Tuesday, December 07, 2004

கட்டுரைகளில் நான் எதிர்பார்ப்பது

அன்புள்ள ரவி ஸ்ரீனிவாஸ்,

வணக்கம். "கட்டுரைகளில் நான் எதிர்பார்ப்பது" என்ற பொதுத் தலைப்பிட்டுவிட்டு உங்களை மட்டும் விளித்து எழுதுவதற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஒரு சராசரி வாசகனாக, சிற்றிதழ்களில் வெளியாகும் கட்டுரைகளைப் புரிந்து கொள்வதில் எனக்கு இருக்கிற பிரச்னைகளை உங்களின் கட்டுரை ஒன்றை case study ஆக வைத்து விளக்க முயலவே இந்த மாதிரி செய்கிறேன். மற்றபடிக்கு, இங்கே நான் பேசப்போகிற விஷயங்கள் சிற்றிதழ்களில் வெளிவருகிற கட்டுரைகளில் பெரும்பாலனவற்றுக்குப் பொருந்தும். உங்கள் கட்டுரையைப் பற்றிப் பேசப்போவதால் உங்களுக்கு எழுதுவதுபோல எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான். இதற்கு முன் வெளிவந்திருக்கிற பிறரின் பிற கட்டுரைகளை வைத்தும் இதை நான் செய்திருக்க முடியும். நிறைய நாட்களாகவே செய்ய வேண்டும் என்று நினைத்து நான் தள்ளிப் போட்டு வந்த விஷயம் இது. இப்போது உங்கள் வலைப்பதிவில் "கண்காணிப்பு சமுதாயத்தைப்" படித்ததும் அதையே உதாரணமாக வைத்து எழுதினால் என்ன என்று தோன்றியதால், பிற உதாரணங்களுக்கு அலையாமல், இப்படிச் செய்கிறேன். உங்கள் கட்டுரையை உதாரணமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முதலில் நன்றி சொல்கிறேன்.

எப்படி எழுதுவது என்று உங்களுக்கோ பிறருக்கோ சொல்லிக் கொடுக்கிற முயற்சி இது என்றும் யாரும் இதைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்றும் வேண்டுகிறேன். சிற்றிதழ்களிலும் இணையத்திலும் கனமான விஷயங்களைப் பற்றிய ஆழமான கட்டுரைகள் வெளிவருகின்றன. உங்களின் கண்காணிப்பு சமுதாயமும் அப்படித்தான். ஆனால், அக்கட்டுரைகள் பெரும்பாலும் சராசரி வாசகர்கள் தலைக்கு மேல் உணர்கிற விஷயங்களாகவும், மேற்கோள்களாலும் பெயர்களாலும் அவர்களை பயமுறுத்தி மேலும் படிக்க விடாமல் செய்து விடுகிற பத்திகளாகவும் அமைந்து விடுகின்றன. இதை என் வாசக அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்.

உதாரணமாக, யமுனா ராஜேந்திரன் நான் விரும்பிப் படிக்கிறவர்களில் ஒருவர். சமீபத்தில் உயிர்மையில் கூட ஆப்கானிஸ்தான் பற்றி வந்த திரைப்படங்களை வைத்து இரு பகுதிகளாக ஓர் அருமையான கட்டுரை எழுதியிருந்தார். எளிமை நாடும் என் வாசக மனத்துக்கு அத்தகைய அருமையான கட்டுரையைக் கூட உள்ளே நுழைந்து உள்வாங்கிக் கொள்ள முதலில் சிரமமாக இருந்தது. ஒரு நான்கு அல்லது ஐந்து பத்திகள் படித்தபின், அவற்றில் உள்ளதைக் கிரகித்து உள்வாங்கிக் கொண்டபின், தொடர முடிந்தது. சிற்றிதழ் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் மொழி, மேற்கோள்கள், பெயர்கள், ஜனரஞ்சக இதழ்களில் வராத, வாசகர் அதற்குமுன் அறிந்திராத புதுமையான உள்ளடக்கம் என்று பல காரணங்களால் சிற்றிதழ் கட்டுரைகள் சாதாரண வாசகர்களுக்குக் கடினமாகத் தெரிகின்றன.

இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது என்று யோசித்திருக்கிறேன். அந்த யோசனையின் அடிப்படையில் நான் எழுதுவது இது. டிசம்பர் 2004 உயிர்மை என் கைக்கு இன்னும் வரவில்லை. எனவே, உங்கள் வலைப்பதிவில் "கண்காணிப்பு சமுதாயத்தைப்" படித்துவிட்டு அதன் அடிப்படையில் எழுதுகிறேன். ஜனரஞ்சகமான விஷயங்களை விரும்பிப் படிக்கிற வாசகர்கள் கூட இத்தகைய கனமான உள்ளடக்கம் உள்ள கட்டுரைகளைப் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த ஆசையின் அடிப்படையிலேயே இதை எழுதுகிறேன். மற்றபடிக்கு, இது உங்கள் எழுத்து, நடை மீதான விமர்சனம் அல்ல. பிறருடைய எழுத்து, நடை மீதான விமர்சனமும் இல்லை. ஒரு பாமரனாக, சராசரி வாசகனாக, என் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் இது என்று எடுத்துக் கொள்ளலாம்.

சிற்றிதழ்களில் எழுதுபவர்கள் எல்லாம் போகிற போக்கில் பெயர்களையும் மேற்கோள்களையும் எடுத்து விடுகிறார்கள். தேவையான இடங்களில் செய்ய வேண்டிய விஷயம்தான் இது. எனக்கு இதில் ஆட்சேபணையும் இல்லை. ஆனால், பெரும்பாலான நேரங்களில் வாசகர் எழுத்தாளரின் அறிவை வியப்பதற்கு இது பயன்படுகிறது. இன்னொருபுறம் வாசகரை பயமுறுத்தவும் செய்கிறது. நீங்கள், யமுனா ராஜேந்திரன் என்று பலர் கட்டுரைகளின் கடைசியில் கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள், இணையதளங்கள் ஆகிய விவரங்களைத் தருகிறீர்கள். நல்ல விஷயம் இது. ஆனால், இந்த அவசர உலகில், கனமான விஷயங்களைத் தேடிப் படிப்பவர் குறைவாக இருக்கிற சூழ்நிலையில், எத்தனை பேர் அந்த இணைப்புகளையும் புத்தகங்களையும் தேடிப் படிப்பார்கள்? உதாரணமாக, என்னை எடுத்துக் கொள்வோம். உடனடியாக இல்லாவிட்டாலும், நிதானமாக, நேரம் எடுத்துக் கொண்டு, சிற்றிதழ்களில் வருகிற கட்டுரைகளை முக்கி முனகிப் படித்துவிட நான் முயல்கிறேன். அப்படிக் கட்டுரைகளைப் படித்தாலும், பின்னிணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளவற்றைத் தேடி அறிகிற முனைப்போ நேரமோ எனக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை. அதேநிலை கணிசமான அளவுக்கு பிறரிடமும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

இதற்கு மாற்றுவழி இருக்கிறது என்று ஒரு வாசகனாக நான் நம்புகிறேன். என்னைப் போன்ற வாசகர்களுக்கு அந்த மாற்று வழி உபயோகமாகவும் விஷயங்களை அறிய சுலபமாகவும் இருக்கும் என்றும் நம்புகிறேன். அதேநேரத்தில், கட்டுரையாசிரியர்களின் அதிக உழைப்பையும் நேரத்தையும் அந்த மாற்றுவழி எடுத்துக் கொள்ளக் கூடியது என்றும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், எல்லா வகையான வாசகர்களும் படிக்க வேண்டும் என்ற பெரிய நோக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, கட்டுரையாசிரியர்களின் அந்த அதிகப்படியான நேரமும் உழைப்பும் வீண்போகாது என்று சொல்ல முடியும்.

உதாரணமாக, உங்களின் கண்காணிப்பு சமுதாயம் என்ற கட்டுரையை எடுத்துக் கொள்வோம். அதிலிருந்து சிலவரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

"கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984,மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம்."

"ஜான் பெந்தம் முன் வைத்த பான் ஆப்டிகன் என்ற முன்மாதிரி கண்காணிப்பு குறித்த விவாதங்களில் முக்கிய மானது."

மேற்கண்ட வரிகள் இல்லாமல், கட்டுரை பூகோ, ஆஸ்கர் காண்டி, மார்க், காரி மார்க்ஸ் ஆகியோரைப் பற்றியும் பேசுகிறது.

இவ்வரிகளும் பெயர்களும் வருகிற இடங்களில் அவற்றுக்கு அடுத்தோ, அல்லது கட்டுரையின் இறுதியிலோ இவற்றைப் பற்றி ஆசிரியர் தன் புரிதலின் அடிப்படையில் சிறுகுறிப்பு கொடுத்தால் என்னைப் போன்ற இவ்விஷயங்களை முன்னரே அறியாத வாசகர்களுக்குப் பேருதவியாக இருக்கும். உதாரணமாக, ஆர்வல் என்பவர் யார், அவர் என்ன எழுதினார் என்பதைப் பற்றிய சிறுகுறிப்பு, ஜான் பெந்தம் என்பவர் யார் அவர் முன்வைத்த பான் ஆப்டிகன் என்பது என்ன என்பது பற்றிய சிறுகுறிப்பு, பூகோ, ஆஸ்கர் காண்டி, மார்க், காரி மார்க்ஸ் மற்றும் அவர்கள் முன்வைத்த கருத்துகளைப் பற்றிய சிறுகுறிப்புகள் கட்டுரையிலேயே இணைக்கப்பட்டால் அவை குறித்து அறியாத வாசகர்களுக்குப் பேருதவியாகவும் சுலபமாகவும் இருக்கும். மேலும், அவ்விவரங்கள் கட்டுரையை இன்னும் சுவாரஸ்யமாகவும் ஆக்கும். இல்லையென்றால், இத்தகைய கட்டுரைகளை விவரம் அறியாத வாசகர் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மனநிலையிலேயே படிக்கிறார். இத்தகைய சிறுகுறிப்புகளுக்கு அப்புறம், ஆர்வமுள்ளவர்கள் மேலும் தேடிப்போய் அறிய, பிற நூல்கள், இணைய தளங்களின் விவரங்கள் தரலாம்.

வாழைப்பழம் கொடுத்தால், உரித்து ஊட்டி விடச் சொல்கிறாயா என்று யாரும் கேட்டால் அந்தக் கேள்வி நியாயமானது. வாழைப்பழத்தை யாரும் சாப்பிடாமல் அப்படியே கெட்டுப் போவதைவிட, கொஞ்ச நாள் ஊட்டிவிட்டுப் பின், வாழைப்பழத்தின்மீது சாப்பிடுபவருக்கு விருப்பம் வரவைப்பது மேலாக இருக்கும் அல்லது வாழைப்பழம் சாப்பிடத் தெரியாதவர்களுக்கு சொல்லித் தரலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

ரவி, இந்த இடத்தில் உங்கள் கட்டுரையை ஓர் உதாரணமாகவே எடுத்துக் கொண்டுள்ளேன். நான் சுட்டிக் காட்டியவை உங்கள் கட்டுரையின் குறையல்ல. கட்டுரைகள் ஒருவேளை நீங்களும் மற்றவர்களும் எழுதுவதுபோல்தான் இருக்க வேண்டுமோ என்னவோ. ஆனால், எனக்குத் தெரியாத விஷயம் ஒன்றைப் பற்றிய கட்டுரையை நான் படிக்கும்போது, என்னை மாணவன் நிலையிலும் கட்டுரையாசிரியரை ஆசிரியர் நிலையிலும் நான் பார்க்கிறேன். அப்படிப் பார்க்கும்போது மக்கு மாணவர்களுக்குப் புரிகிறமாதிரி எல்லாத் தகவல்களையும் ஆசிரியர் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய இந்த வேண்டுகோள் எல்லாவகையான கட்டுரைகளுக்கும் பொருந்தாது. புதிய விஷயங்களையும், அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும், ஜனரஞ்சக இதழ்களில் வெளிவராத விஷயங்களையும், திறனாய்வு/விமர்சனம் என்ற நோக்கில் எழுதப்படும் விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டுரைகளுக்கு இது பொருந்தலாம்.

என்னைப் போன்ற வாசக மனங்களின் குறைகளைப் போக்க எழுத்தாளர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் மட்டுமே இது. இதை ரவியோ பிற எழுத்தாளர்களோ ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஒருவிதத்தில் பார்த்தால், புனைகதை/கவிதை எழுதுகிற ஓர் எழுத்தாளரிடம் போய் எனக்குப் புரிகிற மாதிரி எழுது என்று ஒரு வாசகர் சொன்னால், அதற்கு அந்த எழுத்தாளர் கோபப்பட்டால், அந்தக் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். அப்படிக் கேட்பதற்கு அந்த வாசகர்க்கு உரிமையில்லை என்றும் சொல்லலாம். அந்த மாதிரி, என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு எழுத்தாளர்கள் கோபப்பட்டால், அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இப்படிக் கேட்பதற்கு எனக்கும் உரிமையில்லைதான். ஆனாலும், ஆசை பற்றி அறையலுற்றேன்.

சிற்றிதழ்களிலும் இணைய தளங்களிலும் வருகிற நல்ல விஷயங்களை பொதுமக்களில் பலர் படிப்பதில்லை, விமர்சிப்பதில்லை என்பது உண்மை. இப்படியெல்லாம் வாசிப்பதை எளிமைப்படுத்தி, தகவல்களை ஒரே இடத்தில் திரட்டிக் காட்டினால், பயன்படுமோ என்கிற சம்சயத்தில் இதை எழுதுகிறேன். இதையெல்லாம் மீறி யாரும் இப்பதிவையோ என் வேண்டுகோளையோ தவறாகக் கருதக் கூடிய வாய்ப்பிருக்கிறது என்னும் பட்சத்தில் அதற்காக என்னை மன்னிக்கவும்.

இப்பிரச்னைக்கு நான் சொல்லியுள்ளதைவிட மேலான தீர்வுகள் இருக்குமானால் அதையும் அறிய ஆவல்.

3 comments:

Anonymous said...

I agree with you P K SivaKumar
Regards Vasikar Nagarajan
vasikar@yahoo.com

ரவி ஸ்ரீநிவாஸ் said...

PKS,thanks for the comments and suggestions.I will take them into account when i write such articles in Tamil.I will post my rejoinder to your note after few days and after considering comments of others on the article.thanks again for your interest.regards
ravi

SnackDragon said...

எல்லாம் சரிதான் பி.கே.எஸ், எந்த ரவிக்காக இந்த பதிவு எழுதினீங்க? ;-)