Sunday, May 09, 2004

எழுத்தாளர்களைப் பற்றிய குறும்படங்கள்

சாகித்திய அக்காதெமி எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடும் விவரணப் படங்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களுக்கு ஒரு சமூகம் திருப்பிக் கொடுக்க வேண்டிய மரியாதையின் ஓர் அடையாளமாகவும், எழுத்தாளர்களை விஷீவல் மீடியம் வழியே அவர்களின் வாசகர்களுக்குக் காட்டுகிற வரலாற்று ஆவணமாகவும் இப்படங்கள் அமைகின்றன.

ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் சா.கந்தசாமி இயக்கிய ஜெயகாந்தன் விவரணப் படத்தைப் பார்த்தேன். சமீபத்தில் அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனையும், ரவி சுப்ரமணியன் இயக்கிய இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞனையும் பார்க்க நேர்ந்தது. இவ்விரண்டுப் படங்களையும் பார்த்தபின் மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் விவரணப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. இம்மூன்றையும் இங்கே ஒப்பிடவோ மதிப்பிடவோ போவதில்லை. இம்மூன்றைப் பற்றியும் எனக்குத் தனித்தனியே கருத்துகள் உள்ளன என்பது இருக்கட்டும்.

எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைப் பற்றிய என் பொதுவான கருத்துகளை முன்வைப்பது மட்டுமே நான் இப்போது செய்யப்போவது.

எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்கள் பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. எழுத்தாளரின் குழந்தைப் பருவம், அவர் படைப்புகளின் சில பகுதிகளை எழுத்தாளரோ பிறரோ வாசித்துக் காட்டுவது, எழுத்தாளரின் குடும்ப விவரங்கள், எழுத்தாளரே தன்னைப் பற்றிப் பேசுவது, தமிழின் பிற முக்கியமான படைப்பாளிகள் எழுத்தாளர் பற்றிய தன் கருத்துகளைச் சொல்வது ஆகியவை அவற்றுள் சில.

ஓர் எழுத்தாளரைப் பற்றியக் குறும்படத்தில் இவையெல்லாம் அவசியமே. ஆனாலும், நான் பார்த்த மூன்று படங்களுமே எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. இயக்குனர்கள் மூன்று பேருமே கலைஞர்கள். தங்களுக்கே உரித்தான வகையில் படத்தை அணுகியும் இயக்கியும் இருக்கிறார்கள். எனவே, என் திருப்தியின்மைக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால், இயக்குனர்களுக்குக் கிடைத்திருக்கிற சொற்ப நேரத்தைச் சொல்லத் தோன்றுகிறது. முப்பது நிமிடங்களுக்குள் ஓர் எழுத்தாளரின் ஆளுமையை, சமூகத்தில் அவர் படைப்புகளும் அவரும் ஏற்படுத்தியிருக்கிற பிம்பத்தை, சலனங்களை முழுமையாக வெளிக்கொண்டு வந்துவிட முடியாது.

எனவே, சாகித்திய அக்காதெமி இனிமேல் இப்படங்களுக்கான நேரத்தை குறைந்தபட்சம் ஒருமணி நேரமாக மாற்ற முன்வரவேண்டும். ஒருமணி நேரமாவது கிடைத்தால்தான் இயக்குனர்கள் ஓர் எழுத்தாளரின் பல்வேறு ஆளுமைகளில் சிலவற்றையாவது முழுமையாக வெளிக்கொணர முடியும். உதாரணமாக, இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞன் படம், அவரின் நாடகப் படைப்புகள், அதுசார்ந்த கருத்துகள் என்று முக்கால்வாசி நேரம் அதிலேயே சுற்றி வருகிறது. ஆனால், சிறுகதை, நாவல் ஆகியவற்றில் இ.பா செய்த சாதனைகளின் பக்கம் சரியாகக் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போயிருக்கலாம். இ.பா. நாவலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பு நாடகத்தைப் பற்றியதாக இருக்கிறது என்பதால், இ.பா.வின் நாடகப் பங்களிப்பு பற்றியே இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கக் கூடும். இத்தகைய படங்களின் நோக்கம் முடிந்த அளவு ஓர் எழுத்தாளரின் எல்லாத் துறைகளையும் அவற்றில் அவர் செய்த பங்களிப்புகளையும் விவரமாக வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்று நான் நம்புகிறேன். அதற்கு இயக்குனருக்கு அதிக நேரம் தேவை. அது கொடுக்கப்படவும் வேண்டும். இங்கே இ.பா. பற்றிய படத்தை ஓர் உதாரணத்துக்காகவே எடுத்துக் கொண்டுள்ளேன். குறை சொல்வதற்காக அல்ல. இதையே மற்ற படங்களிலும் நான் உணர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் தாங்கள் சொல்ல விரும்பிய கருத்துகளைத் தாங்கள் சொல்ல விரும்பிய வண்ணம் இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதால் இது இயக்குனர்களின் குறையல்ல.

வாழ்நாள் முழுவதும் தம் எழுத்துகளால் தமிழ்ச் சமூகத்திடையே கருத்தாக்கங்களையும், எதிர்விளைவுகளையும், சலனங்களையும், மாற்றங்களையும், விவாதங்களையும் கொண்டுவந்த எழுத்தாளர்கள் பற்றி முப்பது நிமிடங்களில் சொல் என்று இயக்குனர்களைச் சொல்வது, அந்த எழுத்தாளருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய முயற்சிகள் எவருக்கும் திருப்தியற்றவையாகவும், குறைபட்டுப் போனவையாகவும் உணரப்பட வாய்ப்புகளும் தருவதாக இருக்கும்.

எனவே, சாகித்திய அக்காதெமி இப்படங்களுக்கான நேரத்தை உயர்த்தி அதற்கேற்றவாறு உதவித்தொகையையும் உயர்த்துவது இன்றியமையாதது. சாகித்திய அக்காதெமியின் குழுவில் இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் அதற்காக ஆவன செய்ய வேண்டும்.

No comments: