Friday, September 10, 2004

பள்ளி மாணவி போட்ட புதிர்

நண்பரின் மகள் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்குப் போகிறார். மிகவும் சூட்டிகையான குழந்தை. அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து கூட தன் கல்வி குறித்து பாராட்டுக் கடிதம் பெற்றிருக்கிறார். இந்த ஊரில் எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று இது. எந்தக் கட்சி ஆண்டாலும், கல்வியில் குறிப்பிட்ட தரத்தைப் பேணுகிற குழந்தைகளுக்கு ஜனாதிபதி போன்ற அரசாங்க உயர்பதவி வகிப்போரிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் வருகிற வழக்கம் இருக்கிறது. கல்வியில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு மேல் ஈட்டிய மாணவ மாணவிகளுக்கு அனுப்பப்படுகிற ரெடிமேட் பாராட்டுக் கடிதம் இது என்றாலும், அக்கடிதம் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் உண்டாக்குகிற உற்சாகமும் மகிழ்ச்சியும் உத்வேகமும் கணிசமானது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கூட ஆட்சியில் இருக்கிற தலைவர்கள் அரசாங்கப் பள்ளிகளில் சிறந்து விளங்குகிற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும்விதமாக இந்த மாதிரியான செய்கைகளில் ஈடுபடுவது உதவும். அதுமட்டுமில்லாமல் இங்கே, மத்திய அரசாங்கம் (Federal Government) வரையறுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட தர மதிப்பீடுகளைப் பூர்த்தி செய்யும் பள்ளிகளுக்கு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட நீல ரிப்பன் பள்ளி (Nationally Recognized Blue Ribbon School) என்கிற பட்டத்தையும் தருகிறது. இத்தகைய தர மதிப்பீடுகள் இன்னும் வலுவானவையாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையோர் இருப்பர். ஆனாலும், இத்தகைய மதிப்பீடுகளும் அங்கீகாரமும் இருப்பது பள்ளிகளை வகைப்படுத்தி அறியவும், நன்றாகச் செயல்படுகிற பள்ளிகள் மேலும் சிறக்கவும் உதவுகின்றன. அமெரிக்காவின் ஆரம்ப, இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகள் கல்வி அமைப்பு, அதற்கான நிதி ஆதாரங்கள், மதிப்பீட்டு முறைகள், ஆசிரியர்களின் தரம் ஆகியன குறித்து விரிவாகத் தமிழில் எழுதப்பட வேண்டும். இந்திய, தமிழ்நாட்டுக் கல்வி அமைப்போடு ஒப்பிடவும், விவாதிக்கவும், நம் நாட்டில் கல்வி தொடர்பான சீர்திருத்தங்களைக் கொணரவும் அவை உதவும். என் சோம்பேறித்தனத்தைக் களைந்துவிட்டு சற்று மெனக்கெட்டு நான் எழுதுவதற்கு முன்னால் இவ்விஷயத்தில் என்னைவிட அதிக அனுபவமும் அறிவும் உடையவர்கள் எழுதினாலும் மகிழ்ச்சியே. என் அனுபவம் ஆரம்பப் பள்ளி படிக்கிற ஒரு குழந்தையின் தந்தை எழுதுகிற குறிப்புகளாகவே இருக்கும். துறைசார் நிபுணர்கள் இன்னும் ஆழமாக எழுத முடியும்.

நண்பரின் மகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டு, அமெரிக்க பள்ளிக் கல்வியினுள் போய்விட்டதற்கு மன்னிக்கவும். போன தடவை சந்தித்த போது நண்பரின் மகள் அங்கிருந்த நண்பர்கள் (பெரியவர்கள், குழந்தைகள்) அனைவரையும் ஒரு கேள்வி கேட்டார். அவருடைய ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் கேட்ட கேள்வி அது என்றும் சொன்னார். கேள்வியினுள் தந்திரங்கள், புத்திசாலித்தனமான யுக்திகள் எதுவும் இல்லை. எந்த அறிவையும் அல்லது நுட்பத்தையும் மதிப்பிடுகிற கேள்வியும் இல்லை அது. கேள்விக்கு பதிலளிப்பவர் தான் நினைப்பதை மட்டும் பதிலாக வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கேள்விக்கு சரியான விடை, தவறான விடை என்றெல்லாம் எதுவும் இல்லை. இதையெல்லாம் சொல்லி அவருடைய ஆசிரியர் மாணவர்களிடம் கேட்ட கேள்வியை அவர் எங்களிடம் கேட்டார். இந்தக் கேள்வி எதற்காகக் கேட்கப்படுகிறது என்பது மட்டும் மாணவர்களுக்குச் சொல்லப்படவில்லை.

அந்தக் கேள்வி இது.

நடுக்கடலில் புயலில் ஒரு படகு தத்தளித்து மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதில் இருவர் இருக்கிறார்கள். அந்த இருவரும் கூட படகோடு சேர்ந்து மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் இரண்டு கைகளும் இழந்த உடல் ஊனமுற்றவர். இன்னொருவர் உடல்ரீதியாக எந்தவிதமான இழப்புகளும் இல்லாதவர். நீங்கள் ஒருவரை மட்டும் காப்பாற்ற முடிகிற நிலையில் இருக்கிறீர்கள். நன்றாக கவனியுங்கள். உங்களால் அவர்கள் இருவரில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும். அதேபோல, யாரையும் காப்பாற்ற விருப்பமில்லை என்றும் சொல்லிவிட முடியாது. அப்படி இருக்கும்போது, இருவரில் எந்த ஒருவரை நீங்கள் காப்பாற்றுவீர்கள்? முடிந்தால் ஏன் என்று காரணம் சொல்லவும். காரணம் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை.

இந்தக் கேள்விக்கு அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் தத்தம் பதில்களையும், அதற்கான காரணத்தையும் சொன்னோம். பின்னர் நண்பரின் மகள் இந்தக் கேள்வி மாணவர்களிடம் எதற்காகக் கேட்கப்பட்டது என்று விளக்கினார்.

அதை நான் சொல்வதற்கு முன், இந்தக் கேள்விக்கு உங்கள் பதிலும், பதிலுக்கான காரணமும் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் யோசியுங்களேன்.

(தொடரும்)

No comments: