Monday, December 06, 2004

சில வார்த்தைகள்

நண்பர் சுரேஷ் கண்ணன் பிச்சைப் பாத்திரம் என்ற தலைப்பில் வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். அவர் எழுத்துகளை நான் ஆர்வமுடன் படிக்கிறேன் - முக்கியமாய் அவரின் இலக்கியம், சினிமா தொடர்பான கருத்துகளை. அவ்வப்போது சற்று அதிகமாக துதிபாடுகிற அல்லது கேள்விக்குரிய கருத்துகளைச் சொல்பவர் என்றாலும், அவர் கருத்துகள் எப்போதுமே ஆராயத்தக்கவை. இலக்கியத்தின் நோக்கம் harmonization ஆக இருக்க வேண்டும் என்று ஜெயகாந்தன் திண்ணை இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னார் என்று ஞாபகம். அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, தன் வாசிப்பிலும் எண்ணங்களிலும் எழுத்திலும் hormonizationஐத் தேடுபவர்கள் மிகவும் குறைவு. கலகம் என்பதையும், புரட்சி என்பதையும், கட்டுடைத்தல் என்பதையும் மனம்போன போக்கில் புரிந்து கொண்டு, சூழலைக் கெடுக்கிற, சூழலை மாசுபடுத்துகிற, ஜாதி, மதம், மொழி என்ற பெயர்களில் மக்களிடையே விஷத்தையும் விரோதத்தையும் விதைக்கிற எழுத்துகளையும் எண்ணங்களையும் பார்த்து வருகிற, கொண்டாடுகிற நிலையில் கணிசமான அளவுக்கு இன்றைய உலகம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலக்கியம் மற்றும் வாழ்க்கையின் நோக்கம் harmonization என்பதைப் புரிந்து கொண்டவர் சுரேஷ் கண்ணன் என்கிற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்துகிறவிதமாக அவர் எழுத்துகள் இதுவரை அமைந்து வந்துள்ளன. அதனாலேயே என்னளவில் சுரேஷ் கண்ணன் குறிப்பிடத்தக்கவர் ஆகிறார்.

மேலும், அவரின் வாசிப்பு நான் பாராட்டுகிற ஒன்றாகும். நல்லவற்றையும் அல்லவற்றையும் தேடித் தேடி வாசிக்கிற (சினிமா என்றால் பார்க்கிற) ஒரு தேடல் அவரிடம் இருக்கிறது. வாசித்தோ பார்த்தோ முடித்தபின் அந்த அனுபவத்தை தனக்குள் மட்டுமே நிறுத்திக் கொள்ளாமல் (நேரமின்மையாலும் பிற காரணங்களாலும், என்னைப் போன்றவர் இதை முழுமூச்சில் செய்வதில்லை) கொஞ்சம் மெனக்கெட்டு அவற்றைப் பற்றி எழுதிப் பகிர்ந்து கொள்கிற முனைப்பும் சுரேஷிடம் இருக்கிறது. எனவே, அவரை வலைப்பதிவு உலகிற்கு மீண்டும் வரவேற்கிறேன்.

(குறிப்பு: harmony என்ற வார்த்தைக்கு சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி 10 பொருள்கள் தருகிறது. இன்னிசைவு, ஒத்திசைவு ஆகிய பொருள்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. ஆனாலும், ஆங்கில வார்த்தையையே இப்போதைக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். பரி, இந்தக் குறிப்பு உங்களுக்குத்தான். :-) )

நண்பர் நம்பியும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். பெயர்தான் சகிக்கவில்லை. வாந்தியாம். சுரேஷ் மற்றும் நம்பியைப் போன்றோர் அளவுக்கு மீறிய அவையடக்கத்தால் பிச்சைப்பாத்திரம், வாந்தி போன்ற பெயர்களைத் தங்கள் வலைப்பதிவுக்கு வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் ஆற்றல் மற்றும் திறனறிந்தவர்களுக்கு இது ஒருவிதத்தில் செயற்கையாகவும், அலப்பலாகவும் தெரிய வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, நான் இணையக் குழுக்களில் எழுத ஆரம்பித்தபோது எனக்குப் படைப்பூக்கம் அளித்த படைப்புகளை எழுதியவர் நம்பி. அவர் வலைப்பதிவின் பெயரைப் போல் பலர் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போது, ரசிக்கக்கூடிய படைப்புகள் பலவற்றைத் தந்தவர் நம்பி. அவரே வாந்தி என்று பெயர் வைத்திருப்பது சரியில்லை. இப்படியே போனால், மலம், சிறுநீர், .... என்று வலைப்பதிவுகளுக்கு இன்னும் என்னென்ன பெயர்கள் வருமோவென்று பயமாக இருக்கிறது. கர்த்தரே, எம்மை ரட்சியும்! நண்பர் நம்பியையும் வலைப்பதிவு உலகிற்கு வரவேற்கிறேன்.

நல்ல விஷயங்கள் என்று நான் நினைப்பதை - அது எங்கிருந்து வந்தாலும் - தாராளமாகப் பாராட்டுவதற்கு நான் தயங்குவதில்லை. பதிலுக்கு என்னை யாரும் பாராட்டுகிறார்களா என்று நான் கவலைப்படுவதும் இல்லை. நண்பர் சுரேஷ்கூட இதைக் குறிப்பிட்டு மரத்தடியில் ஒருமுறை எழுதினார். அதற்குக் காரணமிருக்கிறது. பாராட்ட வேண்டிய விஷயங்களைப் பாராட்டாமல் போனால், பின்னர் பாராட்டத் தகாத விஷயங்களுக்கு வணக்கம் வைக்க வேண்டி வரலாமென்றுதான். அந்தவிதத்தில், சுரேஷ், நம்பி ஆகியோரின் எழுத்துகளும் எண்ணங்களும் வரவேற்கத் தக்கவை. வாசிப்போரின் சிந்தனையைத் தூண்டத் தக்கவை. அவர்களால் வலைப்பதிவு உலகமும், வலைப்பதிவு உலகத்தால் அவர்களும் பயன்பெற வாழ்த்துகிறேன்.

இனி, தினம் ஒரு தமிழ்ச் சொல்லுக்கு:

கடந்த வெள்ளிக்கான வார்த்தை: மடிமாங்காய்ப்போடுதல். பொருள்: 1. செய்யாததைச் செய்ததாக ஏறிட்டுக் குற்றங் கூறுதல் (to charge falsely, as putting a mango in another's possession in order to accuse him of theft), 2. இலஞ்சங் கொடுத்தல் (to bribe). உதாரணம்: 1. அந்தக் கொலையைத் தன் கட்சிக்காரர் செய்ததாக அரசாங்கம் மடிமாங்காய்ப் போடுவதாக அவர் வழக்கறிஞர் கூறினார். 2. தாசில்தாருக்கு மடிமாங்காய்ப் போட்டு இலவச மனை பட்டா வாங்கியதாக அந்த ஏழை கூறினார்.

சனிக்கான வார்த்தை: பால்வார்த்துக்கழுவுதல். பொருள்: அடியோடு இழந்துவிடுதல் (to lose forever). உதாரணம்: சூதாட்டத்துக்கு அவர் தன் சொத்தைப் பால்வார்த்துக்கழுவி விட்டார்.

ஞாயிறுக்கான வார்த்தை: மிகுத்துச் சொல்லல். பொருள். 1. அழுத்திக் கூறுகை (making emphatic mention), 2. விதந்துகூறுகை (praise, appreciation). உதாரணம்: மிகுத்துச் சொல்லல் பொருட்டுப் மிகையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிற உலகவழக்கு உண்டு.

இன்றைக்கான வார்த்தை: பிறிதுமொழிதல். பொருள்: கருதிய பொருளை மறைத்து அதனைப் புலப்படுத்த அதுபோன்ற பிறிதொன்றைச் சொல்லும் அணி. செய்யுட்களில் பயன்படுத்தப்படுவது. உதாரணம்: அந்த வலைப்பதிவு பிடித்திருக்கிறதா என்று கேட்டதற்கு இந்த வலைப்பதிவு பிடித்திருக்கிறது என்றார். (இது சரியான உதாரணமா என்று தெரியவில்லை.)

5 comments:

Nambi said...

சிவா,
தலைப்பைப் பற்றி பலரும் தனிப்பட்ட முறையில் வாந்தி எடுத்துவிட்டார்கள். சரி, தலைப்பில் என்ன இருக்கிறது. A rose is a rose .... ... :-).

உள்ளுக்குள் எழுதுவதையாவது உருப்படியாக எழுத முயற்சிக்கலாம்.

இனிமேல்தான் உங்கள் வலைப்பதிவை எல்லாம் மேய வேண்டும்.

அன்புடன்
நம்பி.

பரி (Pari) said...

பரி, இந்தக் குறிப்பு உங்களுக்குத்தான். :-)
>>>
ஆஹா, கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா!!

இந்த ரேஞ்சில போனா, என்னெ 'தமிழ்ப் பித்தன்'-னு முத்திரை குத்தி ஒரு ஓரமா குந்த வச்சிடப் போறாங்க!!!

அலோவ்.... டமில் மக்களே, நானும் ஒரு தங்கிலீஷ் தறுதலைதான் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் :))

Thangs said...

பிறிதுமொழிதல் உதாரணம்:

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

Anonymous said...

þÄïºõ ¾Á¢úî ¦º¡ø þø¨Ä ¿ñÀ§Ã. «¾üÌ ®¼¡É ¦º¡ø ¨¸äðÎ ±ýÀ¾¡Ìõ.


-¸¢Ã¢

Anonymous said...

sorry for that cryptic comment(previous one). Font problem.

'ilanjam' is not a tamizh word. The equivalent is "kaiyoottu"