Tuesday, November 09, 2004

சமையலும் எழுத்தும்

சில நாள்களுக்கு முன், அலுவலக நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிடச் சென்றேன். ஆண்களும் பெண்களும் கலந்த குழுவாய்ச் சென்றோம். காஷ்மீர், மே.வங்கம், தமிழ்நாடு என்று பலதரப்பட்டவர்கள் கலந்த குழு. ஓர் உடுப்பி வகை உணவகத்தினுள் நுழைந்தோம். Buffet சாப்பாடு. சைவம் மட்டும். வழக்கம்போல பேச்சு சமைப்பது பற்றித் திரும்பியது. வட இந்திய உணவு வகைகள், தென்னிந்திய உணவு வகைகள் என்று திரிந்தது. பின்னர் சமைக்கிற விஷயத்தில் வந்து நின்றது. எதை வைத்து ஓர் உணவையோ ரெஸ்டாரெண்டையோ நல்லது என்று மதிப்பிடுவது என்கிற கேள்வியில் மையம் கொண்டது. குழுவில் இருந்த பெண்கள் யாரும் தங்களுக்கு எந்த அளவுக்குச் சமைக்கத் தெரியும் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் சமைக்கத் தெரிந்தவர்கள் என்பது என் அனுமானம். குழுவில் இருந்த ஆண்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் நன்றாக சமைக்கத் தெரிந்தவர்களாக இருந்தோம்.

அதிலும் நண்பர் PG நிஜமாகவே சைவம் நன்றாக சமைப்பார். அவர் நளபாகத்தை ருசித்த அனுபவங்கள் எனக்கு உண்டு. அதேபோல அவர் நிறையவும் படிப்பார். ஆனால் அதிகம் எழுதவோ பேசவோ மாட்டார். அலுவலகத்தில் பணிகள் ஆளை வாட்டும்போதெல்லாம் ஒரு நடை அவர் பக்கம் போய் ஐந்து நிமிடமாவது இலக்கியம் பேசிவிட்டு வருவது எனக்கு என் வேலையைத் தொடர்கிற புத்துணர்வு தருகிற விஷயம்.

நண்பர் PG சொன்னார்: "அசைவம், குருமா போன்ற கடினமானவற்றைச் சமைப்பது கடினமில்லை. அவற்றுள் சேர்க்க வேண்டிய மூலப் பொருள்கள் அதிகமாக இருப்பதால் ஒன்று குறைந்து விட்டால் இன்னொன்றைப் போட்டு ஒப்பேற்றி விடலாம். ஆனால், எளிமையான டால் (பருப்பு - வட இந்தியர்கள் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வது) செய்வதுதான் மிகவும் கடினம். ஏனெனில், அதைச் சரியாக செய்யவில்லையென்றால், ரிப்பேரும் செய்ய முடியாது, வெளிப்படையாகவும் குறை தெரிந்துவிடும் என்றார். நல்ல ரெஸ்டாரெண்டுகளை அவை செய்கிற டால் (பருப்பு) எப்படி இருக்கிறது என்று பார்த்தபின் மதிப்பிடுவது முக்கியமான ஒன்று என்றும் அவர் சொன்னார்.

சமையலில் ஆர்வம் இருக்கிற என்னால் அவர் கருத்துடன் ஒத்துப் போக முடிந்தது. மட்டன் பிரியாணி, அசைவக் குருமா என்று அசைவத்தையும் வேலை அதிகம் பிடிக்கிற சமையலையும் என்னால் சுவையாக இருக்கும்படி சமைத்துவிட முடியும். ஆனால், எளிமையான பருப்பு ரசமோ, கூட்டோ, பொரியலோ எனக்குப் பெரும்பாலும் சரியாக வராது.

இதை எழுத்திலும் பொருத்திப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. எளிமையாகவும் நன்றாக இருக்கும்படியும் எழுதுவது கடினம் தான். கோணங்கி போன்றவர்கள் எழுதுகிற சிக்கலான நடையில் ஏதும் குறையிருந்தாலும் வெளியே தெரியாது, குறைகளைக் கண்டுபிடிப்பதும் கடினம். பிரம்மாண்டம் தருகிற ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் வாசகர் பேச்சு மூச்சற்று நின்று விடுவார். ஆனால், எளிமையான நடையில் எழுதும்போது உருவம், உள்ளடக்கம், நடை, பாணி என்று எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. நன்றாகப் புரிகிற காரணத்தால் கூடவே வருகிற வாசகர், குறைகளைச் சுலபமாக அடையாளம் காட்டவும், அசுவாரஸ்யமாக தெரிந்தால் தூக்கி எறிந்துவிடவும் முடியும். அந்தக் காரணத்தினாலேயே சுஜாதாவின் எழுத்தின் மீதும் அவரின் எளிமையான தமிழ் நடையின் மீதும் எனக்கு அபாரமான மதிப்பு. இன்றைய தமிழ் உரைநடை சுஜாதாவுக்கும் நிறைய கடன்பட்டிருக்கிறது.

எளிமையாகவும் பிறருக்குச் சுலபமாகப் புரியும்படியும் அதே நேரத்தில் ஆழமாகவும் எழுதுவது கூட ஒரு கலைதான். "எளிய நடை என்று ஒன்று இல்லை. கருத்துகளின் தெளிவுதான் ஒரு நூலுக்கு எளிமையைத் தருகிறது" என்று சோதிப் பிரகாசம் ஜெயமோகனின் "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்களு"க்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டிருந்தார். என்னைப் பலநாள்கள் யோசிக்க வைத்த வாக்கியம் அது. இந்தக் கட்டுரைக்கே கூட அது காரணமாக இருக்கலாம். சமையலையும் எழுத்தையும் இணைத்து என்னை யோசிக்க வைத்ததும் அதுவே. (அதற்காக சோதிப் பிரகாசத்துக்கு நன்றி சொல்வதும் பொருத்தமே.) ஆனால், அறிவியல் தமிழையும், தத்துவம், மானுடவியல், அவையும் பிறவும் சார்ந்த தமிழ் முயற்சிகள் ஆகியவற்றையும் பார்க்கும்போது எளிய நடை என்று ஒன்று இருப்பதாகவும், தெளிவற்றவற்றைக் கூட அதன் மூலம் தெளிவாகச் சொல்ல முடியும் என்றே நான் உணர்கிறேன்.

பி.கு.: பல மாதங்களுக்கு முன் எழுத ஆரம்பித்து முடிக்காமல் விட்டது இது. இன்று பார்வையில் பட்டது. முடித்து இடுகிறேன். நண்பர் PG வேறு வேலைக்குச் சென்றுவிட்ட சூழ்நிலையில் அவரைப் பற்றிய பழைய நினைவொன்றை அசை போட்ட மாதிரியும் ஆயிற்று.

3 comments:

Arun Vaidyanathan said...

Ennai maadhiri, ungalai maadhiri matrum inaiyaththula ezudhara nanbargal pala paer maadhiri ezhudaradhu dhaan kashtamnu sollunga :) Yaaru idhellam purinjukkara :))

Chandravathanaa said...

வணக்கம் சிவகுமார்.

உண்மைதான். எளிமை எந்த விடயத்துக்கும் அழகு கொடுக்கும்.
ஆனாலும் இந்தப் பருப்பு சமாச்சாரத்தைப் பற்றி நான் இதுவரை சிந்திக்கவில்லை.
நீங்கள் சொல்லும் போதுதான் அது மூளையைத் தட்டுகிறது.

சமையலையும் எழுத்தையும முடிச்சுப் போட்டிங்களே. அது அற்புதம்.

நட்புடன்
சந்திரவதனா

ரவியா said...

//ஆனால், எளிமையான பருப்பு ரசமோ, கூட்டோ, பொறியலோ எனக்குப் பெரும்பாலும் சரியாக வராது.//உண்மைத்தான்..அருமையான குருமா செய்துவிட்டு ..ரசம் புளி/உப்பு/காரம் சரி வராமல் விழித்திருக்கிறேன்.