Tuesday, June 08, 2004

திண்ணை களஞ்சியம் - இந்த வாரக் கவிதை

ஒன்று: பலபேர் கேட்கிற கச்சேரிகளில் வாசிக்கிற வாய்ப்பை வேண்டாமென்று சொல்லிவிட்டுக் கடற்கரையில் மணிக்கணக்கில் தனியாக வாசித்துக் கொண்டிருப்பார் மாலி என்று சிறுவயதில் யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம்.

இரண்டு: "முதலில் எழுதுகிறவன் என்கிற முறையில் எதை எழுதுவது என்று தீர்மானிப்பது நானே தவிர வேறு எவரும் இல்லை. பெரியார் அவர்களின் கட்டளைக்கேற்ப என்னால் எழுத முடியாது" என்று பெரியார் முன்னிலையில் பேசினார் ஜெயகாந்தன்.

மூன்று: இரா.முருகன் கட்டுரையொன்றில் படித்தது. மாலனும் அவரும் ஒரு சந்திப்பில் பிறமொழி எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது இரா.முருகன் அந்த எழுத்தாளரிடம் வேறு ஓர் எழுத்தாளர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். கிடைத்த பதில் "அவரைப் பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும்".

நான்கு: "ஒரு படைப்பாளி என்ற முறையில், will you not give me the freedom to choose what I want to write?" இது பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. திசைகள் இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியது.

ஐந்து: சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய கலைப்பட விழாவில் பார்த்த குறும்படம் "தப்புக்கட்டை". நிறப்பிரிகையில் வந்த தய்.கந்தசாமியின் நல்ல சிறுகதையொன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அதிலே மேல்ஜாதிக்காரர் ஒருவர் பறையடிக்கிற ஒரு தலித் இசைக் கலைஞரை அவமானப்படுத்துகிறார், தாக்குகிறார். மற்றவர்களின் விருப்பப்படி வாசிக்கிற இசைக் கலைஞர், மற்றவர்கள் தருகிற கூலியை மற்றவர்கள் விருப்பபடியே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மேல்ஜாதிக்காரரால் வலியுறுத்தப்படுகிறார். அதற்கு உடன்பட மறுக்கும்போது தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதால், பறையடிக்கிற தொழிலையே விட்டு விடுகிறார் இசைக் கலைஞர். சிறுவயதில் இசைக் கலைஞரின் இசை ஆர்வத்தைக் கண்டு உற்சாகப்படுத்திய அவரின் தாயார் இறந்து விடுகிறார். இசைக் கலைஞருக்கு மனதில் குழப்பம். தாயின் மரணத்துக்கு விட்டுவிட்ட பறையை அடிப்பதா கூடாதா என்று. முடிவில் தாயின் எரிகிற சிதையின் முன்னே ஓயாது அவர் பறையடிக்கிற காட்சியுடன் படம் நிறைவுறுகிறது. இசைக்கும் கலைக்கும் ஜாதிகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென்பதையும் கலைஞர்கள் எது நேர்ந்தபோதும் தாங்கள் நேசிக்கிற கலையைத் தாங்கள் விரும்பும் வண்ணம் செய்வதை விட்டுவிடக் கூடாது என்பதையும் மனதைத் தொடும் விதமாகச் சொல்லிய படம் இது.

நிஜ வாழ்வில் நாம் அடிக்கடி சந்திக்கிற எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அது மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு கலைஞர்கள் எழுத வேண்டும் என்பது. "இந்த எழுத்தாளர் இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதவில்லை. எனவே அவர் என் மதிப்பில் வீழ்ந்து விட்டார்" என்று எழுதுகிற சக எழுத்தாளர்களே இருப்பது சகஜம். ஓர் எழுத்தாளரையோ கலைஞரையோ மதிப்பிடுகிற அளவீடுகள் அகவயப்பட்ட அபிப்ராயங்களின் சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பிறப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. இன்னும் சிலர் கொஞ்சம் மேலே போய் எழுதுபவர்களுக்குக் கட்டளைகள் தருகிற ப்ரீ அட்வைஸ் சர்வீஸ் செய்கிறார்கள்.

சில வெகுஜனப் பத்திரிகைகளில் பார்த்தீர்களேயானால் அதில் வேலை செய்கிற சப்-எடிட்டர்களின் நிலைமை மிகவும் அனுதாபத்துக்குரியதாக இருக்கும். சர்க்குலேஷன் அதிகமாக வேண்டுமென்று விரும்புகிற முதலாளியின் விருப்பங்களை சிரமேற்கொண்டு செயல்பட வேண்டிய கிளார்க்குகளாக கலை ஆர்வம் மிக்க சப்-எடிட்டர்கள் மாறிப்போவது வாழ்வின் விபத்துதான். ஆனால், சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிற மாதிரியான இயந்திர இலக்கியப் படைப்புகளை வாசிக்கிற அத்தகைய சப்-எடிட்டர்கள் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் தாங்கள் செய்கிற வேலையைச் சிறப்பாகச் செய்கிற திறமை படைத்தவர்கள். அடுத்தவர் என்ன எழுத வேண்டும் என்ன எழுதக் கூடாது என்று சொல்லுகிற பட்டியலில் தன்னை இலக்கியவாதியாக உருவகப்படுத்திக் கொண்டு உள்ளுக்குள் வெகுஜனப் பத்திரிகையின் சப்-எடிட்டர் மனப்பான்மையை விட்டு வெளிவர இயலாதவர்களும் அடங்கிப் போகிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். அதற்குக் காரணம் வெகுஜன ரசனைக்கேற்பவும் பத்திரிகைகளின் தரத்துக்கேற்பவும் அவர்கள் தங்கள் எழுத்தின் பொருளையும் நடையையும் மாற்றி சமரசம் செய்து கொள்வதாக இருக்கலாம். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் மற்றவர்களிடமும் அதையே அவர்கள் எதிர்பார்ப்பது இயல்பான நிகழ்வுதான்.

மனித மனம் நுட்பமானது, அதன் ஆசைகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எழுத்துகளுக்கும் காரணங்கள் பல உண்டு. அதனாலேயே, எழுத்தாளர்களின் மீது தங்கள் எதிர்பார்ப்புகளைச் சுமத்துபவர்களின் வாதங்களைப் படிக்கும்போது, அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசிக்கவும் அதற்கானக் காரணங்களைத் தேடி அவர்கள்பால் அனுதாபமும்பட நம்மால் முடிகிறது.

ஆனால், கலைஞர்கள் கம்பீரமானவர்கள். சுதந்திரமானவர்கள். நான் மேற்சொன்ன ஐந்து உதாரணங்களையும் பார்ப்பீர்களேயானால், அதிலே வருகிற கலைஞர்களின் விருப்பங்களும், கொள்கைகளும், ரசனைகளும், வெளிப்பாடுகளும் வேறு வேறானவையாக இருக்கும். ஆனால், அடிப்படையில் கலைஞர்களுக்கேயுரிய கம்பீரத்தையும், சுதந்திரத்தையும் உணர்ந்தவர்கள் அவர்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆணித்தரமாக அவற்றை நிலைநாட்டுபவர்களும் கலைஞர்கள். நேயர் விருப்பம் போல கலைஞர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களை அவமானப்படுத்துகிற விஷயம் இருக்க முடியாது. அதற்காகக் கலைஞர்கள் கோபம் கொண்டால் அதன் தார்மீகத்தின் உண்மையொளி மற்றவர்களை நெளியவைத்து பதிலுக்குக் கோபப்பட வைக்கிறவையாக இருக்கும். அத்தகையக் கலைஞரின் கோபமொன்றை இந்தப் பக்கத்தில் உள்ள பசுவைய்யாவின் உன் கவிதையை நீ எழுது" என்கிற பின்வரும் கவிதை காட்டுகிறது. கலைஞர்கள் அனைவரும் இக்கவிதையைத் தங்களின் பிரகடனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிற அளவுக்கு என்னைக் கவர்ந்த கவிதை இது.

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

No comments: