குறிப்பு: பெரியாரைப் பற்றி ஏற்கனவே இட்ட இப்பதிவு காணாமல் போய்விட்டதால் தலைப்பை மாற்றி மீண்டும் இடுகிறேன்.
(மரத்தடியில் பெரியார் பற்றிய இழை ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு அதில் ஆர்வமில்லை. மரத்தடியில் பேசுகிறவர்களைவிடப் பெரியாரை ஆழமாகவும் அதிகமாகவும் திண்ணையில் அலசியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பெரியாரிஸ்டான நண்பர் ராஜன் குறை நிறப்பிரிகையில் எழுதிப் பின்னர் திண்ணையிலும் பிரசுரமான பெரியாரைப் பற்றியக் கட்டுரை பெரியாரை ஏற்போராலும் மறுப்போராலும் கவனிக்கத்தக்கது. அதேபோல, ஜீவானந்தம், ஜெயமோகன், கோபால் ராஜாராம் என்று பலர் (பிற பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மன்னிக்கவும்.) பெரியாரைப் பற்றி ஆழமாக எழுதியிருக்கிறார்கள். அக்கருத்துகளில் உடன்படுவோர் மறுப்போர் எவரும் பொருட்படுத்திப் படிக்கக் கூடிய கட்டுரைகள் அவை. அப்படியே, சமீபத்தில் காலச்சுவடு வெளியிட்ட பெரியார் சிறப்பிதழில் ரவிக்குமார், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் உள்ளன. அதுவுமில்லாமல், திராவிடர் கழகம் வெளியிட்ட பெரியார் களஞ்சியத்திலிருந்து ஆர்வலர்கள் தட்டச்சு செய்து கொடுத்த பெரியார் பேச்சுகள்/கட்டுரைகள் திண்ணையில் வெளியாகியிருக்கின்றன. பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நிறைய விஷயங்கள் இணையத்தில் உள்ளன. எனவே, மரத்தடியில் ஓடுகிற பெரியார் இழையை மௌனமாக கவனித்து வருகிறேன்.
ஹேமநாத பாகவதர் என்ற பெயரில் ஒருவர் பெரியாரைப் பற்றி எழுத ஆரம்பித்திருப்பதைப் படித்ததும், புதிய கோடாங்கியில் முன்னர் வெளிவந்த இந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. ஏப்ரல் 2003 புதிய கோடாங்கி இதழில் வெளியான கட்டுரை இது. கவிஞர் கலைக்களஞ்சியம் இக்கட்டுரையின் ஆசிரியர். ஆனந்தாயி முதலிய நாவல்களை எழுதிய சிவகாமி இ.ஆ.ப. ஆசிரியராக இருந்து வெளியிடுகிற சிற்றிதழ் புதிய கோடாங்கி. தலித் படைப்புகளுடனும் பார்வையுடனும் வெளிவருவது. எதற்காகத் தட்டச்சு செய்து வைத்தேன் என்று நினைவில்லை. இப்போது நினைவுக்கு வந்ததும் புதிய கோடாங்கிக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன். இக்கட்டுரையின் கருத்துகளுடன் நான் உடன்படுகிறேனா இல்லையா என்பதற்குள் போகவில்லை. இத்தகைய பார்வை ஒன்று பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றே இதைப் பகிர்ந்து கொள்கிறேன். மேலும், இக்கட்டுரை பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது. அவற்றை அறிந்து வைத்துக் கொள்வது உதவலாம் என்ற எண்ணத்துடனும் பகிர்ந்து கொள்கிறேன். தலித்துகள் அனைவரும் பெரியாரின் பக்தர்கள், பெரியார் தலித்துகளுக்காக உழைத்தார் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகிற அதே நேரத்தில் தலித்துகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு திராவிட இயக்கத்தையும், பெரியாரையும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். பெட்னா 2004 விழாவுக்கு அமெரிக்கா வந்திருந்த சிவகாமி கூட மேடையிலேயே பெரியாரைப் பற்றி ஏதோ சொல்லப்போய் சிறுகுழப்பம் வந்தது என்று அறிந்தேன். காலங்காலமாகத் தங்களை ஒடுக்கியும் அடக்கியும் வைத்த சமூக அமைப்பின் மீதும், மனிதர்கள் மீதும் தலித்துகள் வைக்கிற விமர்சனமாகவே இத்தகைய கட்டுரைகளை நான் பார்க்கிறேன். அவர்களின் கோபம் தீரும்போது, அவர்களின் பிரச்னைகள் தீரும்போது, எல்லாவற்றின் மீதும் அவர்களுக்கு ஒரு புதிய பார்வை கிடைக்கலாம். எனவே, இந்தக் கட்டுரை குறித்து திட்ட விரும்புபவர்களும் பாராட்ட விரும்புவர்களும் அதைப் புதிய கோடாங்கிக்கு எழுதுங்கள். என்னுடைய நோக்கம் இத்தகைய கருத்தொன்றைப் பகிர்ந்து கொள்வதே. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களோ விவரங்களோ ஒருவேளை தவறென்றாலும் அதை அறிய இதைப் பகிர்ந்து கொள்வது உதவுமென்பதால் செய்கிறேன் - பி.கே. சிவகுமார்)
தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்ட பெரியார் - கவிஞர் கலைக்களஞ்சியம்:
பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.
"திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல் "இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.
1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வெ.ரா. 1925-க்குப் பிறகு பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல் கட்டமாக அவரால் வித்திட்ட ஹிந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.
"சித்திர புத்திரன்" என்ற புனைப்பெயரில் பெரியார் ஈ.வெ.ரா. 07.03.1926-ல் தனது 'குடியரசு' இதழில், 'தமிழுக்கு துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்' என்ற தலைப்பில்:
"ஹிந்திக்காக செலவாயிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதவருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100-க்கு 97 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் மொத்தத் தொகையில் 100-க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதவராயிருந்தும் 100-க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படிப்பவர்களில் 100-க்கு 97 பேர்களாயுள்ளனர். பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், இந்திக்கு எடுத்துக் கொள்வதைப்போல 100-க்கு ஒரு பங்கு கவலை கூட தமிழ் மொழிக்கு எடுத்துக் கொள்வது இல்லை என்பதையும் இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப் பற்றி வருந்தாமலும், இமாதிரி பார்ப்பனர்களுக்கு மட்டும் பலன் தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.
ஹிந்தியைப் பொது மொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்குப் பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாய பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு? இனி கொஞ்ச காலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது.
பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்ய கற்பித்துத் தரும் ஒரு வித்தையாகி விட்டது. இந்த ரகசியத்தை நமது நாட்டு பாமர மக்கள் அறிவதே இல்லை. இரண்டொருவருக்கு இதன் இரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு தாங்களும் ஒத்துப் பாடுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களை தேசத்துரோகி என்று சொல்லி விடுவார்கள்" என்று ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
அரசுப் பணியாளர்கள்தான் அரசுக்குப் பயந்து தங்கள் கட்டுரைகளை இதழ்களில் புனைபெயர்களில் வெளியிடுவார்கள். ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களோ அரசு பணியாளர் அல்ல. அப்படியிருக்க அவர் 'சித்திர புத்திரன்' என்ற புனைப்பெயரில் அக்கட்டுரையை எழுதவேண்டிய அவசியம்தான் என்ன?
பெரியார் ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்புக் கட்டுரையை தனது பெயரில் வெளியிடாமல் புனைப்பெயரில் வெளியிட்டமைக்குக் காரணம், பெரியார் ஈ.வெ.ரா.தான் அக்கட்டுரையை எழுதினார் என்ற உண்மையை பார்ப்பனர்கள் அறிவார்களேயானால் அவர்கள் பெரியார் ஈ.வெ.ரா.வைப் பார்த்து "நீ தானே தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்டாய்" என்று பரிகாசம் செய்வார்களே என்பதற்கு பயந்தே அவர் அவ்வாறு செய்தார்.
1917-ல் ஹிந்தியை காந்தி ஆதரிக்க அதை நீதிக்கட்சியினர் எதிர்த்தபோது நீதிக் கட்சிக்கு ஆதரவாக அந்நாளில் ஹிந்தியை எதிர்க்காத பெரியார் ஈ.வெ.ரா. 1926-ல் ஹிந்தியை எதிர்க்க அப்படி என்ன அவசியம் வந்தது?
மூன்றாம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியில் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்று 11 வயதில் நான்காவது வகுப்பு தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையாரின் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்த கன்னடத்துக்காரரான பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு தமிழர்களில் எவருக்குமே இல்லாத அளவிற்கு தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் திடீர் என்று அவரது 47-வது வயதில் பாசமும், பற்றும் பீரிட்டு வரக்காரணம்தான் என்ன? அவருக்கு ஆகாத பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தெழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.
தமிழர்கள் மீதும், தமிழ் மொழிமீதும் பற்றுடையவர்போல் நடந்துக் கொண்டுவந்த பெரியார் ஈ.வெ.ரா. நாளடைவில் அவரது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.
1.6.1954-ல் வெளியான 'விடுதலை' இதழில் பெரியார் ஈ.வெ.ரா. "நீ ஒரு கன்னடியன். எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்? என்று என்னைக் கூடக் கேட்டார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா, என்றேன். இதற்குக் காரணம் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்" என்கிறார்.
"தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அது மிகவும் உயர்ந்த மொழி; அ·து எல்லா வல்லமையும் பொருந்திய மொழி; சமயத்தை வளர்க்கும் ஒழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லபடுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை" என்றும், "எனது ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல" என்றும், "என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை" என்றும் அவர் பலமேடைகளில் பேசியும், கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் 'தந்தை பெரியார் சிந்தனைகள்' என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்ப் புலவர்களைப் பற்றியும், தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும் பெரியார் ஈ.வெ.ரா:
(1) தமிழ் புலவர்கள் தமிழை ஒரு நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியில் ஒரு பயனும் ஏற்பட முடியாதபடி செய்து விட்டார்கள்.
(2) நம் நாட்டில் எனக்கு தெரிந்தவரையில் தமிழ் நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை.
(3) மக்களுக்கு அறிவு வரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காய புலவனும் இல்லை.
(4) தமிழ் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்தது போல் வேறு எந்த மொழியையும் அந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்ததில்லை.
(5) தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாள வேண்டிய மொழியாகும். நாகரீகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை.
(6) தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதேயழிய, அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை. அதுமாத்திரமே அல்லாமல் எவ்வளவுக் கெவ்வளவு தமிழ் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகின்றதே தவிர, முன்பக்கம் பார்க்க முடிவதே இல்லை.
(7) தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப் பார்வை ஏற்படுகிறது. தமிழ் படித்துவிட்டால் பின்பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப் புலவனும், மேதையும் தமிழைப் படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆகிவிடுகின்றான்.
(8) "தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் - நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுப் போன்று தலை தூக்க முடியாமல் செய்து வருகின்றன" என்கிறார்.
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேர்க்கை, திரிகடுகம், திருக்குறள், நாலடியார் இவைகள் எல்லாம் நன்னெறி இலக்கியங்கள் என்பது கூட பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்குத் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கது.
"தமிழ் படித்தால் அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை. தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப் பார்வை ஏற்படுகிறது" என்று கூறும் பெரியார் ஈ.வெ.ரா. தன் தாய்மொழியான கன்னடத்திலா படித்தார்? தமிழில்தானே படித்தார்.
1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் "விடுதலை" இதழின் தலையங்கத்தில் "இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் "கொண்டிருக்கிறார்கள்" என்றும், "தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள் என்றூம், காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்" என்றும், 8.3.1965-ல் "விடுதலை" இதழின் தலையங்கத்தில் "தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை. தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி" என்றும் அவரது கையப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.
9.3.1965-ல் "விடுதலை" இதழில் பெரியார் ஈ.வெ.ரா. "ஆட்சி மொழியாக 1965 ஜனவரி 26 முதல் இந்திதான் இருக்க வேண்டும் என்ற பிரிவையும், அதற்குள்ளே (இந்திய அரசியல் சட்டம் 343-க்குள்ளே) நுழைத்தவர்கள் இந்த அக்கிரகாரத் திருமேனிகள் (டாக்டர் இராஜேந்திரபிரசாத், பண்டிதர் ஜவகர்லால் நேரு) என்பது மறுக்க முடியாத உண்மையாகும்" என்று ஒரு உண்மையான செய்தியையும் வெளியிட்டுள்ளார்.
1965-ல் தமிழ்நாட்டில் நடந்தேறிய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவே 1967-ல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்று அத்தோடு அக்கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் வீழ்ச்சியுற்றது.
"என் தலைவர் காமராஜ், என் வழிகாட்டி அண்ணா" என்று 1965-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 'தலைவர்' எனப்பட்ட காமராஜர் 1967ல் நடந்த தேர்தலில் நின்று அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் P.சீனிவாசன் என்பவரிடம் தோற்றார்.
காங்கிரஸ்சின் படுதோல்வியாலே தி.மு.க. அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீட்சிக்கு அன்றைய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மட்டும்தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
1967-ல் நடந்த தேர்தலின் போது பெரியார் ஈ.வெ.ரா. ஆதரித்து வந்த காங்கிரஸ்சும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா. 1.10.1967-ல் 'விடுதலை' இதழில் "தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கின்றார்கள் என்று யாராவது காட்ட முடியுமா?" என்று வெளியிட்டுள்ளார். அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரி விட்டார் என்பதுதான்.
பெரியார் ஈ.வெ.ரா. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது ஆற்றிய சொற்பொழிவில் அவர் "பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் முயற்சியாலேயே 1919, 1920-ம் வருடங்களில் நடந்த கிளர்ச்சிகளால் எங்கள் நாட்டிலே ஏன் தெலுங்கு, கன்னடம், மலையாள நாட்டிலே வீதியில் நடக்கிற உரிமை வந்துவிட்டது. இப்படி வீதியில் எல்லோரும் நடக்கலாம். எல்லா ரோடுகளிலும் யார் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையை அப்போது அதிகாரத்தின் மூலம் அமுலுக்குக் கொண்டுவந்து விட்டார்கள்.
பார்ப்பனர்கள் தண்ணீர் மொண்டு உபயோகப்படுத்துகிற குளத்திலேயும், கிணற்றிலேயும் மற்ற தாழ்ந்த சாதிக்காரர்கள் எனப்படுகிற நாமும் தண்ணீரை எடுக்கலாம், உபயோகப்படுத்தலாம் என்று அப்போது ஜஸ்டிஸ் கட்சியினர் சட்டம் செய்தார்கள். இதெல்லாம் காந்திக்கு முன்பே நடந்த காரியங்களாகும். காங்கிரசும், காந்தியும் வந்துதான் இந்த காரியங்கள் நடந்தன என்பதெல்லாம் புரட்டும் பித்தலாட்டமுமாகும்.
அது மாத்திரமல்ல எல்லா சாதிக்காரனும் பஞ்சாயத்து போர்டிற்கும், முனிசிபாலிட்டிக்கும், தாலுகா, ஜில்லா போர்டுகளுக்கும், சட்டசபைக்கும் போகலாம் - நியமிக்க வேண்டும் என்ற திட்டம்கூட காந்தி வருவதற்கு முன்பே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் செய்துவிட்டனர். பார்ப்பானும் சட்டசபைக்குள் நுழையலாம், பறையனும் போகலான் என்பதெல்லாம் காந்தியால் ஆன காரியம் அல்ல. அதற்கு முன்பே பறையர், சக்கிலிகள், பள்ளர்கள் என்பவர்கள் சட்டசபையில் இருந்தார்கள் என்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குளத்திலேயும், கிணற்றிலேயும் பார்ப்பானும், பறையனும், சூத்திரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக் கூடாது. கோயிலுக்குள் போகக் கூடாது, மேல்ஜாதிக்காரனுக்குத் தனிக்குளம், தனிக்கிணறு, தனிக்கோவில் - மற்ற சாதிக்காரனுக்குத் தனிக்குளம், கிணறு, கோவில்கள் கட்டித்தர வேண்டும் என்பதுதான் காந்தியின் திட்டம் என்பது எனக்குத் தெரியும். யாராவது இல்லை என்று சொல்லட்டுமே பார்ப்போம். சும்மா இன்றைக்குச் சொல்லுவார்கள் காந்திமகான் காட்டிய வழி - மகாத்மாவின் சேவை என்றெல்லாம். இது வெறும் புரட்டு.
நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குக் காரியதரிசியாக, தலைவனாக இருந்தபோதுதான் ரூ.48,000 (நாற்பத்தெட்டாயிரம் ரூபாய்) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு கிராண்ட் அனுப்பினார்கள். எதற்கு? பறையன், சக்கிலி, பள்ளனுக்கு வேறு பள்ளிக்கூடம், பறையனுக்கு வேறு கோவில் கட்டிக் கொடு; ஏனெனில் அவர்கள் மேல் சாதிக்காரர்களுக்கு என்று இருக்கும் பள்ளிக்கூடங்கள், கோயில்களுக்குப் போய் இரகளை செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.
ஆனால் அந்தக் காலத்திலேயே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சட்டம் செய்து விட்டார்கள் - ஒன்றாகப் படிக்க வேண்டும். படிக்கிறதிலே சாதி வித்தியாசம் காட்டக் கூடாது என்று. இன்றுங்கூட அந்தச் சட்டப்படி எல்லாப் பள்ளிக்கூடத்திலும் அமுல் நடக்கிறது. பஞ்சமர்கள் எனப்படும் பறையர்கள் சாதிகளிலிருந்து மாணவர்களைச் சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் சர்காரின் கிராண்ட் அவைகளுக்குக் கிடைக்காது என திட்டம் செய்து விட்டார்கள்.
கல்வி இன்ஸ்பெக்டர் வரும்போது 'கீழ்சாதிப் பையன்கள் இல்லையா?' என்பார். 'இல்லை, யாரும் வரவில்லை' என்றால் 'இல்லாவிட்டால் போய் அழைத்துக் கொண்டுவா" என்பார்.
நான் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே திரு.ராஜகோபாலாச்சாரியார் என்னிடம் வந்து சமுதாய சீர்திருத்தம்தான் நமக்கு வேண்டும்; அது காந்தியால்தான் முடியும் என்று சொல்லி என்னை காந்தி சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் பதவியை இராஜினாமாக் கொடுத்து வெளியேறி காங்கிரசில் சேர்க்கப்பட்டு விட்டேன். நான் காங்கிரஸ் சென்றபிறகு தமிழன் ஒருவனுக்கு அதுவரை கிடைக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலர் - தலைவர் இடத்தில் என்னை உட்கார வைத்தார்கள்.
ஏனென்றால், திரு.வி.க. சாதாரண ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து வந்தவர். டாக்டர் வரதராஜலு அவர்கள் 'பிரபஞ்ச மித்திரன்' வாரப் பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்பமாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றிவிடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ.உ.சிதம்பரனார் ஒருவர். அவர் பாவம் எல்லாவற்றையும் விட்டு நொடிந்து போய் கஸ்தூரிரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். நானோ சிறிது வசதி உள்ளவன். பெரிய வியாபாரி - பல பதவிகளை விட்டு வந்தவன் என்ற முறையில் ராஜகோபாலாச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்வைப்பார். உண்மையாகவே நானும் அதை நம்பி மிக்க விசுவாசமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நானும், என்னுடைய ஆட்களும் மேடைதேடிக் கொடுத்துவிட்டோம்" என்று பேசி வந்தார்.
பெரியார் ஈ.வெ.ரா.வின் பேச்சுக்களையும், செயல்களையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தமிழர் மீதும், தமிழ்மொழி மீதும் வைத்திருந்த பற்றும், பாசமும் உண்மை இல்லை என்பதும், ஹிந்தியை அவர் உள்உணர்வோடு எதிர்க்கவில்லை என்பதும், பார்ப்பனர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புதான் ஹிந்தியை அவர் எதிர்க்கக் காரணம் என்ற உண்மையுமன்றோ புலப்படுகிறது.
நன்றி: புதிய கோடாங்கி (மாத இதழ்) - ஏப்ரல் 2003 இதழ் - எண் 705, 101-ஆவது தெரு, 15-ஆவது செக்டர், கே.கே.நகர், சென்னை - 600 078
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Dear PKS
Thanks for posting a view that tells some important truths about EVR. If you can find a book by name 'Kandukolvom kazhagangalai' written by Thiagi Nellai.R.Jebamani, that came a series in Thuglak, please read that book. In that book Jebamani gives more information about how fraud EVR was in Vaikom agitation and in lot of other so called 'Reformist' activities. Also read Swami Chidambaranar's (who was a disciple of EVR) biography on EVR. How come a person who left his wife at home and strayed outside with prostitutes can be considered as a reformist who fought for women freedom? How come a man who at his 80th year married a young woman can be considered as a torch bearer of women's lib? Suresh agreed that EVR was so open in whatever he did, so he is great. Veerappan also openly admitted all his murders? Did he hide anything? Will he be considered as a great reformer? It is very pathetic to look how ignorant our people are and how uninformed they are.
Thanks
S.Thirumalai
பெரியாரை ஆழமாகவும் அதிகமாகவும் திண்ணையில் அலசியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
>>>>
அதுக்கெல்லாம் சுட்டி(link) குடுத்தா எங்கள மாதிரிப் பொடிசுங்களுக்கு படிக்க வசதியா இருக்கும்ல?
Pari, Already working on it, before you asked for it :-). Halfway through. Its hard to search in Thinnai. When I complete, I plan to post it as a blog post. Thanks and regards, PK Sivakumar
àû.. ¦¾¡¼÷óÐ ±ØÐí¸
Post a Comment