Wednesday, May 19, 2004

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 6

காலச்சுவடில் ராஜ் கௌதமன் நேர்காணல்:

காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கௌதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்தேன். ராஜ் கௌதமனின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரை மேற்கொண்டு படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை அந்த நேர்காணல் ஏற்படுத்தியது. விவாதத்தையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் கிளப்புகிற கருத்துகள் வைக்கப்படும்போதுதான் மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படும்போது மனிதவாழ்வு சிறப்படைகிறது. அந்தவிதத்தில் தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் சிந்தனைகளும் கருத்தாக்கங்களும் உற்று கவனிக்கப்பட வேண்டும். இன்னமும் பரிபூரண விடுதலை அடையாத தலித் சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல தலித்துகளின் குரலையும் அவர்கள் தரப்பு சிந்தனைகளையும் கேட்க வேண்டும். இத்தகைய நேர்காணல்கள் எனக்குத் தலித்துகள், அவர்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றை அவர்கள் பார்வையில் புரிந்து கொள்ள உதவுகின்றன. "எதிர்ப்பக்கம் இருப்பவற்றில் புனிதம், உயர்ந்தவை என்று சொல்லப்படுபவற்றைக் கட்டுடைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்தப் பக்கத்தில் தலித்துகளுக்குச் சாதகமாக எவை இருக்கின்றனவோ அவற்றைச் சரியாக இனம்கண்டு அதை முன்வைப்பதும் முக்கியமானதுதான்" என்றும், "நீங்கள் சொன்னது போன்ற படிப்பு, அது மாதிரியான முன்மாதிரிகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. காலச்சுவடில் வெளிவந்திருந்த அம்பேத்கர் பற்றிய கட்டுரையில்கூட பக்ஷி அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அம்பேத்கரின் பிற விஷயங்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் அளவிற்கு அவரது படிப்பு, கடுமையான உழைப்பு போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. கலகம் செய்வது போன்றவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது போல் இருக்கிறது" என்றும் என் சிந்தனையைத் தூண்டிய பல கருத்துகளை இந்த நேர்காணலில் ராஜ் கௌதமன் சொல்லியிருக்கிறார். (நன்றி: காலச்சுவடு, தமிழ்.சிபி.காம்)

சுஷ்மா சுவராஜ் செய்த அசிங்கம்:

சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று சொல்பவர்களின் தரப்பை என்னால் அங்கீகரிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எத்தகைய மனப்பான்மையை சுதேசி மனப்பான்மை என்று தவறாக உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இருக்கட்டும். சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்றும் இப்போது சொல்லிவிட்டார். அதற்காக அவரை எல்லாரும் பாராட்டி விட்டனர். நானும் பாராட்டுகிறேன். நேரு குடும்பத்தினரின் சுயநலமற்ற தன்மையை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் சோனியாகாந்தி. உள்ளூரில் பிறந்துவிட்டு பதவிமோகம் எடுத்து அலைகிற சுதேசிகள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்று சொன்னதிலும் குறை காண ஆரம்பித்திருக்கிறார்கள். எமர்ஜென்ஸியை எதிர்த்தவர் என்றும், அப்பழுக்கற்ற நேர்மையாளர் என்றும் பெயர் பெற்ற ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அடுத்தடுத்த ஊழல்களில் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டது இருக்கட்டும். ஒரு அரசியல் புரோக்கராக தன்னை மனமுவந்து தாழ்த்திக் கொண்டு கட்சிகளிடம் பேரம் பேச விமானமெடுத்து ஓடியதும் இருக்கட்டும். அவரும் வாஜ்பாய் அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் கூட, சோனியாகாந்தி பிரதமரானால் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை கட்டிக் கொள்வேன் என்றெல்லாம் உளறிய சுஷ்மா சுவராஜைப் பார்த்து உன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு நாகரீகமான வழிகள் இல்லையா என்று கேட்காதது மிகப்பெரிய அசிங்கம். அப்படியெல்லாம் சொல்லியதன் மூலம் சுஷ்மா சுவராஜ் தன்னை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை; தன் கட்சியை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை, பெண்களை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை. அவற்றையெல்லாம் மீறி - மனித குணத்தையே தாழ்த்தி விட்டார் என்றே சொல்லுவேன். ஒருகாலத்தில் பா.ஜ.க.வின் ஆவேசமானக் குழந்தையாக இருந்த மகாஜன் போன்றவர்கள் இத்தேர்தல் முடிவின்போது பேசிய பேச்சில் இருந்த முதிர்ச்சி கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற பிரசாரம் எடுபடவில்லை என்று ஒத்துக் கொண்ட மகாஜனைப் பார்த்து அவர் கட்சியினர் கற்றுக் கொள்ள வேண்டும். வாஜ்பாய் கவிதை எழுதுவதைவிட முக்கியமானது, தன் கட்சித் தொண்டர்களை மனிதர்களாக வைத்திருப்பது.

கம்யூனிஸ்ட்டுகள் செய்கிற தவறு:

மத்தியில் அமையப் போகிற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் மீண்டும் தவறிழைக்கிறார்கள் என்றே சொல்லுவேன். வலது கம்யூனிஸ்ட் கட்சி அரசில் பங்கேற்க விரும்பியதாகவும், இடது கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாததால், ஒருமித்த முடிவாக இரண்டுமே அரசில் பங்கேற்கப் போவதில்லை என்றும் செய்திகள் சொல்கின்றன. இதற்கு முன்னர் கம்யூனிஸ்ட்டுகள் செய்த தவறுகளையும், செய்யத் தவறியவற்றையும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோர் மிகவும் தாமதமாக இப்போது ஒத்துக் கொண்டு வருவதை அவர்களின் கட்டுரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம் இப்போது அறிய முடிகிறது. அதுபோல் - இந்த அரசாங்கத்தில் பங்கேற்காததன் தவறைக் கம்யூனிஸ்ட்டுகள் பின்னாடி உணர்ந்து வருந்தக் கூடும். வறட்டுத் தத்துவவாதிகளாகவும், வறட்டுப் பிடிவாதக்காரர்களாகவும் இருப்பது நம் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புதிதில்லையே. எந்தக் காரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை என்பதைக் கம்யூனிஸ்ட்டுகள் வெளியே சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. சொல்லியிருந்தால் அவற்றின் சாதக பாதகங்களை ஆராயலாம். மத்திய அரசில் பங்கேற்று ஆக்கபூர்வமாக ஒத்துழைத்துத் தங்கள் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று, தங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை இந்தியா முழுவதுமும் ஏற்படுத்தக் கூடிய அற்புதமான வாய்ப்பை ஆட்சியில் பங்கேற்காததன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் இழக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பங்கேற்கும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.

ஜெயலலிதாவின் அறிக்கை:

காட்சி ஒன்று. அமெரிக்காவில் கூடைப்பந்து பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. அதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். அதற்கென்று நேஷனல் பாஸ்கட்பால் அசோசியேஷன் (NBA) என்ற புகழ்பெற்ற லீக் இருக்கிறது. மற்றும் பல சிறுசிறு லீகுகளும் உள்ளன. என்.பி.ஏ.வில் பல அணிகள் - வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவை - இருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிற லேக்கர்ஸ் என்ற அணி புகழ்பெற்றது. அதன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடைய விளையாட்டு வீரர்களில் கோபி பிரையண்ட் (Kobe Bryant) ஒருவர். அவர் சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். விடுமுறைக்காகக் கொலராடோ மாநிலம் சென்றபோது அங்கே ஒரு இளவயது பெண்ணை அவர் அனுமதியின்றி பாலியன் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்பது அவர் மீதான புகார். அதுபற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இடையில் என்.பி.ஏ.வின் ரெகுலர் சீசன் போட்டிகள் முடிந்தன. ரெகுலர் சீசனில் என்.பி.ஏ.வின் 29 அணிகளும் தமக்குள் தலா 82 முறை விளையாடும். பின் அவற்றில் இருந்து முதல் 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு (என்.பி.ஏ.வின் இரு முக்கிய பிரிவுகளிலிருந்து - கிழக்கு மற்றும் மேற்கு - தலா 8 அணிகள்) ப்ளேஆப்ஸ் (Playoffs) என்கிற யார் சாம்பியன் என்பதை நிர்ணயிக்கிற அடுத்த கட்ட ஆட்டங்கள் தொடங்கும். அப்படி இப்போது ப்ளேஆப்ஸ் நடந்து கொண்டிருக்கிறது. கோப் பிரையண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்கு ஆட்டம் இருக்கிற நாள்களில் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சிலமுறை நேர்ந்துவிட்டது. நீதிமன்றத்தில் அன்றைக்கு ஆஜராகிவிட்டுப் பின்னர் விமானம் பிடித்து வந்து, ஆட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறைகள் அவர் மிகச்சிறப்பாக ஆடினார். உடனடியாகப் பத்திரிகைகள் அவரைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டன. பாருங்கள், எவ்வளவு சிரமத்திற்கிடையே எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் எழுதித் தள்ளின. ஒரு சிலர் மட்டுமே "கோப் பிரையண்டை இதில் எதற்காகப் பாரட்ட வேண்டும் என்று தெரியவில்லை. இந்தச் சிக்கல் அவராகவே சென்று சிக்கிக் கொண்டது. அதில் அவர் சிக்கிக் கொண்டபின் வெளிவர போராடிக் கொண்டிருக்கிறார். அதனூடே நன்றாகவும் ஆடினார். அவர் எப்போதும் நன்றாக ஆடவேண்டும் என்பது அவரிடம் அனைவரும் எதிர்பார்க்கிற ஒன்றுதானே. அந்தச் சிக்கலில் அவர் சிக்கிக் கொண்ட தவறை அவரின் சிறப்பான ஆட்டம் ஈடுசெய்துவிட முடியாது" என்ற ரீதியில் எழுதினர்.

காட்சி இரண்டு: பாராளுமன்றத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டில் அடைந்த தோல்விகளுக்குப் பின் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பல நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிகைகள் மீது தொடர்ந்த வழக்குகளை விலக்கிக் கொள்வது, மதமாற்ற தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது, அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பித் தருவது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது ஆகியன அவற்றுள் சில. இதற்காகப் பத்திரிகைகளும் நண்பர்களும் தமிழக முதல்வரைப் பாராட்டக் கூடும். எனக்கென்னவோ தானாகச் சென்று சிக்கிக் கொண்ட சிக்கல்களிலிருந்து தமிழக முதல்வர் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதற்கு உதவியதற்காக அவர் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வாக்காளர்களையே இதற்காகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் அவரிடம் முதலிலேயே அவருக்கு ஓட்டு போட்ட வாக்காளர்கள் எதிர்பார்த்தனர். தமிழக முதல்வர் இப்படி நடவடிக்கைகளைத் திரும்ப பெற்றுக் கொண்டதைவிட முக்கியமானது, இத்தகைய தவறுகள் இனி நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வது என்பதை அவர் உணர வேண்டும்.

திண்ணை களஞ்சியம்:

திண்ணை களஞ்சியத்திலே தேடினால் சிலநேரங்களில் மாணிக்கங்கள் அகப்படக் கூடும். முக்கியமாக திண்ணை கவிதைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நிறைய கவிதைகள் பிரசுரமாவதால் நிறைய பேர் நிறைய நேரங்களில் கவிதைகளைப் பொறுமையுடன் படிப்பதில்லையோ என்று எனக்குத் தோன்றும். எனவே, திண்ணை கவிதைக் களஞ்சியத்துள் நுழைந்து அங்கிருக்கிற எனக்குப் பிடித்த கவிதைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பேசலாம் என்று நினைக்கிறேன். என் தேர்வு என் தனிமனித அறிவு மற்றும் ரசனையின் அடிப்படையிலானது. என்னால் குறிப்பிடப்படாத கவிதைகள் சிறப்பானவை அல்ல என்பது இதற்கு அர்த்தமல்ல. ஒரு விமர்சகனாக அல்லாமல், வாசகனாகவே இதைச் செய்ய முயல்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். கவிதை தவிர மற்ற படைப்புகளிலும் இப்படிப் பிடித்தவற்றை எடுத்துக்காட்ட ஆசைதான். இன்ஷா அல்லாஹ். முதலில் கவிதைகளைப் பார்ப்போம்.

பசுவய்யா கவிதைகள் பக்கத்தில் வருத்தம் என்கிற தலைப்பின் கீழுள்ள இந்தக் கவிதையைப் பாருங்கள்:

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்

அவரவர் அறிவு, அனுபவம், ரசனை, திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பலவிதமான தளங்களில் இக்கவிதைக்குப் பொருள் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட பிரபஞ்சத்தன்மை கவிதைக்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்வதுபோல தோற்றமளிக்கும் இந்தக் கவிதை அதனூடே பிரபஞ்சம் முழுமையும் உணருகிற ஒரு குணாதிசயத்தைக் கோடுபோட்டுக் காட்டிவிடுவது இக்கவிதையின் வெற்றி என்று நான் நம்புகிறேன்.

No comments: