சண்டைகளுக்குப் பின்வரும்
மௌனங்களில் வீசும் குருதிவாடை
குமட்டல் தருகிறது
முகம் திருப்பிக் கொள்வதில்
வெளிப்படுகிற ஆக்ரோஷ மொழிகள்
எந்தத் தீயையும் அணைப்பதில்லை
பரஸ்பர குற்றச்சாட்டுகள் அடங்கியபின்
சுடரும் அமானுஷ்யம் சொல்கிறது
சொல்லப்படாத தீர்ப்புகளை
கோபத்திலோ விரக்தியிலோ
அலுப்பிலோ சலிப்பிலோ
சமாதானத்துக் குதவுமென்றோ
தன்னுள் நிகழ்வுகளை மீட்டி
சரி தவறு உணரக் கூடுமென்றோ
பேசினால் சண்டை வளருமென்றோ
காயங்களுக்கு மருந்திடவோ
வலி மறக்க அவகாசம் வேண்டுமென்றோ
பேசாமல் இருந்து பார்க்கிற பாவனைகளில்
முகங்களோடு மனங்களும் இறுகுகின்றன
ரணங்களும் ஆழமாகின்றன
வார்த்தைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற உலகத்தில்
மௌனம் எப்படித் தீர்வாக முடியும்
சண்டைகளுடன் விடிகிற உலகத்தில்
மௌனம் எப்படிச் சமாதானம் கொணர முடியும்
ஏதேனும் பேசலாம்
நேரிடையாகப் பேச இயலாதென்றால்
குழந்தைகளின் ஊடே மறைமுகமாக
அல்லது சுவரைப் பார்த்து
அல்லது தனக்குத் தானே சொல்லிக் கொள்வதுபோல
சண்டைகளில் கூட
பேசிக் கொண்டிருக்கும்வரை
அன்பிருக்கிறது என்ற தெம்பு வருகிறது
பேசுவதற் கொன்றுமில்லை யென்றால்
ஆத்திரத்தை யெல்லாம் ஒன்று திரட்டி
ஜன்னலையோ கதவையோ அறைந்து திற
புழுக்கம் தருகிற மௌனத்தை உடைத்து
புறஉலகின் ஓசைகளேனும் உள்ளே வரட்டும்
சமாதானத்தின் தூதுவர்களாய்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமையான கவிதை. நதி மோலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது; கவிதை மூலமும் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன் :-)
கவிதையை நிறைவு செய்த விதம் அழகான ஒன்று.
நன்றி.
"புற் உலகின்ஓசைகள் சமாதான தூதுவனாக" அருமையாக இருக்கிறது சிவக்குமார்.
Very good one...
I hope you will start writing regularly from here onwards :)
Post a Comment