊரில் இருந்தன. இவையில்லாமல் பிற பள்ளிக் கூடங்களும் இருந்தன. அவற்றுள் ஒன்று நான் படித்த இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி.

சுற்றியிருக்கிற கிராமங்களுக்கு நகரமாகத் தோன்றினாலும், நுனிநாக்கு ஆங்கிலம், பேஷன் உடைகள் என்று எதுவும் அப்போது புகுந்திராத நகரம் அது. அங்கேதான் நான் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆறாம் வகுப்பில் ஒரு வருடம் ஆங்கில மீடியத்தில் படித்துவிட்டுப் பின்னர் அது கடினமாகத் தோன்றவே, நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்று ஏழாம் வகுப்பிலிருந்து தமிழ் மீடியத்துக்கே ஓடிவந்து விட்டேன். எட்டாம் வகுப்பு ஓர் வருடம் ஒரு சுற்றுப்புற கிராமத்தில் படித்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். உள்ளூர் கல்லூரியில் பி.எஸ்.ஸி. பிஸிக்ஸ் இடம் கிடைத்தது. கோயமுத்தூர் PSG கலை அறிவியல் கல்லூரியில் இருந்தும் அதே பட்டவகுப்புக்கு அனுமதி கிடைத்திருந்தது. எங்கள் ஊர் கல்லூரி கட்டுப்பாடுகளுக்குப் பெயர் போனது. அடிப்படையில் நானோ செய்ய வேண்டாம் என்று யாரேனும் சொன்னால், அதைச் செய்தால் என்ன என்று கேட்கிற துடுக்குத்தனம் நிறைந்தவன். தந்தையின் நண்பர்களும் பிறரும் PSG கல்லூரி குழுமத்தின் அருமைப் பெருமைகளை வேறு எடுத்துச் சொன்னார்கள். வெளியூரில் படித்தால் உலக அனுபவமும் கிடைக்கும் என்பதால் தன் சக்திக்கு மீறி என் தந்தையார் என்னைக் கோவை PSG கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.ஸி. பிஸிக்ஸ் படிப்பில் சேர்த்து விட்டார். அதுதான் எனக்கு எவ்வளவு உதவியது, என்னை வடிவமைத்துக் கொள்ளவும் என் வாழ்க்கைக் கல்விக்கும் எனக்கு எவ்வளவு துணை புரிந்தது என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

முதலில் கல்லூரி விடுதியில் இடம் கிடைக்கவில்லை. எனவே, அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியபடி சிலமாதங்கள் கல்லூரி சென்று வந்தேன். கோவை போன்ற ஒரு மாநகரின் சுவாசம் எனக்கு ஏற்படுத்திய ஆச்சரிய அலைகள் அநேகம். கல்லூரியோ எடுத்த எடுப்பிலேயே அதன் பிரம்மாண்டத்தில் பயமுறுத்தியது. கோ-எடிகேஷன் வேறு. எந்த சங்கோஜமும் இல்லாமல் ஆண் மாணவர்கள் பெண் மாணவிகளிடம் பேசுவதும் பழகுவதும் என்று மேலைநாட்டு சினிமா பார்ப்பதுபோல இருந்தது. என் கூச்ச சுபாவத்தைவிட்டு வெளிவர எனக்கு நாள்கள், மாதங்கள் பிடித்தன. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பிளிறுகிற மாணவ மாணவிகள். பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் பார்ப்பதுபோல அந்தக் கலாசார அதிர்ச்சிக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். தமிழ் மீடியத்தில் படித்ததால் வகுப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வதும் முதல் செமஸ்டரில் மிகவும் கடினமாக இருந்தது. என் வழக்கப்படி நான் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். முதல் மூன்று மாதத்துக்கு ராக்கிங் தொல்லைகள் வேறு. எல்லாமே புதிதாகவும் கண்ணைக் கட்டி வேறு கிரகத்தில் விட்ட மாதிரியும் இருந்தன.

அப்போது வகுப்பில் எனக்கு அடுத்து அமர்ந்திருந்த நண்பர் நாங்கள் விச்சு என்று அழைத்த விஸ்வநாதன். கோவையின் புகழ்பெற்ற பள்ளியான சபர்மன் மேல்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு வந்திருந்தார். அவர் மேல்நிலைக் கல்வியில் அப்போதே வாங்கியிருந்த மதிப்பெண்கள் வாயைப் பிளக்க வைத்தன. 96%க்கும் மேலாக இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களின் கூட்டுத்தொகையை வைத்திருந்தார். ஏன் இஞ்சினீயரிங் போகவில்லை என்று கேட்டதற்கு, அந்த வருடம் ஐ.ஐ.டி.யில் சீட் கிடைக்கவில்லை என்றும், அடுத்த வருடம் முயலப் போவதாகவும் சொன்ன ஞாபகம். வகுப்பில் நடப்பது எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பேயடித்ததுபோல் உட்கார்ந்திருந்த என் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வார் அவர். ஆங்கிலத்தில் பேராசிரியர் நடத்துவது புரியவில்லையென்றால், இவர் தமிழில் எனக்கு உடனடியாக ரன்னிங் கமெண்ட்டரி கொடுப்பார். இவ்வளவு அறிவுடன் ஒருவர் இருக்க முடியுமா என்று எனக்கு அவரைப் பற்றிய ஆச்சரியம். Path of a projectile is a parabola என்று மெக்கானிக்ஸ் பேராசிரியர் எஸ்.பாலசுந்தரம் போர்டில் சமன்பாட்டை எழுதிக் கொண்டிருக்கும்போதே, அதைப் பற்றித் தமிழில் அழகாக விளக்கி, மேல்நிலைப் பள்ளியின்போது அதைப் பற்றி என்ன படித்தோம் என்கிற நினைவூட்டலையும் செய்துவிடுவார் விச்சு. படிப்பு மட்டுமில்லாமல் மாநகர வாழ்வு குறித்த பொது அறிவு, கல்லூரி வாழ்வு குறித்து நான் அறிய வேண்டியவை என்றெல்லாம் நிறைய அவருடன் பேசிக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் தமிழ் ஆர்வம் கண்டு அவருக்கு மிகவும் பெருமை. அதுகுறித்து எனக்கு ஒரு நல்ல பட்டப் பெயரை அவர் கல்லூரியில் வழங்கியதும், நண்பர்கள் அந்தப் பெயரில் என்னை அழைக்க ஆரம்பித்ததும் இன்னமும் நினைவில் இருக்கிறது. Internal Exams-களில் நான் எடுக்கிற மார்க்குகள் பார்த்து மகிழ்வார். கஷ்டமாக இருக்கிறது என்றாயே, பார் நீயும் நானும் ஏறக்குறைய ஒரே மார்க்தான் வாங்கியிருக்கிறோம் என்று சுட்டிக் காட்டுவார். கஷ்டம் கஷ்டமென்று புலம்பியே அந்தப் பயத்தில் நன்றாகப் படித்து விடுகிறாய் என்று சுட்டிக் காட்டினார். அறிவுடன் பிறக்கத் தேவையில்லை. கடின உழைப்பால் வெல்ல முடியும் என்கிற ரகசியத்தை நான் அறிந்து கொள்ள எனக்கு உதவியவர் அவர்.

வார விடுமுறைகளில் சில வாரங்கள் அவர் வீட்டுக்குச் சென்றுகூட படித்திருக்கிறேன். முதல் செமஸ்டரில் ஒரு கப்பும் வாங்காமல் நான் எல்லா பேப்பர்களிலும் பிழைத்து எழுந்ததற்கு அவருக்குப் பெரும்பங்கு உண்டு. அறிவின் செருக்கு எதுவுமின்றி இயல்பாய்ப் பழகுவார். மூன்று மாதங்களுக்குப் பின் எனக்கு ஹாஸ்டல் கிடைத்து விட்டது. அவர் வீடு கோவையிலேயே இருந்ததால் அவர் டே ஸ்காலராகவே இருந்தார். ஆனாலும், நட்பின் இறுக்கம் தளராமல் ஒரு வருடம் அவருடன் கழித்த நாள்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அவருக்கு மலேஷியாவில் குடும்பமும் உறவினர்களும் இருந்தனர். வருட விடுமுறையில் மலேஷியா சென்றார். போகும்போது விமானத்திலிருந்து ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தது நினைவில் இருக்கிறது. அப்புறம் அடுத்த வருடம் அவர் சொன்ன மாதிரியே சென்னை ஐ.ஐ.டி.யில் சீட் கிடைத்துச் சேர்ந்தார். அவர் விட்டுப் போனது என்னளவில் எனக்குப் பாதிப்பென்றாலும், அவருக்கு அது மிகவும் நல்லது என்று மகிழ்ந்தேன்.

அதற்கப்புறம் - அவ்வப்போது கடிதங்களில் தொடர்பு இருந்தது. தொடர்பில்லாமலும் போனது. பல வருடங்கள் கழித்து, படித்து முடித்து வெளிவந்ததும் alumni.net இணையதளத்தின் மூலம் அறிந்து தொடர்பு கொண்டார். அப்போது நானும் என் படிப்பையெல்லாம் முடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டிருந்தேன். அவரும் படித்து முடித்து மலேஷியாவிலேயே ஓர் உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகச் சொன்னார். அப்புறம் அவருக்குத் திருமணமாயிற்று. அவர் மனைவியும் நானும் ஒரே நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்திருக்கிறோம் என்று அறிந்தேன். ஆனால், அவர் மனைவியை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. பின்னர் தொடர்பு விட்டுப் போயிற்று.

திடீரென்று பலநாள்கள் கழித்து இன்றைக்கு என் ஹாட்மெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்தேன். நிறைய ஜங்க் மெயில்கள் வருவதால் நான் அந்தப் பக்கம் அடிக்கடி போவதில்லை. பார்த்தால் நண்பர் விஸ்வநாதனிடமிருந்து ஒரு மடல். எதேச்சையாக pksivakumar.blogspot.com என்கிற பதிவைப் பார்க்க நேர்ந்தது. அது நன்றாக இருக்கிறது. அதை வைத்திருப்பது நான்தானா எனக் கேட்டு. இணையத்தின் உதவியால் தொடர்பு விட்டுப் போன நண்பர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். விச்சுவே முன்னர் இணையம்வழியாகவே என்னைக் கண்டறிந்தார்.

மீண்டும் என் வலைப்பதிவைப் பார்த்து அவர் பாராட்டி எழுதியக் கடிதத்தைப் பார்த்ததும் "சில மனிதர்கள் மாறுவதே இல்லை. உற்சாகப்படுத்துவதிலும் நேர்மறையான பாதிப்பாக இருந்து உதவுவதிலும் நட்பை மறவாமல் தொடர்வதிலும் இருந்து" என்று தோன்றியது. என் கல்லூரி வாழ்விலும் பின்னர் நிஜவாழ்விலும் நான் ஏதேனும் சாதித்திருந்தால் அவற்றையெல்லாம் நல்லவிதமாக நான் தொடங்குவதற்கு உடனிருந்து உதவியர் நண்பர் விச்சு. அவரைப் பற்றி இங்கு பதிவதைவிட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

No comments: