Monday, November 29, 2004

ஆழித் துரும்பெனவே

இரண்டு வாரங்களாக சுகமில்லாமல் இருந்தது. அதற்கு முன்னே அதன் அறிகுறிகள் தெரிந்தாலும் அலுவலகம், வீடு என்று இயங்க முடிந்தது. ஆனால், இப்போதோ மருத்துவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டார். ஓய்வு என்ற பெயரில் கணினியும் புத்தகமும் தொலைகாட்சியுமாக பொழுது கழிந்தது. ஓய்வெடுக்காமல் இங்கேயும் கம்ப்யூட்டர் முன்னாலே இருப்பதற்கு அலுவலகத்துக்கே போயிருக்கலாம் என்று அலுத்துக் கொண்டார் மனைவி. ஆனால், இந்த இரண்டு வாரங்களில் நிறைய வாசிக்க முடிந்தது. இடையிடையே தொலைகாட்சியில் கூடைப்பந்து, அமெரிக்கக் கால்பந்து, ஆங்கில திரைப்படங்கள் சில என்று பொழுது ஜோராக ஓடியது. சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டால் வாழ்க்கை எவ்வளவு ரம்மியமாக இருக்கும் என்ற பேராசை சற்றே எட்டியும் பார்த்தது.

இரண்டு வாரங்களாக நான் வாசித்து முடித்த/வாசித்துக் கொண்டிருக்கிற புத்தகங்கள் பலவகையானவை. ஞானத் தேடலின் பொருட்டு இடையில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்த புதினங்களின் (நாவல்களின்) பக்கமும், புனைகதைகளின் பக்கமும் போகமுடிந்தது. சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், கி.ரா.வின் வயது வந்தவர்களுக்கான கதைகள், பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை, தி.ஜானகிராமனின் சிறுகதைத் தொகுப்பின் முதல் தொகுதி, புத்தகம் பேசுதுவில் வெளிவந்த ஸ்டார் பிரசுரம் கண.ராமநாதனின் நேர்காணல் (பதிப்பாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நேர்காணல் இது), அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி முதல் பாகம், கண்ணதாசனின் வனவாசம், திண்ணைக்கு ஜெயகாந்தன் அளித்த பேட்டி (மறுவாசிப்பு), திண்ணையில் முன்னர் வெளிவந்த ரிச்சர்ட் பெய்ன்மான் (1965ல் இயற்பியலுக்கு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டவர்) கட்டுரைகளின் தமிழாக்கம், அக்டோபர் நவம்பர் உயிர்மை இதழ்கள், தமிழ்நாட்டிலிருந்து நண்பர் அவருக்காக வாங்கிவந்த புதிய காற்று, புதிய பார்வை, புத்தகம் பேசுது முதலிய சிற்றிதழ்கள், துக்ளக், கி.ரா. கதைகள், சா.கந்தசாமி தொகுத்த இருபதாம் நூற்றாண்டு சிறுகதையாசிரியர்கள் (இரண்டாம் தொகுதி), மூன்றாம் வகுப்பில் படிக்கும் மகனுடைய பள்ளிக்கூட ப்ராஜக்ட்டுக்காக எரிமலை பற்றிய தகவல்கள் சேகரித்து மகனுக்கு உதவியது என்று பல புத்தகங்களைப் படித்தேன் அல்லது படித்துக் கொண்டிருக்கிறேன்.

நிறைய புத்தகங்கள் இருப்பதால் இந்த வசதி. அலுப்படிக்கும்போதோ மனநிலைக்கேற்றவாறோ புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிகிறது. ஒரே நேரத்தில் பல புத்தகங்கள் படிக்கிற வழக்கம் எனக்குள்ள நல்ல மற்றும் கெட்டப் பழக்கமாகும்.

"இண்டலக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை; சிந்திக்கிறவர்கள்" என்று ஜெயகாந்தன் ஒரு நேர்காணலில் சொன்னார். உண்மைதான். என்னைப் போன்றவர்களின் சிந்தனைகளுக்கான கிரியா ஊக்கியாக வாசிப்பது இருக்கிறது. சிந்திப்பதற்குக் கூட யாரும் விஷயம் எடுத்துக் கொடுத்தால் மட்டுமே அதிலிருந்து கிளைக்கிற ஆற்றல் என்னுடையது. ஆதலால், என் புத்தி கற்பூர புத்தியில்லை என்று அறிந்திருக்கிறேன். எனவே, இப்படிப் படிப்பதால் சிந்தனையும், ஞானமும் வளர்கிறதென்ற நம்பிக்கையில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோலவும், கண்ட இடங்களில் வாயை வைத்து உண்ணுவது போலவும் படித்துக் கொண்டிருக்கிறேன். இதில் கிடைக்கிற ஆனந்தமும் அனுபவமும் எழுதுவதை நிறுத்திவிட்டு முழுமூச்சில் படிக்க ஆரம்பித்துவிடலாமா என்ற யோசனையையும் எழுப்புகிறது. வாலிபப் பருவத்தில், நான் மையல் கொண்ட, மனதில் விழுந்துவிட்ட பெண்ணின் பின்னே அவளின் கண்ணசைவுக்காகவும், முறுவலுக்காகவும் ஓடி ஓடித் திளைத்த உற்சாகம், புத்தகங்களைப் பார்க்கும்போது இப்போதும் பெருக்கெடுக்கிறது. அந்தப் பெண்ணை வெல்ல முடியவில்லை. புத்தகங்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில்லை.

நண்பர்கள் ராஜாராம், முருகானந்தம், துக்காராம், பிரக்ஞை ரவிஷங்கர் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர்களின் அறிவு, வாசிப்பு, ஆகியவற்றைப் பார்க்கும்போது, நான் ஒன்றுமே படிக்கவில்லை என்றும் நிறைய வாசிக்க வேண்டும் என்றும் உந்துதல் வரும். இந்த நன்றி நவிலல் வார விடுமுறையின்போது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு மத்தியானப் பொழுது முழுதும் அவ்விதம் அதிகம் உணர்ந்தேன். இலக்கியம் மட்டுமில்லாமல் அரசியல், விஞ்ஞானம், சினிமா, கலைகள் என்று பலவற்றில் அவர்களின் வாசிப்பும் அறிவும் என்னை மிகவும் எளிமையானவனாகவும், ஏழையாகவும் எப்போதும் உணரச் செய்யும். தற்கால எழுத்தாளர்களான ஜெயமோகன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், பி.ஏ.கிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன் உள்ளிட்டப் பலரை வாசிக்கும்போதும் அதே உணர்வு எழும்.

சில நேரங்களில் எதற்காக இப்படிப் புத்தகங்களின் பின்னே அலைந்து கொண்டிருக்கிறோம் என்றும் தோன்றும். ஜெயகாந்தன் சொன்ன மாதிரி, எழுதுவதை நிறுத்தலாம். சிந்திப்பதை நிறுத்த முடியாது. படிப்பதை நிறுத்தினாலும் சிந்தித்துக் கொண்டுதான் இருப்போம் என்பது தெரிந்ததுதான். அந்த மாதிரி நேரங்களில் அலுப்பாக உணர்வதும் உண்டு. ஆனால், அவையெல்லாம் தற்காலிகமானவை என்பது அடுத்த புத்தகத்தைப் பார்க்கும்போது தெரிந்து விடுகிறது.

புத்தகங்களினால் ஞானம் வருமென்றால், பல்கலைக்கழகங்களும் நூல் நிலையங்களும் எத்தனையாயிரம் ஞானிகளை உண்டாக்கி இருக்க முடியும். எனவே, நான் படிப்பதும் எழுதுவதும் ஞானத்துக்காக மட்டுமில்லை என்று தோன்றுகிறது. ஓர் ஆத்ம சுத்திகரிப்பாகவும், எல்லாரையும்போல என்னுள்ளும் இருக்கிற உள்ளொளியைக் கண்டுபிடிக்கிற முயற்சியாகவும், எனக்கும் விஷயம் தெரியும் என்று நேரம் வரும்போது காட்டிக் கொள்கிற உலக இயல்புக்காகவும் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன் போல. வாசிப்பு அமைதியைத் தரும் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்தேன். ஆனால் அது அமைதியின்மையையும், தேடலையும், கேள்விகளையும், போக வேண்டிய பாதையையும் அதிகமாக்கியுள்ளது. எப்போது முடியும் என்று தெரியாத பயணம் இது.

எனக்குள்ளிருக்கிற உள்ளொளியை நான் தரிசிக்க நேர்கிற (நேருமா?) அந்த கணத்தில் வாசிப்பை மட்டுமல்ல எழுத்தை ஏன் வாழ்க்கையைக் கூட விட்டுவிடத் தோன்றலாம்.

ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை
பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே

என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. ஆழித் துரும்பு அவ்வப்போது வலைப்பதிவிலும் கொஞ்சம் பாழில் எழுதித் திரியட்டுமே.

No comments: