முடிந்து போகும்
வாழ்க்கை பற்றியே பேசுகின்றன
முடிவில்லாமல் வாழ்கின்ற
இலக்கியங்கள்
***** ***** *****
நாளைக்கான கவிதையை
இன்றே எழுதிவிட முடிகிறது
நாளைக்கான விடியலை மட்டுமேன்
இன்றே சொல்லிவிடக் கூடுவதில்லை
***** ***** *****
வரிசையில் போகும்
எறும்புக்குத் தெரியும்
யார் முதலென்று
முந்திச் செல்கிற பந்தயங்களால்
வருகிற உபத்திரவங்கள்
***** ***** *****
பயணிகள் உட்கார்ந்திருக்கத்
தான் மட்டும் ஓடுகிறோமென்பது
காரறிந்த ரகசியம்
**** ***** *****
கொஞ்சம் யோசித்தால்
கொஞ்சம் தேடினால்
கொஞ்சம் பொறுத்தால்
நல்ல கவிதை கிடைத்து விடலாம்
ஆனால்
அழகற்றதன் அழகை
அப்புறம் எப்படிச் சொல்வது?
***** ***** *****
எழுதாமல் இருப்பது சுகம்
எழுதிக் கொண்டிருப்பதும் சுகம்
எழுதி எழுதித் தீர்த்தபின்
எதுவும் எழுதவில்லை
என்றுணர்வதும் சுகமே
***** ***** *****
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment