Wednesday, November 10, 2004

வித்தியாசம்

(பலநாள்களுக்கு முன் எழுதி பரணில் வைத்திருந்தது இது. சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் (வெங்கடேஷா?) வித்தியாசமாக எழுதுவது பற்றிப் படித்தபோது நினைவுக்கு வந்தது. எடுத்துப் போடுகிறேன்.)

கவிதை எழுதலாம்
எழுதிக் குவித்து விட்டார்கள்
கவிதை எழுதுவதெப்படி என்று எழுதலாம்
கதைத்து விட்டார்கள்
முதற்காதலைப் பற்றிப் புலம்பலாம்
புலம்பி விட்டார்கள்
சோப்பு சீப்பு கண்ணாடி பற்றி பிரஸ்தாபிக்கலாம்
பிரஸ்தாபித்து விட்டார்கள்
உலக சமாதானத்துக்காக பேனா பிடிக்கலாம்
பிடித்து விட்டார்கள்
ஜாதி மதப்பேய்களென்று அடையாளம் காட்டலாம்
காட்டி விட்டார்கள்
மேற்கின் நவீனம் பின்நவீனமென்று வாந்தியெடுக்கலாம்
எடுத்து விட்டார்கள்
சுழிப்பும் சுளிப்புமெடுத்தோடுகிற வாழ்க்கையை வையலாம்
வைது விட்டார்கள்
போதையில் உளறிய தருணங்களின் மகிழ்ச்சியை
பால்யத்தின் மகிழ்ச்சியோடு ஒப்பிட்டு வியக்கலாம்
வியந்து விட்டார்கள்
கண் திறப்பில் மலர்கிற உலகத்திலிருந்து
விந்து வெளிப்படுகிற விபரீதக் கனவுவரை சொல்லி மாயலாம்
மாய்ந்து விட்டார்கள்
என்ன எழவைத்தான் எழுதுவதென்று அலுத்துக் கொள்ளலாம்
அலுத்துக் கொண்டு விட்டார்கள்
புதியதைப் பற்றிப் புதிதாகவும்
பழையதைப் பற்றிப் புதிதாகவும் எழுத நினைக்கிற
'வித்தியாசமான வியாதி' போக யோசிக்கலாம்
யோசிக்க வேண்டும்

2 comments:

Anonymous said...

எல்லா கண்களும் மூடிக்கொண்டு தேடினால் புதிதாய் தெரியாதே? உணரலாம்!?

-dyno

Anonymous said...

The Previous comment is for your post 'நாய்'. Sorry for the crosspost!

-dyno