பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இப்பாராளுமன்றத் தேர்தலில் சரிவைக் கண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கெதிரான கொள்கைகள் உடைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக, சரத்பவாரின் நேஷனலிஸ்டிக் காங்கிரஸ் பார்ட்டி இன்னபிற ஆகியன வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை, பா.ஜ.க கூட்டணி வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, மக்கள் பா.ஜ.க கூட்டணிக்கெதிராக தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் எனத் தெரிகிறது. சோனியா காந்தி பிரதமராகக் கூடும். அவர் வெளிநாட்டவர் என்கிற வாதம் இனிமேல் பா.ஜ.க தொண்டர்கள் அல்லது காங்கிரஸைப் பிடிக்காதவர்கள் நடுவில் மட்டுமே எடுபடக் கூடும். பொதுமக்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே கூட இவ்வாதம் பொதுமக்களிடம் எடுபடாததாலேயே பா.ஜ.க இதுவரை தனியாக அறுதிப் பெரும்பான்மை பெற இயலாமல் இருந்தது. சொல்லப் போனால், 1999 தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனலாம். கூட்டணிக் கட்சிகளின் வலிமையாலேயே 1999-ல் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இப்போது அதேபோன்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடும். இந்தியாவுக்கு கூட்டணி ஆட்சிதான் இன்றைய தேவை. அறுதிப் பெரும்பான்மை பெற்று நடத்தப்படும் தனிக்கட்சி ஆட்சிகளைவிட கூட்டணி ஆட்சி நல்ல விளைவுகளைத் தரும்.
சோனியா காந்தி ஒருமுறைப் பிரதமராகிவிட்டால், பின்னர் அவர் வெளிநாட்டவர் என்ற வாதம் அவரை அப்படிச் சொல்பவர்களிடமேகூட மதிப்பிழந்துவிடக் கூடும். என்னைப் பொறுத்தவரை சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற கருத்து உப்புச் சப்பில்லாதது. சோனியா காந்தி இந்தியக் குடிமகள். அவர் கூட்டணிக்கு வாக்களித்தப் பொதுமக்களுக்கு அவர் பிரதமராவதில் ஆட்சேபணை இல்லை. எனவே, அவர் பிரதமராக வேண்டும். பின்னர், பிரதமராய் அவர் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லையென்றால், வாக்காளர்களுக்கு வேறுவழிகள் உள்ளன. அனுபவம் இல்லை என்று சோனியாகாந்தியைப் பற்றிச் சொல்கிறார்கள். அனுபவத்துடன் யாரும் பிறப்பதில்லை. அவர் திறமையான பிரதமரா என்பதைக் காலம் சொல்லும். சோனியா காந்தி இன்னொரு நரேந்திர மோடியாக இருக்க மாட்டார் என்பதால் அவர் பிரதமராவதை வரவேற்கிறேன்.
காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்காமல், கூட்டணி ஆட்சி அமைப்பது நாட்டுக்கு நல்லது. அந்தக் கூட்டணி அமைச்சரவையில் திமுக, பாமக, மதிமுக, சரத்பவாரின் கட்சி என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளூம், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கட்சிகளும் பங்கேற்க வேண்டும். இது பிரச்னைகளில் ஒத்த கருத்தை அடையவும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் காக்கவும் உதவும். திமுக மத்திய அரசில் பங்கேற்காது என்று சொன்னதைக் கருணாநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது தி.மு.க.வுக்கும் உதவிகரமாகவே அமையும் என்பதை அறியாதவர் அல்ல அவர். எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாத ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தங்கள் கட்சியினரைக் காப்பாற்றிக் கொள்ள தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது உதவும். பா.ஜ.க. தோற்றிருந்தாலும் அதன் செல்வாக்கு கணிசமாக உள்ளது. எனவே, காங்கிரஸீம் அதன் கூட்டணி கட்சிகளும் அதைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல், ஊழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நாட்டு நலன், பொதுமக்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முக்கியப் பிரச்னைகளில் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்கள் நினைத்துவிடக் கூடும்.
சோனியா வெளிநாட்டவர், ராமர் கோவில் விவகாரம், போபர்ஸ் ஊழல், பரம்பரை ஆட்சி என்று உதவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்காமல், பா.ஜ.க. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், ஜீவாதாரப் பிரச்னைகள் ஆகியவற்றுள் கவனம் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து வியூகங்கள் வகுத்தாலோ பத்திரிகைகள் பாராட்டினாலோ வென்றுவிட முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அருண் ஜெட்லியும், பிரமோத் மகாஜனும் படித்தவர்களைக் கவர்ந்த அளவுக்குப் பாமரர்களைக் கவரவில்லை. அதற்குக் காரணம் - பாமரர்களைக் கணக்கில் கொள்ளாமல் - இந்தியா ஒளிர்கிறது என்கிற பிரமையில் பாமரனும் விழுந்துவிடுவான் என்று நினைத்ததே.
மாநிலத்தில் 50,638 கோடி கடனை வைத்துக் கொண்டு, விவசாயிகளின் தேவைகள், மக்களின் பிற பிரச்னைகள் ஆகியவற்றுக்குச் சமமாக நிதியும் கவனமும் ஒதுக்காமல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை மக்களுக்கேற்றவாறும் மக்களைப் பாதிக்காதவாறும் கொண்டுவராமல் செய்தித்தாள்களிலும் இணையத்திலும் தொழில்நுட்ப ஆட்சியாளர் என்று பெயர் வாங்க முனைபவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் சந்திரபாபு நாயுடுக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இலவசமாக மின்சாரம் முதலியன தருவது சரியில்லை என்று படித்தோரில் சிலர் நினைக்கிறார்கள். ப.சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசிய கூட்டம் ஒன்றில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட விவசாயம் போன்றவற்றுக்கு அரசாங்கம் கொடுக்கிற சலுகைகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி, இந்தியா போன்ற நாடுகளின் விவசாயிகளூக்கு இத்தகைய சலுகைகள் எவ்வளவு அத்யாவசியமானவை என்று விளக்கியது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் அரசாங்கம் தருகிற சலுகைகளின் அளவு ஆராயப்பட்டபின் குறைக்கப்படலாமே ஒழிய, அவற்றை முழுமையாக நீக்க வேண்டும் என்று சொல்வதை பொருளாதார நிபுணர்கள்கூட அங்கீகரிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களின்பால் அக்கறை காட்டுகிற பொதுஅறிவுடையக் கொள்கைகள் நிறைந்த பொருளாதார சீர்திருத்தங்களை (Economic reforms with human face and common sense) வரப்போகும் ஆட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புவோம்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தோற்றிருக்கிறார். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவராக இருந்தால், 1996 தேர்தல் தோல்விக்குப் பின்னரே அவர் அதைக் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் இன்னமும் அதீதமான தன்னம்பிக்கை, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதைக் கேட்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் - அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. காணாமல் போய்விடும். கொள்கைகள் ஏதுமின்றித் தனிநபர் கவர்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இத்தகைய அதிர்ச்சி வைத்தியங்கள் அவசியம் தேவை.
பா.ஜ.க. போன்ற கட்சிகளின் குறுகிய மதவாத நோக்கங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கும் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஏற்படக் கூடிய நீண்டகாலப் பிரச்னைகள் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியின் அவசியம் குறித்து போர்க்கால அடிப்படையில் குரல் கொடுத்து வந்த ஹர்கிஷண்சிங் சுர்ஜித் போன்ற தலைவர்களுக்கு - மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து சகமனிதரை நேசிக்கிற ஒவ்வொரு இந்தியரும் சொல்கிற நன்றியாகவே இத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்தியாவின் வாக்காளர்கள் அதிபுத்திசாலிகள் என்பதையும், கத்தியின்றி ரத்தமின்றி மாறுதல்களைக் கொண்டுவருவதில் ஜனநாயகத்துக்கு இணையில்லை என்பதையும் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பதைவிட - மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற ஜனநாயகம் ஜெயித்திருக்கிறது. வாக்களித்துத் தங்கள் வலிமையைக் காட்டிய இந்தியாவின் கோடானுகோடி வாக்காளர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment