Monday, September 13, 2004

புதிரின் பதில்

இது ஓர் உளவியல் ரீதியான புதிர். மனவோட்டத்தையும் எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களுக்கு வர உதவுகிற புதிர் என்று நம்புகிறேன். அதனால்தான், இரண்டு முடிவுகளில் எது உங்கள் முடிவு என்று கேட்கப்பட்டாலும், உங்கள் முடிவு இரண்டில் எதுவாக இருந்தாலும், அது தவறான விடை இல்லை என்று ஆசிரியர் முன்கூட்டியே சொல்லியிருக்கிறார். இப்போது பதில்களின் அடிப்படையில் பதிலுக்கான விளக்கங்களாக ஆசிரியர் மாணவர்களுக்குச் சொன்னதைப் பார்ப்போம்.

ஊனமுற்றவரைக் காப்பாற்றுகிற முடிவை எடுத்தவர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சியினர் (Democrats).

உடல் அளவில் எந்தவித இழப்பும் இல்லாதவரைக் காப்பாற்றுகிற முடிவை எடுத்தவர்கள் அனைவரும் குடியரசுக் கட்சியினர் (Republicans).

இந்த விளக்கத்தைச் சொன்ன ஆசிரியர், ஒருவர் மனப்பாங்கு எப்படி இருந்தாலும் அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. ஜனநாயகக் கட்சியோ குடியரசு கட்சியோ எது சார்ந்து இருப்பதும் அவரவர் விருப்பம் என்று சொன்னாராம்.

இந்தப் புதிரைப் பற்றி யோசிக்கும்போது எனக்குத் தோன்றியவை இவை.

1. ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் அரசியல் கட்சிகள் குறித்த பிரக்ஞையைக் கொணர்வதற்காக இத்தகைய புதிர்களைப் போடும் ஆசிரியரைப் பாராட்ட வேண்டும். மாணவப் பருவத்தில் அரசியலில் ஈடுபடுவது சரியில்லை என்று என்னளவில் நம்புகிறேன். மாணவர்களின் முதல் கடமை படிப்பது, இரண்டாவது கடமை படிப்பது, மூன்றாவது கடமை படிப்பது என்று லெனின் சொல்லியதாகப் படித்த ஞாபகம். ஆனால், அரசியலைக் குறித்த அறிவையும், சிந்தனையையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. அதற்கு இத்தகைய புதிர்கள் உதவலாம்.

2. ஒரே ஒரு கேள்விக்கான பதிலின் அடிப்படையில் இத்தகைய அனுமானங்களுக்கும் விளக்கங்களுக்கும் வருவது சரியில்லை. எனவே, இந்த ஒரு கேள்வியின் அடிப்படையில் ஒருவரை ஜனநாயகக் கட்சியின் மனப்பாங்கு உடையவரா, குடியரசு கட்சியின் மனப்பாங்கு உடையவரா என்று தீர்மானித்துவிட முடியாது. மனவோட்டங்களை அறிய உதவும் உளவியல் ரீதியான பரீட்சைகள் எல்லாமே பல ஒத்த மற்றும் வேறுபட்ட கேள்விகளின் அடிப்படையில் அமைவது வழக்கம். பலப் பல கேள்விகள், நுணுக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேரமெடுத்துச் செய்யப்படும் ஆய்வுகள் முன்வைக்க வேண்டிய சாத்தியக் கூறுகளாக (inference) இந்த விளக்கங்கள் அமையலாம். அத்தகைய ஆய்வுகளில் கூட தீர்மானமான பதில் என்று எதையும் முன்வைக்க முடியாது. ஆனால், மாணவர்கள் ஆறாம் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதால் எளிமையின் பொருட்டு ஆசிரியர் ஒரு கேள்வியுடன் முடிவுக்கு வந்துவிடுகிற மாதிரி வைத்துவிட்டார் என்று சொல்லிக் கொள்ளலாம். என்னுடன் இதற்கு பதிலளித்த நண்பர்கள் அனைவரும் விளக்கத்துடன் ஒத்துப் போயினர். சிலர் மட்டுமே தங்களை ஜனநாயகக் கட்சியைக் காட்டிலும் ஜனநாயகவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள் என்று சொன்னாலும், குடியரசுக் கட்சியா ஜனநாயகக் கட்சியா என்ற கேள்வி எழும்போது, குடியரசு கட்சியைத் தவிர எந்த கட்சியென்றாலும் தேவலை என்பதால் இது சரியான விளக்கமே என்றனர்.

3. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நிற்கிற மிதவாதிகளும், சுயேச்சையாளர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். மிதவாதிகளும், சுயேச்சைகளுமே பலநேரங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற சக்தி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை அடையாளப்படுத்துகிற மாதிரியான சாய்ஸ்சஸ் எதுவும் இந்தப் புதிரில் இல்லாதது இதன் குறை. இந்த நாட்டின் அரசியலில் எனக்குப் பிடித்த விஷயம் இந்த இரு கட்சிகளிலும் இருக்கிற மிதவாதிகள் (moderates). பிரச்னைகளில் ஒத்த கருத்தை அடையவும், சமரசம் செய்து கொள்ளவும், கொள்கை ரீதியான அடிப்படைவாதிகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் மிதவாதிகள் பெருமளவில் உதவுகின்றனர். உதாரணமாக, குடியரசு கட்சியைச் சார்ந்த மிதவாதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொள்கைகளில் குடியரசுக் கட்சியுடன் முரண்படுபவராகவோ அல்லது ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறவராகவோ இருப்பார். இதே போல ஒரு உதாரணத்தை, ஜனநாயகக் கட்சியின் மிதவாதி பற்றியும் சொல்லலாம். பிரச்னை என்று வரும்போது இரண்டு கட்சிகளும் கூடிப் பேசி ஒத்த முடிவை எடுக்கவும், சமரசங்கள் செய்து கொள்ளவும், சட்டங்களை நிறைவேற்றவும் இத்தகைய மிதவாதிகள் பெரிதும் உதவுகின்றனர். காங்கிரஸ் மற்றும் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மிதவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் மகிழ்பவர்கள் உண்டு. இதிலிருந்தே மிதவாதிகள் எவ்வாறு பத்திரிகைகளாலும் மக்களாலும் மதிக்கப்படுகிறார்கள் என்பதை அறியலாம். ஆனால், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் இத்தகைய போக்கு இல்லாமல், தலைவர் சொல்வதையெல்லாம் தலைமேல் வைத்துத் தொண்டர்கள் ஆடுகிற நிலை இருப்பது வருந்தத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த மிதவாதிகள் போன்று இந்தியாவின் எல்லாக் கட்சிகளிலும் மிதவாதிகள் தலையெடுக்க வேண்டும். ஓர் இயக்கமாகத் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் இந்திய அரசியலுக்கும் அது நல்லது.

4. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கிற அரசியல் கட்சிகள் சார்புடையோரை அறிய இந்த மாதிரியான ஒரு புதிரைப் போட வேண்டும் என்றால், அந்தப் புதிருக்கான கேள்வி என்னவாக இருக்கும். பதிலுக்கான சாய்சஸ் என்னவாக இருக்கும் என்ற சிந்தனை எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. யாரேனும் இந்திய/தமிழக அரசியல் கட்சி சார்புடையோரை அறிகிற ஒரு புதிரைத் தயாரிப்பார்களேயானால், நம் சூழலில் இத்தகைய ஆய்வுகளை நிகழ்த்த அவை உதவலாம். என்ன புதிர், என்ன பதில் போட்டு என்ன பயன்? நம் தலைவர்கள் நாளுக்கொரு கொள்கை வைத்திருப்பதால் எந்தப் புதிரும் சரியானபடி கட்சி சார்பு மனவோட்டத்தை அறிய உதவாது என்கிறீர்களா? அல்லது தன்னை மதவாதி இல்லை என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு மதவாதம் பேசிக் கொண்டும், இனவாதி இல்லை இல்லையென்ற படியே இன மற்றும் மொழிவாதம் பேசிக் கொண்டும், இருப்பவர்களிடையே, புதிருக்கான விளக்கம் சொன்னால் மட்டும் ஒத்துக் கொண்டு விடப் போகிறார்களா என்ன என்றும் கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். அமெரிக்கா போன்ற நாடுகளில் முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஆதரிப்பவர்கள்கூட தாங்கள் ஆதரிப்பதைத் தெளிவாகவும் தைரியமாகவும் சொல்கிற நிலை இருக்கிறது. நம் நாட்டில்தான் கொள்கைச் சிங்கங்கள் கூட நாளரு விளக்கம் கொடுத்துத் தாங்களும் தங்கள் வசதிகளும் பாதிக்கப்படாவண்ணம் அரசியல் நடத்துகிற நிலை இருக்கிறது. இதற்கு உதாரணங்கள் கொடுக்க முடியும். ஆனால், நான் கொடுக்கிற உதாரணங்கள், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் மீதான விமர்சனமாகப் பார்க்கப்படுகிற வாய்ப்பு இருப்பதால் தவிர்க்கிறேன்.

1 comment:

Anonymous said...

I wouldn't want to classify them as Democrates or Republicans.. But you shall classify them as Liberals or Conservatives. I think that what the teacher would have meant...