Friday, May 14, 2004

மஞ்சுளா நவநீதன் கட்டுரை - என் குறிப்புகள்

"அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்" என்று மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரையைத் திண்ணையில் படித்தேன். ஜனநாயக முறைகள் ஏதிலும் மஞ்சுளாவுக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை என்பதையும், சோனியாகாந்தியோ காங்கிரஸைச் சார்ந்தவர்களோ பிரதமராவதில் மஞ்சுளாவுக்கு விருப்பமில்லை என்பதையும் இக்கட்டுரையின் அடிநாதமாகக் கொள்ளலாம். பா.ஜ.க. போன்ற கட்சிகள் தோற்றுப் போனதில் இருக்கிற தனிப்பட்ட வருத்தத்தை இப்படிப்பட்ட "குட்டையைக் குழப்புகிற கட்டுரைகள்" எழுதித் தீர்த்துக் கொள்ள முடியும் என்று மஞ்சுளா விரும்பினால், திண்ணை அதைப் பிரசுரிப்பதில் தவறில்லை.

எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதபோது, குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவருக்கு ஆலோசனை சொல்ல அரசியல் சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒன்று, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதும் அழைப்பதற்கு முன் ஆதரவு கட்சிகளின் கடிதங்கள் கேட்பதும். இத்தகைய ஜனநாயக மற்றும் தார்மீக முறைகள் எதிலும் மஞ்சுளா சொல்கிற வாதங்களை வைத்துப் பார்க்க முடியாது.

மஞ்சுளா சொல்கிறபடி பார்த்தால், காங்கிரஸ், பா.ஜ.க. இடது கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி என்று பல கட்சிகளைக் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க அழைத்தபின் அவர்களால் முடியாத பின்னரே, தி.மு.க.வை அழைக்க வேண்டியிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத எட்டாக் கனவு. காங்கிரஸீக்குப் பதில் பாஜக இதே அளவு சீட்டுகளை வென்றிருந்தால் மஞ்சுளா இதைச் சொல்லியிருப்பாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

தி.மு.க. துணைப் பிரதமர் பதவிக்கோ முக்கியமான மந்திரிப் பதவிகளூக்கோ முயல வேண்டும் என்று மஞ்சுளா எழுதியிருந்தாலாவது மஞ்சுளாவுக்கு தி.மு.க.வின் மீதும் கருணாநிதியின் மீதும் அக்கறையிருக்கிறது எனலாம். ஆனால், சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்கிற தன் உள்ளக்கிடக்கையை வெளிச்சொல்ல இயலாமல் - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், சோனியாகாந்தி பிரதமராவது பிடிக்காத சரத்பவார், முலாயம்சிங் என்று அனைவரும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் இருக்கிற தார்மீக நியாயத்தை உணர்ந்திருக்கிற வேளையில் - தேச நலனைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இப்படிப்பட்ட குழந்தைத்தனமான கணக்குகளை எடுத்துக் காட்டி, கருணாநிதியைப் பிரதமர் ஆகச் சொல்கிறார் மஞ்சுளா. இது குழப்பத்தை உண்டாக்க விரும்புகிற அவர் உள்ளக் கிடக்கையைக் காட்டுகிறது. தி.மு.க.வே தன் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சிக்காகவும், சோனியாகாந்தி பிரதமாரவதை எதிர்க்கவில்லை என்று சொல்லியும் வாக்கு கேட்டது மஞ்சுளாவுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டது ஆச்சரியமில்லை.

சோனியாகாந்தி நரசிம்மராவுக்குக் கீழே பணிபுரிய விரும்பவில்லை என்றும், அதற்கு ஆணவம் காரணம் என்றும் சொல்கிறார்கள் என்று அடுத்த கதையை அவிழ்த்து விடுகிறார். 1991-ல் சோனியாகாந்தி விரும்பியிருந்தால் அவர் பிரதமராகி இருக்க முடியும் என்பதற்கு வரலாறு சாட்சி. தேடிவந்த கட்சித் தலைவர், அதனால் கிடைக்கக் கூடிய பிரதமர் பதவி ஆகியவற்றை வேண்டாம் என்று சொல்கிற பக்குவம் 1991ல் சோனியாகாந்திக்கு இருந்தது. அப்படி அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவர், 1996ல் நரசிம்மராவின் தலைமையிலான காங்கிரஸின் தோல்விக்குப் பின்னர், காங்கிரஸ் பிழைக்குமோ பிழைக்காதோ என்று கடைசிப் படுக்கையில் இருந்தபோது, தன் குடும்பம் வளர்க்க உதவிய காங்கிரஸ் சிதைகிற காட்சியைக் காணப் பொறுக்காமல் அரசியலில் இறங்கினார். இதுவும் வரலாறு அறிந்தவர் அறிந்ததே. இதிலே, நரசிம்மராவ் சோனியாவை மந்திரி ஆகச் சொல்லி எங்கே கேட்டார், அவர் எங்கே மறுத்தார்? மஞ்சுளாவுக்குக் கற்பனை வளம் அதிகம்தான்.

மஞ்சுளா தொலைகாட்சிகளிலும் ஊடகங்களிலும் "Spin Master" வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அத்தகைய வேலைகளில்கூட இத்தகைய வாதங்கள் எடுபடாது என்பதை உணர வேண்டும்.

No comments: