Tuesday, June 08, 2004

மனித நேயம்

குழந்தைகள் வாழ்வு உணர்வுமயமானது. மொழிமயமானதும் கூட. கொஞ்ச நேரம் குழந்தைகள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் எவ்வளவு உற்சாகமாகவும், அலுப்பின்றியும், விளையாட்டு நோக்குடனும் ஆனால் முழுமையான ஈடுபாட்டுடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். அவர்கள் மொழியிலும் உணர்வுகள் வெளிப்பாட்டிலும் சப்-டெக்ஸ்ட் தேடுகிற இலக்கியவாதிகள் ஏமாந்து போவார்கள். அன்பு, அழுகை, பிடிவாதம், மகிழ்ச்சி, தோழமை என்று பலதரப்பட்ட உணர்வுகளைக் குழந்தைகள் வெளிப்படுத்துகிற விதம் அதீதமானதாகத் தோன்றினாலும் செயற்கையாக யாருக்கும் தோன்றாது. ஏனென்றால், குழந்தைகள் இயற்கையின் வெளிப்பாடுகள். வரப்பிரசாதங்கள். குழந்தைகள் பேசிக் கொள்வதை யாரும் பிரசங்கம் என்றோ வயதுக்கு மீறிய முதிர்ச்சி என்றோ அழைப்பதில்லை. மாறாகக் குழந்தையின் சூட்டிகை என்றும், "அட, இந்த வயசிலேயே இவ்வளவு வியாக்கியானமா" என்றும் வியந்து பாராட்டுகிறோம். மற்றவர்கள் பாராட்டுகிறார்களா இல்லையா என்பது பற்றியும்கூட குழந்தைகள் ஆரம்பத்தில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மனதுக்குப் பிடித்ததைத் தங்களுக்குத் தெரிந்த மாதிரி செய்து கொண்டு ஆனந்தமயமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் தான் இது நல்லது, இது கெட்டது, இது சூட்டிகைத்தனம், இது ஏமாளித்தனம், இது பாதுகாப்பானது, இப்படி வாழ வேண்டும் என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் குழந்தைகளின் மேல் பாரமேற்றி அவர்களுக்கு நல்வழி காட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை குறித்தெல்லாம் பிரக்ஞை உள்ள பெற்றோர் கூட இதைச் செய்வதில் இருந்து முழுவதுமாகத் தப்பித்துவிட முடியாது என்பது வாழ்வின் விசித்திரம். குழந்தைகள் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலுமே அதைப் பெற்றோர்கள் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும், குழந்தைகளின் குழந்தைமையைப் போக்குவதில் பெற்றோர் ஆற்றுகிற கடமை குறித்து வருந்துகிற பெற்றோர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

குழந்தைகள் அன்பு மயமானவர்கள். தோழமைக்கும் மனிதநேயத்துக்கும் அவர்களை மிகச் சிறந்த உதாரணமாகக் காட்ட முடியும். என் பக்கத்து வீட்டில் என் பால்ய காலம் முதற்கொண்டு வசிக்கிற தோழர் ஒருவர் எனக்குண்டு. எங்கள் குடும்பங்களுக்குள் உறவொன்றும் அவ்வளவு சிலாகிக்கத் தக்கதாய் இல்லை. எங்கள் பாட்டனார் காலம் முதற்கொண்டே கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள், விஷயங்களை அணுகுவதில் கருத்து மாறுபாடுகள், வாழ்க்கைத் தர வேறுபாடுகள் என்று இரண்டு குடும்பத்துக்கும் இடையே வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், அதை எல்லாம் மீறி மூன்றாம் வகுப்பிலிருந்து என் வகுப்புத் தோழராய் இருந்து வந்தவர் அவர். எங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நட்பினிடையே பழம்பிரச்சினைகளைக் கொண்டுவரக் கூடாது என்கிற முதிர்ச்சி இருந்தது எங்கள் பாக்கியம். இன்றைக்கும் ஊருக்குப் போனால் அதே நெருக்கத்துடன் பேசவும் சண்டை போடவும் அந்த நண்பருக்கும் எனக்கும் முடிகிறது. வாழ்க்கை உண்டாக்குகிற பிளவுகளைத் தாண்டிய உறவுகளைச் சிறுவயது நட்பும் நேசமும் உருவாக்க முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்தான். அவரவர் வாழ்விலிருந்து இப்படி ஆயிரம் உதாரணங்களைத் தோண்டி எடுக்க முடியும்.

இன்னொரு நிகழ்ச்சி. ஒரு மூன்றரை வயது குழந்தை. தாயாரிடம் சாப்பிட ஒரு ப்ளம் பழம் கேட்கிறது. தாயார் தருகிறார். பழத்தை ருசித்துச் சாப்பிடுகிறது. சாப்பிடுவதற்குப் பொதுவாக அடம் பிடிக்கிற குழந்தை ஒரு ப்ளம் பழத்தை முழுமையாகச் சாப்பிட்டு விட்டதைப் பார்த்த சந்தோஷம் தாயாருக்கு. குழந்தையிடம் "இன்னொரு பழம் சாப்பிடுகிறாயா" என்று கேட்கிறார். "சரி, கொடும்மா" என்கிறது குழந்தை. இரண்டாவது ப்ளம் பழத்தைத் தாயாரிடமிருந்து கையில் வாங்கிக் கொண்டது. சாப்பிடாமல் ஒரு நிமிடம் தயங்கியது. பின்னர் தாயாரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. "அப்பாவுக்குப் பழம் இருக்கிறதா, அவர் சாப்பிடுவதற்கு." தாயார் பதில் சொல்கிறார். "ம்ம். அப்பாவுக்கு இருக்கு. நீ சாப்பிடு." "அண்ணாவுக்கு இருக்கிறதா" "ம்ம். அண்ணாவுக்கும் இருக்கிறது. நீ சாப்பிடு" என்கிறார் தாயார். "உனக்கு இருக்கிறதா அம்மா" என்றும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்கிறது குழந்தை. அதன் பின்னரே அந்த இரண்டாவது ப்ளம் பழத்தைச் சாப்பிடுகிறது. சில நேரங்களில் தன் மூடு சரியில்லை என்றால் தன் விளையாட்டுச் சாமான்களைக் கூட தன் சகோதரனிடம் பகிர்ந்து கொள்ள மறுக்கிற அதே குழந்தைதான் இயற்கையாக இவ்வளவு பகிர்தலுடனும் நேசத்துடனும் இருக்கிறது. சொல்லிக் கொடுப்பதால் வருகிற விஷயம் இல்லை இது. குழந்தைகளின் இயற்கை சுபாவமே இதுதான் என்று அறியலாம். இந்தக் குழந்தைபோல எல்லாக் குடும்பங்களிலும் ஒரு குழந்தை இருக்கும் என்பதே குழந்தைகள் வெளிப்படுத்துகிற இயற்கையான நேசத்துக்கு கட்டியம்.

மூன்றாவது நிகழ்ச்சி. ஓர் இரண்டரை வயது குழந்தை. தந்தையார் காலையில் அலுவலகம் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார். குழந்தையிடம் "ஆபிஸீக்குப் போய்விட்டு வருகிறேன். ஐ லவ் யூ. பை பை" என்று சொல்கிறார். குழந்தை ஓடி வந்து அணைத்துக் கொண்டு பதிலுக்கு ஐ லவ் யூவும் பை பையும் சொல்கிறது. தந்தையாரும் குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு தட்டிக் கொடுக்கிறார். பின்னர் மனைவியிடம் "போயிட்டு வரேன்மா" என்று கிளம்புகிறார். தந்தையின் கையைப் பிடித்து நிறுத்திக் குழந்தை சொல்கிறது. "அப்பா, அம்மாவையும் ஹக் பண்ணி முத்தா கொடுத்துட்டுப் போ."

மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்தவை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்கிற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பழக்கமான நிகழ்வுகளாகவும் இருக்கலாம். இதே நிகழ்வுகளாக இல்லாவிட்டாலும், இதே பொருளோ அல்லது இதே போன்று குழந்தைகளின் விசாலமான மனப்பான்மையையும் பிறருக்காகக் கவலைப்படும் இருதயத்தையும் வெளிக்காட்டுகிற நிகழ்ச்சிகளைப் பிறநாட்டுக் குழந்தைகளிடமும் காண முடியும். அவற்றைப் பார்க்கிற யாரும் குழந்தைகள் காட்டுகிற நேசத்திலும் முதிர்ச்சியிலும் நெக்குருகிப் போவார்கள். குழந்தைகளின் அச்செய்கையை செயற்கை என்றோ, அதீதம் என்றோ, பிரசாரம் போல் இருக்கிறது என்றோ சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், குழந்தைகள் தெய்வீகக் குணங்கள் கொண்ட பாக்கியவான்கள் என்கிற நம்பிக்கை எனக்கு.

தமிழ்நாடு. ஒரு பள்ளிக் கூடம். மாலை வகுப்புகள் முடியப் போகின்றன. மாணவர்கள் புத்தக மூட்டைகளைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள். வெளியே தின்பண்டம் விற்பவர்கள் தயாராகி விட்டார்கள். ஆசிரியர் வீட்டுப் பாடத்தைக் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பாக இருக்கலாம். வகுப்பிலேயே பெரிய மாணவன் எழுந்து "சார் நான் போக வேண்டும்" என்கிறான். எதற்காகப் போக வேண்டும் என்று கேட்கிறார் ஆசிரியர். "நான் போக வேண்டும்" என்கிற பதிலே வருகிறது. "உடம்பு சரியில்லையா" என்று கேட்கிறார் ஆசிரியர். "சார், நான் போக வேண்டும்." "உங்க அப்பா அம்மா யாரும் வந்திருக்கிறார்களா" என்று கேட்கிறார் ஆசிரியர். "சார் நான் போக வேண்டும்". "என்னலே, சும்மா சும்மா போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். என்ன காரணம்" என்று கேட்கிறார் ஆசிரியர். மாணவன் சொல்கிறான். "சார், பள்ளி இறுதி மணி அடித்ததும் ஓடிச் சென்று பள்ளிக் கூடத்தின் கேட்டை யார் முதலில் தொடுவது என்று எங்களுக்குள் ஒரு போட்டி இருக்கிறது. அதில் எல்லாரும் ஜெயித்திருக்கிறோம். நான் கூட ஜெயித்திருக்கிறேன். ஆனால் ஒருவனால் முடியாது" என்று சொல்கிறான். "ஏன்" என்று ஆசிரியர் கேட்கிறார். இரு கால்களும் செயலிழந்து போய் ஊன்று கோல் உதவியுடன் வேறொரு இளைய வகுப்பைச் சார்ந்த ஒரு மாணவன் நடப்பதைப் பற்றிய காட்சி திரையை நிறைக்கிறது. பின்புலமாய் ஒரு பாடல். பின்னர், இந்தப் பெரிய மாணவன் அந்த மாணவனைத் தூக்கித் தோளில் அமர்த்திக் கொண்டு மணியடித்ததும் ஓட, மாணவர் கூட்டம் பின்தொடர்ந்து ஓடுகிறது. தோளில் அமர்ந்தபடி கேட்டைத் திறந்த மாணவன், கட்டை விரலை உயர்த்தி வெற்றி என்று காட்டுகிறார். மனித நேயம் மலரட்டும் என்ற வாசகத்துடன் மனித நேயம் என்கிற இந்த ஐந்து நிமிட குறும்படம் நிறைவுறுகிறது. சரவணன் சொக்கலிங்கம் தயாரித்து சேகர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். வேறொரு இடத்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் பார்வையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது என்று அறிகிறேன். இப்படத்தை ஜீன் 5, 2004 அன்று நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய தமிழ்க் கலைப்பட விழாவில் பார்த்தேன். தாமதமாக வந்தவர்களுக்காக நியூ ஜெர்ஸியிலும் இரண்டாவது முறையாகத் திரையிடப்பட்டது.

சொல்கிற விஷயத்தைச் சத்தமாகச் சொல்கிறது, சப்-டெக்ஸ்ட்வுடனும் இன்னும் மென்மையாகவும் சொல்லியிருக்க வேண்டும் என்று இப்படத்தைப் பற்றிச் சில விமர்சனங்களைப் படித்தேன். குழந்தைகளைப் பற்றி நான் விவரித்த உதாரணங்களைக் கொண்டு பார்க்கும்போது எனக்கென்னவோ இப்படம் இயல்பாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. நம்முடைய புத்திசாலித்தனத்தையும் மேதாவித்தனத்தையும் குழந்தைகள் மேல் கொட்டுவதில் நிறையவே யோசிக்க வேண்டும். ஒரு குழந்தையின் மனநிலையோடு இப்படத்தைப் பார்த்தால் இதன் செய்தியில் செயற்கையோ அதீதமோ இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. வர்த்தகத் தமிழ்ச் சினிமாவைப் பார்த்தோமேயானால், குழந்தைகளை வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடையவர்களாகவும், பிஞ்சிலே பழுத்தவர்களாகவும் காட்டி ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அவ்வாறெல்லாம் இருக்குமேயானால் அதையே நான் செயற்கையென்று சொல்லுவேன்.

இப்பட விழாவில் மரத்தடி இணையக் குழுவைச் சார்ந்த நண்பர்கள் பலரை முதன்முறையாகச் சந்தித்தேன். திண்ணையில் எழுதிய திரு.டெக்ஸன், திரு.ராஜன் குறை ஆகியோரையும் முதன்முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. "அமெரிக்கா வந்தும் தப்பிக்க முடியாது" என்று கணையாழியில் எழுதி வந்தவர் டெக்ஸன் என்று அறிந்தேன். கணையாழியில் அவற்றைப் படிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அக்கட்டுரைகளின் மென்பிரதி இருந்தால் டெக்ஸன் அவற்றைத் திண்ணையில் இட்டு என்னைப் போன்ற வாசகர்களுக்கு உதவ வேண்டுமென்று வேண்டுகிறேன். நேரமும் இறையருளும் இருப்பின் இப்பட விழாவில் நான் பார்த்த படங்கள் எழுப்பிய சிந்தனைகளைக் குறித்து அவ்வப்போது பகிர்ந்து கொள்வதாக உத்தேசம்.

3 comments:

Boston Bala said...

ஒவ்வொரு படத்துக்கும் இவ்வாறு விரிவாக எழுத வேண்டுகிறேன். அணு அணுவாக ரசித்து, அதை எழுத்திலும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அந்தப் படத்தை மைக்ரோ-அனாலிஸிஸ் செய்ய விரும்பவில்லை. ஆனால், இந்த மாதிரி எல்லாப் படங்களுக்கும் அறிமுகம் கிடைக்குமானால், அவற்றில் எனக்குத் தோன்றியதை இன்னும் விரிவாக எழுதியிருப்பேன் :)

சோகமயமான பிண்ணனி பாடல், கால் சரியில்லாதவன் தன்னம்பிக்கை இல்லாமல் பிறர் தோளில் சவாரி போன்று தேவையில்லாத வேறு சிந்தனைகள் தூக்கலாக கண்ணில்பட்டது. 'மனித நேயம்' என தலைப்பு வைத்துவிட்டு ஐந்து நிமிட நேரத்தில் ஃபோகஸ் இல்லாமல் அலைபாய்ந்தது என்று இப்பொழுதும் கருதுகிறேன்.

அனைத்து குறும்படங்களின் பார்வைக்கும் அவலுடன் காத்திருக்கிறேன் சார். நன்றி...

PKS said...

Baba, Sir and More ellam enaku Allergy. Please call me by name. Thanks for your comments. I will try. :-) By PK Sivakumar

AJeevan said...

வகுப்பிலேயே பெரிய மாணவன் எழுந்து

"சார் நான் போக வேண்டும்" என்கிறான்.

"எதற்காகப் போக வேண்டும்" என்று கேட்கிறார் ஆசிரியர்.

"நான் போக வேண்டும்" என்கிற பதிலே வருகிறது.

"உடம்பு சரியில்லையா" என்று கேட்கிறார் ஆசிரியர்.

"சார்இ நான் போக வேண்டும்."

"உங்க அப்பா அம்மா யாரும் வந்திருக்கிறார்களா" என்று கேட்கிறார் ஆசிரியர்.

"சார் நான் போக வேண்டும்".

"என்னலே, சும்மா சும்மா போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். என்ன காரணம்" என்று கேட்கிறார் ஆசிரியர்.

மாணவன் சொல்கிறான். "சார், பள்ளி இறுதி மணி அடித்ததும் ஓடிச் சென்று பள்ளிக் கூடத்தின் கேட்டை யார் முதலில் தொடுவது என்று எங்களுக்குள் ஒரு போட்டி இருக்கிறது. அதில் எல்லாரும் ஜெயித்திருக்கிறோம். நான் கூட ஜெயித்திருக்கிறேன். ஆனால் ஒருவனால் முடியாது" என்று சொல்கிறான்.

"ஏன்" என்று ஆசிரியர் கேட்கிறார்.

இரு கால்களும் செயலிழந்து போய் ஊன்று கோல் உதவியுடன் வேறொரு இளைய வகுப்பைச் சார்ந்த ஒரு மாணவன் நடப்பதைப் பற்றிய காட்சி திரையை நிறைக்கிறது. பின்புலமாய் ஒரு பாடல்.

பின்னர், பெரிய மாணவன் அந்த மாணவனைத் தூக்கித் தோளில் அமர்த்திக் கொண்டு மணியடித்ததும் ஓட, மாணவர் கூட்டம் பின்தொடர்ந்து ஓடுகிறது. தோளில் அமர்ந்தபடி கேட்டைத் திறந்த மாணவன், கட்டை விரலை உயர்த்தி வெற்றி என்று காட்டுகிறார். மனித நேயம் மலரட்டும் என்ற வாசகத்துடன் மனித நேயம் என்கிற இந்த ஐந்து நிமிட குறும்படம் நிறைவுறுகிறது.

குழந்தைகளின் மனதை புடம் போட்டுள்ள இக் கட்டுரை வழி செழுமையாக மனிதநேயம் குறும்படத்தை மனக்கண்களால் தழுவ முடிகிறது.

சிவக்குமாரின் தேடல் நிறைந்த கண்கள் ஏனையோர் கண்களையும் திறக்குமாறு செய்திருக்கிறது.

இங்கே ஒரு முக்கியமான வார்த்தை தவற விடப்பட்டு விட்டது.

அதாவது உதவும் நோக்கு கொண்ட பெரிய மாணவனிடம் ஆசிரியர்
"இன்னைக்கு மட்டும் போ.............."
எனும் போது
"இன்னைக்கு மட்டுமில்ல, என்னைக்கும் போவேன்.........."
என்று அந்த மாணவன் திடமாக கூறும் வரிகள் மனத நேயம் கொண்ட எந்த ஒரு மனிதனும் என்றைக்குமே மாற மாட்டான் என்பதையே உறுத்தி நிற்கிறது.

மனத நேயம் கொண்ட, நல்லவர்களும், குழந்தைகள் போலவே நல்லதை செய்ய ஒரு போதும் தயங்குவதில்லை.

மனித நேயத்துக்கு, சுவிசில் நடைபெற்ற குறும்பட விழாவில் சிறந்த தொகுப்புக்கான விருதை தேர்வுக் குழவினர் கொடுத்தாலும், பார்வையாளர் தேர்வில் 85 சதவிகிதமான மக்களால் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டதை என்னால் மறக்கவே முடியவில்லை.

அக் குறும்பட விழாவைக் காணாதவர்களுக்கு இது ஒன்றும் முக்கிய விடயமாகத் தோன்றாது.

ஆனால் தமிழ் மொழியையோ, அதன் கலாச்சார பின்னணியையோ அறிந்திராத, சுவிசின் வெள்ளை இன மக்களது வாக்குகள் தேர்வுக் குழவை அதிர்ச்சியடைய வைத்தது...............

என்னையும்தான்..........................

வாழ்த்துக்களுடன்
அஜீவன்