Friday, May 21, 2004

தன்னை எழுதுதல்

நன்றாக பேசுகிறேன் என்றவர்கள்
எழுதச் சொன்னார்கள்
நன்றாக எழுதுவேன் என்ற நம்பிக்கையில்

என்ன எழுதுவதென்று கேட்டேன்
வாழ்க்கையைக் காட்டினார்கள்
ஆயத்தப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்
வாழ்க்கையைப் படித்தேன்
மனிதர்களைப் படித்தேன்
புத்தகங்களைப் படித்தேன்
என் மூதாதையரும் சகாக்களும்
எழுதியதைப் படித்தேன்

ஏதென்ஸ் நகரத்துச்
சந்தையைப் பார்த்த சாக்ரடீஸ்
தனக்குத் தேவையற்ற பொருள்கள்
எவ்வளவு மலிந்துள்ளன
என்று நகர்ந்தது போல
என் தேவைக்குதவாத பாரங்களை
நகர்த்தி வைக்கத் தெரியாமல்
சிலுவையாய்ச் சுமந்துகொண்டு
அவதிபட்டேன் கொஞ்சகாலம்
அறிவுச் சுமையுடன்

பேனாவை மூடி வைத்தேன்
காற்று வந்தது
என்னைப் படிக்க ஆரம்பித்தேன்
எழுத்து பின்னால் வரலாம்
வராவிட்டாலும்
பாதிப்பென்று ஏதுமுண்டோ?

எழுதப்பட்ட நாள்: மே 21, 2004

No comments: