Saturday, December 25, 2004

தமிழ் சாகித்ய அகாடமி விருது

வருடாவருடம் தமிழில் சாகித்ய அகாடமி தமிழ் விருது அறிவிக்கப்பட்டபின் அதைப் பற்றி எழுதுவதற்கும், விருது பெற்றவர் அதற்குத் தகுதியானவரா என்று அலசுவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருதுகள் அந்தக் காலத்திலிருந்தே சர்ச்சைக்குள்ளானவையாகவே இருந்து வந்திருக்கின்றன. இடையிடையே நிஜமாகவே தகுதியானவர்களும் அவ்விருதைத் தமிழில் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆறுதல். சரஸ்வதி களஞ்சியத்தில் கூட சரஸ்வதி வந்தக் காலத்தில் சாகித்ய அகாடமி குறித்து எழுந்த சர்ச்சைகள் பற்றிப் படித்த ஞாபகம். அதுபற்றி சரஸ்வதி சார்பாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றுக்கு, "வரப்பெற்றோம். உங்கள் கருத்துகளை அறிகிறோம்" என்ற ரீதியில் சாகித்ய அகாடமி செயலர் பதிலும் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். (கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நண்பர் வீட்டில் இருக்கிறேன். சரஸ்வதி களஞ்சியம் வீட்டில் இருக்கிறது. எனவே, நினைவிலிருந்து எழுதுகிறேன்.)

அந்தக் காலத்து அகாடமி, "அரசாங்க தொனியிலாவது நாகரீகமாகப் பதில் சொல்லிப் பின் புகாரைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுகிற" பண்பாட்டைப் பயன்படுத்தியது என்று இதன் மூலம் அறிகிறேன். இப்போதெல்லாம் சாகித்ய அகாடமி குறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு சாகித்ய அகாடமியிலிருந்து யாரும் பதில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழிலிருந்து அகாடாமியில் அங்கம் வகிக்கிறவர்கள் இந்தக் கூக்குரல்களை எல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. "உங்கள் கத்தல்கள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது" என்ற அலட்சியமான பதிலைத் தங்கள் மௌனத்தின் மூலம் தருகிறார்களா என்றும் தோன்றுகிறது.

இந்த வருட அகாடமி ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்று என்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பில் தமிழ்ப் பாடத்தில் இருந்தது. என்ன கவிதை அது என்பதே எனக்கு மறந்துபோய்விட்டது. என்னை ஈர்க்கும்படி அது அப்போது இல்லை என்பது உண்மை. அதற்கு என் ரசனைக்குறைவைவிட அந்தக் கவிதையின் மோசமான தன்மையே காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன். ஈரோடு தமிழன்பனின் ரசிகர்கள் benefit of doubt-ஐ அவருக்குக் கொடுத்து என் ரசனைக்குறைவே காரணம் என்று முடிவு கட்டினாலும் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். மற்றபடிக்கு ஈரோடு தமிழன்பனைக் கவிஞராக அறிந்ததைவிடத் தொலைகாட்சியில் செய்தி வாசித்தவராகவே நான் அதிகம் அறிந்திருக்கிறேன். திராவிட இயக்கச் சார்பு உடையவர் என்று விஷயமறிந்தவர்களால் அடையாளம் காணப்படுபவர் ஈரோடு தமிழன்பன். எனவே, அவர் கவிதைகளை அதிகம் படிக்காத நான் ஈரோடு தமிழன்பனின் தகுதி பற்றிச் சொல்வது சரியில்லை.

ஈரோடு தமிழன்பனுக்குச் சாகித்ய அகாடமி வழங்கப்பட்டது சரியா தவறா என்று தமிழ்கூறும் நல்லுலகு முரசறைந்து விவாதிக்கப் போகிறது. எனவே, அதற்குள் நுழைவது என் நோக்கமில்லை. (யாருக்கு விருது கொடுக்க வேண்டும் என்கிற பட்டியலும் என்னிடம் இல்லை. அந்தக் காரணத்தினாலேயே, இது பற்றிப் பேச எனக்குத் தகுதியிருக்கிறது என்று நம்புகிறேன். அதன் அடிப்படையிலேயே இதை எழுதுகிறேன்.) தமிழ்ச் சிற்றிதழ்கள் இந்த வருட விருதுபற்றிக் காரசாரமான கட்டுரைகளை வெளியிடும் என்ற வாசக எதிர்பார்ப்பு நான் உட்பட பலருக்கு இருக்கிறது. சாகித்ய அகாடமியின் தமிழ் விருதுத் தேர்வுகள் குறித்து குரல்கள் எழுப்புமளவுக்கே அதன் தேர்வுகள் - தொடர்ந்து இல்லையென்றாலும் அவ்வப்போதாவது - இருந்து வந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, சாகித்ய அகாடமியை விமர்சிப்பவர்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வு, விருப்பு வெறுப்பு, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் விமர்சிக்கிறார்கள் என்ற வாதத்தில் ஏதோ ஒரு சதவீதம் உண்மை இருக்குமென்றாலும், அவர்கள் எழுப்புகிற கேள்விகளிலும் ஏதோ ஒரு சதவீதம் உண்மையும் நியாயமும் இருக்கிறதென்பதை நான் ஒத்துக் கொள்ளவே செய்கிறேன்.

ஓர் உண்மையான எழுத்தாளன் பரிசுக்காக எழுதுவதில்லை. பரிசுகள் தகுதியற்றவருக்குப் போகும்போது அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. இந்த அடிப்படையில் சாகித்ய அகாடமி விருதுகள் குறித்து தமிழ் எழுத்துலகில் பலரும் மௌனம் சாதிக்கிறார்கள். அந்த மௌனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சாகித்ய அகாடமியின் தமிழ்க் குழுவில் இருப்பவர்களும் அந்த மௌனத்தைப் புரிந்து கொண்டிருப்பதாலேயே தங்கள் விருப்பப்படி செயல்பட்டு வருகிறார்களோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

சாகித்ய அகாடமியின் தமிழ் விருதுகள் மீது பெருமதிப்பும் மரியாதையும் இருந்த காலம் போய்விட்டது என்றே நான் நினைக்கிறேன். இது குறித்து எனக்கு ஆழ்ந்த வருத்தமும் கவலையும் இருக்கிறது. அகாடமி என்கிற தன்னாட்சி அமைப்பு, தமிழில், அரசியல், கருத்தியல், தனிப்பட்ட நட்பு சார்ந்த சிபாரிசுகள் ஆகியவற்றில் சிக்கிச் சீரழிகிறதோ என்றும் தோன்றுகிறது. நோபல் பரிசுத் தேர்விலும் கூட அரசியல், சிபாரிசு ஆகியன உண்டு என்பது கேள்விப்படுகிற விஷயம்தான். அவற்றை முற்றிலும் தவிர்த்துவிட முடியாதுதான். ஆனால், அரசியல், மற்றும் சிபாரிசின் அடிப்படையில்கூட நோபல் பரிசுகள் முற்றிலும் தகுதியற்றவர்களுக்குப் போவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த சிபாரிசும், அரசியல் செல்வாக்கின் பிரயோகமும் தகுதியானவர்களுக்குச் செய்யப்பட்டால் அதை வரவேற்கலாம். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், எவர் விருது தேர்வுக் குழுவில் அல்லது அந்த மொழிசார்ந்த குழுவில் இருந்தாலும் மலையாளம் போன்ற பிற மொழிகளில் அகாடமியின் விருதுக்கான தேர்வுகள் விஷயமறிந்தவர் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே இருக்கின்றன என்று அறியும்போது ஏக்கமாக இருக்கிறது. எல்லாச் சாபக்கேடுகளும் தமிழுக்கே வாய்க்க வேண்டும் என்பது விதியோ?

இனிவரும் வருடங்களில் இதுவரை சாகித்ய அகாடமி வாங்காத, திராவிட இயக்கம் சார்ந்தவர்களுக்கும் வானம்பாடியுடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவர்களுக்கும் சாகித்ய அகாடமி வழங்கப்பட்டால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். இனிவரும் வருடங்களில் ஒருவருடம் கருணாநிதிக்குச் சாகித்ய அகாடமி கிடைக்கச் செய்து அவரை இலக்கியவாதியென்று அதன்மூலம் யாரும் நிரூபித்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அப்துல் ரகுமானும், வைரமுத்துவும், ஈரோடு தமிழன்பனும் சாகித்ய அகாடமிக்குத் தகுதியானவர்களாக இருக்கும்போது, அவர்கள் வியந்து மதிக்கிற தமிழ்க்கடல் கருணாநிதியும் தகுதியுடையவரே. கருணாநிதிக்கு சாகித்ய அகாடமி கிடைத்தால் சாகித்ய அகாடமியின் செயல்பாடுகளை எதிர்க்கிற சிற்றிதழ்(கள்) கூட அதை வரவேற்று அறிக்கை விடுகிற சாத்தியம் இருக்கிறது. எனவே, அடுத்த வருட சாகித்ய அகாடமியைக் கருணாநிதிக்கு அளித்து அவரை இலக்கியவாதியாக நிறுவவேண்டுமென்று நான் முன்மொழிகிறேன். கருணாநிதிக்குக் கொடுப்பதை யாரும் கேள்வியும் கேட்க முடியாமல், ராஜாஜிக்குக் கொடுக்கப்பட்ட முன்னுதாரணத்தைக் காட்டி விடலாம்.

இன்னொன்று செய்யலாம். திராவிட இயக்கம் சார்ந்தவர்கள், பிற செல்வாக்குடைய அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆகியோர் யார் யாருக்குத் தமிழில் அகாடமி விருதுகள் தரவிரும்புகிறார்கள் என்று 50 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியல் எடுக்கலாம். அந்த 50 பேர்களுக்கும் ஒரே வருடத்தில் 50 சாகித்ய அகாடமி விருதுகள் கொடுத்துவிட்டு, அதற்கடுத்த வருடத்திலிருந்து விருதை நிஜமாகவே தகுதியானவர்களுக்குக் கொடுக்கலாம். 50 வருட வலியை ஒரே வருடத்தில் ஜீரணித்துவிட்டு, விருதுகளைக் கொஞ்சம் நம்பிக்கையுடன் என்னைப் போன்ற தமிழ்மக்கள் எதிர்நோக்க இது உதவும். தமிழ் சாகித்ய அகாடமி இந்த யோசனையை ஆக்கபூர்வமாகப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

எனவே, இந்த வருடம் சாகித்ய அகாடமி வாங்கியதற்காக ஈரோடு தமிழன்பனை வாழ்த்துகிற அதே நேரத்தில் - சாகித்ய அகாடமி வாங்காததற்காக எஸ்.ராமகிருஷ்ணனையும், அவரைப் போன்ற இன்னும் பலரையும் அதிகம் வாழ்த்துகிறேன்.

1 comment:

Anonymous said...

Hi PKS,
சாகித்ய அகாடமி விருது சர்ச்சைகளில் சிக்கியிருக்கு நிறைய தடவை - சரி.. உண்மைதான்.

தமிழன்பன் கவிதைகளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது, அவர் கவிதைகளைப் படிச்சதில்லை. அதைப் பத்தி எடை போடற தகுதி உங்களுக்குக் கிடையாது - சரி, எடை போடாதீங்க.

அகாடமி விருது வழங்கினது சரியா தவறான்னு நீங்க விவாதிக்க போறதில்லைன்னு சொன்னீங்க. சரி.

அகாடமி விருது வழங்கினதில ஏதோ அரசியல் இருக்கும்ன்னு சொல்றீங்க. அதனால அதோட மதிப்பு போயிடுச்சுன்னு சொல்றீங்க. அடுத்த வருஷம் கருணாநிதிக்கு கிடைக்கலாம்ன்னு சொல்றீங்க. இதுக்கெல்லாம் என்ன அடிப்படை? உங்களுக்கு தமிழன்பன் கவிதைகளைப் பத்தி தெரியாது, அது வழங்கினது சரியா தவறான்னு நீங்க விவாதிக்க மாட்டீங்கன்னா இதெல்லாம் எங்கே இருந்து வந்துது?

நீங்க ஏதோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது :))

தமிழன்பனுக்கு கிடைச்ச விருது, 2004-இல் வெளிவந்த புத்தகங்களில் சிறந்ததுன்னா, இல்லை 2003-இல் வந்ததிலா?

என்னைக் கேட்டா, நாம பேசாம படிச்சதில் இருந்து சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த அரசியல் bias எல்லாம் இல்லாம இருக்கும். அப்படிப் பார்த்தா, என்னைப் பொறுத்தவரை 2003-இல் சிறந்த நாவல் எஸ்.ராவின் நெடுங்குருதி. 2003-இன் சிறந்த தொகுப்பு அ.முத்துலிங்கம் கதைகள் (தமிழினி).

- bb.