Thursday, May 26, 2005

இளையராஜா உரை

ஜெயகாந்தன் பாராட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு

ஜெயகாந்தன் பாராட்டு விழா உரைகள்

இளையராஜாவின் பேச்சைத் தவிர மற்ற உரைகளை இங்குக் காணலாம். இளையராஜாவின் உரையை விரைவில் தர முயல்கிறேன். இந்த உரைகளைப் பற்றிய என் கருத்துகளைத் தட்டச்ச கை பரபரக்கிறது. ஆனாலும், நீங்களே பார்த்து, உங்களின் அறிவுக்கும் சிந்தனைக்கும் பரந்த மனப்பான்மைக்கும் மனிதநேயத்திற்கும் ஏற்ற முடிவை எடுங்கள்! பார்த்துப் புரிந்து கொள்ள இயலாதவர்களும், பார்க்காமலேயே விமர்சனம் எழுதுகிறவர்களும் அதையே தொடர்ந்து செய்யுமாறு வேண்டுகிறேன்.

தமிழ் வலைப்பதிவின் மொத்த கவனமுமே ஜெயகாந்தன் சொல்கிற விஷயங்களின்பால் தொடர்ந்து திரும்பி நிற்பதும் அவர் தொடுகிற விஷயங்களைத் தொட்டுத் தொடர்வதும்கூட அவரோடு உடன்படாதவர்களும் மறக்க இயலாத ஆளுமையாக அவர் விளங்குவதையே காட்டுகிறது. ஜெயகாந்தனை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துகிற அவரின் வசைபாடிகளுக்கு ஜெயகாந்தன் வாசகனாக எனது நன்றிகள். ஜெயகாந்தன் நாவல்களின் ஐந்து தொகுப்புகளும் சேர்ந்து விலை ரூபாய் 1200 ஆகும். 1200 ரூபாய்கள் குறைந்த விலை அல்ல. ஆனாலும், இந்தத் தொகுப்பின் பதிப்பு விற்றுத் தீர்ந்துவிட்டது. AnyIndian.com மூலம் உலகெங்குமிருந்து இத்தொகுப்பைக் கேட்கிற அன்பர்களிடம் எல்லாம் இத்தொகுப்பு விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சொல்கிறோம். அந்த அளவுக்கு உலகெங்கும் ஜெயகாந்தனைத் தேடிப் படிக்கிற அளவுக்கு ஜெயகாந்தனைத் தொடர்ந்து விமர்சித்து வருகிற அன்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்தானே!

இதற்கு அடுத்த செயலாக, ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்தபின் தமிழ்ப் பத்திரிகைகளில் அதுபற்றி வெளிவந்த எனக்குப் பிடித்த கட்டுரைகளையும் இங்கே தொகுத்துத் தருகிற உத்தேசமிருக்கிறது என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயகாந்தன் கருத்துகளை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து அதை முரட்டுத்தனமான கோபத்தில் செய்யாமல், அறிவுபூர்வமான தளத்தில் செய்கிற அளவுக்கு வளர வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். அதேபோல, நான் இப்படித் தொடர்ந்து ஜெயகாந்தனைப் பற்றித் தருகிற செய்திகளின் கருத்துகளை விமர்சித்துத் தங்கள் அறிவுக்கும் பரந்த மனப்பான்மைக்கும் சிந்தனைக்கும் ஏற்ற கருத்துகளைத் தொடர்ந்து முன்வைக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன். அப்படி அவர்கள் வைக்கிற கருத்துகளின் மூலம் ஜெயகாந்தனைப் பற்றி அறிந்து கொள்வதைவிடவும் அவர்களைப் பற்றித் தமிழர்கள் அறிந்துகொள்கிற வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அவர்கள் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்.

ஜெயகாந்தன் பற்றி முன்வைக்கப்படும் எல்லா கருத்துகளுக்கும் நான் பதில் சொல்லப் போவதில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனாலும், அவற்றுக்குப் பதில் சொல்வது பெரிய விஷயமில்லை என்பதும் ஒரு காரணம்தான். எனவே, ஜெயகாந்தன் உரையைப் பார்த்தும் பார்க்காமலும் கருத்து சொன்ன அன்பர்கள் இந்த உரைகளைப் பார்த்தும் பார்க்காமலும்கூட கருத்து சொல்ல முன்வர வேண்டும் என்று நிஜமான அன்பின் மிகுதியால் சீண்டி அழைக்கிறேன்.

இன்னமும் தொடர்ச்சியாக மார்க்ஸிஸத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், இந்திய தேசியத்தைப் பற்றியும், தமிழ் தேசியத்தைப் பற்றியும், இந்தியாவின் மொழிகளைப் பற்றியும்கூட பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பெருங்கனவும் இருக்கிறது. பராசக்தி அருள் புரியட்டும்!

என் கருத்துகளுக்குப் பதில் சொல்ல இயலாமல், என் கருத்துகளைச் சொல்வது என் சுதந்திரம் என்பதைக்கூட உணராமல், அவற்றை நான் பேசுவதே தீண்டாமை போன்ற குற்றம் என்ற அளவுக்கு, என் நேர்மையைச் சந்தேகத்துக்குள்ளாக்கியும் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கியும் திட்டியும் என்னைப் பற்றிய மோசமாக எழுதுவதை ஒரு hobby-ஆக வைத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் ஒன்றிலிருந்து சமீபத்தில் இரண்டாக மூன்றாக நான்காக என்று தினமும் வளர்ந்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. விளம்பரத்துறையில் இருப்பவர்கள் சொல்வார்கள். மோசமான விளம்பரம் என்று ஒன்று இல்லை என்று. அதே மாதிரி, இப்படி என்னை மோசமாகத் திட்டுவதன் மூலம் எனது P.R.O-ஆகச் செயல்படுபவர்களுக்கும், என்னை வெளியுலகம் அதிகம் அறியச் செய்பவர்களுக்கும், எனக்கு நிறைய வாசகர்களைக் கொண்டு வருபவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி மறப்பது நன்றன்று என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு!

இனி உரைகளுக்குப் போவோம்...

விழா தொடங்குவதற்கு முன்

ஸ்ரீசெண்பகா பதிப்பகம் சண்முகம் அவர்களின் வரவேற்புரையும் சிற்பி அவர்களின் தலைமையுரையும்

வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் ஜெ.ஸ்ரீ சந்திரன் மற்றும் மீனாட்சி பதிப்பக உரிமையாளர் உரை

விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் உரையும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் உரையும்

ஜனசக்தியின் ஆசிரியரும் சி.பி.ஐ.யின் மூத்த தலைவருமான ஏ.எம். கோபுவின் உரை

இயக்குநர் கே.பாலசந்தரின் உரை

இந்த உரைகளையும் பேச்சுகளையும் உரைகளிலிருந்து எடுக்கப்படும் புகைப்பட, ஒலிப்படத் துண்டுகளையும் பயன்படுத்த விரும்புவோர் கவிதா பதிப்பக உரிமையாளர் சொக்கலிங்கம் அவர்களிடமோ AnyIndian.com இடமோ முன்னனுமதி பெற வேண்டும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, May 25, 2005

தேசிய நியாயங்கள் - மற்றவரை வெளியேற்றுவோம்

ஏப்ரல் 2005 மாத உயிர்மை இதழில் அ.மார்க்ஸ் தேசிய நியாயங்கள் - மற்றவரை வெளியேற்றுவோம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (கம்ப்யூட்டருக்குப் இப்போதுதான் அறிமுகமாகியிருப்பார்களுக்கு: முன் வாக்கியத்தில் இருக்கிற கட்டுரையின் தலைப்பைச் சொடுக்குவதன் மூலம் அ.மார்க்ஸின் கட்டுரைக்குப் போக முடியும்.)

தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. படிப்பது மட்டுமில்லை, படித்துவிட்டு விவாதிக்க வேண்டிய ஒன்றுமாகும்.

1. ஹிட்லருக்காவது ஒரு தேசிய நோக்கம் இருந்தது என்கிறார் பெ.மணியரசன்.

2. மற்றவரை வெளியேற்றுவோம் என்று மாநாடு நடத்துகிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.

3. ரொம்பவும் பெருந்தன்மையோடும் நிபந்தனையோடும் வீட்டில் தெலுங்கு பேசினாலும் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்களை ஏற்றுக் கொள்வோம் என்று அபயம் அளித்திருக்கிறாராம் பெ.மணியரசன். அப்துல் ஜப்பார் போன்று தமிழ் தேசியம் பேசுகிற இஸ்லாமிய அன்பர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமா இல்லையா என்று பெ.மணியரசனிடம் கேட்டு வைத்துக் கொள்வது நல்லது.

4. தெலுங்குப் பேசுவோரைப் புவியியல் ரீதியிலும் முஸ்லீம் மக்களை மொழி ரீதியிலும் பிளவுபடுத்தி அடையாளத்தைச் சிதைக்கிறது தமிழ் தேசியம் என்கிறார் கட்டுரையாசிரியர்.

5. தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சியாவது தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக வைக்கிறது. மற்றவர்கள் இம்மாதிரியான நுண்மையான விஷயங்களில் காட்டுகிற மவுனம் ஆபத்தானது என்கிறார் அ.மார்க்ஸ். தமிழ் மொழி வெறியர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், மொழியின் மீதுள்ள அன்பினால், தனித்தமிழ் எழுத வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு தருகிற தளத்தில் இயங்குகிற அன்பிற்கும் மரியாதைக்குமுரிய இராம.கி. போன்றவர்கள் இதைப் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை. தமிழ் அழிந்துபோய்விடுகிற அபாயமிருக்கிறது என்கிற பழைய பல்லவியுடன் கச்சேரியை முடித்துக் கொள்கிறார்கள். தமிழ் மொழியை எப்படி வளர்ப்பது என்கிற ஒத்த கருத்து, தமிழ் தேசியம் பேசுகிறவர்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதே ஒரு சிக்கல். இதையெல்லாம் விவாதிக்காமல் எப்படி மூன்றாம் மொழிப் போரை ஆதரித்துவிட முடியும் என்ற கேள்வியை யாரும் கேட்கவே கூடாது என்றும் பலர் எதிர்பார்க்கிறார்கள்.

6. சாதி அடையாள அரசியலில் தம் ஆதரவு குறுக்கப்படும் சிக்கலிலிருந்து மீண்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியாக ராமதாஸ¥ம் சேதுராமனும் தமிழ்ப் பாதுகாப்புப் பேரவை நடத்துவதாகவும் கட்டுரையாசிரியர் அடையாளம் காட்டுகிறார். தலித் பிரச்னைகளைக் காட்டிலும் தமிழ்ப் பிரச்னைகளைத் தோளில் சுமந்து திரிவதாக திருமாவளவனையும் சொல்கிறார். தலித் பிரச்னை வேறு, தமிழ்ப் பிரச்னை வேறு என்று சரியான அடையாளம் கண்டிருக்கிற அ.மார்க்ஸ¥க்குப் பாராட்டுகள்.

7. சுயதரிசனம் செய்துகொள்ள விரும்புகிற எந்த அறிவுஜீவியும் சிந்தனாவாதியும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளை இக்கட்டுரை எழுப்புகிறது. இக்கேள்விகளுக்கு ஒவ்வொருவர் ஒரு பதில் அளிக்கலாம். அ.மார்க்ஸ¥டன் உடன்படலாம். உடன்படாமல் போகலாம். ஆனால், இத்தகைய கேள்விகளையே கேட்காமல் தமிழ் தமிழ் என்று தவளைக் கூச்சல் போடுகிறவர்களுக்கு இருக்கிற உள்மனத் திட்டங்கள்/கனவுகள் பற்றித் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

8. அ.மார்க்ஸின் இக்கட்டுரையின் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். அவர் சொல்கிற பிற கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெரியார் பெயரை முன்னெடுத்துச் செல்கிறவர்களில் அவருக்காவது பெரியார் பாணியில் மொழியை அணுகுகிற பாங்கு இருக்கிறது என்பது குறித்து சந்தோஷமே. மேலும், அ.மார்க்ஸ் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுடையவராக இருந்தவர். இன்றும் கூட, இந்திய தேசியம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிக்கிறவராக அவர் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒருவர் எழுப்புகிற கேள்விகளை இந்துத்துவா என்று சொல்லியோ பார்ப்பனீயம் என்று சொல்லியோ ஒதுக்கிவிட முடியாத தர்மசங்கடத்தில் மூன்றாம் மொழிப்போரை முன்மொழிகிற கிணற்றுத் தவளைகள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்.

9. அ.மார்க்ஸ் எழுதிய "கலாசாரத்தின் வன்முறை" என்கிற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முடித்ததும் நேரம் இருக்கும்போது ஒரு வாசக அனுபவம் எழுத வேண்டும் என்கிற ஆவலை அப்புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது. இன்ஷா அல்லாஹ்!

Saturday, May 21, 2005

நண்பர் சுவாமிநாதனுக்கு அளித்த பதில்

(என்னுடைய "ஓர் இந்தியப் பயணம்" பதிவை மரத்தடி இணையக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டபோது, நான் மதிக்கிற எல்.ஏ. சுவாமிநாதன் அவர்கள், ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று நீங்கள் சொல்லுங்களேன் என்று மரத்தடியில் என்னைக் கேட்டார். அவருக்கு மரத்தடியில் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய பதிலின் திருத்திய வடிவம் இது. மரத்தடியில் எழுதாத சில விஷயங்களும் இதில் உள்ளன. என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் விளங்கிக் கொள்ள விரும்பாதவர்களும் முடியாதவர்களும் எங்கும் சிறுபான்மையே. எதை எழுதினாலும் அதில் தர்க்கபூர்வமாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் ஏதும் இருக்கும் என்று எண்ணுகிறவர்கள் எங்கும் மௌனப் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக என்னுடைய இந்தப் பதிலை என் வலைப்பதிவில் சேமிக்கிறேன்.)

அன்புள்ள சுவாமிநாதன்,

ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவின் ஒளிப்பதிவு என்னிடம் இருக்கிறது. அதில் பங்கு கொண்ட அனைவரின் பேச்சையும் (சிற்பி, வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் சந்திரன், பாலசந்தர், ஏ.எம்.கோபு (ஜனசக்தி ஆசிரியர், CPI-ல் முக்கிய தலைவர்), இளையராஜா உள்ளிட்ட பலர்) வலையேற்றுவதற்கு முயன்று கொண்டிருக்கிறேன். அம்முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் தாங்களே அவ்வுரைகளைக் கண்டும் கேட்டும் மகிழ முடியும். அம்முயற்சி வெற்றியடையும்போது அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

மற்றபடிக்கு - ஜெயகாந்தன் சபையில் நான் இப்போதும் முன்னரும் கேட்டவற்றையெல்லாம் தொகுத்து ஒருநாள் "ஜெயகாந்தன் - என் குறிப்புகள்" என்று எழுதுகிற ஆசை உள்ளது. இன்ஷா அல்லாஹ்! பார்ப்போம்!

சமஸ்கிருத சமிதி கூட்டம் நான் சென்னை செல்வதற்கு ஒருநாள் முன்னதாக நடைபெற்றது. எனவே, அதில் நான் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டவர்களிடமிருந்து அறிந்தது இதுதான். ஜெயகாந்தன் "சமஸ்கிருதமும் தமிழும்" என்று அந்தக் காலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் கட்டுரைத் தொகுப்பில் அக்கட்டுரை இருக்கிறது. அக்கூட்டத்தின்போது அக்கட்டுரையின் நகல் வந்திருந்தவர் அனைவருக்கும் கூட்ட நிர்வாகிகளால் விநியோகிக்கப்பட்டது. கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பொற்கோ, அவருக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட விநியோகங்கள் எப்படி நடக்கலாம் என்று கூட்டத்தில் வருத்தப்பட்டதாக செய்தி.

ஜெயகாந்தன் பேசும்போது பின்வருமாறு பதில் சொன்னார் என்று அறிகிறேன். "அந்தக் கட்டுரையை விநியோகித்தவர்கள் பொற்கோ சொல்வது மாதிரி அவருக்குச் சொல்லிவிட்டு விநியோகித்து இருக்கலாம். சொல்லாமல் செய்திருக்க வேண்டியதில்லை. ஆனால், அக்கட்டுரையில் இருக்கிற கருத்துகளுக்கு இன்னமும் நான் பொறுப்பு. அதைப் பற்றி நாம் விவாதிக்கலாம். வேண்டுமானால் இன்னொரு கூட்டம் போட்டுக் கூட அதைப் பற்றிப் பேசலாம்" என்ற பொருளில் ஜெயகாந்தன் பதில் சொன்னார் என்று அறிகிறேன்.

மற்றபடிக்கு - அவர் சொன்ன நாய் உதாரணம் எல்லாம் மற்றவர்களால் மிகைப்படுத்தப்பட்ட அரசியல் என்றே நான் நம்புகிறேன். அந்த உதாரணத்தை தாய்மொழியை நேசிப்பது போல பிற மொழிகளையும் நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தச் சொன்னார். ஆனாலும், அது மற்றவர்களைக் காயப்படுத்தியிருக்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே, அவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அதைப் பற்றியும் விரித்துச் சொன்னார். மேலும் அவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில், கழுகு என்ற பெயரில் ஜீனியர் விகடனில் வெளிவந்தது உண்மையா இல்லையா என்பது பற்றியும், நிஜமாகவே என்ன நடந்தது என்றும் சொன்னார்.

அவரின் நாய் உதாரணத்துக்குக் கண்டனம் தெரிவிப்பவர்கள் பலரும் இணையத்தில் அதைவிட மோசமாகப் பேசியும் எழுதியும் வருபவர்களே. அப்படியெல்லாம் எழுதுவது தவறு என்று யாரும் குரல் கொடுத்தபோதும் கூட, என்னை ஒருவர் திட்டும்போது, நான் அப்படி இல்லையென்றால், அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன் என்கிற பெருந்தன்மையான வியாக்கியானங்கள் தந்தவர்கள். என்னைப் பொருத்தவரை, தமிழ் தமிழ் என்று மொழியைப் பற்றிய அறிவுபூர்வமான பிரக்ஞை எதுவுமின்றி உணர்வுபூர்வமான தளத்தில் மொழியைக் கிளிஷே ஆக்கி வைத்துள்ளவர்களுக்கு இத்தகைய உவமைகள் வலிக்கத்தான் செய்யும். தமிழை வைத்துப் பிழைப்பும் அரசியலும் நடத்துபவர்களைப் பார்த்து பார்த்து நொந்துபோன என்னைப் போன்ற பிறமொழிகளையும் நேசிக்கிற தமிழர்களுக்கு நாய் உவமையில் எந்தத் தவறும் தென்படவில்லை. சொல்லப்போனால், பிறருக்கு வலிக்கிறதே என்று ஜெயகாந்தன் உவமையைச் சிங்கத்துக்கு மாற்றிய போதும், எவரும் அதன் பின்னால் இருக்கிற கருத்தை வழக்கம்போல கண்டு கொள்ளாமல் ஜல்லியடிக்கிற அறிவுஜீவியாகவே இருக்கிறார்களே என்று தோன்றுகிறது.

ஜெயகாந்தனாவது தமிழை நேசிப்பதுபோல பிற மொழிகளையும் நேசியுங்கள் என்கிறார். பெரியார் தமிழே தேவையில்லை என்றவர். தமிழுக்குப் பதில் அனைவரையும் ஆங்கிலம் படிக்கச் சொன்னவர். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று திரும்பத் திரும்பச் சொன்னவர். தமிழைப் படிப்பதால் ஒருவன் பின்புறமாகவே சிந்திக்கிறான் முன்புறமாகச் சிந்திப்பதில்லை என்றவர்.

1. தமிழ்நாட்டில் ஹிந்திக்கு வித்திட்டவர் பெரியார் என்கிறார்கள். (ஆதாரமாகத் திரு.வி.க. அதுபற்றி எழுதியதைச் சுட்டுகிறார்கள்)

2. தமிழ்ப் புலவர்கள் தமிழை ஒரு நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது, தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியும் ஒரு பயனும் ஏற்பட முடியாதபடி செய்துவிட்டார்கள்.

3. நம் நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை.

4. மக்களுக்கு அறிவு வரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காயப் புலவனும் இல்லை.

5. தமிழ்க் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்தது போல வேறு எந்த மொழிக் கவிஞனும் அந்த மொழியைப் புகழ்ந்தது இல்லை.

6. தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாள வேண்டிய மொழியாகும். நாகரீகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழியென்று சொல்வதற்கில்லை.

7. தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே அல்லாமல், அறிவுவாதியாக ஆக முடிவதில்லை. அதுமாத்திரம் இல்லாமல், எவ்வளவுக்கெவ்வளவு தமிழ்ப் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப் பக்கம் சென்று, முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்க முடிகின்றதே தவிர, முன்பக்கம் பார்க்க முடிவதே இல்லை.

8. தமிழ்ப் படிக்காதவனுக்குத்தான் முன்பக்க பார்வை ஏற்படுகிறது. தமிழ்ப் படித்துவிட்டால் பின்பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப் புலவனும் மேதையும் தமிழைப் படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆகிவிடுகின்றான்.

மேற்கண்ட திருவாக்கியங்களையெல்லாம் அருளியவர் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தனை இன்று விமர்சிக்கிறவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிற பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள். இதைப் பற்றிய முழுகட்டுரை ஏற்கனவே என் வலைப்பதிவில் வந்துள்ளது. சுட்டி இங்கே -->http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post_07.html

ஜெயகாந்தனாவது தமிழைப் போல பிற மொழிகளை நேசிக்கச் சொன்னார். அதற்கு வெகுண்டெழுந்து அவரை இவ்வளவு திட்டுகிற அறிவுக் கொழுந்துகள், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழைப் படிப்பதால் பின்பார்வைதான் ஏற்படுகிறது என்று சொன்ன பெரியாரைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அதைப் பற்றிக் கேள்வி கேட்டீர்கள் என்றால் அப்போது மட்டும் முன்ஜாக்கிரதையாக பெரியார் சொன்னதன் குலம், கோத்திரம், பின்னணி, காரணங்கள், நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றை ஆராய வேண்டும் என்று ஜல்லியடிக்கப் பார்ப்பார்கள். ஒரு நியாயவான் தனக்குப் பிடித்தவர்களுக்குத் தருகிற சலுகைகளையும் காரணங்களையும் தனக்குப் பிடிக்காதவர்களுக்கும் தரவேண்டும். அத்தகைய அறிவொழுக்க நேர்மை பெரியாருக்கு இருந்தது. இன்றைக்குப் பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு ஜல்லியடிக்கிற பலருக்கு அந்த அறிவொழுக்க நேர்மை இருக்கிறதா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன். மணி மு. மணிவண்ணனிலிருந்து சாபுவரை இந்த விஷயத்திற்காக ஜெயகாந்தனை விமர்சிக்கிற எவரிடமும் பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டுப் பாருங்கள். என்ன பதில் சொல்கிறார்கள் என்று தெரிந்துவிடும். சொல்லப் போனால், தமிழைப் பற்றிய தன் கருத்துகளுக்காகப் பிறமொழிகளை நேசிக்கிற என்னைப் போன்றோராலும் கண்டிக்கத்தக்கவர் பெரியார். ஆனால், தமிழைச் சுவாசித்து, தமிழை வெளியேற்றித் தமிழை அடுத்தவர்மீது திணிக்கிற அறிவுஜீவிகள் எவரும் பெரியாரைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். தமிழைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியதும் பேசியதும் மோசமா, பெரியார் எழுதியதும் பேசியதும் மோசமா என்கிற திறந்தவெளி விவாதத்துக்கு இங்கே எவருக்கும் துணிவில்லை. ஜோக் என்னவென்றால், பெரியார் தமிழைப் பற்றி இவ்வளவு சொன்னபிறகும் அவரைத் தமிழர் தந்தை என்றும் பெரியார் என்றும் அவர்மீது விமர்சனமின்றி இவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால், ஜெயகாந்தன் மட்டும் மோசம். படிப்பதற்கே நகைப்பாக இல்லை?

நாய் போன்ற உவமையை பயன்படுத்தியிருக்கிறாரே ஜெயகாந்தன்? சமஸ்கிருதத்திலா எழுதி பெயர் பெற்றார் என்று கேட்கிறார்கள். பெரியார் கூட என்ன அவர் தாய்மொழியான கன்னட மக்களாலா தந்தை என்றும் பெரியார் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்தவர்தானே அவர். அவர் எப்படித் தமிழே வேண்டாமென்று சொல்லலாம்? இதையெல்லாம் நீங்கள் கேட்பீர்களேயானால் நீங்கள் பார்ப்பன அடிவருடியாக ஆதிக்க சக்திகளின் ஆதரவாளராகவும் பார்க்கப்படுவீர்கள்.

அட்லீஸ்ட் பெரியாருக்காவது மொழி, மதம், இனம் என்ற பெயரில் மனிதர்களின் உணர்வுகளைக் கிளப்பி அவர்களை அடிமையாக்குகிறதன் அபத்தத்தனம் தெரிந்திருந்தது. அந்தக் காரணத்தினால் அவர் தமிழை எதிர்த்தார் என்று பெரியாரியவாதிகள் சமாளிப்புகள் செய்யலாம். அப்படியானால், இன்றைக்குத் தமிழ் தேசியம் பேசுகிற பெரியாரியவாதிகள் பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் கொள்கைகளுக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.

இதில் அபத்தம் என்னவென்றால், வராகம் என்றும் நாய் என்றும் பேய் என்றும் சொல்லிக் கொள்பவர்களும் அத்தகைய புனைபெயர் வைத்துக் கொள்பவர்களும் நாய் என்ற உவமை மோசமென்று வெகுண்டெழுந்து ஜெயகாந்தனைத் திட்டியதுதான். இது எப்படியிருக்கிறது என்றால் - தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பரிந்து பேசுவதாக மார் தட்டிக் கொண்டு, நாய் பேய் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டு (இது கலகமாம்!), ஆனால், அந்த உவமை இன்னொருவரால் பயன்படுத்தப்படும்போது அது கேவலம் என்று அவர்களையும் அறியாமல் அவர்கள் உள்மனது சொல்லிவிட, எகிறிக் குதிப்பது. எனவே, என்னதான் கலகக்காரப் பெயர் வைத்துக் கொண்டாலும் இவர்கள் எல்லாம் அடிமனதில் சனாதனிகளாகவே இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அந்தவரைக்கும் சந்தோஷமே. மண்ணுயிர் அனைத்தும் கடவுளின் வடிவம் என்ற மஹாகவியின் வரியை படித்தவர்கள் நாய் என்றால் தாழ்ந்துவிடப் போவதில்லை சிங்கம் என்றால் உயர்ந்துவிடப் போவதில்லை என்ற ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். எனவே, இவர்கள் எல்லாம் பாரதியைச் சரியாகப் படித்துச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்காக நாம் வேண்டிக் கொள்வோம்.

விஷயம் இதுதான். திராவிட இயக்கங்கள் குறித்தும், தமிழ் என்ற பெயரிலும் நடத்தப்படும் அரசியல் குறித்தும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தலையெடுக்கும் பயங்கரவாதம் குறித்தும் என்றென்றைக்கும் கடுமையாக விமர்சிப்பவராகவும், இந்திய தேசியத்துள் தமிழை அடையாளம் காண்பவராகவும் ஜெயகாந்தன் இதுவரை இருந்து வந்துள்ளார். அவ்விஷயத்தில் அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், நாய் உவமையை வைத்து இணையத்தில் தங்கள் மனவக்கிரங்களையும் அரிப்புகளையும் சில இடங்களில் சொந்தப் பெயரிலும் பல இடங்களில் அநாமதேயங்களாகவும் தீர்த்துக் கொண்டார்கள்.

ஓ.விஜயனை எடுத்துக் கொள்ளுங்கள். அவரின் கடைசி காலத்தில் அவர் மென்மையான இந்துத்துவவாதி ஆகிவிட்டார் என்று பால் ஸக்கரியா சொல்கிறார். ஆனால், அவர் விடுதலைப் புலிகளை ஆதரித்திருக்கிறாராம். எனவே, இணையத்துப் புலி ஆதரவாளர்களுக்கு ஓ.விஜயன் இந்துத்துவ ஆதரவாளராக இருந்தது பெரிதாகப் படவில்லை. புலிகளை ஆதரித்த காரணத்தினால் அவரைச் சிலாகித்தும் எழுதுகிறார்கள். ஏன் இவர்கள் பால் தாக்கரேவைக் கூட சிலாகித்து எழுதுவார்கள். காரணம் தெரியாதா? அவரும்கூட புலிகளை ஆதரித்திருக்கிறார். ஆனால், ஜெயகாந்தனை இவர்களால் என்றைக்கும் ஆதரிக்க முடியாது. இவையெல்லாம் தான் ஜெயகாந்தனை இவர்கள் திட்டுவதற்கான அடிப்படைக் காரணம்.

மனிதாபிமானம் பேசுகிற எவராலும் எதிரியைப் பற்றிக்கூட அவர் செத்தபின் அவருக்கு விருது கிடைத்தது என்று எழுத முடியுமா? ஆனால், இந்த மனிதாபிமானிகள் எழுதுகிறார்கள். அதன்மூலம் தங்கள் மன அழுக்குகளையே அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். ஆனால், இந்த அழுக்குகளும் அபவாதமும் ஜெயகாந்தனைத் தீண்டவே முடியாது. அழுக்குகள் தொட முடியாத, தொட அனுமதிக்காத தொலைவில் இருக்கிறார் அவர். அவர் இறந்தபின் அவருக்குக் கிடைத்த விருது இது என்ற விமர்சனத்துக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "இறந்தும் உயிர்வாழ்வது சுவாரஸ்யமானது". இந்தப் பதிலின் மேன்மையையும் உண்மையையும் ஆழத்தையும் உணர்ந்து கொள்வதற்கு ஒருவருக்குத் தமிழின் சித்தர் மரபும் சிந்தனையும் தெரிந்திருக்க வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

அப்படியே, அவர் ஞானபீடம் இல்லை, ஞானசூன்யம் என்று அழைத்து ஒரு துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. கூட்டத்தில் அதற்கு ஜெயகாந்தனே பதிலும் சொன்னார். கூட்டம் முடிந்தபின் - சபையில் நண்பர்கள் முன்னிலையில், கூட்ட நிர்வாகிகளிடம் அவர் சொன்னது. "துண்டு பிரசுரத்தை விநியோத்த இளைஞர்களிடம் போய் நீங்கள் "உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் எல்லாப் பிரசுரங்களையும் எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அப்படியே அதை எடுத்துக் கொண்டுபோய் மேடையில் இருக்கிற ஜெயகாந்தனிடம் கொடுக்கிறோம். அவரே அரங்கித்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் உங்கள் பிரசுரம் போக ஏற்பாடு செய்வார்" என்று சொல்லியிருக்க வேண்டும்." என்றார். இந்த மனப்பான்மையும் பெருந்தன்மையும் இணையத்திலும் வெளியிலும் ஜெயகாந்தனை விமர்சிக்கிற எவருக்கும் இல்லை. ஜெயகாந்தனை நன்கு புரிந்து கொண்டிருக்கிற பெரியாரியவாதிகளும் உண்டு. கி.வீரமணி, சின்னக் குத்தூசி என்று பலரைச் சொல்லலாம். அவர்கள் யாரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும், நாகரீகமற்ற முறையிலும் ஜெயகாந்தனுடன் முரண்பட்டாலும் அவரை விமர்சிக்க மாட்டார்கள். அவரின் அறிவொழுக்கத்தையோ நேர்மையையோ கேள்வியும் கேட்க மாட்டார்கள். வன்முறையால் சித்தாந்தத்தை எப்பாடுபட்டாவது அடைந்துவிட முடியுமென்று - கொள்கையின்மீது வைக்காத நம்பிக்கையை வன்முறையின்மீது வைத்திருக்கிற கும்பலே எந்த அநாகரீக எல்லைக்கும் சென்று மாற்றுக் கருத்துடையோரை விமர்சிக்கும்.

ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏ.எம்.கோபு பேசினார். சிபிஐயின் மூத்த தலைவர் அவர். ஜெயகாந்தனுடன் கம்யூனில் ஒன்றாக வளர்ந்தவர். இப்போது ஜனசக்தியின் ஆசிரியர். ஜெயகாந்தனுடன் அவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கருத்து வேற்றுமை உண்டு என்ற அவர் ஜெயகாந்தனை விமர்சிக்கவும் செய்தார். ஜெயகாந்தன் சொல்வதையெல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ளவும் முடியாது, அப்படியே தள்ளிவிடவும் முடியாது என்றார். ஆனாலும், அவர் சொன்னார். "உழைப்பாளிகளையும் பெண்களையும் எதிர்த்து ஜெயகாந்தனின் பேனா ஒருவரிகூட இதுவரை எழுதியதில்லை" என்று அவர் சொன்னார். ஜெயகாந்தனை பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக முன்னிறுத்த முனைகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இது. (அவரின் பேச்சையும் வலையேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கூட்டத்தில் என்னைத் தவிர மரத்தடி நண்பர்கள் சுரேஷ் கண்ணன், ராஜ்குமார், ரஜினி ராம்கி, பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களும் தங்கள் கருத்துகளை விரும்பினால் எழுதலாம். முக்கியமாகப் பிரசன்னாவுக்கு ஜெயகாந்தனின் சில கருத்துகளில் உடன்பாடில்லை என்று அறிவேன். அதைப் பற்றி ஆரோக்கியமாக மரத்தடி நண்பர்களால் விவாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.)

எனவே, இதைப் பற்றியெல்லாம் உங்களைப் போன்ற நல்லவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாமே. நாகரீகத்தின் எல்லை தாண்டி ஜெயகாந்தனை விமர்சிக்கிறவர்களின் மனவக்கிரங்களும் நேர்மையற்ற போக்கும் பொருட்படுத்ததக்க பதிலுக்குக் கூட தகுதியில்லை. அதனாலேயே நான் அமைதியாக இருந்தேன். இப்போது என் வாயைக் கிண்டி பேச வைத்துவிட்டீர்கள்.

(பின்குறிப்பு: மரத்தடி நண்பர்களுக்கும் மட்டுறுத்துனர்களுக்கும்: இம்மடலின் ஒவ்வொரு வரிக்கும் கருத்துக்கும் நான் மட்டுமே பொறுப்பு. மரத்தடி பொறுப்பில்லை என்று நான் அறிவேன். இவ்விஷயத்தை இங்கே பேசக்கூடாது என்றே அமைதியாக இருந்தேன். ஆனாலும், சுவாமிநாதன் மரத்தடியில் கேட்ட கேள்விக்கு மரத்தடியில் பதில் சொல்வதே உசிதமென்று இதை மரத்தடியில் எழுதுகிறேன். இதுபற்றிய எந்த நாகரீகமான விவாதத்தையும், நிஜ முகத்துடனும் அடையாளத்துடனும் மரத்தடியில் யாரும் நடத்தலாம். அநாமதேயப் பெயரில் எழுதுபவர்கள் இப்போதெல்லாம் அந்தச் சௌகரியத்தை அதிகம் சேறு வாரிப் பூசவே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதால், தெரியாத பெயர்களில் எழுதுகிற அநாமதேயங்களின் கருத்துகளுக்குப் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. நிஜமுகத்துடன் எழுதுபவர்களின் கருத்துகளுக்குக் கூட நேரம் இருந்தால் பதிலளிக்க முயல்கிறேன். ஆனாலும், யாரை மறுத்துப் பதில் எழுதும்போதும், ஒருவரின் கருத்தை மறுத்துத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள் ஞானோபதேசம்போல மனதில் தோன்றுவதால், யோசித்து அவசியம் தேவை என்று தோன்றுகிற கணங்களில் மட்டும் பதில் எழுதப் போகிறேன். மரத்தடிக்கு இவ்விவாதம் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கும்பட்சத்தில் இந்த மடலுக்கு என்னை மன்னிக்கவும். இந்த மடலை மரத்தடியிலிருந்து நீக்கி விடலாம்.)

அன்புடன், பி.கே. சிவகுமார்

Friday, May 20, 2005

ஜெயகாந்தன் பேச்சின் ஒளிவடிவம்

ஏப்ரல் 28, 2005 (வியாழன்) அன்று மாலை ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு ஒரு பாராட்டு விழாவைச் சென்னையில் நடத்தினார்கள். ராணி சீதை மன்றத்தில் இவ்விழா நடைபெற்றது. கவிதா, ஸ்ரீசெண்பகா, வர்த்தமானன் பதிப்பகங்களும் ஜெயகாந்தனின் நண்பர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனும் முன்னின்று நடத்திய விழா இது. விழாவுக்குச் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஸ்ரீ செண்பகா சண்முகம், கவிதா சொக்கலிங்கம், விஜயா வேலாயுதம், வர்த்தமானன் சந்திரன், இயக்குனர் பாலசந்தர், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், சி.பி.ஐ.யின் ஏ.எம்.கோபு (தா.பாண்டியன் கலந்து கொள்ள இயலாததால் அவருக்குப் பதில் கலந்துகொண்டு பேசினார்.), இளையராஜா உள்ளிட்டப் பலர் பேசினார்கள். முடிவாக ஜெயகாந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்தின் பேச்சுகளை ஒளிவடிவில் தருவதற்கு முயன்று வருகிறோம்.

அதன் முதற்கட்டமாக ஜெயகாந்தன் பேச்சின் வீடியோவுக்கான சுட்டிகளைத் தருகிறோம். சுமாரான தரம், மேம்பட்ட தரம் என்று வீடியோவின் தரத்துக்கேற்ப இரு பிரதிகளை உருவாக்கியிருக்கிறோம். சுமாரான தரம் கொண்ட வீடியோ கோப்பு ஏறக்குறைய 15.9 MB அளவுள்ளது. மேம்பட்ட தரம் கொண்ட வீடியோ சுமார் 49 MB அளவுள்ளது. இரண்டுக்குமான சுட்டிகளையும் இங்கே இணைத்துள்ளேன்.

இந்த வீடியோக்களின் வி.சி.டி.யைத் தந்து உதவிய கவிதா சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி. என்னுடைய வேலை வி.சி.டி.யை வாங்கி வந்து எனதருமை நண்பர் துக்காராம் கோபால்ராவ் அவர்களிடம் தந்தது மட்டுமே. எந்த அளவில், எந்த வடிவில் ஒளியும் ஒலியும் நன்றாக உள்ளன என்பது போன்ற ஆராய்ச்சிகளை எல்லாம் மேற்கொண்டு, அவற்றை வலையேற்றிக் கொடுத்து உதவியவர் நண்பர் துக்காராம் அவர்கள்தான். இதன்பொருட்டு அவர் செலவழித்த மணிகளுக்காகவும் ஆற்றல்களுக்காகவும் அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்கிறேன்.

இவ்விழாவில் ஜெயகாந்தன் ஏற்புரையை முடிவாக நிகழ்த்தினார். பிற பேச்சாளர்கள் அவருக்கு முன் பேசி முடித்து விட்டனர். எனவே, ஜெயகாந்தனின் பேச்சை முழுமையாகப் புரிந்து கொள்ள பிறரின் பேச்சுகளையும் கேட்க வேண்டும். பிறரின் பேச்சுகளையும் வலையேற்ற நண்பர் துக்காராம் முயன்று வருகிறார். அம்முயற்சி வெற்றியடையும்போது அவற்றுக்கான இணைப்புகளையும் தருகிறேன். எனவே, ஜெயகாந்தனின் பேச்சை இப்போது ஒருமுறை கேட்பவர்கள், பிறரின் பேச்சுகளைக் கேட்டபின் இன்னொருமுறை கேட்பது உதவும்.

இவ்விழா ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் நடத்தியது. அப்பதிப்பகங்களில் பலவற்றுக்கு AnyIndian.com இணையத்தில் முன்னுரிமை பெற்ற விற்பனையாளராக இருக்கிறது. எனவே, அப்பதிப்பகங்களில் ஒப்புதலுடன் இந்த ஒளிப்பதவை இணைய வடிவில் AnyIndian.com வழங்குகிறது. எனவே, இப்பேச்சுகளின் ஒளி மற்றும் ஒலி வடிவங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிற அன்பர்கள் கவிதா சொக்கலிங்கம் அவர்களிடமோ, AnyIndian.com இடமோ முன்அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பேச்சுகளின் வீடியோவை உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் பார்த்தும் கேட்டும் மகிழும் பொருட்டு, தங்கள் தளத்தில் வலையேற்றுவதற்கான இடம் கொடுத்து வலையேற்றுகிற முயற்சிகளையும் எடுத்த AnyIndian.com-ன் மேலாண்மைக் குழுவுக்கு ஜெயகாந்தனின் வாசகனாக என் நன்றிகள்.

ஜெயகாந்தன் பேச்சு - சுமாரான தரமுள்ள வீடியோ (15.9 MB)

ஜெயகாந்தன் பேச்சு - மேம்பட்ட தரமுள்ள வீடியோ (49 MB)

Thursday, May 19, 2005

ஓர் இந்தியப் பயணம்

இரண்டு வாரப் பயணமாக சமீபத்தில் இந்தியா சென்று திரும்பினேன். இதைப் பற்றி எதுவும் எழுதுவதாக திட்டம் இருக்கவில்லை. எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பம், எவ்வளவு எழுதினாலும் அனுபவத்தைச் சரியாகச் சொல்ல முடியுமா, எழுதக்கூடாத விஷயங்கள் எதையும் தவறி எழுதிவிட்டால் என்னாவது, இப்படி ஒன்று எழுதித்தான் ஆக வேண்டுமா, செல்வதைப் பொதுவில் சொல்லவில்லை, சென்று வந்ததைச் சொல்ல வேண்டுமா ஆகிய கேள்விகள் காரணம். சென்றதோ தனிப்பட்ட பயணம். அதில் என்னுடைய தொழில் சார்ந்த வேலைகளும் கலந்து கொண்டன. எனவே, எழுதுவதென்று முடிவெடுத்தால், சுய புராணங்களும், தொழில் சார்ந்த விஷயங்களும் கலந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம். ஆனாலும், சந்தித்த நண்பர்களில் இணைய நண்பர்களும் மரத்தடி நண்பர்களும் இருப்பதால், சுருக்கமாகவேனும் சொல்லிவிட வேண்டுமென்று இந்த மடல்.

ஏர் இந்தியா வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டது. கிளம்பும்போதே இரண்டு மணிக்கும் மேற்பட்ட தாமதம். விளைவாக மும்பையிலிருந்து சென்னைக்கான விமானத்தைத் தவற விட்டுவிட்டேன். மும்பையில் 8 மணி நேரக் காத்திருப்பு. ஏர் இந்தியாவின் சிப்பந்திகள் இதுபற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஓட்டல் தரமாட்டீர்களா என்று கேட்ட சக பயணியை, லக்கேஜை வெளியெடுத்து, குடியுரிமை மற்றும் சுங்கச் சோதனைகளை (Immigration and Customs) மும்பையிலேயே முடித்துவிட்டு வந்தால் ஓட்டல் தருகிறோம் என்றார்கள். அதைக் கேட்ட நண்பரும் நானும் விமான நிலையத்தினுள்ளேயே 8 மணி நேரங்களைக் கழிப்பது என்று முடிவு செய்துவிட்டோம். ஒரு பயணி ஏர் இந்தியா சிப்பந்தியிடம் போய், இத்தகைய தாமதங்களால் அவருடைய இணைப்பு விமானம் மட்டும் தவறிவிட வில்லை, சென்னையிலிருந்து அவர் திருச்சிக்குப் போக வேண்டிய விமானமும் தவறுகிறது, அதனால் அவருடைய விடுமுறை திட்டமே தாறுமாறாகி விடுகிறது. இந்தியன் என்பதால் ஏர் இந்தியாவில் வந்ததாகவும், ஆனால் அதன் சேவை இப்படி இருப்பதால் இனி ஏர் இந்தியாவில் பயணம் செய்ய மாட்டார் என்று சீரியஸாகப் புகார் செய்தார். ஏர் இந்தியா சிப்பந்தியோ அவர் சொல்வதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத மாதிரி தன் சகாவுடன் மராத்தியில் வேறு ஏதோ பேசிக் கொண்டே அதைக் கேட்டுக் கொண்டார்.

போகும்போது மட்டுமில்லை. திரும்பி வரும்போது இதைவிட மோசம். சென்னையில் செக்-இன் செய்யும்போதே, மும்பையிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகும் என்றும், மும்பையில் லக்கேஜை வெளியில் எடுத்துவிட்டு, மறுபடியும் செக்-இன் செய்ய வேண்டும் என்று சொல்லி சங்கடப்படுத்தினார்கள். காலை 7:20க்குக் கிளம்ப வேண்டிய விமானம் மாலை 5க்குத்தான் கிளம்பும் என்றார்கள். திரும்பி வரும்போது காலை 5:15க்கு மும்பையில் இறங்கி, லக்கேஜை வெளியெடுத்து, மறுபடியும் செக்-இன் செய்து முடிக்கும்போது காலை 9 மணி ஆகிவிட்டது. அவ்வளவு விரைவாக மறுபடியும் செக்-இன் செய்கிற கவுண்ட்டரின் சிப்பந்திகள் காரியமாற்றினார்கள். நல்லவேளையாகத் திரும்பி வரும்போது ஓட்டல் கொடுத்தார்கள்.

நானும்கூட இனிமேல் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். இதுதான் முதன்முறையாக ஏர் இந்தியாவில் செல்வதும். உடன் வந்த நண்பர் சென்ற வருடம் மட்டும் நான்கு முறை ஏர் இந்தியா மூலம் இந்தியா சென்று வந்தவர். அவர் பயணம் நான்கு முறையும் சௌகரியமாக இருந்ததாம். நம்ம அதிர்ஷ்டம் இப்படி. ஏர் இந்தியாவுக்கு உபரி விமானங்கள் போதுமான அளவு இல்லாததால் இப்பிரச்னை. இப்போது புதிதாக ஏர் இந்தியா விமானங்கள் வாங்கப் போகிறது என்று படித்தேன் (போயிங்கிடமிருந்து). அவை வந்தவுடன் இப்பிரச்னை தீருமா என்று தெரியவில்லை.

ஆனால், எவ்வளவு விமானங்கள் வந்தாலும் நுகர்வோர் சேவையில் தங்கள் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தாதவரை ஏர் இந்தியாவுக்கு உய்வில்லை. அடுத்தமுறை ஏர் இந்தியாவில் பயணம் செய்யக் கூடாது என்று நினைக்கிற பலரும், மறுபடியும் டிக்கெட் வாங்கும்போது, குறைந்த விலையென்பதால், சகித்துக் கொண்டு ஏர் இந்தியாவையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தச் சபலத்துக்கு நானும் ஆட்பட்டுவிடக் கூடாது என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஞாயிறு காலையிலிருந்து வெள்ளி மாலை வரையென்று ஏறக்குறைய ஐந்து நாட்கள் சென்னையில் இருந்தேன். பிரசன்னாவை முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். நேரில் பார்க்காமல் பழகாமல், இணையவழி நட்பினால் மட்டுமே நெருங்கிய நண்பராகவும், நான் செய்கிற தொழிலின் இந்தியப் பிரிவுக்கு முதன்மை அலுவலராகவும் ஆகிற அளவுக்கு அவரை ஆக்கியது மரத்தடி நட்பும் இணைய நட்பும் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர் எழுதுகிற கவிதைகளில் தெரிகிற அதே முதிர்ச்சியுடன் ஆளும் இருக்கிறார். மாமே என்று அவரை ஆசாத் அழைப்பது கலாய்ப்பதற்காக இல்லை, மரியாதையுடன்தான் என்று நினைக்கத் தோன்றுகிற தோற்றம். :-) பிரசன்னாவுடனேயே இந்த ஐந்து நாட்களும் தங்க வேண்டியிருந்தது. அவரின் அன்பான உபசரிப்புக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றிகள் சொல்ல வேண்டும். ஒரு டீ-டோட்டலரான அவர் தன் வீட்டைப் புனிதமாக வைத்திருந்தார். அதையெல்லாம் அந்த ஐந்து நாட்களில் மாற்றி அவரைக் கலங்கடித்து விட்டோமென்று நினைக்கிறேன். பொறுத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.

நிறைய நண்பர்களைச் சந்தித்தேன். பலர் இணையம் வழி நண்பர்கள், பலர் இலக்கியம் மற்றும் நண்பர்களின் வழி நண்பர்கள். ஆனால், அதிகமாக யாருடனும் இலக்கியம் பேசவில்லை. நண்பர்களுடன் என்ன பேசினேன் என்று எதையும் விவரமாக எழுதவும் போவதில்லை. சென்னை சென்ற அடுத்த நாள் மாலை (திங்கள் மாலை) இணைய நண்பர்கள் பலரை ஓரே நேரத்தில் ஒரு இடத்தில் சந்திக்க முடிந்தது. நண்பர்கள் இரா. முருகன், பத்ரி, சுரேஷ் கண்ணன், இகாரஸ் பிரகாஷ், ரஜினி ராம்கி, காரைக்குடி கவிஞர் ராஜ்குமார், பிரசன்னா என்று பலர் அதில் கலந்து கொண்டனர் (ஏதேனும் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.)

அப்புறம் தனிப்பட்ட நட்பு, இலக்கிய நட்பு, எனி இந்தியன்.காம் தொழில் ரீதியான நட்பு என்ற காரணங்களின் அடிப்படையில் பலரை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. ஜெயகாந்தன் (இருமுறை நண்பர்களுடன் பின்னிரவுவரை அவருடன் நேரம் செலவழிக்க முடிந்தது. அவர் பேசுவதைக் கேட்க கேட்க, இவையெல்லாம் எழுதப்படாமலேயே போகின்றனவே என்ற ஏக்கம் கிளர்ந்து எழுகிறது.), டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், இயக்குநர் அம்ஷன் குமார் (ஒரு பார்ட்டியில் கொஞ்ச நேரமும் கிளம்புவதற்கு முன் ஒரு நாள் மாலை சில மணி நேரங்களும் இவருடன் பேச முடிந்தது. மாற்றுச் சினிமா பற்றி அவர் அதிகம் எழுதவும் பேசவும் வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தேன்.) , எழுத்தாளர் சா. கந்தசாமி (அவரின் சுபமங்களா பேட்டி பற்றியும் சாயாவனம் பற்றியும் கலந்து கொண்ட பார்ட்டியில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் பேச முடிந்தது), கவிஞர் பரிணாமன் (நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது இவர் பாடல்களை இவரே அற்புதமாகப் பாடிக் கேட்டிருக்கிறேன். "பத்துத் தலை ராவணனை ஒத்தத் தலை ராமன் வென்றான் மொத்தத்திலே வீரம் வேணும் சுடலைமாடா, அந்த வித்தையைக் கத்துக்காம சத்தியத்தை ஒத்துக்காம சும்மா கத்தினா போனதெல்லாம் கிடைக்குமாடா", "பாரதி பிடித்த தேர்வடமும் நடுவீதி கிடக்கிறது, அதைப் பற்றியிழுப்பதற்கு ஊர் கூடித் தவிக்கிறது. நம்பிக்கை வைத்து நெம்புகோலெடுத்து நடப்போம் வாருங்கள். நாம் நடந்தால் தேர் நடக்கும் அன்றேல் நடுத்தெருவில் கிடக்கும்.", "எட்டையபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி" என்று இன்னமும் மனதில் ரீங்காரமிடும் அவர் குரலையும் பாடல்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது மகிழ்ச்சியளித்தது) , மனுஷ்ய புத்திரன், காலச்சுவடு அரவிந்தன், சுதாங்கன், எஸ்.ராமகிருஷ்ணன், பி.ஏ.கிருஷ்ணன், வெளி ரங்கராஜன், பா.ராகவன் (கிழக்கு பதிப்பக அலுவலகத்தில் சந்தித்தேன்), முத்துராமன் (இவரையும் கிழக்கு அலுவலகத்தில் சந்தித்தேன். அறிமுகத்துக்கு அப்புறம் பேச இயலாமல் போய்விட்டது.), கவிதா சொக்கலிங்கம், ஸ்ரீசெண்பகா சண்முகம், சீனி.விசுவநாதன், சிபிச்செல்வன், பவித்ரா ஸ்ரீனிவாசன், தமிழ் இந்தியா டுடே காப்பி எடிட்டர் சதாசிவம் (சந்தித்த பின்தான் தெரிந்தது, இவரும் நானும் ஒரே பல்கலைக் கழகத்தில் படித்து, ஒரே மாணவர் விடுதியில் தங்கி, ஒருவரையொருவர் முன்னமே அறிந்திருக்கிறோம் என்று), சிற்பி பாலசுப்பிரமணியம், சுகதேவ், சந்தியா சௌந்திரபாண்டியன், குறும்பட இயக்குநரும் எழுத்தாளருமான புகழேந்தி, மரத்தடி ப்ரியாவின் தாயார் மற்றும் சகோதரர் உள்ளிட்ட பலரைச் (பல பெயர்கள் நிச்சயம் விடுபட்டுப் போயிருக்கும். மன்னிக்க வேண்டுகிறேன்.) சந்திக்கிற பெருவாய்ப்பு அமையப் பெற்றேன். மேற்கண்ட எல்லாருடனும் எனக்கு ஏற்கனவே நட்பு உண்டென்றும், இவர்களுடன் நான் இலக்கியம் பேசினேன் என்றும் பொய் சொல்லப் போவதில்லை. சிலருடன் இலக்கியம், சிலருடன் தனிப்பட்ட உரையாடல்கள், சிலருடன் தொழில் நிமித்தம். ஆனாலும், இவர்களையெல்லாம் என் குறுகிய கால பயணத்தில் சந்திக்கிற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு அவர்களுக்கு நான் உளமார நன்றி கூறுகிறேன். இவர்கள் இல்லாமல், இன்னும் பல நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாட முடிந்தது. நேரில் சந்திக்காத குறையை அது ஓரளவுக்கு நிவர்த்தி செய்தது எனலாம்.

கிருபா சங்கரையும் தேசிகனையும் இன்னும் சில நண்பர்களையும் சந்திக்க இயலாமல் போனது வருத்தமே. இரா. முருகன் மிகவும் மென்மையாகவும் அன்போடும் பேசுகிறார். இன்னும் கொஞ்சம் கேட்கலாம் என்று ஆசைப்பட வைக்கிற தொனியும் ஆகிருதியும் அவரிடமிருக்கிறது. அவர் விருப்பப்படி சில நிமிடங்களாவது அவர் இல்லத்துக்குப் போக முடியாமல் நேரம் என்னை நெருக்கியதற்கு அவர் என்னை மன்னிக்க வேண்டும். இகாரஸ் பிரகாஷோடு பின்னிரவு வரைப் பேச முடிந்தது. அதன்பிறகு அவரைப் பிடிக்க முடியவில்லை. ஒரு பின்னிரவுப் பேச்சிலேயே அலுத்துப் போய்விட்டேனா என்று அவரைக் கேட்க வேண்டும். :-)

ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டு விழாவில் மறுபடியும் ரஜினி ராம்கி, சுரேஷ் கண்ணன், ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்து மகிழ்கிற வாய்ப்பு கிடைத்தது. ரஜினி ராம்கி இளமையின் துள்ளலுடனும் உற்சாகத்துடனும் வளைய வருகிறார். சுனாமி நிவாரண உதவிகளாக அவரும் அவர் நண்பர்களும் செய்த இமாலய சாதனையை நேரில் பாராட்டுகிற வாய்ப்பு கிடைத்தது. எது சொன்னாலும் புன்னகைக்கிறார். பிரசன்னா போன்ற நண்பர்கள் ரஜினியை வைத்து அவரை நட்பு ரீதியில் "ஓட்டினாலும்" பதிலுக்கு மனம் சுருங்காமல் சிரிக்கிறார். சுரேஷ் கண்ணனும் ராஜ்குமாரும் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் பரந்துபட்ட விஷய ஞானம் உள்ளவர்களாகவும் தெளிவான சிந்தனைகள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். சுரேஷிடமும் ராஜ்குமாரிடமும் இன்னும் பேச வேண்டியது ஏதோ இருக்கிறது என்ற பிரமை அவர்களிடம் எவ்வளவு பேசினாலும் தோன்றுகிறது. சுரேஷைச் சந்திக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எல்லாம் கையில் மினரல் வாட்டர் பாட்டலுடன் அலட்டுகிறார்கள் என்று ஒருமுறை எழுதியிருந்தார். அவரைப் பார்க்கும்போது கூட நான் மினரல் வாட்டர்தான் குடிக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால், இரண்டு வாரம் உடல்நலம் கெடாமல் திட்டமிட்டபடி பயணத்தை முடிப்பது கடினம். என்னிடம் அலட்டல் எதையும் சுரேஷ் கண்டிருந்தால் அது வெளிநாட்டு அலட்டல் இல்லையென்றும், அக்மார்க் இந்திய அலட்டல் என்று மட்டும் அவருக்குத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். :-)

பாரதி ஆய்வுகளில் தன் வாழ்நாளைச் செலவழித்து வரும் சீனி.விசுவநாதன் அவர்களையும் முதன்முறையாக நேரில் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இது என்னுடைய பாக்கியமென்றே நான் கருதுகிறேன். அவரின் சீரிய பணியையும் அவர் வாழ்ந்து வருகிற எளிய வாழ்க்கையையும் பார்க்கும்போது வார்த்தைகள் வரவில்லை.

பெங்களூர் மற்றும் கோவை சென்று வர வேண்டும் என்கிற என் ஆசை சென்னையிலேயே ஐந்து நாட்கள் கழித்துவிட்டதால் நிறைவேறவில்லை. அடுத்த முறை பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்!

அடுத்த முறை இந்தியா வரும்போது - ஒரு நாள் முழுமையும் ஒதுக்கி இணைய இலக்கிய நண்பர்களுடன் செலவழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் பயணம் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக நண்பர்களுக்கு நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன். சென்னையைவிட என் சொந்த ஊருக்கு பெங்களூர் சமீபம். அதனால் பெங்களூரில் இறங்கி ஊருக்குப் போனால் என்ன என்று ஒவ்வொருமுறையும் தோன்றும். சென்னையில் இம்முறை சந்தித்த நண்பர்களைப் பார்க்கும்போது, அடுத்தமுறையும் சென்னைக்கே டிக்கெட் எடுப்பேன் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. அந்த அளவுக்கு இணைய நண்பர்களிடம் பரஸ்பரம் மரியாதையுடனும், நெருங்கியும், மனம் விட்டும், புரிதலுடனும் பேசவும் விவாதிக்கவும் முடிந்தது. அதற்காக அவர்களுக்கு என் நன்றிகள்.

பின்குறிப்பு: சுயபுராணம் போன்ற தொனி எங்கும் தென்பட்டால் பொறுத்துக் கொள்ளவும்.

Tuesday, May 17, 2005

மாநிலத்திலும் கூட்டாட்சி!

இந்த இடைத்தேர்தல் தருகிற பாடத்தைக் கற்றுக் கொண்டு, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்வதே வெற்றி தேடித் தரும் என்ற விவேகத்தைப் பெற்று, அதற்கேற்ற வியூகத்தை அமைக்கக் கருணாநிதி கற்றுக் கொள்வாரேயானால், அடுத்த தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைகிற வாய்ப்பு இருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். மு. கருணாநிதி முதல்வர். அவர் தலைமையிலான ஆட்சியில் நல்லகண்ணு, வரதராஜன், E.V.K.S. இளங்கோவன், வை.கோபால்சாமி, திருமாவளவன், கிருஷ்ணசாமி, காடுவெட்டி குரு அல்லது ராமதாஸ் உள்ளிட்ட பலர் அமைச்சர்கள். எவ்வளவு நன்றாக இருக்கிறது! மனத்தடைகளை விட்டு வெளிவந்து கருணாநிதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த தேர்தலிலும் பணநாயகம் வென்று விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். (அப்படித் தி.மு.க. கூட்டணி அரசுக்கு ஒத்துக் கொண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெல்லுமானால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீண்டும் ஒரு பொறுப்பற்ற தவறை இழைக்கிறார்கள் என்றே என்னைப் போன்ற இடதுசாரிகளின் அபிமானிகள்கூட பொரும வேண்டியிருக்கும்!)

அதற்கு முதல் கட்டமாக அடுத்த தேர்தலில் தி.மு.க. 80 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடாமல், பிற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அவற்றின் பலத்துக்கேற்ப பிரித்துக் கொடுக்க வேண்டும். இதன்படி பார்க்கும்போது, தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் - அதிகத் தொகுதிகளில் வென்ற தனிக்கட்சியாக அது இருக்கும். அதன் அடிப்படையில் தி.மு.க.வின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்.

மாறாக - வழக்கம்போல் தேர்தலில் உழைக்கவும், ஓட்டு போட்டுத் தன்னை ஜெயிக்க வைக்கவுமே கூட்டணி கட்சிகள், ஆட்சியிலும் அதிகாரத்திலும் அவற்றுக்குப் பங்கில்லை என்று கருணாநிதி தொடர்ந்து நினைப்பாரேயானால், கூட்டணி கட்சிகளும் பொதுமக்களும் அவருக்கு அடுத்த தேர்தலிலும் பெப்பே காட்டி விடுவார்கள்.

இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா அவருடைய செல்வாக்கினாலும், ஆதரவினாலும் அல்லது பணத்தினாலும் ஜெயித்தார் என்று நிஜமாகவே நினைக்கிறீர்களா? எனக்கென்னவோ, என்னதான் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தி.மு.க. வெற்றிக்காக உழைத்தாலும், கூட்டணி கட்சிகளைத் தி.மு.க நடத்துகிற விதம் குறித்தும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் தி.மு.க.வுக்கு எப்படி பாகற்காயாய்க் கசக்கிறது என்பதைக் குறித்தும் பார்த்துப் பார்த்து நொந்து போன தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் அடிமட்ட அப்பாவித் தொண்டர்கள் தி.மு.க.வுக்கு வைத்த ஆப்பாகவே இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெரிகின்றன. ஏன் இப்படிச் சொல்கிறேன். அடிப்படைக் கணக்கினால்தான். தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்கிற வாக்கு வங்கி அப்படியே இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு விழுந்திருந்தால் அம்மா ஜெயித்திருக்க முடியுமா? முடியவே முடியாது. அப்போது என்ன அர்த்தம்? கூட்டணி கட்சிகளின் தொண்டர்களே தி.மு.க. தங்களை நடத்துகிற விதத்தால் நொந்துபோய் தி.மு.க.வுக்குப் பாடம் கற்பித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற பொதுத் தேர்தலைச் சந்திக்க ஆரம்பித்தபின், அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதியால் எவ்வளவு முயன்றும் தமிழக முதலமைச்சர் ஆக முடியவில்லை. நான்முடிச் சோழன் ஆனதெல்லாம் எம்.ஜி.ஆர் இல்லை என்று தெரிந்தபின்தான். அதேபோல, அ.இ.அ.தி.மு.க பிரிந்து இரண்டு அணிகளாக நின்ற போதும், 1996-ல் ஜெயலலிதா எதிர்ப்பு அலையும், ரஜினி ஆதரவு அலையும் (ரஜினி ஆதரவு அலை என்று ஒரு அலை இருந்ததா? இல்லையென்றால் இந்த வாக்கியத்தைக் கண்டு கொள்ளாதீர்கள்! ஆனாலும், அந்தத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு ரஜினியின் பங்கு கணிசமானது.) வீசியபோது தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடிந்ததே தவிர தன் சொந்த பலத்தால் ஜெயிக்கவில்லை. இவையெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாதது இல்லை. தெரிந்தும் அடுத்த தேர்தலில் தி.மு.க. மட்டுமே தனிப்பெரும்பான்மை பிடித்து ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்புவாரேயானால், அந்த நம்பிக்கைக்கு என்ன ஆகும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் உதாரணம்.

மத்தியில் மட்டுமல்ல கூட்டாட்சி! மாநிலத்திலும் இனி கூட்டாட்சிதான்! அந்தக் கூட்டாட்சிக்குத் தலைமை தாங்க தி.மு.க.வைக் கூட்டணி கட்சிகள் பெருந்தன்மையுடன் அழைக்கின்றன. அதற்குத் தி.மு.க. ஒத்துக் கொள்ளவில்லையென்றால், கருணாநிதிக்குத் தமிழக மக்கள் இந்த இடைத்தேர்தல் முடிவின் மூலம் பின்வருவதைத்தான் சொல்கிறார்கள்:

"தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வழி நடத்துங்கள்! அல்லது, கூட்டணி ஆட்சிக்கு வழி விடுங்கள்!"

அதிகாரமும் பணமும் கள்ளவோட்டும் விளையாடாத தேர்தல் இல்லைதான். ஆனால், எதிர்க்கட்சி ஜெயித்தவுடனேயே பணநாயகத்தால் மட்டுமே அது ஜெயித்தது என்று கருணாநிதி போன்ற மூத்த தலைவரே ஜல்லியடிப்பது, அதுவும் 50 வருடங்களுக்கு மேல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து தேர்தலில் பங்கு பெற்று வருகிற கட்சியைச் சார்ந்தவர் சொல்வது, ஜனநாயகத்தையும் அதில் நம்பிக்கை வைத்து வாக்களித்த பெரும்பான்மையான மக்களையும் இழிவுபடுத்துவது ஆகும். இந்த மாதிரி ஜிகிர்தண்டா ஸ்டேட்மெண்ட்களை கருணாநிதி என்றைக்கு நிறுத்தப் போகிறாரோ? தோல்வி எதன் பொருட்டு வந்தபோதும் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்கிற தைரியத்தையும் நேர்மையையும் நம் அரசியல்வாதிகளுக்கு இறைவன் அருள வேண்டும். (உடனே, இந்த விஷயத்தில் ஜெயலலிதா யோக்கியமா என்று கேட்காதீர்கள். அவர் மட்டுமில்லை, இன்னும் நிறைய அரசியல்வாதிகளும்கூட தோல்வி என்றால் பழியை அடுத்தவர் மீது போடுகிறவர்கள்தான்.)

இந்த இடத்தில் CPI-இன் தமிழ் மாநிலச் செயலர் தோழர். தா. பாண்டியன் முதிர்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும், "தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். ஏன் தோற்று விட்டோம் என்பது குறித்து இனிதான் ஆராய வேண்டும்" என்ற பொருளில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க இரண்டின் மீதும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. இரண்டுமே கொள்கையளவில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இரண்டுமே மதச்சார்பின்மை பேசிக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கொஞ்சிக் குலாவியவைதான். இரண்டுமே சாதியற்ற சமத்துவம் பேசிக் கொண்டு சாதிக்கட்சிகளுடன் கூட்டணியும் ஜாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வும் நடத்துபவைதான். ஆனாலும், ஏன் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி வேண்டும் என்று சொல்கிறேன்?

அம்மா ஏற்கனவே ஓர் தறிகெட்ட குதிரையாகச் செயல்பட்டு வருகிறார். அவரே இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பது என்பது, நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல. கேரளா போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு மாற்றுக் கூட்டணி (சென்ற முறை எதிர்க்கட்சியில் இருந்த கூட்டணி) ஆட்சி அமைக்கிற நிலை தமிழகத்துக்கு வேண்டும். அது தமிழ்நாட்டுக்கு நல்லது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு தமிழகத்தில் நடைபெறும்போது, அந்த அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிற சரியான வழியில் செலுத்துகிற கடிவாளமாகக் கூட்டணி கட்சிகள் செயல்படுகிற வாய்ப்பு இருக்கிறது. மத்தியில் நடைமுறைப்படுத்துவதுபோலவே, மாநிலத்திலும் ஒரு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வரைந்து கொண்டு அதை அமுல்படுத்த முயலலாம். மேலும் மத்தியிலும் தி.மு.க ஆட்சியில் இருப்பதால் மத்திய மாநில நல்லுறவுக்கும் அதனால் தமிழகம் பயன் பெறுவதற்கும் தமிழகத்தில் அதே கூட்டணி ஆட்சியில் இருப்பது பெயரளவிலாவது உதவக் கூடும். பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்ற விஷயங்களில் கடந்த காலங்களில் செய்த அதே தவறைத் தி.மு.க. திரும்பவும் செய்யாது என்று நான் நம்புகிறேன். அந்தத் தவறுகளுக்கான விலையைத் தி.மு.க. செலுத்தியிருக்கிறது. பிரிவினைவாதமும் தீவிரவாதமும் பேசினால் தமிழக மக்களிடம் டெபாஸிட் கிடைக்காது என்பதைத் தி.மு.க. இப்போது நன்கறிந்திருக்கிறது. தி.மு.க. பேசுகிற தமிழ்வாதமும் தமிழ்ப் பற்றும் "அண்ணா நாமம் வாழ்க" என்று அது சொல்வதைப் போல ஒரு கோஷம்தான். அதைக் கூட தி.மு.க செய்யவில்லை என்றால் அந்தத் தமிழ்க் கோஷத்தைத் திருடிக் கொள்ள பிற கட்சிகள் தயாராக இருப்பதால், தி.மு.க. அதைச் செய்கிறது. மற்றபடிக்கு, ஒவ்வொரு மாநில மொழியிலும் ஒரு தொலைகாட்சி சேனல் வைத்துக் கொண்டுத் தி.மு.க. என்றைக்கோ தேசிய நீரோட்டத்தில் (முற்றிலும் கலக்க வில்லை என்றாலும்) அடியெடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டது என்றே நம்புகிறேன்.

அம்மா தேர்தல் கணக்குகளிலும் கூட்டணிகளிலும் அய்யாவைவிடப் புத்திசாலி. ஓட்டு வங்கி கூட்டணியை அமைத்து முதலில் வெற்றி ஈட்டிக் காட்டியவர் அம்மாதான். அந்த விதத்தில் கருணாநிதி கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ளத் தயங்குவதுபோல இல்லாமல், அம்மா புத்திசாலித்தனமாக கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்கிற சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்மாதான் அடுத்து என்ன செய்வார் என்றே தெரியாதே. இதைச் செய்யமாட்டார் என்று சொல்ல முடியுமா? இரண்டு பார்லிமெண்ட் தொகுதிகள் கூட பா.ம.க.வுக்குத் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் பிடித்தபோது, பா.ம.க.வை அழைத்து ஐந்து பார்லிமெண்ட் தொகுதிகளை ஒதுக்கியவர் அவர். அப்படித் திடீரென்று தி.மு.க. வரவே கூடாது என்பதற்காகக் கூட்டணி ஆட்சிக்கு அம்மா முன்வந்தால் தி.மு.க. பாடு திண்டாட்டம்தான். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், தி.மு.க. கூட்டணி அதுமட்டுமே இருக்கிற ஒரு கட்சி கூட்டணி ஆகிவிடும். ராமதாஸிலிருந்து இளங்கோவன் வரை அம்மா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு லாலி பாடுவார்கள்.

அத்தகைய ஒரு lose lose சூழ்நிலைக்குக் கருணாநிதி தன்னையும் தன் கட்சியையும் தள்ளப் போகிறாரா? அல்லது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொண்டு win win சூழ்நிலையில் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? காலம் பதில் சொல்லும்.

(பின் குறிப்பு: ஓர் விவரமான அலசலாக நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போதைக்கு இவ்வளவுதான் முடிந்தது. விட்டுப் போனவற்றைப் பற்றியும், தெளிவாகச் சொல்லாதவை ஏதுமிருப்பின் அவை பற்றியும் பின்னர் நேரமிருப்பின்.)

Tuesday, May 03, 2005

AnyIndian.com - Jaya TV Interview

Jaya TV telecasts an interview on May 4, 2005 (Wednesday) morning at 7:30 AM in "Kalai Malar" programme. On behalf of AnyIndian.com, I have participated in the interview. The interview runs for 40 minutes. This is FYI and feedback please.