Wednesday, June 09, 2004

சண்டை போடுவோம் வா

(இந்தக் கவிதையை சத்தியமாய் ஜீன் 4, 2004 அன்று எழுதி இவ்வளவு நாள் நம்பி சொல்வதுபோல் வடக்கு பக்கம் வைத்திருந்தேன் என்றால் எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியவில்லை. ஆனாலும், இந்த வார வலைப்பதிவுச் சூழலில் இந்த முன் குறிப்புடன் இக்கவிதையை இடுவது நல்லது என்று தோன்றியதால் சொன்னேன். இல்லையென்றால், கவிதையின் பொதுத்தன்மைக்கு தனியடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்பதாலேயே இந்த இடைச் செருகல்.)

எனக்கு வருவதை எழுதுகிறேன்
பிடித்திருந்தால் படி
இல்லையென்றால் கிழித்தெறி
கோபமும் ஆவேசமும் பீறிட்டெழுந்தால்
என் எழுத்தின் மீது சாணியடி
அல்லது
அதைத் தீயிட்டுக் கொளுத்து
ஆனால் என் எழுத்துக்குக்
கட்டளைகள் போடாதே
வர்ணங்கள் பூசாதே
இஸங்களுக்குள் அடக்காதே
கட்டுப்பாடற்றுத் திரியும்
காட்டுக் குதிரையைக்
கண்டுகொள்ள முடியவில்லையென்றால்
ஓநாயென்ற ஒப்பாரி எதற்கு?

உனக்கு வருவதை நீயெழுது
எனக்குப் பிடிக்கவில்லையென்றால்
சாணியடிக்க நான் வருகிறேன்
நாம்
பரஸ்பரம் சாணியடித்துக் கொண்டிருக்கும்போது
நம் எல்லாருக்கும் பிடித்தமாதிரி
நம் எழுத்து
தன்னையே எழுதிக் கொள்ளக் கூடும்

வாழ்வின் மீதும்
மனிதர்மீதும் வைக்காத
இந்த நம்பிக்கையை
நம் எழுத்தின்மீது வைத்துவிட்டுச்
சண்டை போடலாம் வா
சட்டை கிழிக்கலாம் வா
வார்த்தைகளுக்குள் வாழ்க்கையை
அடக்கிவிட முடியவில்லை என்பதால்தானே
இந்த மாதிரி எக்ஸ்ட்ரா பிட்டிங்
இலக்கியத்துக்கும் தேவையாயிருக்கிறது.

வார்த்தைகள் கைவசமாகும்வரை
சரியான முறையில் சண்டைபோடவாவது
தெரிந்து கொள்வோம் வா

No comments: