Saturday, December 25, 2004

சாகித்ய அகாடமி எதிர்வினைகள்

என் பதிவு குறித்த எதிர்வினைகளை நேரடியாகக் கேட்பது ரஸமாக இருக்கிறது. நான் உடன்படுகிறேனோ இல்லையோ, பின்வரும் எதிர்வினைகளை நான் மிகவும் ரசித்தேன். அவற்றில் இருக்கிற அங்கதமும் தர்க்கமும் புறக்கணிக்க முடியாதவை. ஆதலால், அவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

என் நண்பர்கள் என்னுடைய "தமிழ் சாகித்ய அகாடமி" பதிவைப் படித்துவிட்டுச் சொன்னவை பின்வருமாறு:

1. அடுத்த வருட சாகித்ய அகாடமியைக் கருணாநிதிக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள விரும்ப மாட்டார். "என்னுடைய ஜால்ராக்களான வைரமுத்து, அப்துல் ரகுமான், தமிழன்பன் ஆகியோர் வாங்கிய பரிசையே நானும் வாங்க வேண்டுமா" என்றே அவரின் ஈகோ சிந்திக்கும். அதனால், சாகித்ய அகாடமிக்குப் பதில் அதைவிட மேலான ஞானபீடம் அல்லது புதிதாய் ஒரு பரிசை உருவாக்கி அதை முதலில் பெறவே அவர் முயல்வார். அப்படி அவர் உருவாக்குகிற பரிசின் பெயரில், வள்ளுவர், பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்கள் இருக்குமாறு அவர் பார்த்துக் கொள்வார் - இப்படி ஒரு நண்பர் சொன்னார்.

2. அகாடமி பரிசு என்னைப் போன்றவர்களுக்கும் நான் விரும்புவர்களுக்கும் கிடைக்காததால் நான் அந்தப் பதிவை எழுதியிருக்கிறேன் என்றும் காழ்ப்புணர்ச்சியாலும் நான் இதை எழுதியிருக்கிறேன் என்றும் விமர்சனம் வரும் என்று ஒரு நண்பர் சொன்னார்.

3. "சிவகுமார் முன்னோர்கள் செய்த புண்ணியம், சிவகுமார், ஈரோடு தமிழன்பன் போன்றோர் மாதிரி கவிதை எழுதாமல் இருப்பது" என்று அதற்கு ஒரு நண்பர் பதில் சொன்னார். இப்படிச் சொன்ன நண்பர் தமிழன்பன் அமெரிக்கா வந்தபோது அவரையும், அவர் கவிதைகளையும் அறிகிற வாய்ப்பு பெற்ற தமிழர்களில் ஒருவர்.

4. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனைப் பற்றி உலவுகிற கதையன்று இருக்கிறது. (ஒரே பட்டத்தில் மூன்று பொய்கள் சொல்ல முடியும் என்பதற்கு உதாரணம் பெருங்கவிக்கோ என்ற பட்டம் என்று என் நண்பர் ஒருவர் ஹாஸ்யமாகச் சொல்வது வழக்கம்!). நோபல் பரிசு அலுவலகத்திற்கு அவர் எழுதிய புத்தகங்களின் மூட்டையுடன் பெருங்கவிக்கோ ஒருமுறை சென்றாராம். சென்றதும், மூட்டையைப் பிரித்து உதறி, "இவ்வளவு அருமையாக இத்தனை எழுதியிருக்கிறேன். எனக்கு நோபல் பரிசு கொடுங்கள்" என்று கேட்டாராம். இந்தக் கதை உண்மையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பெருங்கவிக்கோ அப்படிச் செய்கிற அளவுக்குத் தன் படைப்புகள் மீது நம்பிக்கையுடையவர் என்று நான் அறிவேன். அப்படிப்பட்ட பெருங்கவிக்கோவே சாகித்ய அகாடமி அலுவலகத்துக்குச் சென்று மூட்டையைப் பிரித்து உதறாமல், நோபல் பரிசு அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார் என்றால், சாகித்ய அகாடமிக்கு இருக்கிற மதிப்பு தெரிகிறதல்லவா என்று அதிரடியாகப் பேசுகிற இன்னொரு நண்பர் சொன்னார்.

5. காமராஜரின் புகழ்பாடும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள, காமராஜரைப் புனிதப் பிம்பமாகச் சித்தரிக்கிற திரைப்படம் எனக்குப் பிடித்திருப்பது போல, (சற்று முன் காமராஜ் திரைப்படத்தை நண்பர்களுடன் மீண்டும் பார்த்தேன். அதுகுறித்த விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.) தமிழன்பனின் கவிதைகளைப் பிடித்தவர்களும், அவற்றால் ஊக்கம் பெற்றவர்களும் இருக்கக் கூடுமல்லவா என்று பெரியாரிஸ்டான, திரைப்படத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்கிற ஒரு நண்பர் கேட்கிறார். (இது ஒரு பெரிய விவாதம். இதற்கு நான் சொன்ன பதில்களையும், இவ்விவாதம் குறித்துப் பிறர் சொன்ன கருத்துகளையும் தொகுத்து எழுதுவதற்கென்றே ஒரு தனிப்பட்ட பதிவு வேண்டும். ஆனாலும், நண்பரின் கருத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்று அவர் கருத்தை மட்டும் எழுதுகிறேன்.)

6. எழுத்துகளில் எழுதும்போது தவறாகவும் தாக்குதலாகவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய கருத்துகளைக் கூட நேரடிப் பேச்சில் அன்பாகவும், நாகரீகமாகவும், நட்புச்சூழலிலும் சொல்ல முடிகிறது என்பதால் இத்தகைய நேரடி உரையாடல்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. இத்தகைய உரையாடல்கள் எனக்கு உற்சாகமாகவும், பயனுள்ளவையாகவும் அமைகின்றன என்பதால் இவ்வுரையாடல்களை நான் எப்போதும் விரும்புகிறேன்.

No comments: