இந்தக் குறும்படத்தை எடுத்தவுடனேயே நண்பர் அருண் வைத்யநாதன் என்னையும் என் நண்பர் ஒருவரையும் சிறப்புக் காட்சி காண அவர் வீட்டுக்கு அழைத்தார். இந்த மாதிரியெல்லாம் அழைக்கப்படுகிற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்று எனக்குத் தெரிந்திருந்ததால், அவர் அழைப்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஆனாலும், அதற்கு என்னால் போக இயலவில்லை. போய் படத்தைப் பார்த்துவிட்டு வந்த நண்பரோ படத்தைப் பற்றி புகழ்ந்து சொன்னார். அடுத்த முறை அருணுடன் தொலைபேசியபோது, கேசட்டை அல்லது டிவிடியைக் கொடும் சாரே, நான் வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிப் பார்த்தேன். அருண் கேட்பதாக இல்லை. உங்களுடன் உட்கார்ந்து படம் பார்த்து உங்கள் விமர்சனம் கேட்க வேண்டும் என்றார். விமர்சனம் என்றால் காத தூரம் ஓடுகிற என்னின் விமர்சனம் வேண்டுமென்று சொல்பவரை என்ன சொல்வது?
போனவாரம் என் வீட்டில் பல இலக்கிய நண்பர்களுடனும், அவர்கள் குடும்பத்தினருடனும், அருண் மற்றும் அவர் குடும்பத்தினருடனும் இந்தப் படத்தைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்துவிட்டு நண்பர்கள் சொன்ன கருத்துகள் அருணுக்கு மிகவும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்தன என்று நினைக்கிறேன். நண்பர் முருகானந்தம் கையால் பாராட்டு பெறுவது மிகவும் சிறப்பான விஷயம். அருணின் படம் திரையிடப்படுவதற்கு முன் நண்பர் முருகானந்தம், அங்கிருந்த அனைவருக்கும் அருணைப் பற்றியும் அவரின் முந்தைய படங்கள் பற்றியும் ஓர் அறிமுகம் கொடுத்தார். அருண் நினைத்து நினைத்து மகிழக் கூடிய அறிமுகம் அது. முருகானந்தம் முகஸ்துதி செய்பவர் இல்லை. அவர் தேர்ந்த ரசனையில் தேறுகிற விஷயங்கள் மிகக் குறைவாக இருக்கும். அப்படித் தேர்கிற விஷயங்கள் அற்புதமானவையாக இருக்கும். எனவே, அவரின் பாராட்டு அருணுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன்.
அருணின் மூன்று படங்களில் இந்தப் படம் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. இது வருவதற்கு முன் அதிகம் பிடித்த அவரின் படம் ப்ரெய்லியண்ட். இந்தப் படத்தில் வாய்ஸ் ஓவர் என்கிற நுட்பத்தைக் கையாண்டிருக்கிறார். இசையும் பாடலும் நன்றாக வந்துள்ளன. படம் ஆரம்பித்த மூன்று நிமிடத்திலேயே என் மனைவி, நான் என்று பலர் படத்தின் போக்கை ஊகித்து விட்டோம். ஆனால், பல இந்தியர்களுக்கு இந்தப் படம் புரியவில்லை. அமெரிக்கர்கள் எளிதில் புரிந்து கொண்டார்கள் என்று அருண் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. படத்தின் போக்கை ஊகிக்க முடிந்தாலும் அலுப்படிக்காமல் காட்சிகளைச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். பத்து நிமிடப் படத்தில் இப்படி ஆழமாகவும் subtle ஆகவும் மெசேஜ் சொவ்வது ஜெயகாந்தன் சொன்னதுபோல சிறுகதை எழுதுவது மாதிரியான காரியம்தான்.
அருணிடம் நேரில் சொன்ன விஷயம்தான். ஆனாலும் இங்கும் பதிகிறேன். அருண் எழுத்துகளைப் பார்க்கும்போது அவர் சினிமா மொழி எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அவர் சினிமாவில் கச்சிதமும், தாக்கமும், முதிர்ச்சியும், வெளிப்பாடும் நன்றாக வெளிவருகின்றன. இதற்குப் பொருள் அருண் எழுத்துகள் மோசம் என்பதில்லை. சினிமா அவருக்கு இயல்பாக வருகிறது என்பது இதன் பொருள். அருணின் இதுவரையான சினிமா முயற்சிகள் சிறப்பானவையாகவும், சிலாகிக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன. அவரையும் அவர் படங்களையும் என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது நான் செய்த நல்ல காரியங்களுள் ஒன்று. அருண் தடம் பிறழாமல் தொடர்ந்து இத்தகைய நல்ல படங்களைத் தருவார் என்று நம்புகிறேன்.
பி.கு: கடந்த 24 மணி நேரத்தில் இது ஆறாவது பதிவு. :-) அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
என்ன படமோ..போங்க...
அடுத்ததாவது ரஜினியை வச்சு "நல்ல" படமா எடுக்கச் சொல்லுங்க... :-)
அவரை முதல்ல இந்த படத்தை வலையேத்த சொல்லுங்கய்யா...
Post a Comment