(சந்திரமௌலி என்ற புனைபெயரில் பி.ச.குப்புசாமி அந்தக் காலத்தில் எழுதிய கதை இது. தினமணி கதிரில் "நட்சத்திரக் கதை"யாக வெளியாகியது. பி.ச.குப்புசாமி பற்றிய விவரங்களை இங்கே காணலாம். தினமணி கதிரில் இக்கதை வெளியானபோது, கதையின் முதல்பக்கத்தின் கீழே பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
"டயரி போன்ற ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒருநாள் காலை ஒருவன் எழுதிய குறிப்புகள் மேலே தரப்படுகின்றன. அக்குறிப்புகள் முடிவடைந்ததும் பிற்சேர்க்கையாகச் சில விவரங்கள் கூறப்படுகின்றன. இரண்டையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, மனிதமன இயல்புக்குப் பொதுவான ஒரு விஷயம் உணரப்படலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில், அம்மனிதன் தன் குறிப்புகளில் முக்கியமான எதையோ புலப்படுத்தத் தவறிவிட்டான் என்று கருதிக் கொள்க. நாம் வேறு என்ன செய்ய முடியும்? ஒரு தனிப்பட்ட மனிதனின் தனிப்பட்ட விஷயங்களைக் கொஞ்சம் இரக்கச் சிந்தையோடு மனதில் வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்."
இனி கதைக்குள்...)
வாடைக் காற்றுக்காக இரவு சாத்தப்பட்ட மாடியறை ஜன்னல்கள் இப்பொழுது திறக்கப்படுகின்றன. பொன்வெய்யில் என் படுக்கையின்மீது விழுகிறது. நான் நிமிர்ந்து பார்க்கிறேன். நினைவின் தெளிவுபோல், ஒரு பகுதி நீலவானமும், வேப்பங்கிளையில் விளையாடும் சிட்டுக்களும் கண்ணுக்குத் தெரிகின்றன...
நான், நாளின் முடிவான அர்த்த ராத்திரியில்தான் டயரியின் குறிப்புகளை எழுதுவது வழக்கம். ஆனால், இந்தத் தினத்தின் குறிப்புகளை இன்று காலையிலேயே எழுதுகிறேன். பத்து மணிக்குள் எழுதி முடித்து, எழுதியதை நானே மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்... அதனாலாவது இன்று நிகழவிருக்கும் சந்திப்பில் எனக்கு மனோபலம் உண்டாகிறதா என்று பார்க்க வேண்டும்...
எத்தனையோ தினங்களில் குறிப்புகள் எனக்குப் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. என்னைப் பலப்படுத்திக் கொள்ள இன்றைக்கும் அப்படித்தான் நீளமாக எழுதப் போகிறேன். எழுதுவதற்கு எண்ணங்களும் உணர்ச்சிகளூம் மனசில் தயாராயிருக்கின்றன. பல பக்கங்கள்வரை அவற்றின் பசி அடங்காது...
முதலில், இந்தத் தினத்தின் காலைப்பொழுதின் அழகை எழுத வேண்டும்.
- மரங்களும் பறவைகளும் காற்றும் ஒலியும் அலங்கரிக்கும் காலைப்பொழுதில் இன்றைய தினம் எனக்கு ஆரம்பமாகிறது.
இந்த நாளின் மகுடம்போல் இதை மேலும் அலங்கரிக்க இன்று அவள் வரப்போகிறாள்...
முன் எப்பொழுதோ எனில், அவளது வருகை என்னை என் ஆனந்தங்களின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கும்... அதற்காக என் வாழ்நாட்களின் ஒரு பகுதியையே நானும் ஈடுகொடுக்கத் தயாராயிருந்திருப்பேன். மனசையே ஒரு மாளிகையாய்த் திறந்து வைத்து, அவள் எடுத்து வைக்கும் காலடிகளில் என் இதயத்து உணர்ச்சிகளின் பூக்களைப் போட்டு வரவேற்றிருப்பேன்.
ஆனால் இப்பொழுதோ, சாகிற வரைக்கும் நேர்ந்துவிட்ட ஒரு சவாலைச் சந்திப்பதுபோன்ற தீவரமும் வைராக்கியமுமே என் மனத்தில் மேலோங்குகின்றன...
அதற்காக நான் வருந்தவில்லை. நான் வேண்டுவதெல்லாம், இத்தீவிரமும், வைராக்கியமும் அவள் வந்து எதிரே நிற்கும்போதுங்கூட நிலைக்க வேண்டும் என்பதுதான்.
பலமுறை அவளிடம் நான் தோற்றுப் போயிருக்கிறேன். 'உலகமனைத்தையும் வெல்வதைவிட, உன்னிடம் தோற்றுப் போவதையே நான் விரும்புகிறேன்' என்று சொல்லிக் கொண்டே அவளிடம் தோற்றுப் போயிருக்கிறேன். இப்பொழுது நினைத்தால், அந்த அவமானகரமான தோல்விகள் எல்லாம் சகிக்க முடியாத அளவுக்கு என்னுள் கசக்கின்றன. ஓர் ஆண்மகன் என்பதற்கான அர்த்தமே இல்லாமல் நான் நடந்துகொண்டு விட்டேன். அவை அத்தனைக்கும் சேர்த்து இப்பொழுது பழி வாங்க வேண்டும்.
ஆனால், அது அவ்வளவு சுலபமானதா? 'பழி வாங்க வேண்டும்' என்கிறபோதே, ஏதோ பயங்கரமான பாவம்போல அந்தத் தொடரை எழுதக் கை கூசுகிறது. இவ்வளவு தூரம் மனம் உரமிழந்து இரக்கத்தின் - உறுதியின்மையின் - இன்னும் சொல்லப் போனால், ஆண்மைத்தனமே இல்லாத ஓர் அசட்டு உருக்கத்தின் கொடிய விலங்குகளைப் பூட்டிக் கொண்டு விட்டது.
இந்தத் தன்மை என்னுள் இளமையிலிருந்தே வேரோடிற்று. சிறுவயதில் தாயின் மடியிலேயே நான் தலைசாய்த்து வளர்ந்தேன். வெளியுலகத்தோடு அதிகம் உறவு கொள்ளவில்லை. எனது விளையாட்டுக்களிலும் சாகசங்கள் குறைவு. ஆனால், பாவனைகள் அதிகம். பின்னாட்களில் அதன் விளைவுகள்...
தன் காதலுக்காளான ஒரு பெண்ணை ஆடவன் ஒருவன் எவ்விதம் ஆள்வானோ, அவ்விதம் அவளை நான் ஆளவில்லை. மாறாக, அவள் என்மேல் ஆட்சி புரியத் தக்கவாறு, என்னை நானே அவளுக்கு வெகுதூரம் ஆட்படுத்திக் கொண்டேன். என் அடிமைத்தனம் அமைத்துத் தந்த மனஅரங்கின் சிம்மாசனத்தில் அவள் ஒரு மகாராணிபோல் வீற்றிருந்தாள்.
நண்பர்கள் அனைவருக்கும் அது ஆச்சரியமாயிருந்தது. அப்படி என்ன தகுதி அவளிடம் இருந்தது?...
தகுதி! என்ன விசித்திரம்! காதலுக்கு அப்படி ஒரு கேள்வி இருக்கிறதா?
ஆனால், அவளிடம் அவ்வளவு தூரம் நான் லயித்துப் போனதற்குக் காரணமாய் என் மனத்துள் ஒரு நீண்ட பின்னணி இருந்தது.
காதலைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அதுவரை நான் வெறும் கனவுகள் மட்டுமே கண்டு ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்தக் கனவின் பெண்கள் இந்தப் பூமியில் இல்லை. அவர்கள், ராமகிருஷ்ணரின் வாக்கினால் விவரிக்கப்பட்டு, சக்தியின் பிரபைகள் என அவரால் பூஜிக்கப்பட்ட தத்துவங்களிலே இருந்தனர். அந்தியின் கருநிறச் சாயை படிந்த நெடும் பாலைவனங்களுக்கும், கடல்களுக்கும் அப்பால் உள்ள வேறு தேசங்களின் காவியங்களிலே இருந்தனர். குத்துவிளக்கின் சுடரொளியில் பிறந்து, எனது மனோபாவனைகளின் உருவக் கோடுகளுக்குள் வந்து நுழைந்த வானத்துக் கனவுகளிலே இருந்தனர்.
அந்தக் கனவுகளின் தாகத்தோடு வெகுநாட்கள் நான் ஒரு நிஜமான பெண்மணியின் காதலுக்குக் காத்துக் கிடந்தேன். எரியும் திரியடியில் உருகித் தளதளத்து, 'குபுக்'கென விளிம்போரம் வழிவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் மெழுகுவத்தி போன்றிருந்தது மனம்.
இந்தப் பரிபக்குவ நிலையில் நான் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். அவள் வருகையினுடையதும் அவளுடையதுமான மகத்துவமே அந்த வருகையின் நேரம்தான். காவிய நாயகிகளின் மறுஅம்சங்களாய் என் மன அரங்கில் கொலுவிருந்த எத்தனையோ கற்பனையான உருவங்கள் அவள் வந்தபின் திடீரென்று மறைந்து போயின. அவ்வுருவங்களின் எண்ண அழகுகளையெல்லாம் தன்னுள் ஏற்றுக் கொண்டு இப்போது அவள் என் எதிரே வந்து நின்றாள்.
மாநிறம்; கண்கள் மீனியக்கங்கொண்ட மலர்கள் போல் இருந்தன. எனது சஞ்சலித்த மனத்தின் கனவுகளில் சஞ்சரித்த எத்தனையோ பாவனைகளில் ஒன்றாக இராமல், மெய்யாகவே இம்மண்ணுலகின் உயிரும் உஷ்ணமும் பொதிந்த மானிடப் பெண்ணாக அவள் நின்றாள்.
ஓர் அடைப்பினுள் உள் அழுத்தம் அதிகமாயிருந்து, பின் அடைப்புத் திறந்தால் என்ன ஆகுமோ, அதுபோல் ஆயின என் உணர்ச்சிகள் - ஆம், அவளைக் கண்டதும் அவை ஓடோடிச் சென்று அவள் காலடிகளில் வீழ்ந்தன. அவளது கரங்களைப் பற்றியபோது, எனது எட்டாக் கனவுகளின் நிலைமை யெல்லாம் எட்டிப் பிடித்ததுபோல் இருந்தது...
'எத்தகைய பாக்கியசாலி நான்!' என்று என்னுள் நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். கடைசியில், கடவுளின் ஆசிர்வாதம் போல என் வாழ்க்கையிலும் ஒரு நிஜமான காதல் நிகழ்ந்துவிட்டது. படபடப்பின் குறுவியர்வையோடு, வெளிப்படத் துடிக்கும் மோகனப் புன்முறுவலோடு அவள் என்னை ஏறிட்டுப் பார்த்து இமை தாழ்ந்தாள்.
கொஞ்ச நாட்களே யாயினும், அவை மறக்கமுடியாத திருநாட்கள்!
அவ்வளவுதான்; நான் பித்துப் பிடித்ததுபோல் ஆனேன். அவள் முன்னிலையில் என் பேச்சுக்கள் நிதானமிழந்தன. ஏதோ ஓர் உணர்வின் ஆவேசம் உட்புகுந்து, ஒவ்வொரு முறையும் அவளைச் சந்திக்கையில் என் மனதின் சமன்பாட்டைச் சிதைத்தது. என் உள்ளே ததும்புவதை நான் என்னென்ன விதமாகவோ உரைக்க முயன்றேன். அது ஒரு வரைமுறையற்ற வழிபாடாய் விரிந்தது.
அவளை 'என் வாழ்க்கையின் முதற்பொருள்' என்றேன்; 'வானத்தின் கனவு' என்றேன்; 'மனசின் மகாராணி' என்றேன்; 'ஆலயத்து அம்பிகை' என்றேன்; 'செல்வமே, செல்வமே, செல்வமே' என்றேன்.
ஒருநாள் அவளோடு பேசிக் கொண்டிருந்தபோது, 'தாமரை இரு தாள் லஷ்மி பீடம்' என்ற கவியின் வாக்கு நினைவு வந்து, திடீரென்று அவள் பாதங்களைப் பற்றவும் செய்தேன்.
எனது வினை அதிலிருந்து ஆரம்பமானதுபோல் இப்போது உணர்கிறேன்.
நாளடைவில் எனது சுயமரியாதையை அவளிடம் இழந்து விட்டேன் நான். என்னுடைய வேறு குணங்கள், இயல்புகள் முதலியவற்றை உணராமல், இவ்வடிமைத்தனம் ஒன்றை மட்டுமே அவள் பிரதானமாய் உய்த்துணர்ந்தாள் போலும்? எனது காதலின் கனவு மயக்கத்துக்கு வேறு உலகாயத பாதிப்புகள் வருமுன்பே, இவ்வுண்மையின் பாதிப்பு வந்துற்றது...
எனது ஆர்வம் பொங்கும் முகத்தில், அவளது அலட்சியங்கள் வந்து விழுந்தன. அவை ரொம்ப நுட்பமான அனுபவங்கள். என் பார்வை அவள் பார்வையில் ஏதோ எதிர்பார்த்து ஏமாந்த அரைக் கணத்தில், அந்த ஏமாற்றத்தின் எதிரொலியாய் அவளிடம் நான் என்னென்னவோ வேண்டி எழுதிய எண்ணற்ற மடல்களில், அம்மடல்களுக்கான பதிலின்மையில் விளைந்த ஓர் இளங்காதலனின் பொய்க் கோபத்தில், அக்கோபத்தின் வைராக்கியங்களை நாளடைவில் உடைத்தெறிந்துவிட்டு, மீண்டும் நானே வலியச் சென்று தழுவிய தோல்விகளில், அத்தோல்விகளுக்கான வெட்கங்கள் ஏதுமின்றி எதிர்நின்று அவள் காதலையே திரும்பவும் அதிகம் யாசித்த எனது பரவசமான வேண்டுதல்களின் பரிதாபகரங்களில், இன்னும் இம்மாதிரியான அநேக அம்சங்களில் இவ்வனுபவங்கள் நிகழ்ந்தன.
அவற்றைத் தொடர்ந்து சமூகமும் உலகமும் வேறு குறுக்கிட்டன...
அந்த நெருக்கடியான நிலையில் அவளை நான் நிறுத்தி வைத்துக் கொண்டு கேட்டேன்:
"உன் மனத்தில் என்னதான் இருக்கிறது? என்னை உனக்குப் பிடிக்கிறதா, இல்லையா?"
அவள் பேசாமல் இருந்தாள். அவள் முகத்தின் மாநிறம் மேலும் இருண்டது போன்றிருந்தது.
அவள் எம்மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தாளோ, அதிலே இலைகள் ஒவ்வொன்றாய் மெல்ல உதிர்ந்து கொண்டிருந்தன.
நான் அவளைப் போகச் சொல்லிவிட்டேன். போவதற்குமுன் அவள் என் கண்ணில் தளதளத்த கண்ணீரைப் பார்த்துவிட்டுத்தான் போனாள். ஆனால், மௌனமாகப் போனாள்!...
வாழ்க்கையின் நோக்கமான ஒன்றே திடீரென முடிந்து போனதுபோல், அதற்கப்புறம் என் நிலைமை மிகவும் பயங்கரமாக இருந்தது. அறையின் தனிமையிலும், அந்தரங்கமான நண்பர்களிடமும் நான் பொங்கிப் பொங்கி அழுதேன். அவற்றை யெல்லாம் இப்பொது நினைத்துப் பார்ப்பதுகூட மனசுக்கு என்னவோபோல் இருக்கிறது... ஒரு மனிதன் அவ்வளவு பரிதாபகரமாகப் போய்விடக் கூடாது!
ஆனால் நான் இன்னும் கேவலமாகப் போய்விட்டேன். கடந்த ஆறுமாத காலமாக டாக்டர் என்னைப் பரிசோதித்துப் பரிசோதித்துச் சொல்கிற நோயெல்லாம் நோயே அல்ல. என் நோய் என்னுடைய மனசிலேயே இருக்கிறது. என் இயல்பிலும், வாழ்க்கையை நான் உணரும் விதத்திலும் அது இருக்கிறது...
அடிமனத்தில் திரண்டு நின்றுவிட்ட கசப்பு, அடிக்கடி மிகவும் உறைத்து என்னைப் பாதித்துக் கொண்டே இருந்தது. அவளுடைய ஒவ்வொரு நினைவையும், அதீதமான சிறுபிள்ளைத்தனத்தோடு நான் போற்றத் தொடங்கினேன். அவளது கூந்தலிலிருந்து உதிர்ந்த மல்லிகை மலர்களை மட்டும் அல்லாமல், அவளது காலடி பதிந்த தெரு மண்ணைக்கூட அபூர்வமானதாய்க் கருதி, பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்து, அடிக்கடி அதை எடுத்துப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினேன். வாழ்க்கை அவ்வளவு மோசமாய், ஞாபகங்களின் சிறைவாசம்போல் கழிந்தது...
நாங்கள் வாழ்கிற ஊர்களும்கூட, அக்கால கட்டத்தில் வெவ்வேறாய் மாறிவிட்டன. அவளை வெறுமனே முகம் பார்க்கிற வாய்ப்புக்கூட அதற்கப்புறம் அற்றுப் போயிற்று. தூரத்திலிருந்தவாறு மௌனமாய் நினைத்துக் கொண்டிருந்தேன்...
அப்போது என் மனசுள் அவள் இன்னும் பேரழகாய் வளரத் தொடங்கிவிட்டாள்!...
என் நினைவின் தீவிரமே அவள் உருவின் புதிய ஒளிபோல் அவளைச் சார்ந்தது... கடந்துபோன நாட்களின் ஆழங்களிலிருந்து அந்தக் கண்கள் இன்னும் அதிகமாய்க் கனவுப் பார்வை வீசின. என்றைக்கோ நான் கேட்டு, அந்த வெறும் வெளியின் காற்றில் கலந்துபோன வார்த்தைகள், நாளாக நாளாக ஒரு புதிய நாதத்தோடு என் மனத்தின் திசைவெளிகளில் திரும்பி வந்து ஒலித்தன...
மறுபடியும் அடைய முடியாததோர் அபூர்வம்போல் அவள் மாறிவிட்டாள்!
நான் காண்கிற, கேட்கிற, படிக்கிற, உணர்கிற எல்லா விஷயங்களையும் எழுத வேண்டுமென ஆரம்பிக்கப்பட்ட எனது டயரியின் பக்கங்கள், அவளைப் பற்றிய விஷயங்களால் மட்டுமே நிரம்பிக் கொண்டிருக்கின்றன...
எனக்குச் சகிக்க முடியாத குழப்பத்தைத் தந்தது, அவள் எதனால் என்னைப் புறக்கணித்தாள் என்கிற கேள்விதான். அவள் வாழ்கிற அந்தக் குறுகிய சமுதாயத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் புறம்பான புதிய உலகங்களை, புதிய வாழ்க்கையை அவளுக்குக் காட்ட நான் தயாராயிருந்தேன். காதல் எனில், அதில் எவ்வளவோ உணர்ச்சி விஸ்தாரங்கள் உண்டு என்பதையும் அவள் என் மூலமாகவே அறிந்தாள் எனலாம். அவ்வளவிருந்தும் அவள் எல்லாவற்றையும் மௌனமாகப் புறக்கணித்து விட்டாள். அவளது இந்த மன வேறுபாட்டுக்குக் காரணம்?...
அந்த எனது தன்மை - எனது சுயதன்மைகளை யெல்லாம் இழந்த தன்மை - ஆக்கிரமித்து அதிகாரம் கொள்ள முடியாத தன்மை - குழந்தைபோல் குழைந்து குழைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, என்னை நானே குறைத்துக் கொண்டுவிட்ட தன்மை - அதுவே காரணம் என்று கருதுகிறேன். அவளது காலடிகளில் நான் பணிகிற போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்? ஓர் ஆணின் வீரியமோடு அவளை ஆளுகிற தன்மையையே அவள் விரும்பினாள் போலும்?...
இப்படி நினைத்து என்னை நானே வெறுத்துக் கொண்டேன்...
ஆனால், அவளை மட்டும் வெறுக்க முடியவில்லை. அது மட்டும் முடிந்திருந்தால், நான் எப்பொழுதோ மீண்டு விட்டிருப்பேன். ஆனால், ஆளுபவள்தான் வெறுக்க முடியும்; ஆட்பட்டவனால் அது எப்படி முடியும்?...
அதோடு, எனது இந்த முதற்காதல், சாதாரணமாய் விளைந்ததன்று. நெடுநாட்கள் எவ்வளவோ கனவுகளோடு காத்துக் கொண்டிருந்ததற்கப்புறம் அது நேர்ந்தது. கற்பனையில் அல்லாமல், நிஜமாகவே ஒரு பெண்மகள் என்னைக் காதலிப்பதாக மெல்ல முகம் தாழ்ந்து கூறியதை நான் காதால் கேட்டேன். கரங்களைப் பிடித்து, ஒவ்வொரு விரலாகத் தொட்டுப் பார்த்து, உள்ளங்கைகளின் மிருதுத்தன்மையை வியந்து, அவள் கழுத்து வியர்வையையும் கூந்தற் பூவையும் நுகர்ந்து, பதிலுக்கு அவளாகவே முன்வந்து தந்த முத்தங்களைப் பெற்ற முதற்காதல் அது. உலகத்தையும் வாழ்க்கையையும் மிகுந்த ரஸமயமாய் மாற்றியதோர் உயர்ந்த அனுபவம் அது. அதை எப்படி என்னால் மறக்க முடியும்? அதை ஒரு தேவதைபோல் வந்து வழங்கிய அவளை எப்படி என்னால் வெறுக்க முடியும்?
'அவள் என்னை வெறுத்து ஒதுக்கிப் புறக்கணித்தாலும், பதிலுக்கு என்னால் அப்படிச் செய்ய இயலாது. எவ்வளவு காலமாயினும், கசப்பான எத்தனை முரண்பாடுகளையும் மாற்றங்களையும் வாழ்க்கை உருவாக்கினாலும் தீவிரமான ஒரு வைராக்கியத்தோடு, கண்மூடித்தனத்தோடு, மூர்த்தண்யத்தோடு, தொடர்ந்து நான் அவளை மேலும் மேலும் காதலித்துக் கொண்டே யிருப்பேன். பொன்மயமான அந்த ஒரு சில நாட்களின் நினைவையட்டியே, எனது பிற வாழ்நாட்கள் போய்க் கொண்டிருக்கும்' என்று, அப்பொழுதெல்லாம் என் டயரியில் எழுதினேன்.
'மறுபடியும் ஒரு காலம் வரும்... சத்தியமான எனது காதலிலிருந்து அவள் தப்ப முடியாது. ஒருமுகமான எனது எண்ணங்களின் சக்தி தமக்குரிய வெற்றியைப் பெற்றே தீரும்' என்றெல்லாம் ஒரு நம்பிக்கை கொண்டிருந்தேன்...
கொஞ்ச நாட்களுக்குப் பின்னால், அந்த நம்பிக்கை நிறைவுறுவது போலும் அவள் எனக்கொரு புதிய போக்குக் காட்டினாள்.
ஒருமுறை நான் அவள் வாழ்கிற அந்தச் சிற்றூருக்குப் போயிருந்தேன். நான் வந்திருக்கிறேன் என்பதறிந்து, என்னைச் சந்திக்க விழைந்தவளே போன்று, அவள் தெரு வாயிற்படியில் நின்றாள். நாங்கள் நெடுநாட்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட பொழுது, அவள் பார்வையின் ரகசியம் என்னுள் புல்லரித்தது.
அவள் உபசாரமாக, தணிந்த குரலில் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தாள். நான் அதைத் தட்டிக் கழித்து இன்னொரு சமயம் வருவதாகச் சொன்னேன். அதை வலியுறுத்துவது போன்ற குரலில் 'கண்டிப்பா வரணும்; அம்மாகூட உங்களை வரச் சொன்னாங்க!' என்றாள் அவள்.
அந்த அழைப்பு எனக்கு அதிசயமாயிருந்தது. அந்தரங்கத்தில் பழைய, ஆயிரம்விதமான உணர்ச்சிப் போக்குகளும் ஆசைகளும் மீண்டும் கிளர்ச்சியுற்று உயிர்த்தெழுந்தன.
விரைவில் நானே இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, மறுபடியும் அந்த ஊருக்குப் போனேன். வாக்களித்த வண்ணம் அவள் வீட்டுக்கும் சென்றேன்.
அவளுடைய தாயார், பழைய விஷயங்களை அடியோடு மறந்ததுபோல என்னென்னமோ குடும்ப விஷயங்களைப் பேசினாள். பின்புறம் சமையலறைக் கதவருகே அவள் ஒரு கனவுபோல ஒதுங்கி நின்றாள். அறையில் விளக்கற்ற பின்னணியிலும், முகத்தில் மாநிறத்திலுமிருந்து, இருளில் வரைந்ததுபோலும் தோன்றிய அவ்விரு விழிகள் என்னை ஆவலூறப் பார்த்தன...
இழந்த சுவர்க்கத்தை மீண்டும் எய்தியது போலானேன் நான். என் எண்ணங்களின் தீவிரமே அவளைக் கட்டி இழுத்து வந்து என் இதயச் சிறையுள் இட்டதுபோல் உணர்ந்தேன். இந்தச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு, என் வரைமுறையற்ற வழிபாடு அவள்பால் மீண்டும் ஆரம்பமாயிற்று...
பழைய நாட்களில் நான் பின்பற்றிய முறைப் பிரகாரம், ரகசியத்தில் அவளுக்கு எண்ணற்ற கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன்.
அந்தக் கடிதங்களை அவள் வெறுமனே வாங்கி வாங்கிப் படித்துப் படித்து வைத்துக் கொண்டாள்; ஒரு பதிலும் இல்லை.
ஏதோ விசேஷமானது நிகழப் போவதுபோல் இடையிலே ஏற்பட்ட இந்தத் திருப்பம், ஒரு நல்ல கவிதை 'சென்று தேய்ந்திறுதல்' போல, முன்போலவே, ஏக்கங்களிலும் வேதனைகளிலும்தான் போய் முடிந்தது...
எனினும், அதை இங்கே நான் குறிக்கக் காரணம், அவள் காதலை மீண்டும் அடைய, எந்த ஒரு சிறுவாய்ப்பையும் நான் எவ்வளவு தாபத்தோடு பற்றத் தொடங்கினேன் என்பதை விளக்கவே...
ஆயினும் அவள் மறுபடியும் என்னைப் புறக்கணித்து விட்டாள்...
இதற்கு நான் என்ன காரணம் சொல்ல முடியும்? இம்மறு உயிர்ப்பின் புதுமை அவளுக்குக் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே புளித்துப் போயிற்றோ? அல்லது, எவ்விதத்திலும் இவ்வுறவு விவாகம் என்கிற பூர்த்தியான நிலைக்குப் போக முடியாது என்கிற சராசரிக் கணிப்பின் மூலம், சமயங்களின் உந்துதலில் எழுந்த அவள் மனோவேகம் சட்டென்று தணிந்து விட்டதோ? - எதையும் நான் தெளிவாய் அறியேன்....
என் மனசுக்குப் பட்டதெல்லாம், அவள்பால் நான் நடந்துகொண்ட நடத்தையே அவள் என்னை உதாசீனம் செய்வதற்குக் காரணம் என்கிற அந்த ஒரு விஷயம்தான். நான் அவளிடம் அவ்வளவு உருகிப் போயிருக்கக் கூடாது. ஓர் ஆணின் ஆண்மைத்தனத்தை நான் அவளிடம் காட்டியிருக்க வேண்டும். அப்போது அவள் பூரணமான மனத்துடிப்புகளோடு என் காதலுக்குக் கடைசி வரையில் கட்டுப்பட்டிருந்திருப்பாள்.
- பெண்மை, பிரேமை, அர்ப்பணம், அமரத்துவம் என்கிற கனவுப் போக்கான விஷயங்களிலேயே லயித்திருந்து, இவ்விஷயத்தில் நான் பெண்ணாகி விட்டேன்.
அடிமேல் அடி விழுந்த பிறகு, தோல்விகளுக்கு மேல் தோல்விகள் வந்து சூழ்ந்து கொண்ட பிறகு, பரிதாபத்துக்குரிய என் மன அம்சங்களை நான் பகுத்தறிந்து கொண்டேன். பெண் என்பவள் எவ்வளவு ஆண்மையோடு அணுகப்பட வேண்டியவளாயிருக்கிறாள்!
இறுதியில், ஓர் இறுகிய வைராக்கிய நிலைக்கு நான் வந்து சேர்ந்தேன். இதற்குமேல் எந்நிலையிலும் என் மனத்தின் நெகிழ்ந்த உணர்ச்சிகளை அவளிடம் காட்டுவதில்லை என்று தீர்மானித்தேன். இனி, அதன் போக்கில் வாழ்க்கையை விட்டுவிட வேண்டியதுதான்....
கடைசியாக அவளுக்கு எழுதிய கடிதத்தில் 'எல்லாம் முடிந்து போயிற்று; இனியும், சாகிற வரைக்கும் மண்டியிட்டு உன் காதலை யாசிக்க மாட்டேன்!' என்று எழுதினேன். ஓர் ஆளுகையிலிருந்து மீண்டு, தன் சொந்த அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டுவிட்ட சுத்தமான, ஒரு சுதந்தரமான மனிதனானேன், நான்!
இவையெல்லாம் நடந்து இரண்டு வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டன. வியக்கத்தக்க வகையில் என் வைராக்கியத்தை நான் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன். ஆனாலும், வாழ்க்கை தேங்கிப் போனது போலவும், அது சலித்துப் போனது போலவும், இனி என்ன இருக்கிறது என்பதைப் போலவும் ஒரு நோய் பிடித்த மனோபாவம் என்னைக் கவ்விக் கொண்டு விட்டது...! அதன் விளைவாகவே ஆறு மாதங்களுக்கு முன்பு நோயில் வீழ்ந்தேன்.
மரணம் விரைந்து வந்து என் வீட்டு வாசற்படியில் நிற்பது போன்ற நிலைமை இப்போது.
அவள் இருக்கிற அந்த ஊரிலிருந்து ஒரு நண்பன் வந்திருந்தான். அவனிடத்தில்கூட அவளைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால், அவனேபோய் என் நிலைமையைச் சொன்னானோ, அல்லது, வேறு எவ்வாறு அவள் அதை அறிந்தாளோ தெரியாது. நேற்று முன்தினம், இந்த நீண்ட பிரிவுக் காலத்தை மிக சகஜமாய்த் தன்பாட்டுக்குத் தாண்டிக் கொண்டு அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. என் வாழ்க்கையிலேயே அவளிடமிருந்து நான் பெற்ற முதற் கடிதம் அது!
அதில் அவள் எழுதியிருந்தாள்: ' உங்கள் உடல்நிலை மோசமாயிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏன் இப்படிச் செய்து கொண்டீர்கள்? இப்பொழுது எப்படி இருக்கிறது? வெள்ளிக் கிழமை உங்களைப் பார்க்க வருகிறேன்.'
'ஏன் இப்படிச் செய்து கொண்டீர்கள்?' என்கிற வார்த்தை எனக்குள் கண்ணீரை வரவழைத்தது. ஆனால், உறங்கிக் கிடந்த என் மனச்சீற்றம் உடனே திரண்டெழுந்தது...
அந்தக் கேள்வியில்தான் எவ்வளவு ஒதுக்கமான ஒரு குரல் கேட்கிறது?
இரண்டு நாட்களாகப் படாதபாடு பட்டேன். அவள் வருவது பற்றிப் பலவித உணர்ச்சி விஸ்தாரங்கள் என் மனத்தில் நிகழ்ந்தன. ஒரு காலத்தில் அவள் முகத்தைப் பார்த்தாலே போதும், அந்தக் கண்களின் பார்வை என்மீது படிந்தாலே போதும், நான் உருகிப் போய்விடுவேன். ஆனால், இம்முறை அப்படி இருக்கக் கூடாது...
பிரிவும் பிணக்கும் இருந்து, அவள் உறுதியாய் மௌனம் அனுஷ்டித்த அந்த நாட்களில் எல்லாம் நான் வலிந்தும் விரைந்தும் சென்று அவள் காலடிகளில் வீழ்ந்ததைக் கவனத்தில் வைத்துக் கொண்டுதான் அவள் வருவாள்... இப்பொழுது, நான் என்னதான் சபதமும் வைராக்கியமும் மேற்கொண்டிருந்தபோதிலும், இந்த நீண்ட இரண்டு வருஷங்களுக்கப்புறம் நினைவுகளின் நம்ப முடியாத நிஜ உருவம்போல் அவள் வந்து நிற்கையில், என் உறுதிகளின் சிகரங்களிலிருந்து ஓர் உணர்ச்சியின் வேகத்தில் நான் உருண்டு விடுவேன் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டு வருவாள்... வாழ்நாள் பூராவும் தன்னை வழிபட்ட ஒரு மனிதன், கடைசியில் மரணப்படுக்கையிலும் தன்னையே நினைந்துருகும் காட்சியைக் காண, ஆளப்படுவோர் மீது ஆளுவோர் கொள்கிற ஒரு பரிதாப உணர்ச்சியோடு அவள் வருவாள்.
வரட்டும்...
என்னை, நானும் ஓர் ஆண்மகன் என்று அவளுக்கு உணர்த்தி விட்டேனானால்... ஓ, அது அவளுக்கு எவ்வளவு பெரிய தண்டனையாயிருக்கும்!...
இதோ, கீழே கூடத்துக் கடிகாரத்தில் மணி பத்தடிக்கிறது... இன்னும் சற்று நேரத்தில் அவள் வந்துவிடுவாள்!...
மேற்கண்டவாறு அவனது குறிப்புகள் முடிவடைந்தன.
அன்று அவர்களுக்கிடையே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
சரிவர வாழ்ந்து முடிக்காதவனாகிய அவனது நோய்ப் படுக்கையின் அருகே, வெளிர் நீலத்தில் உடை அணிந்து, ஆழ்ந்த உணர்வுகளோடு கூடிய முகபாவத்தோடு அவள் வந்து நின்றாள்.
"இப்ப எப்படியிருக்கு?"
அவள் நா தழுதழுத்தது.
ஒரு பேரலை பொங்கி அவனை அவன் வைராக்கியங்களின் உயரங்களிலிருந்து தன்னுள் இழுத்துக் கொண்டது.
அவன் பேசாமல் கண்ணீர் வடித்தான். படுக்கையின் ஓரங்களில் கையூன்றியவாறு, தலை குனிந்து கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதான். இந்தக் கடைசி நேரத்தில் கண்டிப்புக் காட்டி என்ன ஆகப்போகிறது? இம்முகமும், கண்களும், பார்வையும், குரலும் தன்னை வந்து தொடுகிறபோது, இவற்றுக்கு ஆட்படாமல் இருப்பதில் அப்படி என்ன வீராப்பு இருக்கப் போகிறது? இவ்வியல்பு ஒரு குறை என்றால் இது கடைசி வரையில் அவனது வாழ்க்கையின் முழு அர்த்தமாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இப்படி ஆட்பட்டு ஆட்பட்டு, அழுது அழுது கரைவதின் ஆன்ம லயமாவது அவன் கண்ட லாபமாகட்டுமே!...
கொஞ்ச நேரத்துக்கப்புறம், அவள் கரங்களைப் பற்றிய வண்ணம் அவன் ஏதேதோ தவிதவித்த குரலில் பேசத் தொடங்கினான். அவனது நோயுற்ற மனத்துக்கு ஆறுதலளிக்கும் பொருட்டு அவளும் அதை அனுமதித்தாள்!
நன்றி: இக்கதையைப் பத்திரமாக வைத்திருந்து தந்துதவிய வே.சபாநாயகம் அவர்களுக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Great
Post a Comment