குழந்தையாக இருக்கும்போது
டாக்டராகவும் எஞ்சினியராகவும்
பார்த்தனர் பெற்றோர்
அவன் குழந்தையாகவே இருந்தான்
பள்ளியில் படிக்கும்போது
ஆசிரியராகிற ஆசை வந்தது
ஆனால் மாணவனாகவே இருந்தான்
அவன் பேச்சை ரசித்த தாத்தா
வக்கீலாகச் சொன்னார்
எதிர்வாதம் செய்வதில்
தன்னைக் காண்பவனாகவே உணர்ந்தான்
வாலிபம் வளர்க்கிற கனவுகளில்
சினிமா நாயகனாகவும்
வனிதைகளின் மணாளனாகவும்
வலம் வந்தான்
நிதர்சனத்தில்
தினமும் கண்ணாடியில்
தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்
நண்பர்கள் கிடைத்தனர்
நாலுவிதமாய்ப் பேசினார்கள்
நாற்பது ரசனைகள் கலந்தன
சமரசங்கள் சகஜமாகிப் போனாலும்
தனித்துவம் இழக்காமல் நின்றிருந்தான்
வேலையில் சேர்ந்த புதிதில்
டாட்டா பிர்லாவை நினைத்திருந்தான்
மனதில் தன்னையே சுமந்திருந்தான்
ஊழியன்
நிர்வாகி
ஆர்வலன்
கணவன்
தந்தை என்று
காலம் சுழட்டி அடிக்க
முகம் மாற்றி விளையாடும்
மும்முரங்களில் ஆழ்ந்துபோனான்
மற்றவையாக வேண்டிய வயதில்
அவனாக இருந்துவிட்டு
அவனாக வேண்டிய வயதில்
எல்லாமுமாகித்
தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment