Tuesday, November 02, 2004

நவம்பர் 2 மாலை 5 EST

அமெரிக்கத் தேர்தல்:

வாக்களிப்பதில் ஆங்காங்கே பிரச்னைகள் என்றாலும், பெரிய அளவில் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால், வாக்களிப்பதில் பிரச்னை என்று 20,000 தொலைபேசி புகார்கள் வந்ததாக பொதுமக்களை வாக்களிக்கச் சொல்கிற ஓர் அமைப்பு சொல்லியிருப்பதாகத் தொலைகாட்சித் தகவல் தெரிவிக்கிறது.

பிற்பகலில் வந்த கெர்ரி முன்னிலை என்ற செய்தி, வாக்களிக்காத ஜனநாயகக் கட்சியினர் கெர்ரி ஜெயித்துவிட்டார் என்று சும்மா இருக்கவும், வாக்களிக்கச் செல்லாத குடியரசு கட்சியினர் உடனடியாக வாக்களிக்கவும், குடியரசு கட்சியினர் செய்கிற தந்திரம் என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார்.

குடியரசு கட்சியினர் ஜனாதிபதியாக இருந்தபோது பங்கு சந்தை மூன்று சொச்சம் சதவீதமே உயர்ந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் ஜனாதிபதியாக இருந்தபோது பங்கு சந்தை ஏழு சொச்சம் சதவீதம் உயர்ந்திருக்கிறது.

முடிவு தெரியாத நிலையில் இருந்த மாநிலங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பலத்த வாக்குப்பதிவு என்று தகவல்கள். அதே போன்ற இன்னொரு மாநிலமான ப்ளோரிடாவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு என்று தகவல்.

ஒஹாயா மாநிலத்தில் வாக்குச் சாவடிகளில் குடியரசு கட்சியினர் கேள்வி கேட்க நடுவண் அரசின் நீதிபதி ஒருவர் மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி அளித்தார். உச்சநீதிமன்ற நீதிபதி இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டை தேர்தல் நெருங்கிவிட்டதால் ஆராயவும் தீர்ப்பு சொல்லவும் நேரமில்லை என்று சொல்லி எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார். நடுவண் அரசின் இரு நீதிபதிகள் குடியரசு கட்சியினர் வாக்குச் சாவடியில் வாக்காளர்களைக் கேள்வி கேட்பது (தேர்தல் அலுவலர்கள் மூலம் மறைமுகமாக) அரசியல் சாசன விரோதம் என்று தீர்ப்பளித்தும், மேல்முறையீட்டில் மூன்றாம் நீதிமன்றம் இதை அனுமதித்தது. சிறுபான்மையினரையும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களையும் வாக்களிக்க விடாமல் பயமுறுத்தவே இந்தச் சட்டம் உதவுமென்று ஜனநாயகக் கட்சியினர் கூறிவந்தனர். இந்தச் சட்டம் 51 வருடங்கள் ஆன, தேர்தல்களில் அதிகம் பயன்படுத்தப்படாத சட்டம். குடியரசு கட்சியினர் எப்படிச் சட்டத்தின் துணையுடன் வெல்ல முயல்கிறார்கள் என்பதற்கு இது உதாரணம்.

திட்டவட்டமாக கெர்ரி ஜெயிக்காமல், 2000 வருடம் மாதிரி நீதிமன்றங்களில் இத்தேர்தல் முடிவு செய்யப்படுமானால், கெர்ரி துரதிர்ஷ்டசாலிதான்.

No comments: