பட்டினத்தாரை misogynist எனலாம். காமத்தையும் பெண்களையும் ஒன்றாக உருவகப்படுத்திக் கொண்டு அவர் எழுதியுள்ளவை நவீனவாதிகளும் பெண்ணியவாதிகள் விரும்பக்கூடியதல்ல. காமத்தையும் பற்றையும் ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை வலியிறுத்திச் சொல்ல பெண்களையும் அவர்தம் உடலையும் இப்படிப் பழிக்கிறாரா என்ற கேள்வி பட்டினத்தாரைப் படித்தால் எழாமல் இருக்காது. ஆனால், காதலில் தோல்வியுற்றோரும், பெண்கள்பால் ஏதோ ஒரு காரணத்துக்காக வெறுப்பு காட்டுவோரும், சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோல அவ்வப்போது மேற்கோள் காட்ட பட்டினத்தாரின் பட்டென்று பேசும் பாடல்கள் உதவக் கூடும். பெண்கள், காமம் பற்றிய அவர் கருத்துகளை ஒரு நேரத்தின் அல்லது ஒரு மனநிலையின் கணநேர வெளிப்பாடு என்றோ கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் இருக்கிற சிலநேர பலவீனமென்றோ ஒதுக்கிவிட முடியாது. ஒரு obsession போல அவர் தொடர்ந்து அக்கருத்துகளை முன்வைப்பதற்கு ஏதுவான உள்ஒளி ஏதையும் அவர் கண்டிருக்க வேண்டும். மாதர் தோள் புணர்ந்தபோது மனிதவாழ்வு சிறக்குமே என்று உணர்ந்து பெண்களைப் பெருமைப்படுத்திய சிவவாக்கியருக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர் பட்டினத்தார் எனலாம்.
ஆனால், பெண்களைப் பற்றிய அவர் பார்வையை விலக்கிவிட்டுப் பார்த்தால், பட்டினத்தார் சில இடங்களில் அற்புதமாகத் தெரிகிறார்.
பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்;
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை
என்று பட்டினத்தார் பேசும்போது, இத்தகைய ஞானம் பெற்ற இவரா பெண்களைப் பற்றியும், காமத்தைப் பற்றியும், உடலைப் பற்றியும் எதிர்மறையாகவும், சிறுமைபேசும் தொனியிலும் எழுதியிருக்கிறார் என்கிற ஆச்சரியம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment