ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னால் இருக்கும். அது ஒரு புதன்கிழமை. என் தந்தையிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு நாள்கள் கழித்து சென்னை செல்லப் போவதாகச் சொன்னார். தன் நண்பரும் ஆதர்ச எழுத்தாளருமான ஜெயகாந்தனைச் சந்திக்க, அவருடன் பொழுதுகள் செலவிட என் தந்தையார் அடிக்கடி சென்னை செல்வது வழக்கம். அல்லது, ஜெயகாந்தன் வெளியூர்களுக்குப் போனால் அந்த ஊர்களுக்கும் செல்வது வழக்கம். எனவே, "ஜெ.கே.வைப் பார்ப்பதற்கா?" என்று கேட்டேன். "ஆமாம். ஹர ஹர சங்கர என்று எழுதப் போகிறாராம். வரச் சொல்லியிருக்கிறார். நான் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்" என்றார். கதைகளை எழுதுவதற்கு முன், எழுதப் போவதை நண்பர்களிடம் கதையாகவே சொல்கிற வழக்கம் ஜெயகாந்தனுக்கு உண்டு. அவர் எழுத்தில் இருப்பதைவிட உணர்ச்சிகரமாகவும் நன்றாகவும் கதை சொல்லக் கூடியவர் என்று இதைப் பற்றிக் கிருஷ்ணன் நம்பி எழுதிய ஞாபகம்.
மேலும், நண்பர்கள் எந்த அளவுக்கு அவருடன் பொழுதைக் கழிக்க விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க விரும்புபவர் ஜெயகாந்தன் என்பதை அவரை நன்கறிந்தவர்கள் அறிவர். சில நேரங்களில் ஜெயகாந்தன் சொல்லச் சொல்ல நண்பர்கள் கதையின் பக்கங்களை எழுதியதும் உண்டு. மேலும், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலைப் பற்றி நண்பர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டுவிட்டு, கதையை எப்படி ஆரம்பிப்பது என்று யோசிப்பதாகச் சொன்னார். அப்போது அவர் தன் நண்பர்களுடன் ஒரு லாரியில் பயணித்துக் கொண்டிருந்தார். கதையைக் கேட்ட என் தந்தையார், இப்போது எங்களுக்கு எப்படிச் சொன்னீர்களோ அப்படியே ஆரம்பியுங்களேன் என்றாராம். "அந்த லாரியில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள்" என்று அந்தக் கதை ஆரம்பிக்கும். இந்நிகழ்ச்சியை ஜெயகாந்தனே பதிவு செய்திருக்கிறார். அதனால், எழுதும்போது நண்பர்களின் அருகாமையைத் தொல்லையாக உணராமல் சந்தோஷமாகக் கருதுபவர் ஜெயகாந்தன் என்று நான் அனுமானித்து வைத்திருக்கிறேன்.
ஹர ஹர சங்கரவை எழுதி முடித்துவிட்டார் போலிருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி, கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக புத்தகம் வெளிவர இருக்கிறது என்று அறிகிறேன். 64 பக்கங்கள், 15 ரூபாய் விலை. ஜய ஜய சங்கரவின் தொடர்ச்சியாக இது இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. தினமணி கதிரில் இது குறித்த செய்தியை இங்கே பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. ஜெயேந்திரர் கைதின் புன்புலத்தில் எழுதப்பட்ட கதையோ என்றும் தோன்றுகிறது. ஹர ஹர சங்கரவைப் படிக்க உங்களைப் போலவே நானும் ஆவலாக உள்ளேன். அந்தக் காரணத்தினாலேயே என்ன கரு, என்னவிதமான கதை என்றெல்லாம் எந்தக் கேள்வியையும் என் தந்தையைக் கேட்கத் தோணவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment