Thursday, May 20, 2004

முற்போக்கு

வேறு ஜாதியில்
கல்யாணம் செய்துகொண்டிருக்கிறேன்
என்றார் ஒருவர்
அந்த வாய்ப்பு எனக்கில்லை
ஆனால்
எனக்கு ஜாதிகள் இல்லை
என்றார் ஒருவர்
ஜாதிகளை ஒழிக்கமுடியாது
ஜாதிக்கொடுமைகளை ஒழிக்கவேண்டும்
என்றார் ஒருவர்
ஒடுக்கப்பட்ட ஜாதி
ஜாதி அடையாளத்துடன்தான்
குரல்கொடுக்க முடியும்
என்றார் ஒருவர்

மதங்கள் இல்லை
என்றார் ஒருவர்
என் மதத்தை நேசிக்கிறேன்
மற்ற மதங்களை மதிக்கிறேன்
என்றார் ஒருவர்
என் மதம் மோசம்
மதம் மாறிவிட்டேன்
என்றார் ஒருவர்
எல்லா மதத்துக்கும்
பொதுசட்டம் தேவை
என்றார் ஒருவர்
மதசுதந்திரத்தில்
அரசாங்கம் தலையிடலாமா
என்றார் ஒருவர்

மொழியுணர்வு முக்கியம்
என்றார் ஒருவர்
மொழியைத் தாண்டி
மனிதனைப் பார்க்கிறேன்
என்றார் ஒருவர்
என் மொழி சிறந்தது
மற்ற மொழிகளும் சிறந்தவை
என்றார் ஒருவர்

கடவுள் இல்லை
என்றார் ஒருவர்
கடவுள் இருக்கிறார்
என்றார் ஒருவர்
ஒன்றே கடவுள்
என்றார் ஒருவர்
கடவுள் இருக்கிறரா
என்று தெரியாது
வாழ்க்கை வலிக்கிறது
அதற்கு வழிபாருங்கள்
என்றார் ஒருவர்

பெண்ணுக்கு விடுதலை தேவை
என்றார் ஒருவர்
பெண்விடுதலை வந்துவிட்டது
என்றார் ஒருவர்
விடுதலை வந்தாலும்
ஆணின் துணை
பெண்ணுக்கு வேண்டும்
என்றார் ஒருவர்
பெண்ணின் துணை
ஆணுக்கும் வேண்டும்
என்றார் ஒருவர்

ஏழை பணக்காரன் இல்லாத
சோஷலிஸம் வேண்டும்
என்றார் ஒருவர்
திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற
உயர்வும் ஊதியமும் வேண்டும்
என்றார் ஒருவர்

அவரவர்
அவரவர் வழியிலும்
அவரவர் நம்பிக்கையிலும்
முற்போக்கானவர்களாகவே இருக்கிறார்கள்

எழுதப்பட்ட நாள்: மே 20, 2004

No comments: